Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


மனிதன் மரணிக்கக்கூடியவன், தவறுசெய்யக்கூடியவன். அவனது அறிவும் தீர்மானிக்கும் ஆற்றலும் மட்டுப்படுத்தப்பட்டவை. எனவேதான் அவனுக்கு வழிகாட்டல் தேவைப்படுகிறது. வழிகாட்டலை மனிதனிடமிருந்தும் பெறலாம், மனிதனைவிட சக்திவாய்ந்தவனிடமிருந்தும் பெறலாம். மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலும் வளமும் உள்ள மனிதனிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல் வரையறுக்கப்பட்டதாகவும் முழுமையற்றதாகவுமே இருக்கும். மட்டற்ற நிரந்தர ஆற்றலுள்ள ஒருவனிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டல் மாத்திரமே நம்பகமானது, முழுமையானது, உண்மையானது.

மானிடரின் நன்மைக்காக முழு அதிகாரமிக்க அல்லாஹ் தனது வேதங்கள் மூலமும் தூதர்கள் மூலமும் மனிதர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றான். அவனது இவ்வழிகாட்டல் ஆதி மனிதர் ஆதம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்கள் ஊடாக ஆரம்பித்து அவர்களைத் தொடர்ந்து வந்த தூதர்கள் மூலமாக தொடர்ந்துகொண்டே இருந்தது. ஈற்றில் இவ்வழிகாட்டல் முழு மனித குலத்துக்கும் பொதுவான ஒரு வடிவம் கொடுக்கப்பட்டு இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஊடே புனித இறுதி வேதம் அல்-குர்ஆனிலே முழுமைப்படுத்தப்பட்டு முற்றுப்பெறச்செய்யப்பட்டது. பின்வரும் இறை வசனம் இதனை உறுதிப்படுத்துகிறது:

“இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கிவைத்துவிட்டேன். மேலும் என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டேன்.” (05 : 03)

இந்த இறை வழிகாட்டலே இஸ்லாம். எனவே இஸ்லாம் என்பது சிருஷ்டிகர்த்தா - சிருஷ்டிகளுக்கிடையிலான உறவை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையாகும். அது மனிதனை வழிப்படுத்தி நல்லதைச் செய்யவும் தீயதைத் தவிர்ந்துகொள்ளவும் தூண்டுகின்றது. அல்லாஹ் தஆலா இவ்வாறு கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்த குர்ஆன் எது மிக சரியானதோ அதன்பால் வழிகாட்டுகிறது.” (17 : 09)

கட்டுப்படுதல் எனும் அர்த்தம் தாங்கிய ஓர் அரபுப் பதம் இஸ்லாம். அல்லாஹ்வின் விருப்பத்துக்கு முழுமையாகக் கட்டுப்படுதல் என்பதே அதுவாகும். பின்வருமாறு அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:

“விசுவாசங் கொண்டோரே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! அன்றியும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!” (2 : 208)

நிறைவான, அனைத்தையும் உள்ளடக்கிய இந்த இறை வாழ்க்கை முறை வணக்கத்தளங்களில் மாத்திரம் நிறைவேற்றப்படும் சில வணக்க வழிபாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இஸ்லாம் என்பது தொழுகை மாத்திரம் அல்ல. ஒரு நல்ல மனிதனாக, ஓர் அன்புக்குரிய குடும்ப அங்கத்தவனாக, கடமையுணர்வுள்ள ஒரு பிரஜையாக மனிதன் செய்ய வேண்டிய அனைத்து செயல்களும் இஸ்லாம்தான். அமைதிக்கும் சாந்திக்குமாக மனித சகோதரத்துவத்தை இஸ்லாம் நிலைநிறுத்துகின்றது. மனிதனின் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் அது கையாளுகின்றது. பின்வரும் அல்-குர்ஆனிய வசனம் இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது:

