Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


சென்ற 2008.07.06 ஞாயிறு கொழும்பு-12 பெரும் விழாக் கோலம் பூண்டிருந்தது. அலங்கார மின் விளக்குகள், வண்ணக் கடதாசி தோரணங்கள், வாழ்த்துப் பதாகைகள் பிரதேசத்தை அலங்கரித்திருந்தன. வெள்ளை நிற நீண்ட அங்கி அணிந்த மாணவர்களின் காட்சி பாதைகளில் வருவோர், போவோரின் கண்களைப் பறித்தது. சும்மா சொல்லக் கூடாது. பலர் வாய்களிலும் அது பற்றிய பேச்சுதான்.

மவ்லானா, மவ்லவி எஸ். நியாஸ் முஹம்மத் ஹழ்ரத் அவர்களின் சமய, சமூகப் பணி 35 ஆண்டு நிறைவு விழா, இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரியின் 20 ஆண்டு பூர்த்தி விழா, அதன் இரண்டாவது பட்டமளிப்பு விழா, இஹ்ஸானிய்யஹ் நினைவு மலர் வெளியீட்டு விழா, தலைப்பாகை சூட்டு விழா, சமய, சமூகத் தொண்டில் தடம்பதித்த ஆலிம்கள் கௌரவிப்பு விழா, இஹ்ஸானிகள் இருவரின் திருமண ஒப்பந்த விழா என ஏழு பெரும் விழாக்கள் ஒரே மேடையில் ஒருசேர அரங்கேறிய நிகழ்வு நெஞ்சங்களில் நீக்கமற நிலைத்து நிற்கவல்ல ஓர் அற்புதமான வரலாற்று நிகழ்வுதான். அல்லாஹ்வின் அனுக்கிரகத்தினால் அதன் கதாநாயகனான மவ்லவி நியாஸ் முஹம்மத் உண்மையில் ஒரு வரலாற்று நாயகன்தான். ‘அல்-ஹம்து லில்லாஹ்’.

2008.07.06 எமது மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா. அன்றைய தினத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளவும் என சுமார் ஒரு திங்கள் முன்னரே மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்களின் அன்புக் கட்டளை பிறந்ததும் அத்தினத்தை அதற்கென்றே ஒதுக்கிக்கொண்டேன். நியாஸ் மவ்லவி ஊரைக் கூப்பிட்டு ஏதோ பண்ணப் போகின்றார் என்றதும் நிச்சயம் அதில் வித்தியாசம் இருக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் இத்தனை வித்தியாசங்கள் இருக்கும் என நினைக்கவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை.

ஆயிரக் கணக்கான மக்கள் - ஆண்கள், பெண்கள், பெரியோர், சிறியோர், வாலிபர்கள், வயோதிபர்கள், ஆலிம்கள், பொது மக்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மத்ரஸா மாணவர்கள், பெற்றோர்கள், அபிமானிகள், ஊடகவியலாளர்கள், அரசியற் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் ஒன்றாக இணைந்து மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்களையும் அவரது பிள்ளை இஹ்ஸானிய்யாவையும் வாழ்த்திப் பாராட்ட, அவரோ வருகை தந்திருந்த உலமாப் பெருந்தகைகளைப் பட்டம் சூட்டி கௌரவித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு எத்தனை கண்கள் இருந்தாலும் போதாது.

இடையில் இஹ்ஸானிய்யஹ் நந்தவனத்தில் நல்லறிவு புஷ்பமாக புஷ்பித்து நறுமணம் கமழும் இருவரின் மணப்பந்தம் நடந்தேற நாம் என்ன தப்லீக் இஜ்திமாஃ ஒன்றில் இருக்கின்றோமோ எனவும் எண்ணத் தோன்றியது.

ஈற்றில் கலந்து சிறப்பித்தோர் சகலருக்கும் மதியப் போஷனம் கிடுகுகளில் விஸ்தாரமாக வைக்கப்பட அனைவரும் வெகு சிக்காராக அமர்ந்து சாப்பிட்ட காட்சி பேருவளை புகாரி கந்தூரியை நினைவூட்டியது.

