Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


புத்தளம் ஈன்றெடுத்த தேசமறிந்த கல்விமான் மவ்லவி முஹம்மத் புஆத் இறையடி எய்தி 2008.06.30 அன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதனை முன்னிட்டு இவ்விசேட கட்டுரை பிரசுரமாகின்றது. மர்ஹூம் புஆத் ஆலிம் பற்றி ஒரு நீண்ட ஆழமான ஆய்வு தேவைப்படுகின்றது. அது ஒரு நூல் வடிவில் வெளிவர வேண்டும். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் அவரது வாழ்க்கைச் சரிதம் துல்லியமாய் கிடைக்க வேண்டும். ஆய்வு முயற்சிகளில் ஈடுபாடுகொண்டோருக்கும், மாணவர்களுக்கும் ஆய்வுக்கான ஒரு தலைப்பும், அதற்கான சில துணுக்குகளும் இச்சிறு கட்டுரையில் கிடைக்கின்றன.

பல் கலைகளிலும் கற்றுத் தேர்ந்து பல் துறைகளிலும் சேவையாற்றிய அல்-ஆலிம் முஹம்மத் புஆத் (பஹ்ஜி) அவர்கள் இலங்கை அண்மை காலத்தில் கண்ட மிகச் சிறந்த கல்விமான்களுள் ஒருவர். பார்ப்போர் கேட்போர் வியக்கும் வண்ணம் இஸ்லாமிய ஷரீஆவின் ஞானப் பெருக்குடன் தாரகையாய் மின்னியவர்.

‘புஆத் மவ்லவி’ என எல்லோராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட அல்-ஆலிம் முஹம்மத் புஆத் புத்தளம் கண்ட முத்தான உலமாப் பெருந்தகைகளுள் ஒருவர். சமூகம் அவ்வளவு எளிதில் அவரை மறந்திடாது, மறந்திட முடியாது. அவர் கற்பித்த நிலையங்கள், அவரிடம் அறிவு ஞானம் பெற்ற மாணவமணிகள், அவரின் நல் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்ற தனிநபர்கள், நிறுவனங்கள், அவரது பன்முகப்பட்ட சேவைகள் மூலம் பயனடைந்தோர் என அனைவர் நெஞ்சங்களிலும் நீக்கமற நிலைத்து நிற்பவர். இளந் தலைமுறையினருக்கு அவர் நாமம் சில வேளை புதிதாக இருக்கலாம்.

ஆரம்பக் கல்வியை புத்தளம் சென். அன்றூஸ் அரசினர் பாடசாலையில் கற்ற மவ்லவி புஆத் ஷரீஆ கல்வியை காலி அல்-பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யஹ் அரபுக் கல்லூரியில் பெற்றார். 1951இல் இக்கல்லூரியிலேயே ‘மவ்லவி - ஆலிம்’ பட்டம் பெற்றார்.

ஒரு காலை ஈழத் திருநாட்டை அசாதாரண அறிவுத் திறமை, உன்னத பண்பாடு என்பவற்றால் அலங்கரித்துக் கொண்டு மக்கள் மனங்களில் மங்காத இடம் பிடித்துக்கொண்டிருந்த அறிஞர் திலகங்களான மர்ஹூம்களான அப்துல் ஹமீத் ஆலிம், அப்துல்லாஹ் ஆலிம், அப்துஸ் ஸமத் ஆலிம் ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்த மவ்லவி புஆத் இம்மேதைகளின் அபிமான மாணவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார்.

1951 அவர் அரசாங்கத்தினால் ஆசிரியர் நியமனம் பெற்ற ஆண்டாகும். முதலில் பேருவலை ஹலவகொட அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்திலும் பின்னர் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்திலும் அரபு மொழி உதவி ஆசிரியராக கடமை புரிந்தார். 1958, 1959களில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட பின் புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையிலும் புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயிற்றப்பட்ட தமிழ் மொழி உதவி ஆசிரியராக கடமையாற்றினார். பின்னர் நம்முவாவ அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கடயாமோட்டை அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் அதிபர் பதவியை அலங்கரித்தார். 1969இல் அரபு மொழி கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று 1989இல் இளைப்பாறும் வரை குருநாகல், சிலாபம், அநுராதபுரம், புத்தளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு தன் மகத்தான சேவைகளை வழங்கினார்.