“கிழக்கு, மேற்கு ஆகியவற்றின் பக்கமாக உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது நன்மை இல்லை. எனினும் நன்மை உடையவர் எவரெனில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் மலக்குகளையும் வேதத்தையும் நபிமார்களையும் விசுவாசித்து, மேலும் செல்வத்தை தம் விருப்பத்தின் மீது பந்துக்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும் அடிமைகளிலும் கொடுத்தவரும் மேலும் தொழுகையை நிறைநிறுத்தி, ஸக்காத்தையும் கொடுத்து, வாக்களித்தால் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடியவர்களும் துன்பத்திலும் கஷ்டத்திலும் யுத்த நேரத்திலும் பொறுமையுடன் இருப்பவர்களுமாவர். அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் உண்மை சொன்னார்கள். இன்னும் அவர்கள்தான் பயபக்தியாளர்கள்.” (02 : 177)

சகிப்புத் தன்மையுடன் கூடிய நடு நிலையை இஸ்லாம் கடைப்பிடிக்கின்றது, போதிக்கவும்செய்கின்றது. தீவிரவாதத்தையோ, பகைமையையோ அது போதிப்பதில்லை. உண்மை, நீதி கலந்த சமாதானத்தை அது நிலைநிறுத்துகின்றது. அநீதி, பாகுபாடு போன்றவற்றை அது ஒருபோதும் எள்ளளவும் அனுமதிப்பதில்லை. அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், பின்லேடன்வாதம், அடக்குமுறை, ஒடுக்குமுறை போன்றவை சாந்தியையும் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதையும் போதிக்கின்ற மார்க்கம் என்ற வகையில் இஸ்லாத்தில் அறவே காணக்கிடைக்காதவை. புனித அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

“(இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை.” (02 : 256)

“விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நிற்பவர்களாக, நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக இருங்கள்! ஒரு சமூகத்தவரின் வெறுப்பு நீங்கள் நீதமாக நடந்துகொள்ளாதிருப்பதற்கு திண்ணமாக உங்களைத் தூண்ட வேண்டாம்! நீங்கள் நீதியாக நடந்துகொள்ளுங்கள்! அது பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். இன்னும் நீங்கள் அல்லாஹ்வைப் பயப்படுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நுணுகி அறிந்தவன்.” (05 : 08)

உலக அதிகார சக்தி ஒன்றினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைக் கோட்பாடுகளின் தொகுப்பு ஒன்றல்ல இஸ்லாம். அது நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்வைத்த நம்பிக்கைக் கோட்பாடுமல்ல. முஸ்லிம்களின் ஏகாதிபத்தியமும் அல்ல அது. ஒரு வகுப்பாருக்காக வேண்டி வேறொரு வகுப்பாருக்கு எதிராகவோ, ஓர் இனத்துக்காக வேண்டி வேறோர் இனத்துக்கு எதிராகவோ, கறுப்பருக்காக வேண்டி வெள்ளையருக்கு எதிராகவோ, வறியோருக்காக வேண்டி செல்வந்தருக்கு எதிராகவோ இஸ்லாம் போராடுவதில்லை.

மானிடரின் இம்மை, மறுமை நிம்மதிக்கும் அமைதிக்கும் ஈடேற்றத்துக்குமான அல்லாஹ்வின் தார்மீக ராஜ்ஜியம் இஸ்லாம் என சுருக்கமாக சொல்லிவைக்கலாம். பயபக்தியுடன் நல் அமல்கள் புரிந்து சிருஷ்டிகர்த்தாவை மாத்திரம் வணங்குகின்ற மார்க்கம் இஸ்லாம்.

இப்பேருண்மையை நன்கு உணர்ந்து, தெளிந்த நிலையில் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் முஸ்லிமல்லாதோர் தன்னார்வத்துடன், சுய விருப்பத்துடன் தமது சொந்த மீட்சிக்காக புனித இஸ்லாத்தை ஏற்றனர்.

அல்லாஹ் தஆலாவின் சட்டங்களுக்கு கட்டுப்படும் மனிதன் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றான்.

