Articles
இஸ்லாம் வலியுறுத்தும் ஜீவகாருண்யம்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
அல்லாஹ் தஆலா மகா கருணையாளன். அவன் கருணைக்கு அளவு, எல்லை, ஈடு, இணை, உவமானம்,
உவமேயம் கிடையாது. கருணையாளன் எனும் அர்த்தம் தாங்கிய 'ரஊஃப்' என்ற பதம் அல்லாஹ்வின்
கருணையை சுட்டுவதற்கு புனித அல்-குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தானே இதனை இவ்வாறு பிரகடனப்படுத்துகிறான்:
நிச்சயமாக உங்கள் இரட்சகன் மிக்க இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன்.
(16 : 07)
மனிதர்களை வழிகாட்டி நெறிப்படுத்தும் பொருட்டு அல்லாஹ்வால் தெரிவுசெய்து அனுப்பப்பட்ட
தூதர்களிடமும் கருணைப் பண்பு மேலோங்கி காணப்பட்டது. ஒவ்வோர் இறைத் தூதரும்
தத்தமது சமூகத்தாருடன் எவ்வளவு இரக்கத்துடன் நடந்துகொண்டனர் என்பதற்கு வரலாறு
சான்று. இப்பண்பு மனிதர்களிடத்திலும் தாராளமாக இருக்க வேண்டுமென்பது சிருஷ்டிகர்த்தா
அல்லாஹ்வின் விருப்பமாகும். பின்வரும் நாயக வாக்கியங்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன:
எவர் கருணை காட்டுவதில்லையோ அவருக்கு கருணை காட்டப்படுவதில்லை. (அறிவிப்பவர்
: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள்! வானில் உள்ளவன் உங்களுக்கு
இரக்கம் காட்டுவான். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
மனிதன் மனிதனுக்கு கருணை காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் அவன் கருணை
காட்ட வேண்டும். பகுத்தறிவற்ற வாய்பேச முடியாத மிருகங்கள், பறவைகள் அனைத்தும்
கண்டிப்பாக பரிவு காட்டப்பட வேண்டியவை. எல்லோரினதும் எல்லாவற்றினதும் இயல்புத்
தன்மைகளோடு என்றும் எங்கும் முழுக்க முழுக்க ஒத்துப்போகின்ற ஏற்றமிகு மார்க்கம்
இஸ்லாம் மிருகங்கள், பறவைகள் விடயத்தில் மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பது
குறித்து தெளிவாக, நிறைவாக வழிகாட்டி நிற்கின்றது. மிருகங்கள், பறவைகளின் நலனில்
அதீத அக்கறை காட்டுகின்ற மார்க்கம் இஸ்லாம்.
'இவ்வாய்பேச முடியாத மிருகங்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்!
அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவை மீது சவாரிசெய்யுங்கள்! மேலும் அவை நல்ல
நிலையில் இருக்கும்போது அவற்றை உண்ணுங்கள்!' (அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு அல்-ஹன்லலிய்யஹ்
(ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்) எனக் கூறி மிருக நலன் குறித்து
அழுத்தம்திருத்தமான வார்த்தைகளில் பேசினார்கள் நாயகம் முஹம்மத் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்) கூறுகிறார்கள்: நாம் ரஸூல்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். ஒரு மரத்தைக்
கடந்து சென்றோம். அதில் ஒரு பறவையின் இரண்டு குஞ்சுகள் இருந்தன. நாம் அவ்விரண்டையும்
எடுத்துக்கொண்டோம். பறவை சப்தமிட்டுக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தது. யார் இதன் குஞ்சுகளை எடுத்து அதனை துன்புறச்செய்தது
என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்கவே நாம் என்றோம். அவ்விரண்டையும்
மீளக் கொடுத்திடுங்கள் என்றார்கள். (நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
புவியிலுள்ள அனைத்தும் மனிதனின் பயன்பாட்டுக்காகும் என்பது சிருஷ்டிகர்த்தா
அல்லாஹ்வின் பிரகடனமாகும். இதுவே புனித இஸ்லாத்தின் கோட்பாடு. பின்வரும் அல்-குர்ஆனிய
வசனம் இதற்கு தக்க ஆதாரமாகும்:
அவன் (அல்லாஹ்) எத்தகையவனென்றால் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன்