இஸ்லாமிய ஷரீஆ துறையில் மிகுந்த வேட்கை கொண்டிருந்த இப்பெருமகனார் சிறந்த ஆலிமாக விளங்கிய தனது மாமாவான மர்ஹூம் முஹம்மத் அப்துல் காதிர் (பஹ்ஜி) அவர்களோடு அதிகமான தொடர்பு வைத்து அன்னாரிடமும் அறிவமுதம் அருந்தி தன் அறிவை வளர்த்துக் கொண்டார்.

நல்லறிவு புஷ்பமாக புஷ்பித்து நறுமணங்கமழ்ந்த அன்னார் பல துறைகளில் வித்தகராக விளங்கினார். அரபு, ஷரீஆ துறைகளில் அபார ஞானம் பெற்றிருந்த அவர் உசூலுத் தப்ஸீர் (அல்-குர்ஆன் வியாக்கியானத்தின் அடிப்படைகள்), உசூலுல் ஹதீஸ் (ஹதீஸின் அடிப்படைகள்), உசூலுல் பிக்ஹ் (நியாயவியலின் அடிப்படைகள்), அல்-பராஇழ் (அனந்தரச் சொத்துப் பிரிவினை), மன்திக் (அளவையியல்), இலக்கணம், இலக்கியம், யாப்பிலக்கணம் ஆகிய துறைகளில் வியத்தகு புலமை பெற்றிருந்தார்.

அரபு இலக்கியத்தில் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்த திறமையை அவரது கடிதங்களிலும், கவிதைகளிலும் நன்கு அவதானிக்கலாம். அரபு மொழியின் தொன்மை நடையும், நவீன நடையும் அவற்றில் ஒன்றாக பளிச்சிடும். அனந்தரச் சொத்துப் பிரிவினையின் போது குறிக்கிடும் மிகச் சிக்கலான கணக்குகளும் அவரினால் இலகுவாக தீர்த்து வைக்கப்பட்டன.

மர்ஹூம் புஆத் ஆலிமின் விவேகம், கிரகிக்கும் திராணி, நினைவாற்றல், தூர சிந்தனை வியப்பூட்டுபவை. அவரின் கையெழுத்து அவருக்கு அழகுக்கு அழகு செய்யும் அணிகலனாக விளங்கியது. அவரின் பேராசான் மர்ஹூம் அப்துல்லாஹ் ஆலிம் தனது எழுத்து வேலைகளை அவரிடம் கையளிப்பவராகவிருந்தார். அரபு, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெற்றிருந்த புலமை பல்வேறு தொடர்புகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது.

சமூக சேவையிலும் புஆத் ஆலிம் தடம் பதிக்கத் தவறவில்லை. தான் கடமைபுரிந்த பாடசாலைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியதோடு அவ்வூர்களின் கல்வி கலாசார விடயங்களிலும் அளப்பரிய பங்களிப்புச் செலுத்தினார். அரபு மொழியில் கடிதங்கள் எழுதுவதற்கும் அரபுக் கடிதங்களை மொழி பெயர்ப்பதற்கும் மார்க்கப் பிரச்சினைகள் பற்றி தெளிவு பெறுவதற்கும் பொதுவாக ஆலோசனைகள் வேண்டியும் ஹழ்ரத் அவர்களை நாடி வரும் படித்தோர், பாமரர் சகலரையும் உபசரித்து அவர் தம் தேவைகளை அழகுற நிறைவேற்றும் அற்புதமான காட்சி அவரது இல்லத்தில் கண்கொள்ளாக் காட்சியாகும்.

புத்தளம் முஹ்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினராக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட அங்கத்தவராக, அதன் புத்தளம் கிளை தலைவராக, ஒரு காலத்தில் அரச பாடசாலைகளில் போதிக்கப்பட்ட 7ஆம், 8ஆம் தரங்களுக்கான இஸ்லாம் பாட நூற்களின் நூலாக்கக் குழுவில் ஒருவராக, காலி அல்-பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யஹ் அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்க உப தலைவராகவிருந்து அவர் ஆற்றிய சமய, சமூகத் தொண்டுகள் எண்ணிலடங்கா.