இன்றைய உலக சனத்தொகையில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். முழு உலகிலும் ஏறத்தாழ 1.2 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். 800 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்ற 53 சுதந்திர முஸ்லிம் நாடுகள் உள்ளன. உலக நிலப் பரப்பின் சுமார் 23மூஐ இந்த முஸ்லிம் நாடுகள் பெற்றுள்ளன. முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ளனர். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை பொறுத்த மட்டில் அல்பானியாவில் 73மூ முஸ்லிம் பெரும்பான்மையினர் உள்ளதுடன் பொஸ்னியா – ஹெர்ஸகோவினாவில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் உள்ளனர். உலகின் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறிஸ்தவத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது.

அப்படியிருந்தும் மேற்கில் இஸ்லாமே தப்பாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதுடன் யுத்தத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தூண்டுகின்ற மார்க்கம் என பிழையாகக் காட்டப்படுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகின் அதிகார சக்தியாக மாத்திரம் முஸ்லிம்கள் இருக்கவில்லை. என்றாலும் இஸ்லாமிய நாகரிகமும் சமூகமும் முஸ்லிம் அல்லாதோர் உட்பட சகல பிரஜைகளுக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் வழங்கின என்பது வரலாற்று உண்மை. நிலைமை மாறி மேலைத்தேய காலணித்துவவாதிகள் உலகை ஆண்டபோது நடந்தது என்ன? காலணித்துவ அதிகாரக் கரங்களிலே மூன்றாம் உலக தேசங்களும் மக்களும் குறிப்பாக முஸ்லிம்கள் பல வகைகளிலும் துன்புற்றனர். மேற்கத்தியரின் சொல்லொனா குரூரங்கள் முஸ்லிம் உம்மாவை படாத பாடு படுத்தின. இன்றும்கூட முஸ்லிம் சமூகம் லௌகீக, பொருளாதார, கல்வி, தொழில்நுட்ப, ஊடக, இராணுவ, அரசியல் ரீதியாக பலகீனமாகவே உள்ளது. இந்நிலையிலும்கூட மேற்குக்கு அச்சுறுத்தலாக அது சித்திரிக்கப்படுகின்றது. தமது தனித்துவத்தை மீளப் பெறவும் தமது உள் விவகாரங்களை சீர்செய்துகொள்ளவும் முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளே மேற்கொள்ளும் முயற்சிகள் மேற்குக்கு எதிரான சவாலாக பார்க்கப்படுகின்றன.

அவலட்சணமான உலக அரசியலினால் பாதிப்படைந்த அப்பாவியாக இஸ்லாம் இன்றிருக்கின்றது. அனைத்து வித குற்றச் செயல்களையும் புரிகின்றோர் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என முத்திரை குத்தப் பார்க்கின்றனர். உலக அதிகாரத்தைத் தன் வயப்படுத்த முயற்சிக்கும் நாட்டுடன் அணிதிரளும் ஏனைய நாடுகள் முஸ்லிம் நாடுகளையும் முஸ்லிம் சமூகத்தையும் தமது பொது எதிரிகளாகப் பார்க்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் நினைவிலுள்ள தக்க உதாரணங்களாகும். ஜனநாயகத்தின் பெயரில் உலக அரசியலை முன்னெடுப்போர் ஆயிரக் கணக்கான ஆண்களை, பெண்களை, சிறுவர்களை, குழந்தைகளை பொருளாதாரத் தடை ஏற்படுத்தியும் போர் தொடுத்தும் கொடூரமாகக் கொன்றனர். ஜனநாயகத்தின் காவலரின் கைகளிலே அப்பாவி மக்கள் சந்தித்த துன்ப துயரங்களை முழு உலகும் கண்டது. ஈராக்கிலுள்ள உலகப் புகழ் பெற்ற அரும்பொருட்காட்சிசாலையில் இருந்த அரும் பொருட்கள் சூரையாடப்பட்டதையும் ஈராக்கிய வளங்கள் அழித்தொழிக்கப்பட்டதையும் சர்வ உலகும் கண்டுகளித்தது. இருந்தும் இம்மிருகத்தனமான செயல்களுக்கெதிராக குரல்கள் எழுப்பப்படவில்லை. உலகப் பொதுச் சபையான ஐ.நா.வும்கூட கைகட்டி, வாய்பொத்திப் பார்த்துக்கொண்டிருந்தது. மாற்றமாக மேலைத்தேய நாடொன்றில் ஏதும் ஒரு குற்றச் செயல் நடைபெற்றுவிட்டால் அதனை இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் இணைத்துப் பேசுவதற்கு இந்நாடுகள் கிஞ்சித்தும் தயங்குவதில்லை.

