Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி


பிரபஞ்சத்தின் முதல் நாள் தொடக்கம் இற்றை வரை எண்ணிறந்த மேதைகள் காசினியில் தோன்றி, வாழ்ந்து, மறைந்துள்ளனர். இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றிலே தடம் பதித்துப்போன எண்ணிலா மேதைகளின் வாழ்க்கைச் சரிதைகள் நூலுருவில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அம்மாமேதைகள் வாழ்ந்து காட்டி, வரப்போகும் எத்தனை எத்தனையோ தலைமுறைகளின் நல்வாழ்வுக்கு வழிகோலிச் சென்றுள்ளார்கள். ஆனால் அத்தகைய மேதைகள் அனைவரையும் நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் வேறு வேறாக நிறுத்தி அவர்கள் வரலாறுகளை ஆய்வுசெய்யும்பொழுது நாயகம் அவர்களின் வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த 63 ஆண்டுகளில் அவர்கள் நடக்க எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் பேச வாய் திறந்தபோது விரியும் இதழ்களின் ஒவ்வோர் அசைவும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, வெகு சரியாக உணரப்பட்டு, துல்லியமாக வரலாறாக்கப்பட்டுள்ள விதம் முற்றிலும் ஒரு தனி ரகமாக விளங்குவதை எவரும் அவதானிக்கலாம்.

நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னைச் சூழவிருந்த அருமைத் தோழர்களுக்கு வார்த்தைகளால் பகர்ந்தவை, வார்த்தைகளைத் தவிர்த்;து செயல் வடிவில் காட்டியவை, ஆகாததை அடுத்தவர் செய்யும்போது வார்த்தைகளால் தடுத்தவை, வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் முகபாவத்தால் எதிர்ப்புக் காட்டியமை, வாய் திறந்து பாராட்டாது மௌனம் சாதிப்பதன் மூலம் சம்மதம் தெரிவித்தமை என அவ்வரலாறு பல வடிவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த கீர்த்திமிக்க வாழ்க்கை வரலாற்றை எழுத மாபெரும் வரலாற்றாசிரியர்கள் தேவைப்படவில்லை. அண்டவெளியிலே சூரியனை வலம் வந்துகொண்டிருக்கும் கோள்களைப் போல் அன்னாரையே சதா சுற்றிச் சுற்றி வந்த அவர் தம் இனிய தோழர்களால் அவ்வப்போதே கையிற் கிடைத்தவற்றில் குறித்துக் குறித்து முத்தாரம் போல் சேர்க்கப்பட்ட பொக்கிஷங்களின் தொகுப்பாகவே நிகரற்ற அவ்வரலாறு உருவாகியது.

நபித் தோழர்கள் கண்ட நாயகத்தின் ஒவ்வோர் அங்க இலட்சணமும் எழுத்து வடிவிலாக்கப்பட்டு இன்று வரை நீடித்து, நிலைத்து நம் மனக் கண்களில் ஒரு நேர்த்தியான, கட்டழகான உருவத்தை நிழலாடவிட்டுப் பார்க்கும் சந்தர்ப்பத்தைத் தருகின்றது. நபி அவர்களை அத்தோழர்கள் எப்படிக் கண்டனரோ, அத்தோற்றத்தை எப்படி உணர்ந்தனரோ அப்படியே உள்ளவாறும் உணர்ந்தவாறும் குறித்துவைத்தவற்றிலிருந்து நாம் ஓர் எழில் மிகு வடிவத்தைக் காண்கிறோம்.

உயரமும் பருமனும் ஓரளவாய்ச் சங்கமித்து நிற்கும் அங்க அமைப்பு. சிவப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட மேனி நிறம். மேலங்கிக்குள் அப்பொன் மேனி மறையாதிருக்கும்போது வௌ;ளிப் பாளத்தால் வடித்தெடுக்கப்பட்டது போன்றதோர் வனப்பிருக்கும். இப்படித்தான் உத்தமத் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வெளித் தோற்றம் அன்புள்ளங் கொண்ட அருமைத் தோழர்களால் காணப்பட்டிருக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் தூதரைப் படைத்த நளினத்துக்கு அப்பால் அப்பொன்னுடலிலிருந்து கமழ்ந்த நறுமணத்தையும் சஹாபிகள் உணர்ந்து, நுகர்ந்து அந்நறுமணத்துக்கு வையகத்தில் வேறெதையும் உவமிக்க முடியாமற்போன நிலையையும் வார்த்தைகளில் வடித்துவைத்திருக்கிறார்கள். அந்த அங்க இலட்சணம் இப்படித்தான் விரிகிறது.