மர்ஹூம் புஆத் ஆலிமின் பரந்துபட்ட சேவை மழையில் புத்தளம் அல்-மத்ரஸத்துல் காஸிமிய்யஹ்வும் நிறையவே நனைந்தது. இக்கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படும் மர்ஹூம் மஹ்மூத் ஹழ்ரத் அவர்களின் அதிபர் காலப் பகுதியில் அவர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கி, தேவைப்படும் போது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் வளர்ச்சிக்கு மகத்தான தொண்டாற்றியமை வரலாறு.

புஆத் மவ்லவியின் சமூக, சமயப் பணி முழுக்க முழுக்க மென் மலர்கள் தூவப்பட்ட பாதையில் மேற்கொள்ளப்பட்ட பயணம் அன்று. சில பல வேளைகளில் கற்களும், முற்களும் நிறைந்த கரடு முரடான பாதையில் சொல்லொனா துன்பங்களுடனும், ஆற்றொனா துயரங்களுடனும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது.

அறிவு ஆராய்ச்சிகளில் இறுதி மூச்சுவரை தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்தினார். அந்திம காலத்தில் நோயுற்றிருந்த வேளையிலும் கூட குசலம் விசாரிக்க வந்த ஆலிம்களுடன் அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபட்டார். ஷாபிஈ மத்ஹபின் பிரதான நூற்களுள் ஒன்றான இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ‘மின்ஹாஜுத் தாலிபீன்’ எனும் நூலின் ஆரம்பத்தில் காணப்படும் கலைச் சொற்களுக்கு விளக்கமாக அவர் எழுதவாரம்பித்த ‘இர்ஷாத் அல்-முஹ்தாஜ் இலா மஃரிபத் இஸ்திலாஹ் அல்-மின்ஹாஜ்’ எனும் நூலும், அரபு யாப்பிலக்கணத்தில் ‘அல்-உன்மூதஜ் அல்-ஸாபீ பிஉம்ஸுலத் இல்மை அல்-அரூழி வல்-கவாபீ’ என்ற நூலும் முற்றுப்பெறு முன் அன்னார் உலகை விட்டும் பிரிந்தமை அறிவுலகுக்கு ஏற்பட்ட நஷ்டமே.

எப்போதும் தன் ஆசிரியர்களைப் பற்றி பெருமையோடும், நன்றிப் பெருக்கோடும் நினைவு கூர்பவராகவிருந்த ஹழ்ரத் அவர்களிடம் நிறையப் பேர் கற்றுத் தேர்ந்தனர். அவர்களுள் பலர் ஆலிம்களாக, ஆசிரியர்களாக, வேறு பல துறைகளிலும் காணப்படுகின்றனர்.

ஆரவாரமின்றி அமைதியாக அறப்பணி புரிந்த புஆத் ஆலிமின் உள்ளத்தை நெருடிக் கொண்டிருந்த ஒரு விடயம் இன்றைய பெரும்பாலான அரபுக் கலாசாலைகளில் ஏற்பட்டுள்ள கல்வித் தேக்க நிலையாகும். இப்பரிதாப நிலை கண்டு குமைந்து குமைந்து வேதனைப்பட்டு வேதனையோடு வெதும்பும் தனது உளக் குமுறலை அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள், ஆசிரியர்கள் முன் பகிர்ந்துகொண்டு இக்கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார், முயற்சிகள் பல செய்தார்.

1929.12.27 அன்று அப்துர் ரஹ்மான் - ஸாரா உம்மா தம்பதியினருக்கு அருமைப் புதல்வராக ஜனனித்த மவ்லவி புஆத் தனது சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொண்டார். அல்லாஹ் ஓர் ஆணையும், இரு பெண்களையும் அவருக்கு பிள்ளைகளாக அருளினான்.

1994.06.30 மு.ப. 10:30 மணி சூரியன் சுடர் விட்டு ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளை இவ்வறிவுச் சூரியன் அஸ்தமித்தது. சமூக பிரக்ஞையோடு அதன் நலனுக்காக உழைத்த இம்மாபெரும் செயல் வீரருக்கு சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

அவரின் மண்ணறை வாழ்வு மணக்க, மறுமை வாழ்வு சிறக்க வல்லவன் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நிற்போம்!

2008.06.13


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page