Articles
அக்குறணையே!
அக்குறணை உறவுகளே!
ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவே!
உங்களுக்கு பல கோடி நன்றிகள்
குறிஞ்சி நிலத்தில் குளுகுளுவென ரம்மியமாய் வீசும் தென்றல் மேனிகளில் ஜில்லென ஸ்பரிசிக்கும் வரலாற்று தொன்மைமிக்க முஸ்லிம் பிரதேசம் அக்குறணை. எழில் கொஞ்சும் இலங்கைத் தீவின் மலை நாடு தன்னகத்தே அடக்கமாய் அணைத்துக்கொண்டுள்ள மத்திய மாகாணத்தில் கண்கவர் காட்சிகள் நிறைந்துள்ள கண்டி மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டி மாநகரிலிருந்து ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தொலைவில் கண்டி – மாத்தளை பிரதான சாலையில் நடுநாயகமாய் நிலைகொண்டுள்ளது அக்குறணை.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலைப் பாங்கான அக்குறணை இன்றெல்லாம் இலங்கையில் மட்டுமல்ல கடல் தாண்டி உலக நாடுகளில் உலாவருகின்றது அதன் நாமம், உலாவருகின்றனர் அதன் மக்கள். 'திரை கடலோடியும் திரவியம் தேடு' எனும் முதுமொழிக்கு உயிர் கொடுக்கும் வல்லவர்கள் அக்குறணைவாசிகள். வர்த்தக, வாணிப முயற்சிகளில் பட்டிதொட்டி எங்கும் முனைப்போடு ஈடுபடுகின்ற, வளங்களைக் கண்டறிந்து முதலீடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு இறங்குகின்ற அக்குறணை மக்களின் பெயர்கள் அடிபடாத மூலைமுடுக்கு கிடையாது.
நிகரற்ற கருணையாளன் அல்லாஹ் தஆலா அக்குறணை முஸ்லிம்களின் பொருளீட்டல் முனைவுகளுக்கு அள்ள அள்ள வற்றாத தன் கடாட்சத்திலிருந்து அள்ளி அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கின்றான் என்பது நிதர்சனமான உண்மை. அம்மக்கள் தொடுவதில் அல்லாஹ்வின் அருள்மாரி பொழிவதைக் காணலாம். பல ஆண்டுகளாக பல பேர் செய்தும் நட்டத்தையே சந்தித்துவந்த ஒரு வியாபாரத் தலத்தை அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் கையிலெடுப்பார், அதனை இலாபம் கொடுக்கும் தலமாக மாற்றியமைப்பார். ஒரு பக்கம் கருணையாளனின் துணை இதற்கிருக்க அம்மேன்மக்களின் வர்த்தக, வாணிப சூட்சுமம், முகாமைத்துவம், விடாமுயற்சி, இலாபமோ நஷ்டமோ எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலை போன்ற அம்சங்கள் மறு பக்கம் இருக்கின்றன.
பொருளீட்டலில் அவர்கள் தொட்டதை துலங்கச்செய்யும் வல்ல அல்லாஹ்வின் அளப்பரிய கிருபைக்கு நன்றியறிதலின் ஒரு பகுதியாக அவன் பாதையில் மனம் சலிக்காது, முகம் சுளிக்காது வாரி வாரி வழங்கிவருகின்றனர் அக்குறணைவாசிகள். இதனாலோ என்னவோ அக்குறணை என்றால், அக்குறணை மக்கள் என்றால் பொதுவாக மனித உள்ளங்களில் ஒரு பிடிப்பு.
ஷரீஆ துறைகளையும் அரபு மொழியையும் செம்மையாகப் போதித்து கசடறக் கற்ற ஆலிம்களை வெளிக்கொணரவும் புனித வான்மறை அல்-குர்ஆனை அகங்களில் சுமந்த ஹாபில்களை வெளிக்கொணரவுமென மத்திய மலை நாட்டில் பரந்து விரிந்த மட்டத்தில் ஒரு பாரிய இயக்கம் தேவையென கருதிய அக்குறணையிலுள்ள சில நல்லிதயங்களின் நன்முயற்சியின் நற்பயனே நாம் ஏற்றிப் போற்றும் அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்.
