Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து


புனித தீன் அல்-இஸ்லாமுக்கும் அரபு இலக்கியத்துக்கும் தஃவாவுக்கும் பாரிய பங்களிப்புச் செய்த மறைந்த பேரறிஞர் இந்தியா லக்னோவைச் சேர்ந்த மகான் மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களது கையழுத்தை என்றேனும் நீங்கள் பார்த்ததுண்டா? பதிவேற்றப்பட்டுள்ள காகிதத்தைப் பாருங்கள்.

LETTER OF NADWI-01

LETTER OF NADWI-02

ஆம், ஹிஜ்ரி 1412இல் (கி.பி. 1992இல்) இவ்வெளியவனின் கடிதமொன்றுக்கு மவ்லானா அவர்கள் தன் கைப்பட எழுதி தபாலில் அனுப்பிவைத்த பதில் கடிதம் இது. இன்று கிட்டத்தட்ட 27 வயது மவ்லானாவின் இந்தக் கடிதத்துக்கு.

அரபு மொழி மற்றும் இலக்கியம் கற்றுக்கொண்டிருந்த எனது ஆரம்ப நாட்களில் நான் அதிகம் வாசித்த அரபு நூல்களில் மவ்லானா அவர்களின் நூல்களும் அடங்கும். அரபுப் பாஷையை அதன் தொன்மை நடைக்கும் நவீன நடைக்கும் இடையில் இணைத்து கையாளும் முறையை அன்னாரது எழுத்துக்களிலிருந்தே நான் ஆரம்பமாக அறிந்துகொண்டேன்.

இச்சிறியவனின் அரபு இலக்கிய வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த எழுத்துக்களில் மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் எழுத்தும் அடங்கும் என்பதை நன்றியுணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது மத்ரஸஹ் நாட்களில் நான் மவ்லானாவின் நூல்களைப் படித்துவிட்டு அவற்றிலிருந்து எடுத்து எழுதிவைத்த குறிப்புகள் ஏராளம். இவ்வாறான குறிப்பேடுகளை சக மாணவர்கள், நண்பர்கள் கேட்டுப்பெற்று வாசிப்பார்கள். இவற்றில் ஒரு குறிப்பேட்டை எவரோ ஒருவர் வாசித்துவிட்டுத் தருவதாக எடுத்துவிட்டு இன்றுவரை திருப்பித் தரவில்லை. இது 1991இல் நடைபெற்றது. 26 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இச்சம்பவத்தின் தாக்கத்திலிருந்து நான் விடுபடவில்லை.

ஒரு வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் மவ்லானா அவர்களின் வபாத் செய்தியை ஆகாயத்தில்வைத்து அரபு நாளிதழ்களில் அறிந்து ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்தேன். உயர்ந்தவர்களின் மறைவுச் செய்தியும் உயர்ந்த இடங்களில்வைத்துத்தான் கிடைக்குமோ!

சடத்தைத் துறந்து ஆன்மீகத்தை ஆரத்தழுவி வாழ்ந்த, அறிவுக்கும் நடத்தைக்கும் இடைவெளி காணாத, சொல்லுக்கும் செயலுக்குமிடையில் வேலி கட்டாத, வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்து முடித்த, ஓர் ஆலிமின் வாழ்வு எவ்வாறு பயன் மிக்கதாக அமைய வேண்டுமென்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்கள் ஆலிம்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரிதான்.

கருணையாளன் அல்லாஹ் தஆலா மவ்லானா அவர்களை தன் அளப்பரிய கருணைகொண்டு அணைத்துக்கொள்வானாக! ஓர் உயர்ந்த ஆலிமுக்கு அவன் வழங்குகிற அனைத்துவித கன்னியத்தையும் அல்லாஹ் மவ்லானாவுக்கு வழங்கி அவரை கன்னியப்படுத்துவானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1439.01.02
2017.09.23


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page