Reviews
நூலின் பெயர் : இஸ்லாமியக் கொள்கையும் முரண்பாடுகளும்
நூலாசிரியர் பெயர் : மவ்லவி எம்.எச்.கே. சர்தார்கான்
நூலின் விலை : ரூபா 100.00
வெளியீடு : பார் ஈஸ்ட் என்டர்ப்ரைஸ், பாணந்துறை
கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி உதவிப் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான
மவ்லவி எம்.எச்.கே. சர்தார்கான் அவர்களின் ‘இஸ்லாமியக் கொள்கையும் முரண்பாடுகளும்’
எனும் நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பாணந்துறை பார் ஈஸ்ட் என்டர்ப்ரைஸ் ஸ்தாபனத்தினர்
இதனை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.
வரலாறு நெடுகிலும் இஸ்லாமியக் கொள்கை (அக்கீதஹ்)க்கு முரண்பட்ட கருத்துக்களைக்
கொண்ட பிரிவினர்கள் முஸ்லிம்களை வழிகெடுத்தும், வழிகெடுத்துக்கொண்டுமிருப்பது
மறுக்க முடியாத உண்மையாகும். ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் அடிப்படையில் உண்மையான
கொள்கைவாதியாகவிருக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வியக்கங்களின் தோற்றம்,
வளர்ச்சி, பிழையான கருத்துக்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை அறிந்திருப்பது கட்டாயமாகும்.
அரவம் தீண்டக்கூடியது, தேள் கொட்டக்கூடியது என்பதைத் தெரிந்தால்தான் அவற்றின்
விஷத்திலிருந்து ஒரு மனிதன் தப்பிக்கொள்ள முடியும். அவ்வாறே இஸ்லாமியக் கொள்கைக்
கோட்பாட்டில் உண்மைக்கு முரணான கொள்கைகளைக் கொண்டியங்கும் பிரிவுகளைப் பற்றி
அறிந்திருப்பதன் மூலமே ஒரு முஸ்லிம் அவற்றின் நச்சுக் கருத்துக்களிலிருந்து
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
ஸுன்னத் வல்ஜமாஅத்தாரின் கோட்பாட்டிலிருந்து தூரப்பட்டிருக்கும் பிரிவுகள்,
இயக்கங்கள் பற்றி ஒரே நூலில் ஒரே பார்வையில் தமிழ் மொழியில் காணக்கிடைக்காதிருந்தமை
ஒரு பெரும் குறையாகவே இருந்தது. இக்குறையை நிறைவு செய்யும் ஒரு துணிகர முயற்சியே
மவ்லவி சர்தார்கான் அவர்களின் ‘இஸ்லாமியக் கொள்கையும் முரண்பாடுகளும்’ எனும்
நூலாகும்.
ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் சித்தாந்தம் பற்றியும், வழிகெட்ட பிரிவினர்களான
கவாரிஜ், கதரிய்யா, பாதினிய்யா, கராமிதஹ், ஷிஅஹ் போன்றோரின் பிழையான கொள்கைகள்
பற்றியும், அவதாரவாதிகள், இயற்கைவாதிகள், நாத்திகர்கள், காதியானிகள், போராக்கள்
போன்றோரின் பிழையான கருத்துக்கள் பற்றியும், ப்ரீமேஸன், ரோட்டரி, லயன்ஸ் போன்ற
இயக்கங்களின் நச்சுக் கருத்துக்கள் பற்றியும் ஆசிரியர் விரிவாக பேசுகிறார்.
பொதுவாக ஒவ்வொரு முஸ்லிமும், குறிப்பாக இஸ்லாமிய அழைப்பு பிரசார பணியில் ஈடுபடும்
தாஈகள், உயர்தர மற்றும் பட்டப் படிப்பு மாணவர்கள், கல்விமான்கள் போன்றோரும்
படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும்.
92 பக்கங்களைக் கொண்ட கையடக்கமான நூலாக இருப்பினும் ஓர் ஆய்வு நூலென்பது ஈண்டு
குறிப்பிடத்தக்கது. மிகவும் பாரமான பணியை பொறுப்புடன் ஆசிரியர் நிறைவேற்றியிருப்பது
இத்துறையில் அவர் பெற்றிருக்கும் பரந்த ஞானத்தையும், விரிவான வாசிப்புத் தன்மையையும்
எடுத்துக் காட்டுகிறது. இத்துறையில் ஆழமான ஆய்வு மேற்கொள்வோருக்கு இந்நூல்
ஒரு வழிகாட்டியாகவிருக்கும் அதே வேளை தனக்கென ஒரு சிறந்த சுயாதீனமான விமர்சனத்தையும்
அது வேண்டி நிற்பது நோக்கற்பாலது.
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
விரிவுரையாளர், தாருல் உலூம் அல்-மீஸானிய்யஹ்
குருகொடை, அக்குறணை.
2000.09.01