Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

பானத் ஸுஆத்


பானத் ஸுஆத் ஒரு பிரபல நபி புகழ் மாலை. இந்த அரபுக் கவிதையைச் சொன்னவர் அருமை சஹாபியும் அற்புதமான கவிஞருமான கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள்.

எம் உயிரிலும் மேலான நெஞ்சில் நிறைந்த கண்மணி நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஹழ்ரத் கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் இந்தக் கவிதையில் வாயாரப் புகழ்ந்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ முன் அன்பு நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தான் வசைபாடிச் சொல்லிய கவி வரிகளுக்கு மன்னிப்புக் கேட்பதும்,அண்ணலாரைப் புகழ்வதும்தான் அவர்கள் இக்கவியைச் சொன்னதன் நோக்கம்.

ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் அன்புத் தோழர்களுடன் சபையில் வீற்றிருக்க அங்கே வந்த கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கான ஷஹாதத்தைக் கூறிவிட்டு தன்னை அறிமுகம்செய்துகொண்டார்கள். பின்னர் கவி சொல்ல ஆரம்பித்தார்கள். கொட்டோவென கொட்டியது கவி மழை. 57 அடிகள் கொண்ட ஒரு நீண்ட செய்யுளை அவர்கள் சொல்லி முடித்தார்கள். இனிமையான சொற்கள்,அருமையான கருத்துக்கள்,அலாதியான சொல்லாட்சி,ஆற்றொழுக்கான நடை கொண்ட தேன் சொட்டும் கவிதை. ஒவ்வோர் அடியும் ‘லாம்’ எழுத்தில் முடியும்வண்ணம் தன் கவிதையை அவர்கள் பாடி நிறைவுசெய்யும்வரை கருணை ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் லயித்துப்போய் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முடித்தவுடன் தன் அங்கியை எடுத்து கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் மீது போட்டுவிட்டார்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

நபி புகழ் கவிதைகளில் பானத் ஸுஆத் விசேடமாக குறிப்பிடத்தக்கது. ‘பானத் ஸுஆது பகல்பில் யவ்ம மத்பூலு’ என இந்தச் செய்யுள் துவங்குவதால் பானத் ஸுஆத் என இது பெயர் பெறலாயிற்று. இலக்கிய உலகில் இந்தக் கவிதை ஓர் அசாதாரண தரத்தைச் சேர்ந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய அறிஞர்கள் இந்தச் செய்யுளுக்கு விரிவுரை எழுதியுள்ளனர். பாரசீகம்,பிரஞ்சு,இத்தாலி,ஆங்கிலம்,ஜெர்மன்,துருக்கி என பல உலக மொழிகளில் இந்தக் கவிதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கவிராயர் ஹழ்ரத் கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள் வளமான கவித்துவம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்களது குடும்பமே ஒரு கவிஞர்கள் குடும்பம்தான். இந்த சஹாபியின் தந்தை,தந்தையின் தந்தை,சகோதரர்,தந்தையின் சகோதரிகள்,தந்தையின் சகோதரியின் பிள்ளைகள்,அன்னாரின் பிள்ளை,பேரன் என எல்லோரும் கவிதை மன்னர்கள்.

கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் கவிதைகள் காலத்தால் அழியாதவை,அகன்ற,விரிந்த இமாலய அரபு இலக்கியப் பரப்பில் அன்னாரின் கவிதைகள் இமயம்.

முத்தான நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜனித்த மற்றும் மறைந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாளில் பானத் ஸுஆத் பற்றி ஒரு சின்ன அறிமுகத்தை தமிழுலகுக்குத் தர வாய்ப்பைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

என் மனதில் இடம் பிடித்த,என் நெஞ்சில் நீக்கமற நிறைந்துள்ள,இச்சிறியவனின் அரபு இலக்கியத்துக்கும் கவி புனைதலுக்கும் உரமூட்டிய கவிதைகளில் மாபெரும் கவிஞர் கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் அழகழகான,அற்புதமான,சத்துள்ள,உயிர்ப்புள்ள,கவர்ந்திழுக்கும் கவிதைகளும் அடங்கும் என்பதை இத்தால் நன்றியுடன் பதிவுசெய்கிறேன்.

கீர்த்திமிகு நபித் தோழர் இறையருட் கவிஞர் ஹழ்ரத் கஃப் இப்ன் ஸுஹைர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களை அல்லாஹ் தஆலா ஆசீர்வதிப்பானாக! அன்னாருக்கு அவனளித்த கவித்துவத்தை நமக்கும் தந்தருள்வானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.03.12
2018.11.21


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page