Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

கொழும்பு பெரிய பள்ளிவாசல்


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் என் இதயத்தில் நீக்கமற நிறைந்து நிற்கும் ஓர் இடம். முக்கிய காரணம் இந்த மஸ்ஜிதில் நிலைகொண்டுள்ள மதீனத் அல்-இல்ம் அரபுக் கல்லூரி. நான் அல்-குர்ஆன் மனனம் செய்தது இந்தக் கல்லூரியில்தான்.

நேற்று 2018.01.07 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சென்ற பயணத்தில் என் மனைவி, மக்களை கூட்டிச்சென்று கொழும்பு பெரிய பள்ளிவாசலை உள்ளும் புறமும் காட்டி மகிழ்ந்தேன்.

அடியேன் பயின்ற 1980 முதல் 1984 வரையான காலப் பகுதியில் மதீனத் அல்-இல்ம் அரபுக் கல்லூரி பள்ளியின் உட்பகுதியிலேயே இயங்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளியோடு இணைந்து தனியானதொரு கட்டிடத்தை அமைத்துக்கொண்டு இன்று அந்தக் கட்டிடத்தில் சிறப்பாக இயங்கிவருகின்றது. நேற்று என்னுடன் வந்த என் குடும்பத்தினருக்கு மஸ்ஜிதில் வைத்து இயங்கிய மதீனத் அல்-இல்மை முதலிலும் பிறகு அதன் தற்போதைய கோலத்தையும் நான் காட்ட வேண்டி இருந்தது.

இலங்கையின் பிரமாண்டமான பள்ளிவாசலாகிய கொழும்பு பெரிய பள்ளிவாசல் கம்பீரமான தோற்றம் கொண்டது. அதன் குவிமாடம், மினாரா (கோபுரம்) என எல்லாமே எடுப்பானவை. மினாரா மிக மிக உயரமானது. அதன் உச்சிவரை ஏறிச் செல்ல திருகுச்சுருளான படியுண்டு. நானும் என் குடும்பத்தினரும் ஏறிப் பார்த்தோம். என் குடும்பத்தினர் இதில் ஏறியது முதல் தடவை. எனக்கு எத்தனையாவது முறையென ஞாபகமில்லை. மதீனத் அல்-இல்மில் கற்கின்ற காலத்தில் அடிக்கடி ஏறி இறங்கும் வழக்கமிருந்தது. இருந்தபோதிலும் நேற்று ஏறி இறங்கியது சுமார் 34 ஆண்டுகள் கழித்தாகும்.

குடும்ப சகிதம் பள்ளிவாசல் பார்வையிட வருகிறேன் என நிருவாக சபைச் செயலாளர் சகோதரர் தவ்பீக் ஸுபைர் அவர்களுக்கும், முகாமையாளர் அஷ்-ஷைக் தஸ்லீம் அவர்களுக்கும் அறிவித்தேன். அவர்கள் நம்மை வரவேற்று, உபசரித்து, எல்லாவற்றையும் பார்ப்பதற்கு உதவியாக இருந்தனர். அத்தோடு மதீனத் அல்-இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு அறிவித்தேன். கல்லூரி எமக்கு விருந்தளித்து மகிழ்வித்தது. இத்தருணத்தில் பள்ளிவாசல் நிருவாகம், பணியாளர்கள் மற்றும் கல்லூரியின் நிருவாகம், அதிபர், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் சகலருக்கும் என் சார்பாகவும், என் குடும்பம் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்வதில் ஆனந்தமடைகிறேன். ஜஸாக்கும் அல்லாஹ் கைரா.

1439.04.19
2018.01.08


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page