Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இறுதி நாளன்று இறுதிக் கவிதை
மரணப் படுக்கையில் மன்னிப்பு வேண்டும் வரிகள்


இது போன்றதொரு தினத்திலேயே இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை அல்லாஹ் தஆலா தன் பக்கம் அழைத்துக்கொண்டான். ஆம், ஹிஜ்ரி 204 ரஜப் மாதம் 29ஆம் நாளில் இவ்வுலகைப் பிரிந்தார்கள்.

ரஜப் மாதம் 29ஆம் தினம் காலை வேளை இமாம் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களுள் ஒருவரான இமாம் முஸனி (ரஹிமஹுல்லாஹ்) இமாம் அவர்களைச் சந்தித்து சுகம் விசாரிக்கிறார்கள். இந்தச் சந்திப்பு பற்றி இமாம் முஸனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தரும் வர்னணையை இமாம் தஹபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 'ஸியர் அஃலாம் அல்-நுபலாஃ' எனும் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

இமாம் முஸனி (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

'நான் ஷாபிஈ அவர்களிடம் அன்னாரின் மரண நோயின்போது போனேன். 'அபூ அப்தில்லாஹ்வே! காலையில் எப்படி இருக்கிறீர்கள்' என்றேன். தன் தலையை உயர்த்திய அவர்கள் 'உலகிலிருந்து பயணப்படுபவனாகவும், என் சகோதரர்களைப் பிரிபவனாகவும், என் கெட்ட செயலைச் சந்திப்பவனாகவும், அல்லாஹ்விடம் வருபவனாகவும் காலையில் இருக்கிறேன். எனது உயிர் சுவனம் போய்ச் சேருமா நான் அதனை வாழ்த்த அல்லது நரகம் போய்ச் சேருமா நான் அதனைத் தேற்ற என்று தெரியவில்லை.' எனக் கூறினார்கள். பின்னர் அழுதார்கள். சொல்லலானார்கள்:

'என் இதயம் கடினமாகி, என் வழிகள் நெருக்கடியானபோது
என் ஆசையை உன் மன்னிப்பின் கீழ் ஏணியாக ஆக்கினேன்
என் பாவம் என் மீது பெரிதாகவுள்ளது
அதனை உன் மன்னிப்போடு சேர்த்து பார்த்தபோது என் ரப்பே! உன் மன்னிப்பு பெரிதாக இருந்தது
நீ பாவத்தை மன்னிப்பவனாக உள்ளாய்
நீ கொடை கொடுத்துக்கொண்டும் அருளால் மன்னித்துக்கொண்டுமிருக்கிறாய்
நீ என்னைத் தண்டித்தால் நான் நிராசைகொண்டவனல்ல
எனது குற்றம் காரணமாக நான் நரகம் புகுந்தாலும் சரியே
நீ இல்லையேல் இப்லீஸினால் வணக்கசாலி வழிகெட்டிருக்க மாட்டான்
எப்படி ஆதமாகிய உனது தூய நண்பரையே அவன் வழிகெடுத்தானே
நிச்சயமாக நான் பாவம் செய்கிறேன். அதன் தரம்
எனக்குத் தெரியும்
அல்லாஹ் கருணை செய்து மன்னிக்கிறான் என்பதும் எனக்குத் தெரியும்'

இந்தக் கவிதையே இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இறுதியாக புல்புல் இசைத்தது. இதில் அல்லாஹ்வின் மன்னிப்பை, கருணையை அன்னார் ஆசித்து நிற்கப் பார்க்கின்றோம்.

வெறும் 54 ஆண்டு சொற்ப காலம் வாழ்ந்துவிட்டு ஒருவர் ஐம்பத்து நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் செய்திடுவது அசாத்தியமான எண்ணிறந்த காத்திரமான பணிகளை புரிந்துவிட்டு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் உலகை நீத்தார்கள்.

கருணையாளன் அல்லாஹ் இமாம் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி கண்ணியப்படுத்திவைப்பானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1438.07.29
2018.04.17


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page