Articles
சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஆயிரம் மாதங்களைவிட மேலோங்கி நிற்கும் அருள் நிறைந்த லைலத் அல்-கத்ரை தன்னகத்தே
கொண்ட மற்றுமொரு புனித ரமழான் அருள் மாரியைச் சொரிந்து ஓய்ந்து விடைபெற்றுக்கொண்டது.
பன்னிரெண்டு மாதச் சுழற்சியில் மற்றுமொரு முறை அது விட்டுச் சென்ற இடத்துக்குத்
திரும்புகையில் எத்தனை பேர் வாழ்ந்திருந்து அதை வரவேற்கப்போகிறோமோ யாரறிவார்?
இன்னுமொரு முறை அதைக் காணக் கிடைப்பது ஒரு பாக்கியம்தான். ஆனாலும் அது எம்மைப்
படைத்த இறைவனின் நாட்டத்திலேயே முற்று முழுதாக தங்கியுள்ளது. எண்ணித் தரப்பட்ட
மூச்சுக்களை உள்வாங்கி வெளியிட இன்னும் எத்தனை நாட்களை நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கிறோம்
என்பதும் அவன் கையில்தான். இன்னுமொரு முறை நாம் ரமழானைச் சந்திக்கும் வாய்ப்பு
நிச்சயமற்ற நிலையிலேயே இந்த ரமழான் பிரியாவிடை பெற்றுள்ளது.
தொழுகை, நோன்பு, இரா வணக்கம், அல்-குர்ஆன் திலாவத், திக்ர், இஃதிகாஃப், தவ்பா,
ஸக்காத், சதகா என்று பக்திமயமான முப்பது தினங்களைக் கழித்துவிட்டு அடுத்த முறை
ரமழானைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு
அது இப்போது விட்டுச் சென்றுள்ள இடத்தைப் பார்க்கிறோம்.
விடைபெற்றுக்கொண்ட மாதம் நிலைகொண்டிருந்த இடம் சூனியமாக இல்லை. அங்கே அது
விட்டுச் சென்றுள்ளவை - புலனடக்கம், ஈகை, பொறுமை, சகிப்புத் தன்மை, அடுத்தவர்
துயர் கண்டு இரங்கும் தன்மை, கீழுள்ளோர் மீது காட்டும் சலுகைகள் - என ஒரு பெரிய
பட்டியலாய் நீண்டு செல்கிறது. அம்மேன்மைக் குணங்கள் அனைத்தும் அடுத்த ரமழானின்
வருகையின்பொழுது எடுத்தாளும் நோக்குடன் சுருட்டி எங்கோ ஒரு மூலையில் வைக்கப்பட
வேண்டியவை அல்ல. ஒரு சங்கிலித் தொடராய் ஒவ்வொரு மனிதரதும் வாழ்வோடு பின்னிப்பிணைந்து
அவரின் முடிவு வரை நீண்டு செல்ல வேண்டியவை. எஞ்சியுள்ள நாட்களுக்கும் வாழ்வின்
முடிவுக்கும் இடையில் உள்ள காலத்தில் சந்திக்க உள்ளவைகள் எத்தனையோ. அமைதியான
வாழ்வுக்கு விடுக்கப்படும் சவால்கள், எதிர்பாராத தருணத்தில் எம் முன் வந்து
நிற்கும் சோதனைகள் என வரும்போதெல்லாம் உபயோகப்படுத்தப்பட வேண்டிய ஆயுதங்கள்
அவை.
ரமழான் கற்றுத்தந்துள்ள பாடங்களில் ஒன்றுதான் பொறுமை. தன்னை ஏசுகின்ற, தன்னுடன்
சண்டையிட வரும் ஒருவரிடம் நான் நோன்பாளியென்று கூறி ஒதுங்கிக்கொள்ளும் விழுமியத்தை
இந்த ரமழான் கற்றுத்தந்துள்ளதை அவதானிக்கிறோம்.
நீங்கள் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! என அல்-குர்ஆனில்
நமக்குக் காட்டித்தந்தான் அல்லாஹ். (02 : 45). பொறுமையின் மாதம் என ரமழானைப்
பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள். (அறிவிப்பவர் : ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் இப்னி குஸைமஹ்)
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (02 : 153) என அல்லாஹ்
புனித அல்-குர்ஆனில் வலியுறுத்த, பொறுமையின் கூலி சுவர்க்கம் என ஆணித்தரமாக
அறிவித்தார்கள் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். (அறிவிப்பவர் :
ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் இப்னி குஸைமஹ்)
இஸ்லாம் பொறுமையை மூன்றாகப் பிரித்து நோக்குகிறது. நன்மைகளைப் புரிவதில் பொறுமை.
தீமைகளை விடுவதில் பொறுமை. துன்ப துயரங்களின்போது பொறுமை. இந்தப் பொறுமை எல்லா
நிலைகளிலும் இயல்பாக வந்து ஒவ்வொரு தனிமனிதரதும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த
வேண்டும் என்பது இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பொறுமை புலனடக்கத்துக்கு
வழிகோலுகிறது. அந்தப் பொறுமை கொடுப்பதால் தன் பொருள் கரையும் என்ற தப்பெண்ணத்துக்கு
தடையாக அமைகிறது. தமக்குக் கீழுள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்குவதால் ஏற்படும்
அசௌகரியங்களின்போது மனதுக்கு அமைதியைக் கொண்டுவருகிறது. துயரப்படுவோருக்கு
உதவ வேண்டும் என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்டு உதவிக் கரம் நீட்ட ஓடுகையில் ஏற்படும்
சிரமங்களை, துயர்களை, அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்ளும் மன தைரியத்தைத் தருகிறது.
