Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு


குற்றச் செயல்களை முற்றாக நிறுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம் என்பது இஸ்லாமிய நாடுகள் பின்பற்றும் குர்ஆனிய குற்றவியற் சட்ட தண்டனை முறைகள் மூலம் நிரூபணமாயுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கொலைசெய்தவன் தான் கொலைசெய்ததற்கான காரணத்தையும் கொலைசெய்யப்பட்டவன் தான் கொலைசெய்யப்பட்டதற்கான காரணத்தையும் தெரியாத அளவிற்கு கொலை அதிகரிப்பது மறுமை நாள் சம்பவிப்பதற்குரிய அடையாளங்களுள் ஒன்றென்பது நபிமொழிக் கருத்தாகும். யுக முடிவு தினம் அண்மித்துவிட்டதோ என எண்ணும் அளவுக்கு உலகில் மூலை முடுக்கெங்கும் நொடிக்கு நொடி கொலைச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுவருவதை மனித குலம் பார்த்தும் கேட்டும்வருகிறது.

இந்நாட்டின் மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவர்கள் பாதாள உலகச் சக்திகளின் துப்பாக்கி ரவைகளுக்குப் பலியான அதிர்ச்சி செய்தி வெளியாகிய ஓரிரு தினங்களில் மற்றுமொரு திடுக்கிடச்செய்யும் கொலை சம்பவம் பற்றி 2004.11.24ஆந் தேதிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தன் பச்சிளம் பாலகர்கள் இருவரை படுக்கையில் வைத்து கோரமாக வெட்டிக் கொன்ற பாசமுள்ள தந்தை ஒருவர் பற்றியது அந்தச் செய்தி.

இத்தினத்திலே மற்றுமொரு வேதனை தரும் செய்தியையும் இந்நாட்டுப் புதினத் தாள்கள் தாங்கி வந்துள்ளன. அதுதான் பாதாள உலகச் சக்திகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அம்பேபிட்டிய பலியானதைத் தொடர்ந்து மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தேச திட்டத்துக்கு மனித உரிமைகள் ஆணைக் குழுவின் எதிர்ப்பு பற்றிய செய்தி. இந்தச் செய்தியின் ஒரு பகுதியில் இடம்பிடித்துள்ள வசனங்களை இங்கு எடுத்தாள விரும்புகிறோம்.

“மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது மனித உரிமைகள் விதிமுறைக்கும் சட்டங்களுக்கும் எதிரானது.” இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுச் செயலாளர் ரி.எம்.ஐ. சிறிவர்தன தெரிவித்ததாக அப்பத்திரிகைச் செய்தி சொல்கிறது. மரண தண்டனையை அமுல்படுத்துவதால் எந்த மனித உரிமை மீறப்படுகிறது என்பதுதான் நாம் இப்போது முன்வைக்கும் கேள்வி. ஒரு மனிதன் தன்னைப் போன்ற ஒரு சகாவை கொலைசெய்ய உரிமை கொண்டுள்ளான் என்பதையே இது காட்டுவது போலத் தெரிகிறது.

அச்செய்தியின் மற்றுமொரு பந்தியில் ‘அவற்றைக் (கொலைகளை) கட்டுப்படுத்த சட்டம், பாதுகாப்பு என்பவற்றை இறுக்கிச் சரியாகச் செயற்படுத்த வேண்டும்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. இது முன்னுக்குப் பின் முரணானதாக இருப்பதாகவே எமக்குப் புரிகிறது. மரண தண்டனை ஒன்று இல்லாத நிலையிலே எந்தச் சட்டத்தை இறுக்கிச் சரியாகச் செயற்படுத்த வேண்டும்? இது சற்று வேடிக்கையாகக்கூட இருக்கிறது. பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற வாதத்தை எடுத்துக்கொண்டு 2004.11.24ஆந் தேதிய பத்திரிகைகளில் வெளியான பச்சிளம் குழந்தைகளை ஒரு தந்தை வெட்டிக் கொன்ற படுபாதகச் செயலைத் தடுக்க எந்த விதமான பாதுகாப்பை அரசு வழங்க முடியுமென சம்பந்தப்பட்டவர்கள் பரிந்துரைசெய்கிறார்கள்?

குற்றச் செயல்களை முற்றாக நிறுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம் என்பது இஸ்லாமிய நாடுகள் பின்பற்றும் குர்ஆனிய குற்றவியல் சட்ட தண்டனை முறைகள் மூலம் நிரூபணமாயுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

விபச்சாரம், களவு, கொலை, கொள்ளை, மது பாவனை போன்ற பெரும் பாதகங்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திலே கடுமையான தண்டனைகள் உள்ளன. கொலைப் பாதகத்துக்கு இஸ்லாம் கூறும் தண்டனை முறை அலாதியானது.

புனித குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 178, 179ஆம் வசனங்களை இங்கு எடுத்தாள விரும்புகிறோம்.