படைத்தான். (02 : 29)
இதன் அடிப்படையில் மிருகங்கள், பறவைகள்கூட மனிதப் பயன்பாட்டுக்குரியவை என்பது
தெளிவாகின்றது. இப்பயன்பாடுகள் அவற்றின் இனங்கள், வகைகளைப் பொறுத்து வித்தியாசப்படுத்தப்பட்டு,
ஒவ்வொன்றும் அக்குவேறு ஆணிவேறாக சட்டவிதிகளுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சவாரிசெய்ய, வேட்டையாட, சுமைகளைச் சுமக்க, உழுவதற்கு, ஆடைக்காக, போர்வைக்காக,
அலங்காரத்திற்கு, உணவிற்கு என்றெல்லாம் அவற்றின் பயன்கள் நீண்டு செல்கின்றன,
அகன்று விரிகின்றன. இதனை அல்லாஹ் தஆலா தனது இறுதி வேதம் அல்-குர்ஆனில் இவ்வாறு
விபரிக்கிறான்:
மேலும் கால்நடைகளை அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக்கொள்ளக்கூடிய)
கதகதப்பும் (வேறு) பயன்களும் உள்ளன. மேலும் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
நீங்கள் அவற்றை மாலையில் ஓட்டி வரும்பொழுதும் காலையில் ஓட்டிச் செல்லும்போதும்
அவற்றில் உங்களுக்கு அழகுமிருக்கிறது. மேலும் மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள்
சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன.
நிச்சயமாக உங்கள் இரட்சகன் மிக்க இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன். இன்னும்
குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும்
அலங்காரமாகவும் (அவனே படைத்தான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
(16 : 05 - 08)
நாம் மிருகங்களை எத்தேவைக்குப் பயன்படுத்தினாலும் அவற்றிலிருந்து பயன்பெறுவது
போல அவற்றுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன.
எந்தெந்த தேவைகளுக்கு ஒரு மிருகம் பயன்படுத்தப்பட வேண்டுமோ அத்தேவைகளுக்கு
மாத்திரமே அது பயன்படுத்தப்பட வேண்டும். அதன்போது அதன் உடல் நிலை, சக்தி போன்றவை
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வேளாவேளைக்கு தேவையான தீனி, நீர் போதுமான அளவு
கொடுக்கப்பட வேண்டும். அதை வருத்தி வேலை வாங்கலாகாது. துன்பப்படுத்தல், நோவினைசெய்தல்,
கஷ்டம் கொடுத்தல், அதன் இயல்புத் தன்மைக்கு மாறாக அதனைப் பயன்படுத்தல் போன்றன
அறவே கூடாது. அதன் நோய் நொம்பலங்கள் அப்போதைக்கப்போது அவதானிக்கப்பட்டு உரிய
மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இரக்கம் கலந்த பராமரிப்பு எம்மிலிருந்து
அதற்கு தேவை.
பூனை அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தாண்டிச் செல்லும்.
அவர்கள் அதற்கு பாத்திரத்தைக் கெளிப்பார்கள். அது குடிக்கும். பின்னர் அதன்
மீதியைக் கொண்டு அவர்கள் வுழூஃ செய்வார்கள். (அறிவிப்பவர் : ஆஇஷா (ரழியல்லாஹு
அன்ஹா), நூல் : ஸுனன் அல்-தாரகுத்னி)
இப்படித்தான் அருமை நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிருகங்கள்,
பறவைகளுடன் மிகுந்த வாஞ்சையுடன் நடந்துகொண்டார்கள். தம் தோழர்களை இப்படியே
நடந்துகொள்ளுமாறு பணித்தார்கள். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவதன் மூலம்
கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளையும் அவற்றை துன்புறுத்துவதன் மூலம் கிடைக்கும்
பெரும் தண்டனைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். சஹாபிகள் தப்பித்தவறியேனும்
இதில் அசிரத்தையாக இருந்தால் அவர்களை திருத்தி, வழிகாட்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஒரு
மனிதர் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் வேளை அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது.