தலை சற்று பருமனாக இருக்கும். முகம் வட்ட வடிவானதாயிருக்கும். அதிலே சூரிய, சந்திர ஒளியும் மாறாது விஞ்சி இலங்கும். மகிழ்ச்சியின்போது சந்திரனின் எழில் சொட்ட, வெறுப்பு வரும்போதோ அது வேறு விதமாய் மாறும். அவர்களுக்குச் சற்று அதிகமாகவே வியர்க்கும். தூக்கத்திலே வியர்வை ஊற்றெடுக்கும்பொழுது அப்பொன் மேனியெங்கும் வியர்;வைத் திவலைகள் நித்திலங்களாய்ச் சிதறிக்கிடக்கும். அது அற்புதமாய் நறுமணமும் கமழும்.

கறுத்த இரு விழிகள் சற்று அகன்றிருக்க, சுற்றியுள்ள வெண் விழிப் படலங்களில் இளஞ் சிவப்பு நிறம் இழையோடிக் கிடக்கும். அதிலே மையிடப்பட்ட அழகு இயற்கையாகவே இருக்கும். அவற்றிற்கு மேலே நீண்ட புருவங்கள் அக்கண்களுக்கு மெருகூட்டும். சினமுறும் வேளை இரு புருவங்களுக்கிடையில் நரம்புகள் புடைத்து நிற்கும்.

சற்று நீண்டிருக்கும் மூக்கின் நுணியோ மெல்லியதாயிருக்கும். மூக்கின் கீழ் வடிவெடுக்கும்;; வாய் சற்று அகன்றிருக்க அதற்குள் சிறைப்பட்டிருக்கும் பற்களோ பளிச்சிடும் வெண்மையுடன் வரிசையாய் நிற்கும். புன்முறுவல் பூக்கையில் அவற்றில் ஒளி இலங்கும்.

இரு கன்னங்கள் ஒரு சீராய் அமைந்திருக்க, அதிலிருந்து அடர்ந்த கறுத்த தாடி கீழ் நோக்கி நீண்டு நெஞ்சின் மேற் பரப்பை ஸ்பரிசித்துக்கொண்டிருக்கும். நபி அவர்கள் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் முதுகுக்குப் பின்னாலிருக்கும் தோழர்கள் தாடியின் அசைவினைக் கொண்டு புரிந்துகொள்ளக்கூடியதாயிருக்கம். மேலுதட்டினை அலங்கரிக்கும் மீசையின் பெரும் பகுதி அடரவிடாது எப்போதுமே நறுக்கப்பட்டிருக்கும்.

கறுத்த தலை மயிர்கள் பின்னிப்பிணையாமலும் தனித் தனியாய்த் தொங்காமலும் நடு நிலையில் தொங்கும். சிலபோது காதுகளின் நடுப் பகுதி வரையிலும் சிலபோது காதுகளின் அடிப் பகுதி வரையிலும் இன்னுஞ் சில வேளைகளில் காதுகளுக்கும் தோள்களுக்கும் இடைப்பட்ட பகுதி வரைக்கும் வேறு சில வேளைகளில் அவர்களின் தோளில் விழுந்தும் சதிராடிக் கொண்டிருக்கும்.

கழுத்து வௌ;ளிக் கூஜாவைப் போலிலங்கும். மூட்டுக்கள் பெரிதாயிருப்பதுடன் இரு தோள் மூட்டுகளிலும் உரோமங்கள் நிறைந்திருக்கும். கக்கங்களோ வெண்மையாயிருக்கும். நெஞ்சு முதல் தொப்புள் வரையில் நீண்ட மென் கோடொன்றினைப் போல் உரோமங்கள் வளர்ந்திருக்கும்.

வார்த்தெடுக்கப்பட்ட வௌ;ளிப் பாளம் போன்ற முதுகில் இரு தோள்களுக்குமிடையில் இடது தோளின் மேற் பகுதியில் நபித்துவத்து முத்திரை ஒரு புறாவின் முட்டை வடிவில் பதிந்திருக்கும்.