ஈராக்கிய, ஆப்கானிய, பனாமா, நிகரகுவா, சிலி, ஈக்குவடோர் அப்பாவி மக்களின் இரத்தத்தினால் தமது கைகளைத் தோய்த்துக்கொண்டுள்ளோர், பனாமா, சிலி, ஈக்குவடோர் நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொன்றவர்கள், பனாமா சட்டங்களின் கீழ் அல்லாது தமது சொந்த நாட்டு சட்டத்தின் கீழ் நொரேகாவை கைதுசெய்து விசாரிக்கும் பொருட்டு சர்வதேச சட்டத்தை புறக்கணித்துவிட்டு பனாமாவை ஆக்கிரமித்து நூற்றுக் கணக்கான மக்களை கொன்று குவிக்கும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டோர், இரத்தம் தோய்ந்த கரங்களுடையோர் முஸ்லிம் மக்களை பிழையாக விமர்சிப்பது, அவர்களை பயங்கரவாதிகளாக உலகுக்கு காட்ட முயல்வது வேடிக்கையிலும் வேடிக்கையானது.

முஸ்லிம்கள் படிப்பறிவற்றோர், நாகரிகமற்றோர், குறுகிய மனப்பான்மைக் கொண்டோர், பயங்கரவாதிகள், மத சகிப்புத் தன்மையில்லாதவர்கள், அடிப்படைவாதிகள் என பிழையாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது மிக மிகக் கவலை தருவதாகும். ஏனெனில் இஸ்லாம் பற்றிய அநாவசிய பயத்துக்கு இது வழிவகுத்துள்ளது. உயிரிலும் மேலான தமது மார்க்கம் பிழையாகக் காட்டப்படும்போது அதன் உயர் மதிப்பைப் பாதுகாக்கும் பொருட்டு பலர் இந்த அநியாயத்துக்கெதிராக எழுந்து நிற்கின்றனர். இச்செயலை பயங்கரவாதம் அல்லது அடிப்படைவாதம் என அழைக்கலாமா?

ஒழிவு மறைவின்றி பேசுவதாயின் இஸ்லாத்தின் அமைதியான வளர்ச்சியை சீரணிக்காத அதன் சத்துருக்கள் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளும் இஸ்லாத்துக்கெதிரான பிரசாரமே முஸ்லிம்களை அடிப்படைவாதிகளெனவும் பயங்கரவாதிகளெனவும் சுட்டுவதாகும். ஆரம்பத்தில் பயங்கரவாதிகள் என்றனர். பின்னர் அடிப்படைவாதிகள் என்றனர். தற்போது இஸ்லாமியவாதிகள் என்றொரு புதிய சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளனர். என்றாலும் தாம் எங்கு வாழ்ந்தாலும் அமைதி விரும்பிகளான முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருந்துவருகின்றனர். அவர்கள் ஒருபோதும் உலகுக்கு அச்சுறுத்தலாக இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. இங்கே கேள்வி என்னவென்றால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவரும் ஒருவர் அல்லது ஒரு சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ள முயல்வது நியாயமற்ற செயலா? இதனை அடிப்படைவாதம் அல்லது பயங்கரவாதம் என அழைக்கலாமா? என்பதுதான்.