ஒரு கிணற்றைக் கண்ட அவர் அதிலிறங்கி அருந்திவிட்டு பின்னர் வெளியே வந்தார்.
அப்போது ஒரு நாய் நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு தாகத்தினால் ஈர மண்ணை தின்றுகொண்டிருந்தது.
எனக்கு ஏற்பட்டிருந்தது போல இந்த நாய்க்கும் தாகம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய
அம்மனிதர் கிணற்றில் இறங்கி தனது சப்பாத்தில் தண்ணீர் நிறைத்து பின்னர் அவர்
வாயினால் அதனைப் பிடித்துக்கொண்டு வந்து நாய்க்குப் புகட்டினார். ஆகவே அல்லாஹ்
அவருக்கு நன்றி செலுத்தி அவருக்கு மன்னிப்பளித்தான். அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களில்
நிச்சயம் எமக்கு கூலி உண்டா என அவர்கள் (கூட இருந்தவர்கள்) கேட்டனர். ஈரமான
ஈரல் உடைய ஒவ்வொன்றிலும் கூலி உண்டு என்றார்கள் அவர்கள். (அறிவிப்பவர் : அபூ
ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
ஒரு நாய் மீது பரிவு காட்டி அதன் தாகம் தீர நீர் புகட்டிய மனிதன் அல்லாஹ்வின்
நெருக்கத்தைப் பெற்ற அற்புதமான நிகழ்வு அது. இஸ்லாம் இப்படித்தான் மிருக காருண்யத்தை
வலியுறுத்துகின்றது.
மிருக வதை செய்வோர் இறை தண்டனை அனுபவிப்பர். 'பசியால் சாகும் வரை பூனை ஒன்றை
தடுத்துவைத்த ஒரு பெண் அதன் நிமித்தம் வேதனைசெய்யப்பட்டாள். அதன் காரணமாக நரகம்
நுழைந்தாள்' என அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் அறிவிப்பாக சஹீஹ் அல்-புகாரியில்
இடம்பெற்றுள்ள ஹதீஸ் கவனத்திற்குரியதாகும்.
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு
நாள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாகனத்தில் என்னை
அவர்களுக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள். ஒரு செய்தியை எனக்கு அவர்கள் இரகசியமாகச்
சொன்னார்கள். நான் அதனை மனிதர்களில் எவரிடமும் சொல்ல மாட்டேன். அல்லாஹ்வின்
தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தேவைக்காக மறைந்துகொண்டதில்
மிக விருப்பமானது உயர்வான இடம் அல்லது அடர்ந்த பேரீத்த மரமாக இருந்தது. அன்சாரிகளில்
ஒரு மனிதரின் தோட்டத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அப்போது ஓர் ஒட்டகை. அது
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கண்டபோது அனுங்கியது, அதன் இரு கண்களும்
கண்ணீர் வடித்தன. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அதனிடம் வந்து அதன் தலையைத்
தடவியபோது அது அமைதியடைந்தது. 'இந்த ஒட்டகையின் சொந்தக்காரர் யார்? இவ்வொட்டகம்
யாருக்குரியது?' என அவர்கள் கேட்க அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து அல்லாஹ்வின்
தூதரே! எனக்குரியது என்றார். 'அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள இம்மிருகத்தின்
விடயத்தில் நீர் அல்லாஹ்வைப் பயப்படுவதில்லையா? ஏனெனில் நீர் அதை பசியில் போட்டு
களைப்படையச்செய்வதாக அது என்னிடம் முறையிட்டது' என்றார்கள். (நூல் : ஸுனன்
அபீ தாவூத்)
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒட்டகையைக் கடந்து
சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிறுடன் ஒட்டி இருந்தது. 'இவ்வாய்பேச முடியாத
மிருகங்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! அவை நல்ல நிலையில் இருக்கும்போது
அவை மீது சவாரிசெய்யுங்கள்! மேலும் அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றை
உண்ணுங்கள்!' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு அல்-ஹன்லலிய்யஹ்
(ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்)
மிருகத்தை, பறவையை அடித்தல், தாக்குதல், உறுப்புக்களுக்கு சேதம் விளைவித்தல்,
அவற்றின் தேக நிலையைக் கவனியாது வேலை வாங்குதல், சக்திக்கு அப்பாற்பட்டு வேலையில்
ஈடுபடுத்தல், அவற்றுக்கு நீர், தீன் கொடுப்பதில் அசிரத்தை காட்டுதல், அவற்றுக்கு
மருத்துவ சிகிச்சை செய்வதில் பின்நிற்றல், கழுத்தையும் முன் காலையும் ஒரு சிறு
கயிற்றினால் ஒன்றாகக் கட்டி விடல் போன்ற அனைத்தும் மிருக வதை, பறவை வதைதான்.
