Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு


நேற்று 2019.10.23 பிற்பகல் வேளை மின்னாமல், முழங்காமல் எனது இல்லம் வந்த சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன் ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2019.10.27 அன்று பி.ப. 02:00 மணிக்கு கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் தனது இரண்டு நூல்களின் வெளியீடுகள் இருப்பதாகக் கூறி பக்தி சிரத்தையோடும் மகிழ்ச்சியோடும் அழைப்பிதழைக் கொடுத்தார். மிக்க மரியாதையோடும் பூரிப்போடும் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு இன் ஷா அல்லாஹ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என்றேன்.

சகோதரர் ஹாஜா அலாவுதீன் ஓர் ஆசிரியர். தற்போது தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமை புரிகிறார். கலைஞரும், எழுத்தாளருமான அவர் வானொலியில் நாடகங்கள் எழுதி பிரபலமானவர். அத்தோடு தனது சொந்த ஊரான தாராபுரத்தின் வரலாற்றை நூலாக்கியவர். “தாராபுரம் வரலாறும் வழக்காறுகளும்” எனும் பெயரில் 2006இல் அந்நூல் வெளிவந்தது.

கலைநெஞ்சன் ஹாஜா அலாவுதீன் அவர்கள் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரியவர். அடியேன் சுமந்திருக்கும் அமைப்புக்களின் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் காத்திரமான பங்களிப்புகள் செய்துவருபவர். எனது நூலொன்றை மேடையில் அறிமுகம் செய்துவைத்ததோடு, எனது அரபுக் கவிதையொன்றின் பொருளை நான் சொல்லச் சொல்ல எழுதி எடுத்துக்கொண்டு அதனை தமிழில் பாடலாக்கியவர். அவரின் திறமையை பல்வேறு சந்தர்ப்பங்களில் வித்தியாசம் வித்தியாசமான வேலைகளிலும், பாத்திரங்களிலும் நேரடியாகவே பார்த்து அறிந்துகொண்டுள்ளேன்.

ஆசிரியர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தனக்கு சன்மார்க்கம் சார்ந்த தெளிவுகள் தேவைப்படும்போது என்னைத் தொடர்புகொள்வார். அதிலிருந்து அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் புரிந்துகொண்டுள்ளேன்.

அன்புக்குரிய சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள “எங்க ஊரு பாட்டு” மற்றும் “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்” ஆகிய இரண்டு நூல்களே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுவைக்கப்படவுள்ளன. நூலாசிரியர் 1983 முதல் இதுகாறும் வானொலியில் ஒலிபரப்பான தனது நாடகங்களை எழுத்தில் நிரந்தரமாக்கும் முயற்சியே “ஹாஜாவின் வானொலி நாடகங்கள்”. நூலாசிரியரின் ஊரான தாராபுரத்தில் மக்கள் நாவுகளில் தவழ்ந்துகொண்டிருந்த பாடல்களின் தொகுப்பே “எங்க ஊரு பாட்டு”.

கலைநெஞ்சன் ஹாஜா அலாவுதீன் பண்பானவர், பழக இனியவர், திறமைசாலி. அன்னாரின் திறமைகளை சமூகம் இன்னமும் சரியாக பயன்படுத்திக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

என் இதயத்தில் வாழும் அன்புச் சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக, வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள். அன்னாரின் எழுதுகோல் இன்னுமின்னும் எழுதி மானிடருக்கு பயன் கொடுக்க வேண்டும்! அவரின் ஆற்றல்கள் மனித குல மேம்பாட்டுக்கு மேன்மேலும் உதவ வேண்டும்!

அஷ்-ஷைக் அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.02.24
2019.10.24


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page