Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

ஹாபில் கலீலுர் ரஹ்மான்
ஒரு வியத்தகு பக்கா ஹாபில்


1980களின் ஆரம்பப் பகுதியில் கொழும்பு மதீனத் அல்-இல்ம் கல்லூரியில் அல்-குர்ஆன் மனனம் செய்துகொண்டிருந்தேன். 1983ஆம் ஆண்டில் ஒரு புதிய ஆசிரியர் எமக்கு வந்துசேர்ந்தார். அவரின் பெயர் கலீலுர் ரஹ்மான். அன்னார் ஒரு மவ்லவி, ஹாபில். பார்க்க வடிவான தோற்றம், எடுப்பான நடை, இளமை கொஞ்சும் உடல், சுறுசுறுப்பான இயக்கம். மாணவர்களாகிய நாமும் அவரைக் கூர்ந்து அவதானிக்கலானோம்.

ஹிப்ல் அல்-குர்ஆன் (அல்-குர்ஆன் மனனம்) மாணவர்களாகிய நாம் இதற்கு முன் மதீனத் அல்-இல்ம் கல்லூரியில் கண்ட ஆசிரியர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட ஓர் ஆசிரியரைப் பெற்றுள்ளோம் என்பதை உண்மையிலேயே உணர்ந்தோம். அத்தோடு இதற்கு முன் நாம் கண்டிராத ஒரு பக்கா ஹாபிலைக் கண்டுள்ளோம் என்றும் உணர்ந்தோம்.

புனித அல்-குர்ஆன் முழுவதையும் எந்த சமயத்திலும் தவறு வராமல் மளமளவென மனப்பாடமாக ஓத முடியுமானவர். ஒரு வசனத்தைச் சொன்னால் அதற்கு முன்னுள்ள வசனத்தையும் சொல்வார், பின்னுள்ள வசனத்தையும் சொல்வார். ஒரு சொல்லைச் சொன்னால் போதும். அந்த சொல் அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ள இடத்தை, இடங்களையெல்லாம் அணுவளவும் பிசகாது சொல்லி முடிப்பார். ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி.

மதிப்புக்குரிய கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் சுமார் எட்டு மாத காலம் மதீனத் அல்-இல்மில் கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் பிள்ளைகள் அன்னாரிடம் பாடம் கொடுக்கும்போது அல்-குர்ஆன் பிரதியைத் திறந்துவைத்து அன்னார் பாடம் கேட்டதை ஒரு நாளிலாவது நான் கண்டதில்லை. மாணவர்கள் விடும் அத்தனை பிழைகளையும் உடனுக்குடன் தனது மனனத்திலிருந்தே திருத்துவார்.

திறந்த மண்டபத்தில் மாணவர்கள் பிரிந்து பிரிந்து அமர்ந்துகொண்டு புதிய பாடங்களை மனனமிடுவதிலும், பழைய பாடங்களை மீட்டுவதிலும் ஈடுபட்டிருப்பர். இவ்வேளை ஹழ்ரத் மண்டபத்தின் நடுவே அல்-குர்ஆனை ஓதியவராக ஒரு தொங்கலிலிருந்து மற்ற தொங்கல்வரை உலாவிக்கொண்டிருப்பார். இங்கே ஆச்சரியம் என்னவென்றால் மாணவர்கள் பாராயணம் செய்யும்போது விடும் தவறுகளைக்கூட அவர் திருத்துவார்.

கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் ஹிப்ல் அல்-குர்ஆனின் நுணுக்கங்களை எமக்கு சொல்லிக்கொடுத்தார். சிக்கலான இடங்களை சிரமமின்றி கையாள்வதை உண்மையில் அவர்தான் எமக்குக் காட்டித்தந்தார். ஒரே மாதிரியான வசனங்கள், சொற்றொடர்கள் புனித மாமறையில் பல இடங்களில் வருகின்றன. மனனத்திலிருந்து ஓதும் சமயம் இவ்விடங்களில் வெகு அவதானம் அவசியம். அல்-குர்ஆன் மனனம்செய்த ஹாபில்கள் பெரும்பாலும் தவறு விடுகின்ற அல்லது தடுமாறுகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இது ஹழ்ரத் அவர்கள் எமக்கு அடிக்கடி சொல்லுகின்ற ஒன்று.

ஹாபில் கலீலுர் ரஹ்மான் அவர்கள் எமக்கு ஆசானாக வரும்போது அடியேன் குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தேன். இனி மீட்ட வேண்டிய வேலை இருந்தது. கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களிடம் மீட்டல் கொடுக்க ஆரம்பித்தேன். முற்றிலும் ஒரு புதிய பாதையில் இப்போது நான் பயணிக்கிறேன் என்ற உணர்வுதான் எனக்கு.

இன்றும்கூட பசுமையான நினைவு. எனது மீட்டலின்போது ஸூரத் அல்-தவ்பாவை ஹழ்ரத் அவர்களிடம் மனனமாக ஒப்புவிக்கிறேன். அவ்வத்தியாயத்தின் 106ஆம் வசனம். 'வஆகரூன முர்ஜூன' என நான் ஓதுகிறேன். அவர் நிறுத்துகிறார். சரியாக ஓதுமாறு கூறுகிறார். நான் திரும்பவும் 'வஆகரூன முர்ஜூன' என ஓதுகிறேன். என்னை நிறுத்துகிறார். குர்ஆனைத் திறந்து பார்க்கும்படி என்னை வேண்டுகிறார். திறந்து பார்க்கிறேன். 'வஆகரூன முர்ஜவ்ன' என்றிருக்கிறது. நான் ஆரம்பத்தில் இந்த ஆயத்தை மனனம் செய்யும்போதே இந்தத் தவறோடுதான் மனனம் செய்துள்ளேன். இத்தனை நாட்களும் இப்படித் தப்பாகத்தான் ஓதிவந்துள்ளேன். மெய்யாகச் சொல்கிறேன். இன்றும்தான் இந்த ஆயத்தை நான் ஓதும் வேளையிலும், அடுத்தவர் அதை ஓதக் காதில் விழும் வேளையிலும் கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் தப்பாமல் நினைவுக்கு வருவார், அவர் என்னை திருத்திய முறை, உட்கார்ந்திருந்த கோலம், உட்கார்ந்திருந்த இடம் யாவும் பலிச்சென மனத் திரையில் ஓடும். இன் ஷா அல்லாஹ் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்.

