Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்


கொரனா நுண்ணங்கி உலக ஓட்டத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், அன்றாட உழைப்பாளிகள் இனி இல்லை எனுமளவு நலிவடைந்துள்ளனர். திருடாதவனும் திருடும் இழி நிலைக்கு வந்துள்ளான். இந்த துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பத்தில் இல்லையென கஷ்டப்படும் மக்களின் துயர் துடைக்க அரசாங்கம் முன்வர வேண்டும். தனவந்தர்கள் தம் கருவூலங்களைத் திறக்க வேண்டும். பசி பட்டினியின்போது கொடுக்கப்படும் தர்மங்களின் நன்மைகள் அதிகம். அதனைச் செய்யும் தர்மவான்களுக்கு அல்லாஹ் தஆலாவிடம் அந்தஸ்துகள் அனந்தம். இதனை விளங்கிக்கொள்ள பின்வரும் நிகழ்ச்சியைப் படிப்போம்!

இப்ன் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபூ பக்ர் அல்-சித்தீக் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களின் காலத்தில் வறட்சி ஏற்பட்டது. மனிதர்கள் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களிடம் ஒன்றுதிரண்டு 'மழையில்லை, பயிரில்லை. மனிதர்கள் கடும் கஷ்டத்தில் இருக்கின்றனர்.' என்று கூறினர். 'நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். மாலையாவதற்குள் அல்லாஹ் உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கிவிடுவான்.' என்று அபூ பக்ர் அல்-சித்தீக் கூறினார்கள். கொஞ்ச நேரத்திலேயே உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களின் வேலையாட்கள் ஷாமிலிருந்து வந்துவிட்டனர். அவர்களுக்கு நூறு ஒட்டகைகள் நிறைய கோதுமை அல்லது உணவு வந்தது. உஸ்மான் இப்ன் அப்பான் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களின் வாயிலில் மக்கள் ஒன்றுசேர்ந்து வாயிலைத் தட்டினர். அந்த மனிதர்களிடம் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள் வெளியே வந்து 'உங்கள் தேவை என்ன?' என்றார்கள். 'வறட்சி, மழையில்லை, பயிரில்லை. மக்கள் கடும் கஷ்டத்தில் இருக்கின்றனர். உங்களிடம் உணவிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. முஸ்லிம்களின் ஏழைகளுக்கு நாம் கொடுத்துவிடுவதற்காக நீங்கள் அதனை எமக்கு விற்றுவிடுங்கள்.' என்று அவர்கள் கூறினர். 'ஓ, தாராளமாக! உள்ளே வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.' என்றார் உஸ்மான். வியாபாரிகள் உள்ளே நுழைந்தனர். உணவு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வியாபாரிகளே! ஷாமிலிருந்து நான் கொள்முதல் செய்திருக்கிறேன். நீங்கள் எனக்கு எவ்வளவு இலாபம் கொடுக்கப்போகிறீர்கள்?' என உஸ்மான் கேட்டார். 'பத்துக்கு பன்னிரண்டு' என்றனர். 'அவர்கள் (வேறு ஆட்கள்) எனக்கு கூடக் கொடுப்பதாக கூறியுள்ளனர்' என்றார்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹ் அவர்கள். இப்போது 'பத்துக்கு பதினான்கு' என்றனர் அம்மக்கள். 'அவர்கள் (வேறு ஆட்கள்) எனக்கு கூடக் கொடுப்பதாக கூறியுள்ளனர்' என்றார் உஸ்மான். 'பத்துக்கு பதினைந்து' என்று அந்த மக்கள் கூறினர். 'அவர்கள் (வேறு ஆட்கள்) எனக்கு கூடக் கொடுப்பதாக கூறியுள்ளனர்' என்றார் உஸ்மான். 'அபூ அம்ரே! எம்மைத் தவிர வேறு வியாபாரிகள் மதீனாவில் இல்லை. உங்களுக்கு கூடத் தருவதாகச் சொன்னவர் யார்?' என்று வியாபாரிகள் கேட்டனர். 'அல்லாஹ் அஸ்ஸ வஜல் ஒவ்வொரு திர்ஹத்துக்கும் (வெள்ளி நாணயம்) எனக்கு பத்து கூடத் தருவதாக கூறியுள்ளான். இதனைவிட நீங்கள் கூடத் தர முடியுமா?' என்றார் உஸ்மான். அவர்கள் 'இல்லை' என்றனர். 'இந்த உணவை முஸ்லிம்களின் ஏழைகளுக்கு நான் தர்மமாக ஆக்கிவிட்டேன் என்பதற்கு நிச்சயமாக அல்லாஹ்வை நான் சாட்சியாக ஆக்குகிறேன்' என்றார் உஸ்மான்.

அன்றிரவு நான் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன். அவர்கள் ஒளிரும் ஆடையணிந்து, ஒளிரும் பாதரட்சைகள் அணிந்து கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறமுடைய குதிரையொன்றின் மீது இருக்கிறார்கள். அவர்கள் கையிலே ஓர் ஒளிரும் கம்பிருக்கிறது. அவர்கள் அவசரமாக செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! தங்கள்பாலும் தங்கள் பேச்சின்பாலும் நான் கடும் ஆசையிலிருக்கிறேன். தாங்கள் எங்குதான் அவசரமாக செல்கிறீர்கள்?' என்றேன். 'இப்ன் அப்பாஸே! உஸ்மான் இப்ன் அப்பான் ஒரு சதக்கஹ் செய்திருக்கிறார். அதனை அல்லாஹ் அஸ்ஸ வஜல் அவரிடமிருந்து ஏற்றுக்கொண்டு அதற்காக சுவனத்தில் ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்துவைத்துள்ளான். நாம் அவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளோம்.' என்று கூறினார்கள் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இமாம் அல்-ஆஜுர்ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்-ஷரீஅஹ் எனும் நூலில் மேற்படி சம்பவத்தைப் பதிவுசெய்துள்ளார்கள்.


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.08.14
2020.04.08


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page