Reviews
நூலின் பெயர் : நினைவுகள்
நூலாசிரியர் பெயர் : அ. கலீல் அஹ்மது கீரனூரி
நூலின் விலை : இந்தியா ரூபா 60.00
வெளியீடு : லஜ்னத்துல் முஹ்ஸினீன் டிரஸ்ட்
42, சாலை வினாயகர் கோயில் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001.
அறிவுலகு அண்மையில் இழந்த அறிவுச் சொத்து, சிந்தனையுலகு அண்மையில் இழந்த சிந்தனைச்
சிற்பி, கொள்கையுலகு சமீபத்தில் இழந்த கொள்கை வீரர், எழுத்துலகு சமீபத்தில் இழந்த
மடை திறந்த எழுத்தாளர், பேச்சுலகு அண்மையில் இழந்த சண்டமாருதப் பிரசங்கி, மொழிபெயர்ப்புலகு
அண்மையில் இழந்த ஆற்றொழுக்கான மொழிபெயர்ப்பாளர், பண்பாடுலகு சமீபத்தில் இழந்த
பண்பாட்டுச் சிகரம், ஹாஸ்யவுலகு சமீபத்தில் இழந்த படிப்பினையூட்டும் ஹாஸ்யக்காரர்,
தஃவா உலகு அண்மையில் இழந்த பண்பட்ட தாஈ, பாரத நாடு தந்த பார் போற்றும் இறைநெறியாளர்
மர்ஹூம் மவ்லானா, மவ்லவி அ. கலீல் அஹ்மது கீரனூரி அவர்களின் சுயசரிதை நூலே ‘நினைவுகள்’.
2010இல் மவ்லானா அவர்கள் வபாத்தாகுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன் 2009இல்
இந்த சுயசரிதம் நூலாக வெளியாகியது.
பல்துறை விற்பன்னர், பன் மொழிப் பண்டிதர் மவ்லானா கலீல் அஹ்மது அவர்களின்
சுறுசுறுப்பான, விறுவிறுப்பான, ஓய்வின்றிய, உயிர்ப்புள்ள, துடிப்புமிக்க வாழ்க்கையின்
சாரத்தை இறுக்கிச் சுருக்கி வடிக்கின்ற ஒரு நூலாக அது அமைந்துள்ளது. ஒரு சன்மார்க்க
ஆலிம் பெருந்தகையின் 65 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தின் நிகழ்வுகள், அனுபவங்கள்,
பாடங்கள், படிப்பினைகள் என பலதும் பத்தும் இரை மீட்டல் செய்யப்படும் இந்நூல்
மிக மிகப் பெறுமதிமிக்கது, பரம்பரை பரம்பரையாய் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டியது.
சிறு பராயம், ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, கற்பித்தல், கடமைபார்த்தல், அதிபர்
பணி, பேச்சு, எழுத்து, மொழிபெயர்ப்பு, தஃவா, குடும்பம், பொருளீட்டல், பிரயாணங்கள்,
ஷரீஆவின் அடிப்படைகளைப் பாதுகாக்கும் முயற்சி, ஷரீஆ அரபுக் கல்லூரிகளின் கல்வித்
திட்டம், சோதனைகள், பிரச்சினைகள், எதிர்ப்புகள், சவால்கள் என தன் வாழ்வில்
நேர்ந்தவற்றை மவ்லானா அவர்கள் ஒளிவுமறைவின்றி பட்டவர்த்தனமாக, கன கச்சிதமாகப்
பகிர்ந்துகொள்ளும் பாங்கு உண்மையில் அலாதியானது, சிலாகிக்கத் தக்கது.
பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தல், சவால்களை எதிர்கொள்ளல், துன்பங்களைக் கண்டு
துவண்டு விடாமை, சோதனைகளைக் கண்டு சோர்ந்து போகாமை போன்ற ஓர் இலட்சிய புருஷரின்
இலட்சணங்கள் நினைவுகள் சுயசரிதையில் இழையோடி இருக்கின்றன. விடா முயற்சி, எடுத்துக்
கொண்ட காரியத்தில் கண்ணும்கருத்துமாக இருத்தல், செய்வன திருந்தச் செய்தல்,
காலதேசவர்த்தமானத்தைக் கவனத்திற் கொண்டு இயங்குதல் முதலாய சிறப்பம்சங்கள் பெற்றிலங்கிய
ஒரு முதிர்ந்த அறிவு ஆளுமையை இந்நூலில் தரிசிக்கலாம்.