மதீனத் அல்-இல்ம் கல்லூரியில் நாம் பயிலுகிற காலத்தில் அது கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளில் இயங்கிக்கொண்டிருந்தது. இப்போது கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வளவில் ஒரு தனியான கட்டிடத்தில் இயங்குகின்றது. நாம் அங்கே கற்கின்ற காலத்தில் ஸைபுத்தீன் சாஹிப் ஹழ்ரத் பெரிய பள்ளியின் கதீபாகவும், துணை இமாமாக சிறிது காலமும் பின்னர் இமாமாகவும் கடமை புரிந்தார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இலங்கையிலேயே வசித்தார். 'தீன்சா' எனும் புனைப் பெயரில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகங்கள், உரைச் சித்திரங்கள் எழுதுவார். பெரிய பள்ளிவாசலின் இரண்டாம் மாடியில் சுருளிப் படிக்கட்டுக்கு அருகே ஒரு பெரிய அறையுண்டு. அந்த அறை நடுவில் பலகையால் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ஸைபுத்தீன் சாஹிப் அவர்களுக்கும், ஒரு பகுதி ஹாபில் கலீலுர் ரஹ்மான் அவர்களுக்கும் தங்கிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் அவரவர் பகுதியிலிருந்து பேசிக்கொள்வர். ஸைபுத்தீன் சாஹிப் அவர்களுக்கு ஏதும் அல்-குர்ஆன் வசனமொன்று எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் வருகிறதென அறிந்துகொள்ள தேவைப்பட்டால் தனது அறைப் பகுதியிலிருந்து குரல்கொடுப்பார். கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் உடனடியாக சொல்லிக்கொடுப்பார். ஹாபில் கலீலுர் ரஹ்மான் அவர்களின் இந்த அசாதாரண திறமையை ஸைபுத்தீன் சாஹிப் அவர்கள் மாணவர்களாகிய எம்மிடம் வியந்துபோய் சொல்வார். 'எனது பத்ஹுர் ரஹ்மான் கலீலுர் ரஹ்மான்' என்பார். அல்-குர்ஆனின் வசனங்களைக் கண்டறிய அன்றைய காலத்தில் ஒரு கிரந்தம் பிரபலமாகவிருந்தது. அதன் பெயர் 'பத்ஹுர் ரஹ்மான் லிதாலிபி ஆயாத்தில் குர்ஆன்'. பத்ஹுர் ரஹ்மானிடமிருந்து நான் பெற வேண்டிய சேவையை கலீலுர் ரஹ்மானிடமிருந்து நான் பெறுகிறேன் என்ற அர்த்தத்தில்தான் ஸைபுத்தீன் சாஹிப் ஹழ்ரத் இதனைச் சொல்வார்.

ஹாபில் என்றால் கலீலுர் ரஹ்மான் ஹாபில்தான் என்று மாணவர் நாம் பேசிக்கொள்வோம். ஒரு குறுகிய எட்டு மாத காலம் அவரிடம் கற்றாலும் எட்டு வருடங்கள் கற்றது போன்ற உணர்வுதான் இன்றும் எனக்கு. சொற்ப காலம் பணியாற்றிவிட்டு ஏதோ ஒரு காரணத்தினால் மதீனத் அல்-இல்மிலிருந்து அவர் நீங்கிக்கொண்டார். அவரிடமே முழுமையாக குர்ஆன் மனனமும் மீட்டலும் செய்திருக்க வேண்டுமே என்ற அடங்காத ஏக்கம் இன்னமும்கூட அடிமனதில் உள்ளது.

சென்ற சில மாதங்களுக்கு முன் அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா ஆலிம்களுக்கு ஒழுங்குசெய்திருந்த ஒரு கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்டேன். கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் அக்கருத்தரங்குக்கு வந்திருந்தார். அந்தத் திருக்கூட்டத்தில் அத்தனை ஆலிம்களின் முன்னிலையில் ஹழ்ரத் அவர்களின் ஒளிப்படம் போன்ற நினைவாற்றல் பற்றி எடுத்துக்கூறினேன். கருத்தரங்கின் பின்னர் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த வேளை கருத்தரங்கில் பங்குகொள்ளும் நோக்கம் முதன்மையானதல்ல. உங்களைக் காண வேண்டும் என்ற நோக்கமே முதன்மையானது என ஹழ்ரத் அவர்கள் கூறியபோது நெகிழ்ந்துபோனேன்.

உண்மையாகச் சொல்கிறேன். கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் போல ஒரு மகா திறமைசாலியான பக்கா ஹாபிலை நான் இதுவரை பார்த்ததில்லை.

கருணையாளன் அல்லாஹ் தனது அருள் மறையை மனனமிட்ட ஹாபில்களுக்கும், அதனைக் கற்றுத் தெளிந்த ஆலிம்களுக்கும் கொடுக்கின்ற அத்தனை நற்கூலிகளையும், கண்ணியத்தையும், உயர்வையும் என் மரியாதைக்குரிய உஸ்தாத் கலீலுர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களுக்கு கொடுத்தருள்வானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.05.16
2020.01.12


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page