இதில் இரண்டாவது கருத்து கட்டோடு இருக்க முடியாது.
மிருகத்தின் முகம் குறித்து அவதானம் தேவை. அதன் முகத்தில் அடிப்பது, அதில்
குறியிடுவது தடுக்கப்பட்டுள்ளன. இதனைச் செய்பவரை நாயகம் (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
முகத்தில் குறியிடப்பட்டிருந்த கழுதை ஒன்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களைத் தாண்டி கொண்டு செல்லப்பட்டது. 'மிருகத்துக்கு அதன் முகத்தில் குறியிட்டவரை
அல்லது அதற்கு அதன் முகத்தில் அடித்தவரை நான் சபித்துள்ளமை உங்களுக்கு எட்டவில்லையா?'
என்றார்கள். அதனை விட்டும் தடுத்தார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரழியல்லாஹு
அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத்)
மிருகத்தை சபிப்பதைக்கூட தெய்வீக மார்க்கம் இஸ்லாம் தடுத்தது.
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். ஒரு
சாபமிடல் அவர்களுக்கு கேட்டது. இது என்ன என்றார்கள். இது ஒருத்தி தன் வாகன
ஒட்டகத்தை சபித்தாள் என்றனர் அவர்கள் (கூட இருந்தவர்கள்). நீங்கள் அதனை விட்டும்
(சுமையை) இறக்கிவிடுங்கள்! ஏனெனில் அது சாபமிடப்பட்டுள்ளது என நபி (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆகவே அவர்கள் அதனை விட்டும் (சுமையை)
இறக்கிவிட்டனர். கறுப்பு கலந்த ஒரு வெள்ளை பெண் ஒட்டகையாக நான் அதனைப் பார்க்கிறேன்.
(அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ
தாவூத்)
வாயில்லா ஜீவன்களுக்கிடையில் சண்டையைத் தூண்டிவிடுவது பற்றி கடுமையான தடை
இஸ்லாத்தில் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவை காயமுறுகின்றன, மரணமெய்துகின்றன.
மிருகங்களுக்கிடையில் சண்டையைத் தூண்டுவதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்தார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்
(ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸுனன் அபீ தாவூத்)
பறவையை, மிருகத்தை எறிவதற்கு இலக்காக எடுத்துக்கொள்வது கூடாது. இதனை புனித
இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒரு பறவையை வைத்து அதனைக் குறி பார்த்து எறிந்துகொண்டிருந்த குரைஷி இளைஞர்கள்
சிலரைத் தாண்டிச் சென்றார்கள் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள். அவர்களின்
அம்பில் குறி தவறக்கூடிய ஒவ்வொன்றையும் பறவைச் சொந்தக்காரருக்கென அவர்கள் ஆக்கிவைத்திருந்தனர்.
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)வைக் கண்டதும் அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர்.
யார் இதனைச் செய்தவர்? இதைச் செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக! உயிருள்ள ஒன்றை
இலக்காக எடுத்துக் கொண்டவரை திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் சாபமிட்டார்கள் என்றார்கள் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)
அவர்கள். (அறிவிப்பவர் : ஸஈத் இப்னு ஜுபைர் (ரஹிமஹுல்லாஹ்), நூல் : சஹீஹ்
முஸ்லிம்)
சவாரிசெய்ய உதவுகின்றதென்பதற்காக அமர்ந்திருந்துகொள்ளும் நாற்காலிகளாக மிருகங்களைப்
பயன்படுத்தலாகாது.
