Reviews
நூலின் பெயர் : இலங்கை தப்லீக் ஜமாஅத் தந்த பெரிய அமீர் சாஹிப்
நூலாசிரியர் பெயர் : எம்.எஸ்.எம்.முஸ்ஸம்மில்
நூலின் விலை : ரூபா 125.00
வெளியீடு : அஸ்ஸிராஜ் பதிப்பகம்
தப்லீஃ அமைப்பின் நீண்ட கால ஊழியரும், நிறைந்த அனுபவமும், எழுத்தாற்றலுமிக்க
சகோதரருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.முஸ்ஸம்மில் இலங்கை தப்லீஃ ஜமாஅத்தின் முன்னாள்
அமீர் மர்ஹூம் ஹாஜி எம்.டி.எம்.ஹனீபா அவர்களைப் பற்றி எழுதியுள்ள நூலின் இரண்டாம்
பதிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. 225 பக்கங்கள் கொண்ட இந்நூல் அழகிய அச்சமைப்பில்
வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கண்ட அண்மைய இஸ்லாமிய எழுச்சிக்கு தப்லீஃ ஜமாஅத்தின் பங்களிப்பு அளப்பரியது.
சமூகத்தின் சகல தரத்தவர்களையும் ஈர்த்தெடுத்து அவர்கள் மத்தியில் இஸ்லாத்தின்
அடிப்படைகளையும், விழுமியங்களையும் பயிற்சி ரீதியாக போதித்து அவர்களின் நடைமுறை
வாழ்வில் இஸ்லாத்தை பின்பற்றச் செய்கின்ற பெருமை தப்லீஃ அமைப்புக்குண்டு.
ஓர் அமைப்பின் அதிலும் குறிப்பாக ஒரு தஃவா அமைப்பின் சேவையின் வெற்றி பல விடயங்களில்
தங்கியிருந்தாலும் சரியான, திறமைமிக்க தலைமைத்துவம் என்பது அதன் வெற்றிக்கு
இன்றியமையாதது. 1956 முதல் 1982 வரை தொடராக இருபத்தாறு ஆண்டுகள் இதயங் கவரும்
சிறந்த தலைமைத்துவம் இலங்கை தப்லீஃ ஜமாஅத்துக்கு கிடைத்திருந்த உண்மையை எவரும்
மறுக்க முடியாது. இத்தகைய உன்னத தலைமைத்துவம் கொடுத்தவர்தான் அவரைத் தெரிந்த
எல்லோரின் நினைவிலும் இன்றும் உயிர் வாழ்கின்ற ஹாஜி எம்.டி.எம்.ஹனீபா அவர்கள்.
இந்த உயர்ந்த மனிதர் ஆற்றிய சமய, சமூகப் பணிகள் பற்றி அடுத்துவரும் தலைமுறையினரும்
தெரிந்துகொள்ளும் பொருட்டு எழுதப்பட்ட நூலே “இலங்கை தப்லீக் ஜமாஅத் தந்த பெரிய
அமீர் சாஹிப்”.
எல்லோராலும் “பெரிய அமீர் சாஹிப்” என கௌரவமாக அழைக்கப்பட்ட அன்னாரின் குணநலன்கள்,
நடைமுறைகள், செயற்பாடுகள், பிரச்சினைகளை அணுகும் முறை, பேச்சு நயம், உதவி உபகாரங்கள்,
பொதுச் சேவை, அர்ப்பணிப்பு, ஆலிம்களை கௌரவித்தல், தலைமைத்துவம், மறுமைப் பயணம்
பற்றியெல்லாம் இந்நூல் விலாவாரியாக பேசுகின்றது. பொதுவாக எல்லோரும் குறிப்பாக
சமூக, சமயப் பணிகளில் ஈடுபட்டுள்ள சகோதர, சகோதரிகளும் படிக்க வேண்டிய பல அம்சங்களை
இந்நூல் பொதிந்துள்ளது. விசேடமாக தப்லீஃ சகோதரர்கள் படித்துப் பயன்பெற வேண்டிய
பல அம்சங்களை இந்நூல் சுமந்துள்ளது.
தனக்கென தனியான ஒரு மத்திய நிலையம் (மர்க்கஸ்) இல்லாத நிலையில், இன்று போன்றல்லாது
கடும் எதிர்ப்புகளை சந்தித்த வண்ணம் இலங்கை தப்லீஃ அமைப்பு வாழ்வதா, சாவதா
என்றிருந்த ஒரு கால கட்டத்தில் தப்லீஃ பணியை ஆதரித்தோருக்கும், எதிர்த்தோருக்கும்
மத்தியில் இப்பேரியக்கத்துக்கு தலைமைத்துவம் கொடுத்த பெருமை பெரிய அமீர் சாஹிப்
அவர்களையே சாரும். அவர்களின் அன்பும், பணிவும், தூரநோக்கும், நெஞ்சுரமும்,
இறையச்சமும், இதய சுத்தியும் கலந்த தலைமைத்துவமே இவ்வியக்கத்தின் இன்றைய பேர்
வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றையெல்லாம்
அச்சொட்டாக விளக்கப்படுத்துகின்ற ஒரு சிறந்த நூலை சமூகத்தின் முன் வைத்துள்ள
ஹாஜி எம்.எஸ்.எம்.முஸ்ஸம்மில் அவர்களையும், இந்நூலின் கதாநாயகர் பெரிய அமீர்
சாஹிப் அவர்களையும் சமூகம் நன்றிப் பெருக்கோடு பார்க்குமாக!.
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
2005.10.25