Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

சர்வதேச அரபு மொழி தினம் – 2019
ஒரு விசித்திரமான அனுபவம்


நேற்று (2019.12.18) சர்வதேச அரபு மொழி தினம். ஆற அமர உட்கார்ந்து அரபு மொழியுடனான எனது சகவாசத்தின் ஆரம்பம் பற்றி நினைத்துப்பார்த்தேன். 1984ஆம் ஆண்டு எனக்கும் அந்த மொழிக்கும் தொடர்பு கனிந்துள்ளது. 1984.09.13 அன்று அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யாவில் மாணவனாகச் சேர்ந்ததுமுதல் நான் முறையாக அரபு படிக்கத் துவங்கியுள்ளேன். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருட உறவு. இலக்கண இலக்கியத்தோடு ஆசான்களிடமிருந்து முறையாக இம்மொழியைக் கற்றேன். அதில் வாசிக்க, எழுத, பேச, செவிமடுக்க என்னை நிறைய நிறையப் பயிற்றுவித்தேன். உரைநடையும், கவிநடையும் எனக்குப் பரிச்சயமாகுமளவு பயின்றேன், போதித்தேன்.

எனது தாய் மொழி தமிழ். அரிவரி படித்த பிறகு புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் சுமார் நான்கு வருடங்கள் தமிழ் கற்றுள்ளேன். வெறும் ஆரம்ப அடிப்படைகள். அவ்வளவுதான். அதன் பின் ஆசிரியர்களிடமிருந்து இலக்கண இலக்கியத்தோடு இப்பாஷையைக் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. சுய வாசிப்பிலேயே தமிழை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். இதனால் ஒப்பீட்டளவில் எனக்கு அரபு மொழியிலுள்ள தைரியம் தமிழ் மொழியில் கிடையாது. கவிதைகூட அரபியில் இலகுவாக வரும். கருத்துக்கும், உணர்வுக்கும் ஏற்ற சொற்கள் ஓடிவந்து என்னைச் சுற்றி நின்றுகொள்ளும். அரபியில் யாப்பிலக்கணம் பேணி கவிதை செய்யும் மூன்று தசாப்த பரிச்சயம்.

தாய் மொழிக்கும், இரண்டாம் மொழிக்கும் இடையில் இந்தப் பிரிகோட்டை எனக்கு தோற்றுவித்தது எது என கடந்த காலங்களில் பல தடவைகள் நான் யோசித்துப் பார்த்ததுண்டு. பாஷையோ அல்லது வேறு துறையோ அதில் நீர் புலமை பெற வேண்டுமாயின் அதன் அடிப்படைகளை முதலில் முறையாக அத்துறை ஆசிரியர்களிடம் கற்றாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். ஆனால் இது ஒரு விநோதமான அனுபவம். முறையாகப் படித்தால் அந்நியமான மொழியும் தாய் மொழி போல் கைகூடும் என்பதும் இங்கே கிடைக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம்.

எனக்கு அரபு மற்றும் தமிழ் மொழிகளை அமுதாக ஊட்டிய என் அன்புக்குரிய ஆசான்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2019.12.19


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page