Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

செய்யத் முஹம்மத் காக்கா


அப்போது நான் ஆறரை வயது சிறுவன். 1976.02.02 அன்று புத்தளத்தில் பெரும் பரபரப்பு, கலவரம், சோகம். இனத் துவேஷத்தின் கோர முகம் கோரைப்பற்களை வெளிக்காட்டி இரத்தம் குடித்த நாள். அதற்கு முன் சில தினங்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனத் துவேஷத்தின் விஷமத்தனங்கள் ஈற்றில் புத்தளம் முஹ்யித்தீன் ஜுமுஅஹ் பள்ளிவாசலுக்குள் வைத்து நிராயுதபாணிகளான முஸ்லிம்களை சுட்டுத்தள்ளி குருதி குடிக்கும் கயவர்கள் பெருமிதமடைந்த நாள்.

மனிதாபிமானம் மரித்துப்போன சில பொலிஸாரின் ஈவிரக்கமற்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி இறந்துபோயினர் ஏழு முஸ்லிம் சகோதரர்கள். மனிதநேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளாத இந்தக் கொடூரச் சம்பவம் புத்தளம் மக்களை மட்டுமல்ல, முழு தேசத்தையும் துயரத்திலாழ்த்தியது.

அப்போது நான் சிறிய வயதினனாக இருந்தாலும் நடப்பவை பற்றி பெரியவர்கள் பேசிக்கொள்வதை கிரகிப்பவனாகவும், ஞாபகத்தில் வைத்துக்கொள்பவனாகவும் இருந்தேன். முஹ்யித்தீன் ஜுமுஅஹ் பள்ளிவாசலுக்குள் வைத்து துப்பாக்கி ரவைகளுக்கு இலக்கான எழுவரில் ஒருவர் ஜனாப் செய்யத் முஹம்மத். இவர் என் தந்தையாரின் சகோதரரான ஷஹீத் பெரியப்பா அவர்களின் மூத்த புதல்வன். வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த என் அருமைத் தகப்பனார் செய்யத் முஹம்மத் காக்கா அவர்களின் இறப்புச் செய்தியை சுமந்துகொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையிலுள்ள நாற்காலியில் அமர்ந்தவர்கள் வாய்விட்டு கண்ணீர்விட்டு அழுதார்கள். இதுவே என் தந்தையார் அழுவதை நான் பார்த்த முதல் சந்தர்ப்பம்.

செய்யத் முஹம்மத் காக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தது. நானும் கவலையுற்றேன். என் அன்புத் தகப்பனாரும் நிறையவே பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அன்னார் அந்தளவு அழுதிருப்பார்கள். 43 ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தறுவாயில் இந்த நிகழ்வை அன்பிதயங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நாவண்ணன் எழுதிய 'புத்தளத்தில் இரத்த களம்' எனும் நூலில் இவ்வாறு இறையடி எய்திய சகோதரர்களின் தகவல்கள் தரப்பட்டுள்ளன. அவர்களில் சிலரின் புகைப்படங்களும் அதில் காணப்படுகின்றன. செய்யத் முஹம்மத் காக்கா பற்றிய தகவலும் அவரது புகைப்படத்துடன் உள்ளது. குறித்த நூலின் அட்டைப் படமும் செய்யத் முஹம்மத் காக்கா பற்றிய விபரங்கள் தரும் பக்கங்களும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

செய்யத் முஹம்மத் காக்காவின் மண்ணறை வாழ்வு, மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ் தஆலா அருள் மாரி பொழிவானாக! ஜன்னத் அல்-பிர்தவ்ஸை அவருக்கு வழங்கி அன்னாரைக் கண்ணியப்படுத்துவானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2019.02.02
1440.05.26


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page