“ஈமான் கொண்டோரே! கொலையுண்டவர்கள் விஷயத்தில் (பகரமாக) பழிவாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குப் பகரமாக சுதந்திரமானவனும் அடிமைக்குப் பகரமாக அடிமையும் பெண்ணுக்குப் பகரமாகப் பெண்ணும் (பழிவாங்கப்படுதல் வேண்டும்). அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதர (பாத்தியஸ்த)ரால் (கொலைசெய்த) அவனுக்கு ஏதேனும் மன்னிக்கப்பட்டுவிட்டால், அப்போது (கொலைசெய்யப்பட்டவரின் உறவினர்கள்) அறியப்பட்ட (வழக்கமான) முறையைப் பின்பற்றுதல் வேண்டும். (கொலைசெய்தவரைச் சார்ந்தோர் நஷ்டஈட்டை) அவன்பால் பெருந்தன்மையுடன் நிறைவேற்றிவிடவும் வேண்டும். இது உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள சலுகையும் கிருபையுமாகும். ஆகவே, இதன் பின்னர் யாராவது வரம்பு மீறினால், அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. நல்லறிவுடையோர்களே! (கொலையுண்டவர்கள் விஷயத்தில்) பழிதீர்ப்பதில் உங்களுக்கு வாழ்வு உண்டு. (அதன் மூலம்) நீங்கள் தவிர்ந்துகொள்ளலாம்.”

இந்த வசனங்களிலிருந்து ஒருவன் கொலைசெய்யப்பட்ட மாத்திரத்திலேயே கொலையாளி கொலைசெய்யப்பட வேண்டும் என்றோ, நடைபெற்ற ஒரு கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் கொலைசெய்தவனைக் கொன்றுதான் ஆக வேண்டும் என்றோ வியாக்கியானம்செய்யப்படலாகாது. இங்கு எதிர்பார்க்கப்படுவது என்னவெனில் ஒரு கொலை நடந்தால் சட்டத்தின் மூலம் அதற்காக தண்டனையை கொலையாளிக்குப் பெற்றுக் கொடுக்க கொலைசெய்யப்பட்டவனின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதும், ஒரு கொலைக்கு ஒரு கொலையே, அது வரம்பு மீறப்பட்டு பல கொலைகளுக்கு இடமளிக்கப்படலாகாது என்பதுமாகும்.

மேற்படி இறை வசனங்களிலே இன்னுமொரு மனிதநேயம் சுட்டிக்காட்டப்படுவதை அவதானிக்க வேண்டும். அதுதான் கொலையுண்டவனுக்காக பழிவாங்க உரிமை பெற்றவரை கொலையாளியின் பரம விரோதியாகக் காட்டாமல் 'சகோதரன்' என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளமை. கொலைகள் முன்கூட்டிய திட்டத்தின் பிரகாரமும் நடக்கலாம். திடுமெனக் கிளர்ந்தெழும் ஆத்திரம் கண்ணை மறைப்பதன் மூலமும் நடைபெறலாம். எதிர்பாராத விதத்திலும் நடைபெறலாம். எது எவ்வாறாயினும் கொலைசெய்தவனை ஒரு சகோதரனாகக் கருதி மன்னிக்க விரும்பினால் அதற்குரிய இரத்த நஷ்டஈட்டை அறவிட்டெடுத்து அவனை மன்னிக்கலாம் என்பது அல்லாஹ் மனிதர்களுக்குக் காட்டித் தந்துள்ள சன்மார்க்கத் தீர்ப்பாகும்.

பாதாள உலகச் சக்திகள் மேற்கொண்டுவரும் கொலைப் பாதகச் செயல்களுக்கு மரண தண்டனையே ஒரே தீர்வு. அவ்விதமான சமூக விரோதச் சக்திகள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். ஒரு கொலைகாரனுக்கு வழங்கப்படும் மரண தண்டனை எத்தனையோ கொலைகளை நிறுத்த வழிசெய்யும். மரண தண்டனை மூலம் சமூகத்துக்கு வாழ்வு உண்டு. மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. மனித மனங்களில் அமைதி நிலவுகின்றது. வீடுகளும் நாடுகளும் காடுகளும் நிம்மதியடைகின்றன.

மரண தண்டனை, கல்லெறிந்து கொல்லுதல், கரத்தைத் துண்டித்தல் போன்ற இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் உலக நாடுகளால் காட்டுமிராண்டித்தனம் என்று எவ்வளவுதான் எள்ளி நகையாடப்பட்டாலும் இறைவனின் ஆணையை அவன் இட்ட கட்டளைப்படியே நிறைவேற்றுதலில் முஸ்லிம் உலகம் தனது நிலைப்பாட்டை எப்போதுமே மாற்றிக்கொள்வதில்லை. எனவேதான் அவ்வாறான தண்டனைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படுவதோடு அவை பகிரங்கமாகவும் நிறைவேற்றப்படுகின்றன. வெறுமனே மரண தண்டனையை விதித்துவிட்டு வருடக்கணக்கில் குற்றவாளிகளை சிறைகளில் அடைத்துவைப்பதும் பின்னர் யாதாயினும் ஒரு முக்கிய தினத்தை முன்னிட்டு அவர்களை சுதந்திரமாகத் திரிய திறந்துவிடுவதும் குற்றச் செயல்களைத் தடுக்க எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் நாடுகளை ஏனைய நாடகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பகிரங்கமாக நிறைவேற்றப்படும் நாடுகளில் இப்பாரதூரமான குற்றச் செயல்கள் மிக மிகக் குறைந்திருப்பதை கண்டுகொள்ளலாம்.

இந்த வழியை இலங்கை உட்பட சகல நாடுகளும் பின்பற்றினால்தான் நீதித் துறையினரையும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோரையும் பச்சிளம் குழந்தைகளையும் கொடூரக் கொலைகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது எமது உறுதியான நம்பிக்கையும் தாழ்மையான அபிப்பிராயமுமாகும்.

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2004.11.25


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page