அடிப்படைவாதம் என்பது உண்மையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த ஒன்றாகும். அண்மைய மேலைத்தேய வரலாற்றிலே பைபிளை நேரடி வியாக்கியானப்படுத்த வேண்டும் என்று கூறிய, கன்னி அழியா பிரசவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட, கிறிஸ்தவ அறநெறிகளை தனிப்பட்ட நடத்தைக்கான ஓர் அடிப்படையாக மாத்திரம் அன்றி மொத்தமாக சமூக, கூட்டு வாழ்வுக்கான ஓர் அடிப்படையாகவும் நோக்கிய, மேற்கத்திய வாழ்வு முறை கலாசாரத்தின் குறித்த சில பகுதிகளை கிறிஸ்தவ நம்பிக்கைக் கோட்பாடுகள், ஒழுக்க விழுமியங்களிலிருந்து அப்பாற்பட்டவையென விமர்சித்த அமெரிக்காவின் சுவிசேஷ இயக்கத்தினரைச் சுட்டுவதற்கு அடிப்படைவாதிகள் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினரில் அதிகமானோரை மதத் தீவிரவாதிகளாக மக்கள் கருதியதனால் அடிப்படைவாதிகள் என்ற சொல் இவர்களைச் சுட்டுவதற்கு பயன்படுத்தப்பட ஆரம்பித்தது.

மார்க்க ரீதியாக செய்யப்படும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் குறிப்பதற்கென்றே அடிப்படைவாதம் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றதென்றால் எல்லாக் காலங்களிலும் எல்லா சமூகங்களிலும் நடைபெறுகின்ற வன்முறையை என்னென்பது? மனித தவறுகளுக்கு மார்க்கத்தைக் காரணமாக்கவோ, நிந்திக்கவோ கூடாது. மதம் சாராக் கொள்கையை கடைப்பிடிக்கின்ற நாடுகளில்கூட வன்முறை, பயங்கரம், தீவிரவாதம் இருக்கின்றனவே. இனம், நிறம், மொழி, வாழ்க்கை அமைப்பு, சித்தாந்தம் போன்றவற்றின் பெயரால்கூட வன்முறை, பயங்கரம், தீவிரவாதம் உள்ளனவே.

முஸ்லிம் உம்மாவுக்கெதிராக மேற்குலகு கொண்டுள்ள ஆழமான பகைமை மிகப் பழைமை வாய்ந்ததாக இருந்தாலும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அது உச்சத்தை எட்டியது. உலகத் தலைவனாக தன்னை சுய நியமனம் செய்துகொண்ட அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட இப்பயங்கரத் தாக்குதல் முஸ்லிம் உம்மாவுக்கெதிரான பகைமையை பன்மடங்காக்கியது. உலகப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவோம் என சௌகரியமான காரணம் ஒன்றை உலகுக்குக் காட்டிக்கொண்டு அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் ஜனநாயகம் என்ற பெயரில் முஸ்லிம் தேசங்களை ஆக்கிரமிக்கவும் அவற்றின் உள் விவகாரங்களில் தலையிடவும் ஆரம்பித்தன. நடந்தது என்ன? அந்நாடுகளில் சென்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர். ஈராக் நல்ல உதாரணமாகும். குண்டு வெடிப்பில்லாத ஒரு நாள் அங்கே கிடையாது. முஸ்லிம் நாடுகளில் அவர்கள் காண விரும்பும் ஜனநாயகம் இதுதான்.

உலக அரசியல் தலைவர்களின் அனைத்து வித அட்டகாசங்களையும் அக்கிரமங்களையும் அனுபவித்துவரும் முஸ்லிம் உம்மா இன்னுமொரு அநியாயமான ஊடகப் போர் ஒன்றுக்கும் முகம்கொடுத்துவருகின்றது. முஸ்லிம் நிறுவனங்கள் குறிப்பாக மத்ரஸாக்கள் உலக முதல் தர பயங்கரவாதிகளைப் பயிற்றுவிக்கும் இடங்களாக இந்த ஊடகங்களினால் சித்திரிக்கப்படுகின்றன. இம்மத்ரஸா மாணவர்கள் உஸாமா பின் லாடனின் படத்தைக் கையில் பிடித்தவண்ணம் அதிகாலைத் தொழுகையில் ஈடுபடுவதாகக்கூட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. மத்ரஸாக்களின் உண்மை நிலையை முழுமையாகத் திரிபுபடுத்தி பொது மக்களைத் தவறாக இட்டுச்செல்கின்ற ஊடகக் கலாசாரம் மிக மிக வேதனை தருவதாகும். ஊடகத்தில் பேணப்பட வேண்டிய பக்கசார்பின்மை, நீதி, சம நிலை, உண்மை போன்றவை எங்கே போனதோ?