இஹ்ஸானிய்யாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவையும் இவ்வறிவுப் பீடத்தின் இரு தசாப்த நிறைவையும் குறிக்கும் பொருட்டு இஹ்ஸானிய்யஹ் சிறப்பு மலர் வெளியீடு விழா நிகழ்வுகளை மேன்மேலும் மெருகூட்டியது. சன்மார்க்கப் பெரியார்கள், சமூக மட்டத்தில் முக்கிய பொறுப்புக்கள், பதவிகள் வகிக்கும் முக்கியஸ்தர்கள், பிரபலங்களின் ஆசிச் செய்திகள் மலரின் துவக்கப் பகுதியை தூக்கிப்பிடித்து நிற்பது இக்கலாநிலையத்துக்கு பல தரப்புக்களிலிருந்தும் ஆசீர்வாதங்கள் உள்ளதை சொல்லப் போதுமானது.

மேடையில் வீற்றிருந்த பல ஆலிம்கள் அவர்கள் சமூகத்துக்கும் சமயத்துக்கும் ஆற்றிய அரும் பணிகளுக்காக பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு அவர்கள் உட்பட எவரும் எதிர்பார்த்திராத முன்னறிவிப்பற்ற ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியாக அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்கச் செய்தது.

இவையனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தாற் போல் விழாவின் கதாநாயகனான மவ்லவி நியாஸ் முஹம்மத் தோள் சுமக்க முடியாத அளவு ஒன்றன் மேல் ஒன்றாக பொன்னாடை போர்த்தப்பட்டு, கழுத்து இடம் கொடா அளவு பூமாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட கண்கொள்ளாக் காட்சி ஒரு வரலாற்று நாயகனை நெஞ்சாற நேசிக்கும் மக்களின் ஆத்மார்த்த அன்பை நன்கு பளிச்சிட்டது. சுமார் 35 வருடங்கள் உடலாலும் உள்ளத்தாலும் அவருடன் இணைந்து வாழ்ந்து வரும் பீர் சாஹிப் வீதி மக்கள் அவரின் பன்முகப்பட்ட சேவையை மக்கள் மன்றத்தில் அங்கீகரித்து அவரை ஏற்றிப் போற்றி, சிலாகித்துப் பேசி, ஆரத்தழுவி, அன்பு முத்தம் கொடுத்த பசுமையான காட்சி நிச்சயம் என்றும் பசிய நினைவுதான்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை குடும்பம் பெரு விழா நிகழ்ச்சிகளை மேடையில் கச்சிதமாய் பொறுப்புணர்வுடன் நெறிப்படுத்தியமை நெஞ்சங்களைத் தொட்டது. அரங்கில் அவர்களின் காத்திரமான பாத்திரம் உண்மையில் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அறப்பணியில் முத்திரை பதித்த முத்தான உலமாப் பெரு மக்கள் சிலர் பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்ட போது சற்றும் எதிர்பார்த்திராத வண்ணம் சிறியவனாம் இவன் பெயர் கூறி அழைக்கப்பட்டு ‘காதிமுல் உலமா’ (ஆலிம்களின் ஊழியன்) பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட அப்படி என்னதான் நான் செய்திட்டேனோ இன்னமும் யோசிக்கின்றேன். இச்சிறியவனையும் ஒரு பொருட்டாக மதித்து கனம் பண்ணிய மவ்லவி நியாஸ் முஹம்மத் ஹழ்ரத் அவர்களை இம்மையிலும் மறுமையிலும் ஏகன் அல்லாஹ் கனம் பண்ணுவானாக! அவர்களின் இக்கைங்கரியம் என்றும் என் ஆழமான இதயபூர்வ நன்றிக்கும் துஆவுக்கும் உரித்தானது.

மறை போதம், மறை போதகர்கள், மறை போதனை நிலையத்துக்கென அண்மைக் காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வெகு விமரிசையான வைபவம் ஒன்றில் பங்குபற்ற வாய்ப்புக்கிட்டிய பெருமிதம் இதயத்தில் பொங்கிப் பிரவகிக்க இல்லம் திரும்பிய அடியேன் என் உளப் பதிவுகளை உணர்ச்சி ததும்ப எழுத்தில் பதிவு செய்து வைத்திட அவாவுற்றேன். இன்று எழுதுவோம், நாளை எழுதுவோம் என நாட்கள் உருண்டோடின. 2008.07.18 வந்தது. ஆம், அது எனது பிறந்த தினம். அல்லாஹ் அருளால் அகவை 39 இல் காலடி எடுத்து வைக்கிறேன். என் மனப் பதிவுகளையும் இன்றைய தினமே எழுத்தில் பதிவு செய்கிறேன். புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

2008.07.18


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page