ஆம். வாழ்வை வெகு பயனுள்ள வகையில் கழித்திட்ட ஒரு கர்மயோகியின் சுயசரிதம்
அது. வித்தியாசம் வித்தியாசமான துறைகளில் கால் பதித்து சாதனை புரிந்து சமூகத்
தளத்தில் தடம் பதித்து தனக்கென ஒரு தனியான பெயரை தக்கவைத்துக்கொண்ட அன்புக்குரிய
மவ்லானா அவர்களின் இந்த நூல் எல்லோரும் ரசித்து, ருசித்து படித்துச் சுவைத்து
பாடம் கற்க வேண்டிய, படிப்பினை பெற வேண்டிய ஓர் இலக்கியம். குறிப்பாக மாணவர்கள்,
ஆசிரியர்கள், அதிபர்கள், நிருவாகிகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள்,
பேச்சாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தாஈகள், வழிகாட்டிகள், சீர்திருத்தகர்கள்
அவசியம் சிரத்தை எடுத்து வாசிக்க வேண்டிய ஓர் அருமையான நூல்.
188 பக்கங்கள் கொண்டு விரிவான பொருளடக்கம் தாங்கி அழகிய அச்சமைப்பில் வெளிவந்துள்ள
இந்த சுயசரிதை நூல் வீரியமிக்க நடையில் ஆரம்பம் முதல் இறுதி வரை அமைந்துள்ளதோடு,
சொல் வீச்சு, வசனக் கட்டமைப்பு, கருத்துச் செறிவு, இலக்கிய நயம் ஓங்கி நிற்பதும்
குறிப்பிடத்தக்கது.
‘சகல பேருக்கும்
சொல்ல நினைப்பது யாதெனில் - சிலர், பக்தி சிரத்தையோடு ‘வாழ்க்கை வரலாறு எழுதுங்கள்’
என்று சொன்னதுண்டு. மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். ‘வாழாத வாழ்க்கைக்கு வரலாறா?’
65 ஆண்டுகள் மூச்சு விட்டிருக்கிறேன் என்பதைத் தவிர சொல்லத் தகுந்த எதுவுமில்லை.’
என நூலின் முதற் பக்கத்தில் மவ்லானா அவர்கள் செப்பிவிட்டு
‘முடிகிறேன்
பதினைந்து நாட்களுக்கு முன் நேசமுள்ள ஒரு மாணவர் போன் செய்தார். ‘இன்று உங்கள்
பர்த்டே’ என்று மகிழ்வோடு கூறினார். காலண்டரில் பார்த்தேன் 13.6.2009 – 65
வயது பூர்த்தியாகி விட்டது. பன்னிரண்டாம் வயது முதல் قال الله - قال الرسول
சொல்லாத நாட்கள் அநேகமாக இல்லை. அது ஒன்று மட்டுமே மனதுக்கு நிறைவு தருகிற
ஒரு அம்சம் என்பது தவிர வேரொன்றும் தெரியவில்லை.’
என நூலின் இறுதிப் பக்கத்தில் இயம்புவது அஞ்சா நெஞ்சன், மலை குலைந்தாலும் நெஞ்சின்
நிலை குலையா வீரச் சிங்கம் மவ்லானா அவர்களின் பணிவைப் பளிச்சிடுகின்றது.
மவ்லானா அவர்கள் இலங்கை மண்ணுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தவர். தப்லீக்
பணிக்கெனவும் மத்ரஸாக்களின் பட்டமளிப்பு விழாக்களில் சிறப்புச் சொற்பொழிவாற்றவும்
அடிக்கடி இலங்கைத் தீவை தரிசித்தவர். நம் நாட்டைச் சேர்ந்த சில சகோதரர்கள்
மவ்லானா அவர்கள் முதல்வராகக் கடமையாற்றிய இந்தியா திண்டுக்கல் யூஸுஃபிய்யஹ்
அரபுக் கல்லூரியில் கற்றுத் தேரி ஆலிம்களானவர்கள்.
நினைவுகள் இனிய சுயசரிதையை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென
அதனை வாசித்து முடித்த கையோடு நான் முடிவெடுத்துக்கொண்டேன். வெறும் இரண்டே
இரண்டு மாதங்கள்தான் உருண்டோடின. அதற்குள் மவ்லானா அவர்களின் பிரிவுச் செய்தி
பேரதிர்ச்சியாய், பெருங் கவலையாய் வந்து சேர்ந்தது. மவ்லானா அவர்கள் உயிருடனிருக்கும்
காலை இந்த அறிமுகம் எழுதப்பட்டிருப்பின் எத்துணை நன்றாய் இருந்திருக்கும்!
அன்னாரின் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் துஆவும் எனக்கு கிடைத்திருக்குமே! நினைக்க
நினைக்க ஆதங்கம்தான். நெஞ்சு பொறுக்குதில்லையே!
வல்ல அல்லாஹ் தன் அளவற்ற அருள் கொண்டு மவ்லானா அவர்களை அரவணைப்பானாக! அன்னாரின்
பணிகளை அங்கீகரிப்பானாக! அவற்றின் நன்மைகளை உலக மாந்தருக்கு நிரந்தரமாக்கி
வைப்பானாக!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
1433.01.13 - 2011.12.09