1971 முதல் இந்நாள்வரை குறிஞ்சி மண்ணில் குன்றிலிட்ட தீபமாய் சுடர்விட்டு பிரகாசித்தியங்கும் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் பல நூறு ஹாபில்கள், ஆலிம்களை குவலயத்துக்கு கொடுத்துதவியுள்ளது. பொய்யா வானம், தொய்யா மழையாக வருடந்தோறும் ஹாபில்கள், ஆலிம்களை அவனிக்கு அளித்துவருகிறது. அருளாளன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கடாட்சம் ரஹ்மானிய்யாவை எப்போதும் அரவணைத்துக்கொண்டுள்ளது. அவன் அனுக்கிரகம் இல்லையேல் அதன் சிறப்பான தொடர் பணி தொடர்ந்திராது. அல்-ஹம்து லில்லாஹ்.
ரஹ்மானிய்யாவின் தோற்றம், ஏற்றம் யாவற்றுக்கும் அல்லாஹ் தஆலாவின் கிருபைக்கு அடுத்தபடியாக அக்குறணை பெருமக்களின் பேருதவி மறக்க முடியாதது. தமது ஊர் கல்வி நிறுவனத்தை தாமே நடத்த வேண்டுமென்கிற வேணவா மற்றும் வைராக்கியம் நிமித்தம் தமது கஜானாக்களை ரஹ்மானிய்யாவுக்காக அல்லும்பகலும் திறந்துவைத்துள்ளனர். கொடுத்துக் கொடுத்து சிவந்துபோன அவர்களின் கரங்கள் ரஹ்மானிய்யாவுக்காக ஒருபோதும் சுருங்கிக்கொள்வதில்லை.
ரஹ்மானிய்யாவில் அறிவமுதம் அருந்தும் மாணவர்களை தம் சொந்தப் பிள்ளைகள் போல் கருதுவதும், அவர்கள் பட்டம் பெற்று வெளியேறியதன் பின்னரும் அவர்களை தம்மைச் சேர்ந்தவர்களாக பார்ப்பதும், கொண்டாடுவதும் ஈரநெஞ்சம் கொண்ட அக்குறணைச் சகோதரர்களின் போற்றத்தக்க பெருந்தன்மையாகும்.
1984 முதல் 1992 வரை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் அடியேன் கற்றுள்ளேன். நினைக்க இனிக்கின்ற, வாயில் நீர் ஊறுகின்ற ஒரு சுகந்தமான காலமது. தவம் இருந்தாலும் இனிமேல் அப்படியொரு காலம் கிடைக்குமா? சிறந்த கல்விச் சூழல், தரமான முதல்வர், நல்மனம் கொண்ட ஆசான்கள், கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்கள், அன்பான ஊழியர்கள். இந்த வசதிகளை இன்புற அனுபவித்து அறிவுத் தேன் பருக ஏற்பாடுகளை செய்துகொடுத்த பேருள்ளம் படைத்த அக்குறணை சகோதர சகோதரிகளை மறக்க முடியுமா? மறக்க மனம்வருமா? அக்குறணையை என்றும் என் சொந்த ஊர் போலவே என் இதயக் கமலத்தில் அரியாசனம் அமைத்து அமர்த்தியுள்ளேன்.
அக்குறணைக்கும், அதன் மைந்தர்களுக்கும், அதன் கல்வி நந்தவனம் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவுக்கும் நான் நிறைய நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதயம் முழுவதும் நிறைந்து, நிரம்பியுள்ள என் கலப்பற்ற நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.
அகத்தில் குடியிருக்கும் அக்குறணையே! என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உனக்கு. அக்குறணை தொப்புள்கொடி உறவுகளே! என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு. அன்பு ரஹ்மானிய்யாவே! உள்ளம் நிறைந்த நன்றிகள் உனக்கு. ஜஸாக்கும் அல்லாஹ் கைரா!
அக்குறணையே! அக்குறணை இரக்கங்களே! ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவே! கிடைக்க வேண்டிய அத்தனை நலன்களும் உங்களுக்கு கிட்ட வேண்டும். வரக் கூடாத அத்தனை தீங்குகளிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது உங்களில் ஒருவனின் உங்களுக்கான துஆ.
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1441.02.23
2019.10.23
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019