Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி




புதுப் பள்ளி பற்றிய எனது நேற்றைய பதிவில் அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி குறித்து பிரஸ்தாபித்திருந்தேன் அல்லவா. இவ்வறிஞர் பற்றி சிலர் விசாரித்தனர்.

அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி அவர்கள் சவூதியின் புரைதாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஒரு சிறந்த எழுத்தாளரும் அரபு இலக்கியவாதியும் பன்னூலாசிரியருமாவார். குறிப்பாக பல பயண இலக்கியங்கள் அவரால் யாக்கப்பட்டுள்ளன. அவரின் எழுத்துக்கள் விறுவிறுப்பானவை, சுவைமிக்கவை. மக்காவில் அமைந்துள்ள ராபிதத் அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் உதவி செயலாளர் நாயகம் பதவியை நீண்ட காலமாக அலங்கரித்தவர்.

அவர் தரிசித்த நாடுகள் பற்றி அவர் இயற்றிய நூல்கள் நூறையும் தாண்டியுள்ளதாக அறிய முடிகிறது. அவரின் பயண இலக்கியங்களைச் சேகரிக்க ஆசையோடு அவ்வப்போது சில முயற்சிகளையும் செய்துவருகிறேன். அல்லாஹ் எனது முயற்சியை கைகூடச்செய்வானாக!

1999 டிசம்பர் மாதம் நான் மக்காவில் இருந்த சமயம் அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி அவர்களை ராபிதத் அல்-ஆலம் அல்-இஸ்லாமியில் அவரின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளேன். பணிவும், பரிவும், குழந்தை மனசும் அவரிடம் வெகுவாக இருக்கக் கண்டேன்.

2016 ஏப்ரல் மாதத்தில் மக்கா அல்-மஸ்ஜித் அல்-ஹராம் சபா மர்வாவுக்கு பின்னாலுள்ள மக்கத் அல்-முகர்ரமஹ் நூல்நிலையத்தில் எனக்கு ஒரு சந்திப்பு இருந்தது. அடியேன் எழுதிய அரபு நூல்களை இந்த நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்ச்சி அது. நூலகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அந்த அமர்வில் வைத்து அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி அவர்களைப் பற்றிய பேச்சும் வந்தது. அவ்வேளை அன்னாரைப் பற்றி விசாரித்தேன். அன்னார் ராபிதாவிலிருந்து அண்மையில் விடைபெற்றுக்கொண்டதாகவும் தற்போது தனது ஊரான புரைதாவில் தங்கி இருப்பதாகவும், சன்மார்க்க மற்றும் இலக்கிய வகுப்புகள், சந்திப்புகள் நடத்திவருவதாகவும் நூல்நிலையப் பணிப்பாளர் என்னிடம் கூறினார். நீண்ட காலமாக ராபிதாவின் உதவி செயலாளர் நாயகம் பதவியை அவர் வகித்தார் என்று நான் கூறினேன். ஆம் என பதிலளித்த பணிப்பாளர் ராபிதாவின் செயலாளர் நாயகங்களாக பலர் மாறினாலும் அஷ்-ஷைக் அல்-அப்பூதி அவர்களின் பதவி அவராக ராஜினாமா செய்யும்வரை மாறவே இல்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. மறைந்த மன்னர் பஹ்த் அவர்கள் அஷ்-ஷைக் அல்-அப்பூதி அவர்கள் இந்தப் பதவியிலிருந்து அவராக விலகினாலே தவிர அன்னாரின் இறுதிவரை அவர் நீக்கப்படக் கூடாது என எழுத்து மூல கட்டளை பிறப்பித்திருந்தார் எனவும் கூறினார்.

அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி அவர்களின் பணிகளை வல்ல அல்லாஹ் ஏற்று, அவற்றுக்கு நிரப்பமான கூலிகளை வழங்கியருள்வானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.07.27
2018.04.15


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page