அகன்று பருத்த மணிக்கட்டுக்களுடன் கூடிய முன்னங்கைகளில் உரோமங்கள் அடர்ந்து சாய்ந்திருக்க, பட்டைவிட மென்மையான உள்ளங்கைகளில் பனிக்கட்டியின் குளுமை இருக்கும். அங்கே கஸ்தூரியை விஞ்சும் நறுமணமும் கமழ்ந்தவண்ணமிருக்கும்.

கெண்டைக்கால் பார்க்கும் கண்களைக் கவரும்வண்ணம் இலங்கிக்கொண்டிருக்க தசைப் பற்றற்றதாய் குதிகால்கள் இருக்கும். பாதங்கள் பரந்திருக்கும்.

வாய் திறந்து பேசுகையிலோ கேட்போருக்கு தௌ;ளத்தெளிவாய் விளங்கும்வண்ணம் வார்த்தைகள் வெளிக்கொட்டும். அவசரமற்ற வார்த்தைப் பிரயோகத்தின் குரல் வளத்திலே சற்று வலிமை காணப்படும். வெளிவரும் கருத்துக்களை மனனமிட்டுக்கொள்ள இலகுவாயுமிருக்கும்.

மலைச் சரிவில் இறங்குமாப் போல் அவர்கள் நடையிருக்கும். நடக்கும் தருவாயில் திரும்பிப் பார்க்க நேரின் முழு உடம்புமே திரும்பும். அந்நடையின் வேகத்துக்கு மற்றவர்கள் ஈடுகொடுக்க முடியாதிருக்கும்;.

இத்தனை மென்மைக்குள்ளும் ஓர் அபார சக்தியும் இருக்கும். அது நாலாயிரம் பேரின் சக்திக்குச் சமமாகும். அது அனைத்தும் வல்லான் அல்லாஹ் அத்தனி மனிதருக்குள் சுருக்கி, இறுக்கிவைத்ததாகும்;.

அகிலத்தாருக்கு அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்ட நம் இதய நாயகர் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அல்லாஹ் தஆலா அகமும் புறமும் அப்பழுக்கற்ற, மாசு மருவற்ற மனிதப் புனிதராக, உவமானமில்லா மா மனிதராக அனுப்பி அருளினான். அன்னாரின் எழில் கொஞ்சும் தோற்றத்தை, கட்டுமஸ்தான உடற் கட்டமைப்பை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டும். ஏனெனில் நபி அவர்களின் உடற் கட்டமைப்பு ஸுன்னாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். 'இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடற் கட்டமைப்பு, குண நலன்கள்' என்பதே ஸுன்னாவின் வரைவிலக்கணமாகும்.

உம்மி நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உண்மையாக உளப்பூர்வமாக நேசிக்கும் எவரும் நிச்சயம் அன்னாரின் உடல் வாகை அறியத் துடிப்பர், ரசித்து, ருசித்துப் படிப்பர், காலமெல்லாம் சுவைத்து சுவைத்து இன்புறுவர். இது ஆத்மார்த்த காதலின் வெளிப்பாடு.

நபி அவர்களின் குன்றா அழகில், மங்காப் பொலிவில் சொக்கிப்போன கவியரசர் ஹழ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹ்) உணர்ச்சி ததும்ப கவி பாடி களிப்படைந்தார்கள். அவ்விதயங் கவர் அரபுக் கவிதையின் தமிழாக்கம் இது:

“உங்களைவிட மிக அழகானவரை என் விழி அறவே கண்டதில்லை
உங்களைவிட மிக வனப்புமிக்கவரை பெண்டிர் பிரசவிக்கவுமில்லை
சகல குறைகளிலிருந்தும் நீங்கியவராக தாங்கள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளீர்
தாங்கள் நாடுவது போல் நிச்சயமாக படைக்கப்பட்டுள்ளீர்கள் போலும்.”

சத்தியத் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உளமார நேசித்து, வாயாரப் புகழ்ந்து, வாழ்வு பூராகப் பின்பற்றி ஒழுகுவோம்!

தகவல் தந்த கிரந்தங்கள்:

01. சஹீஹ் அல்-புகாரி
02. சஹீஹ் முஸ்லிம்
03. ஸுனன் அல்-திர்மிதி
04. ஸுனன் அபீ தாவூத்
05. ஸுனன் அல்-தாரிமி
06. ஷமாஇல் அல்-திர்மிதி
07. பத்ஹ் அல்-பாரி
08. உம்தத் அல்-காரி
09. ஹில்யத் அல்-அவ்லியாஃ


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2010.02.21


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page