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கின்றவர்களின் உள்ளங்களை நெருடுகின்ற மற்றுமொரு விவகாரம் முஸ்லிம் மாதரின் தலைமறைப்பாகும். தமது கணவர் தவிர்ந்த பிறருக்கு தமது அழகைக் காட்டுவது அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றிருக்க முஸ்லிம் ஆண்களே பெண்கள் மீது இதனைத் திணிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. அல்-குர்ஆன் இவ்வாறு இயம்புகின்றது:

“நபியே! உம்முடைய மனைவியருக்கும் உம்முடைய புதல்விகளுக்கும் விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். எனவே அவர்கள் நோவினைசெய்யப்பட மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க அருளாளனாக இருக்கின்றான்.” (33 : 59)

அவர்கள் ஈராக்கை ஊடுருவியபொழுது இச்செயலானது ஒடுக்கப்பட்ட ஈராக்கியர்களை விடுதலைசெய்வதற்கு எனக் காரணம் சொல்லப்பட்டது. ஜனநாயகத்தின் பெயரில் எண்ணெய் வளமிக்க நாட்டை கருணையின்றி அழித்தவர்கள் இறைவனுக்கு நேர்மையானவர்களாக இருந்தால் என்ன காரணத்துக்காக முஸ்லிம் பெண்களின் மீறப்பட முடியாத உரிமையான தலைமறைப்பு அணிதலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்?

பெண்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் ஒரே மார்க்கம் இஸ்லாமே. அவர்களுடைய மதிப்புமிக்க பாத்திரத்தை செயற்படுத்த வாழ்வு, சுதந்திரம், சொத்து, அந்தஸ்துக்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறார்கள். தலைமறைப்பு அவர்களுடைய சொந்த பாதுகாப்புக்கே. தலைமறைப்புக்கு எதிராக எழுதுபவர்களும் வாதிடுபவர்களும் முஸ்லிம் பெண்கள் சுயமாகவா அல்லது வற்புறுத்தலினாலா இதனை அணிகின்றனர் என்றும் அதனை அவர்கள் எவ்வாறு உணர்கின்றனர் என்றும் முழுமையாக அறிவதற்காக முஸ்லிம் பெண்களுடன் கட்டாயம் கலந்துரையாட வேண்டும்.

படு பாவங்களான விபச்சாரம், தன்னினச்சேர்க்கை ஜனநாயகத்தின் பெயரில் பிரான்ஸில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் மாதர் தம் தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டு அணியும்; தலைமறைப்பு அந்நாட்டில் சட்டவிரோதமாக இருப்பது புத்திக்குப் புலப்படுவதாயில்லை. முஸ்லிம் பெண்கள் தலைமறைப்பை அணிவதை எதிர்ப்போர் கன்னி மேரி அதே உடையை அணிந்திருப்பதைக் காணத் தவறுவது ஏன்? இது முழுக்க முழுக்க அரசியலே தவிர வேறொன்றுமல்ல என்பது வெள்ளிடை மலை.