களைப்புறாதவையாக இருக்கும் நிலையில் இம்மிருகங்களில் சவாரிசெய்யுங்கள்! மேலும்
களைப்புறாதவையாக இருக்கும் நிலையில் அவற்றை விட்டுவிடுங்கள்! மேலும் அவற்றை
கதிரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! (அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்),
நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
பறவைகள், மிருகங்களை அவற்றின் பயன்பாடறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றிருக்க
வேறொன்றுக்காக உபயோகிப்பது தவறாகும். பின்வரும் ஹதீஸில் இவ்வுண்மை தெளிவாகின்றது:
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹ் தொழுகையைத்
தொழுதார்கள். பின்னர் மக்களை நோக்கி 'ஒரு மனிதர் பசுவொன்றை ஓட்டிக் கொண்டிருக்கையில்
அதன் மீதேறி அதனை அடித்தார். நிச்சயமாக நாம் இதற்காகப் படைக்கப்படவில்லை. உழுவதற்காகத்தான்
படைக்கப்பட்டுள்ளோம் என அது கூறிற்று' என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா
(ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
படைப்பாளன் அல்லாஹ் மாத்திரமே தனது படைப்புக்களின் தன்மைகளை, அமைப்புக்களை,
நோக்கங்களை, இரகசியங்களை, பயன்களை நன்கு நுணுகி அறிந்தவன். அவன்தான் சில வகை
மிருகங்களை, பறவைகளை மனிதன் அறுத்தும் வேட்டையாடியும் சாப்பிட அனுமதித்துள்ளான்.
இது தொடர்பில் அவன் அல்-குர்ஆனில் இப்படி பேசுகின்றான்:
மேலும் அவற்றிலிருந்து (கால்நடைகளிலிருந்து) நீங்கள் புசிக்கிறீர்கள். (16
: 05)
அதே வேளை சில சந்தர்ப்பங்களில் சில வகை மிருகங்களை அறுத்து அதன் மாமிசங்களை
வறுமைப்பட்டோர், உற்றார், உறவினர் போன்றோருக்கு கொடுத்துதவும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
இதில் வருடாந்த ஹஜ் பெருநாளும் அதனை அடுத்து வரும் மூன்று தினங்களும் அடங்கும்.
இதனை இஸ்லாம் 'உழ்ஹிய்யஹ்' என்று அழைக்கின்றது.
ஆகவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, இன்னும் அறுப்பீராக! (108 : 02) என்ற
இறை வசனம் இதற்கு சான்றாக நிற்கின்றது. தொழுகை என்ற மார்க்கக் கடமையான வழிபாட்டுடன்
இணைத்து அறுத்தல் என்ற மார்க்கக் கடமையையும் படைத்தவன் அல்லாஹ் வலியுறுத்தியிருப்பது
இங்கு நோக்கற்பாலது.
முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் மிருக அறுப்பு மார்க்கக் கடமை எனவும் பொதுவாக
அனுமதிக்கப்பட்டது எனவும் இரு வகைப்படும். உழ்ஹிய்யஹ், அகீகஹ் போன்றவை மார்க்கக்
கடமைகளாயிருக்க, ஏனையவை பொதுவாக அனுமதிக்கப்பட்டவை எனலாம்.
மிருகங்கள் எந்த வகையில் அறுக்கப்பட்டாலும் அதற்குரிய சிறப்பான சட்டவிதிகளை
புனித இஸ்லாம் அறிமுகம்செய்து, அறுத்தலின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும்
அவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. சட்டதிட்டங்களை
முறையாகப் பின்பற்றி உரிய முறையில் அறுக்கப்படும்போது அதனை இஸ்லாமிய சன்மார்க்கம்
ஒருபோதும் மிருக வதையாகப் பார்ப்பதில்லை.
அறுக்கப்படும் பிராணி குறைபாடுகளற்றதாக இருத்தல் வேண்டும். அறுக்கும்போது
நன்கு கூர்மையான கத்தி கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி விரைவாக அறுத்தல் வேண்டும்.