இம்மன தைரியம் தன் உடமைகளிலிருந்து அள்ளிக் கொடுப்பதற்கான தயாள சிந்தையை
வளர்ப்பதால் கைகளை இறுக்கப் பொத்திக்கொள்ளாது வசதியற்றோருக்கு அள்ளிக் கொடுக்கும்
பெரு மனதைக் கொடுக்கிறது. எனவேதான் உதவிசெய்யும் மாதம் எனவும் அருமை நபி
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானைப் பிரகடனப்படுத்தினார்கள். (அறிவிப்பவர்
: ஸல்மான் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் இப்னி குஸைமஹ்)
அல்லாஹ் ஒவ்வொரு மனிதருக்கும் அருளியுள்ள செல்வத்தை அதற்கு உரியவர் மாத்திரமே
அனுபவிக்க அனுமதிப்பதில்லை. அது அவரது சமூகத்து அங்கங்களுக்கு மத்தியில் சுழன்றுவர
வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில்
சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக என மாமறை அல்-குர்ஆன் தெளிவுபடுத்தி
நிற்கிறது. (59 : 07)
ரமழான் காலத்தில் பரோபகாரம் மேலோங்கி இருந்த போதும் உதவப்படுவதற்கு உரியவர்களை
சரியாக இனங்கண்டு உதவிக் கரம் நீட்டப்படுவதில் உள்ள குறைபாடு பரோபகாரத்தின்
அசல் வடிவத்தை திரிபுபடுத்தி நிற்கின்றது. தன் வறுமையை வெளியே சொல்லி உதவியை
ஏதிர்பார்ப்போரைப் போலவே தன் குறையை வெளிக்காட்ட மாட்டாது உள்ளத்துக்குள் வெதும்பிக்
கொண்டிருக்கும் இதயங்களும் உள்ளன. இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் இவர்கள் எல்லோருமே
ஓர் இடத்தில் அபரிமிதமாக இருக்கும் சொத்துக்களில் உரிமையுள்ளவர்கள். இன்னும்
அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உரிமை உண்டு என்று
இதை அருள் மறை குர்ஆன் வலியுறுத்தி நிற்கிறது. (51 : 19)
இந்தப் பாடங்களைப் போதித்துவிட்டு ரமழான் விடைபெற்றுக்கொண்டபோது நோன்பு விட்டப்
பண்டிகைக்காய் இன்னுமொரு பொழுது புலர்ந்துள்ளது. இப்புதிய பொழுதிலே பாதிக்கப்பட்ட
உள்ளங்கள் எங்கெங்கெல்லாம் நிர்க்கதியாக்கப்பட்டு வாழ்கின்றனவோ அங்கங்கெல்லாம்
பசி என்ற ஒன்று இல்லை என்பதை உறுதிசெய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாக உள்ளது.
பரோபகாரத்தையும் ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்ட ரமழானை அடுத்து கொண்டாடப்படும்
பெருநாளிலே இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடம் நோக்கி இல்லாதாரின் பங்கு
எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அந்தப் பங்கு உணவாக, உடையாக மாத்திரம் வரையறை பெற்றுவிடாது. இல்லிடமற்றவர்கள்
தமக்கென ஒரு கூரையை அமைத்துக்கொள்ள வகைசெய்வதாக, கல்விக்கு வழியில்லாமல் திகைப்போருக்கு
உதவியளிப்பதாக, தீராத பிணியினால் வாடுவோருக்கு மருத்துவ வசதிகள் செய்துகொடுப்பதற்காக,
கடன்பட்டு அடைக்க வழியின்றி தவிப்போரின் கடன்களை நிறைவேற்றிவைப்பதற்காக, வர்த்தகத்தில்
பாரிய நட்டமேற்பட்டு வர்த்தகத்தை மேற்கொண்டும் தொடர முடியாது நாதியற்று தவித்துக்கொண்டிருப்போரை
கைதூக்கிவிடுவதற்காக, வயது வந்தும் கரைசேர முடியாது மௌனக் கண்ணீர் வடிக்கும்
ஏழைக் குமர்களின் மண வாழ்வுக்குதவுவதற்காக என பரந்து விரிந்து செல்ல வேண்டியுள்ளது.
எந்த ஒரு சமூக மேம்பாட்டுத் திட்டத்திலும் காண முடியாத ஒன்றை புனித ரமழான்
மூலம் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. அது நடைமுறை வாழ்வில் நன்கு கடைப்பிடிக்கப்பட
வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படும்போது அங்கு சுபிட்சமான
சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது. அப்படியான ஒரு சுபிட்சமான சமூகத்தின்
அத்திவாரத்தை இடும் நாளாக இந்த ஈத் அல்-பித்ர் அமையட்டுமென நாம் இரு கரம் ஏந்தி
நிற்போம்!
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.
2006.10.17
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019