முஸ்லிம்களின் வாழ்க்கை முறையை மதிப்பீடுசெய்வதற்கு முஸ்லிம் அல்லாத நாட்டுத் தலைவர்கள் முஸ்லிம் பாவையரின் தலைமறைப்பை மாத்திரம் அளவுகோலாக கொள்வது பெரும் தவறாகும். முஸ்லிம்கள் எப்போதும் இஸ்லாமிய சட்டத்துக்கு ஒட்டி நடக்க விரும்புபவர்கள். மனிதன் இயற்றிய சட்டங்கள் என்ன சொல்கின்றன என பார்ப்பதைக்காட்டிலும் அல்லாஹ் தஆலாவும் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் என்ன கூறுகின்றனர் என்றே எப்போதும் பார்ப்பவர்கள். நவீன சமூகம் எனக் கூறிக்கொள்பவர்களின் நிர்வாணக் கலாசாரத்தையல்ல இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றிக்கொள்வதற்கு முனைபவர்கள்.

எல்லாவற்றையும் கவனிக்கும்போது இஸ்லாம் பற்றிய அநாவசிய பயத்துக்கு பங்களிப்புச் செலுத்துவது படு பயங்கர உலக அரசியல்தான். எனவே இஸ்லாம் பற்றிய அநாவசிய பயத்தை புத்திசாதுர்யத்துடன் எதிர்த்துப் போராடுவது முஸ்லிம்கள் கடமையாகும்.

இஸ்லாம் சகிப்புத் தன்மை, சகா உணர்வு, நடு நிலைப் போக்கு ஆகியவற்றைப் போதிக்கும் மார்க்கம். புனித அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

“மேலும் அவ்வாறே ஒரு நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்.” (02 : 143)

மனித சமத்துவம், மனித சகோதரத்துவம், கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் என்றும் வலியுறுத்துகின்றது. இஸ்லாமோ முஸ்லிம்களோ மேற்குக்கு அச்சுறுத்தலாக இல்லை. மேலைத்தேய நாடொன்றுக்கு முஸ்லிம் படையெடுப்பிற்கான அறிகுறியோ அல்லது அவர்களின் அரசியல் முறைமையை குழப்புவதற்கான அறிகுறியோ அறவே கிடையாது. தமது உள் வீட்டு விவகாரங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முஸ்லிம்கள் பிரயத்தனம் செய்கின்றனர். தமது தனிப்பட்ட மேலும் கூட்டு வாழ்க்கையையும் நிறுவனங்களையும் தமக்கே உரித்தான விழுமியங்கள், பிரமாணங்களுக்கேற்ப ஒழுங்குசெய்யும் உரிமையை அவர்கள் வேண்டி நிற்கின்றனர். அவ்வளவுதான்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் எனவும் அடிப்படைவாதம், அடிப்படைவாதிகளெனவும் தீவிரவாதம், தீவிரவாதிகளெனவும் காட்டுவதற்கு பாரிய பங்களிப்புச் செலுத்துவது உலக அரசியல் என்பது துலாம்பரமானது. இறை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் என்ற வகையில் இஸ்லாம் சடவாதம், தேசியவாதம், காலணித்துவவாதம், ஏகாதிபத்தியவாதம், சுதந்திரவாதம் போன்ற மேற்கத்திய கொள்கைகளுடன் ஒரே கோட்டில் ஒன்றாக சந்திக்க முடியாது. மேலைத்தேய சக்திகள் முஸ்லிம்கள் மீது மேலைத்தேய கலாசாரத்தையும் பாவனையையும் தொடர்ந்து திணிக்கவும், மேற்கின் மேலாதிக்க முறைக்கு அவர்களைக் கட்டிவைக்கவும், அவர்களது கலாசாரத்தை சீரழிக்கவும், அவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவும், அவர்களின் நம்பிக்கையையும் விழுமியங்களையும் அவமதிக்கவும், அவர்களது உரிமைகளைப் பிடுங்கவும், அவர்களின் இறை சட்டங்களுடன் மோதவும், இஸ்லாத்தின் மதிப்பைக் குன்றச்செய்யவும் முனையுமாயின் குழப்ப நிலை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.

உலகுக்கு சந்தோஷம், அமைதி, சாந்திக்கான வழியைக் காட்டுவதற்கு மேற்கினால் முடிந்ததா? முடியுமாயிருக்கின்றதா? இஸ்லாம் மட்டும்தான் மேற்கையும் முழு உலகையும் இதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்கின்றது.


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page