கத்தியை மிருகம் காணும்படி வைத்துக்கொள்ளல், தீட்டுதல் ஆகாது. மிருகங்களை அறுப்பதற்காக
கொண்டு வரும்போதும் அறுக்கத் தயாராகும் வேளையிலும் அம்மிருகங்களுக்கு இம்சைசெய்யக்
கூடாது. வேறு மிருகங்கள் பார்த்திருக்கும் நிலையில் அறுத்தலாகாது. ஒதுக்குப்
புறமான இடங்களில் அறுத்தல் நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். எலும்பு, தோல் போன்ற
கழிவுகள் பாதையோரங்கள், வடிகால்கள், பொது இடங்களில் வீசப்படாமல் புதைக்கப்பட
வேண்டும். இரத்தம் வடியும் நிலையில் மாமிசங்களை எடுத்துச் செல்லலாகாது.
ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொன்னார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிலும்
நன்முறையில் நடந்துகொள்வதை கடமையாக்கியுள்ளான். ஆகவே நீங்கள் (தண்டனையாக அல்லது
பலிக்குப் பலியாக) கொலைசெய்தால் கொலையை நன்முறையில் செய்யுங்கள்! மேலும் நீங்கள்
அறுத்தால் அறுத்தலை நன்முறையில் செய்யுங்கள்! உங்களில் ஒருவர் தன் கத்தியை
தீட்டிக்கொள்ளவும்! தனது அறுவைப் பிராணிக்கு இலகுவைக் கொடுக்கவும்! (அறிவிப்பவர்
: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
மேற்படி ஹதீஸ் மிக மிக ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கிய, கருத்துச் செறிவுள்ள,
சந்தேகங்கள் பலவற்றுக்கு தெளிவு தரக்கூடிய ஒரு முக்கிய நபி மொழியாகும்.
அல்லாஹ்வின் தூதரே! நான் ஆட்டை அறுத்தால் அதற்கு நான் கருணை காட்டுகிறேன்
என்றார் ஒரு மனிதர். நீர் அதற்கு கருணை காட்டினால் அல்லாஹ் உமக்கு கருணை காட்டுவான்
என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அறிவிப்பவர்
: குர்ரஹ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு மனிதர் ஆடொன்றை அறுக்கும் பொருட்டு தனது கத்தியை தீட்டிக்கொண்டே அதனை
ஒருக்களித்துப் படுக்கச்செய்தார். 'அதனைப் பல தடவைகள் மரணிக்கச்செய்யப் பார்க்கின்றீரா?
அதனை ஒருக்களித்துப் படுக்கச்செய்வதற்கு முன் உமது கத்தியை நீர் தீட்டி இருக்கலாமே!'
என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு சிட்டுக்குருவியை, அதற்கு மேலுள்ளதை அதன் உரிமையின்றி எவர் கொல்வாரோ
அதனைக் கொன்றது பற்றி அல்லாஹ் அவரிடத்தில் விசாரிப்பான். அல்லாஹ்வின் தூதரே!
அதன் உரிமை என்னவென கேட்கப்பட்டது. அதனை நீர் அறுத்து சாப்பிடுதல், அதன் தலையை
நீர் வெட்டி, அதனை வீசாதிருத்தல் என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸுனன் அல்-பைஹகி)
'மிருகங்களைத் தடுத்துவைத்து அவற்றை எறிந்து கொல்வதை விட்டும் நபி (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்தார்கள்' என அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்) சொன்னதை
ஹிஷாம் இப்னு ஸைத் (ரஹிமஹுல்லாஹ்) அறிவிக்கிறார்கள். நூல் : சஹீஹ் அல்-புகாரி)
இச்சிறு கட்டுரையில் இதுவரையும் எடுத்தாளப்பட்டுள்ளவை மிருக நலன் குறித்து
மேன்மையான மார்க்கம் இஸ்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்ற ஆழமான, அகலமான போதனைகளுல்
சில. தொட்டுச் சென்றவை கொஞ்சமென்றால் விட்டுச் சென்றவை அதிகம்.
மிருக காருண்யம் ஓங்கி வளரட்டும்! மிருக நலன் அதன் உண்மையான வடிவில் பேணப்படட்டும்!
2010.09.20
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019