Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

புதுப் பள்ளி சில நினைவுகள்




புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஐத்ரூஸ் ஜுமுஅஹ் மஸ்ஜிதில் (புதுப் பள்ளி) நேற்று (2018.04.13) ஜுமுஅஹ் தொழ சென்ற நான் அதன் பழைய கட்டிடத்தில் தொழுதேன். சுமார் கால் நூற்றாண்டைப் பின்னோக்கி என் நினைவுகள் சென்றன.

ஜே.பி. லேனில் வசித்த 1970களில் நாம் தொழுவது புதுப் பள்ளியிலும், கொப்பராப் பள்ளியிலும்தான். புதுப் பள்ளியில் தொழுதமை, ஹிஸ்ப் மஜ்லிஸில் பங்கேற்றமை, ரமழானில் தராவீஹ் தொழுதமை, நோன்பு திறந்தமை, அதன் பகல் பொழுதில் தூங்கி ஓய்வெடுத்தமை என சிறு பராய நாட்களில் இந்த மஸ்ஜிதில் நான் செய்தவை என் நெஞ்சில் அலைமோதின.

நீண்ட நாட்களாக புதுப் பள்ளியில் இமாமாக கடமை பார்த்த மர்ஹூம் அப்துலப்பாவின் ஞாபகமும் மனத் திரையில் பளிச்சென மின்னியது. அன்னாரின் தோற்றம், குரல், உடை, நடை, பேசும் முறை, ஓதும் முறை, அவர் நடத்திய ஓதப்பள்ளி என எல்லாமே நினைவில் வந்து போயின.

1990ஆம் ஆண்டு அடியேன் புதுப் பள்ளியில் தராவீஹ் தொழுகையை நடத்தியதும் ஞாபகத்துக்கு வந்தது. இந்த மஸ்ஜிதில் முழு குர்ஆனும் பாராயணம் செய்து தராவீஹ் தொழுவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

பலதும் பத்தும் நினைவில் அலைபாயும் தருணத்தில் இன்னுமொரு நிகழ்வும் நினைவுக்கு வந்தது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. 1984இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அடியேன் ஹாபிலாகிவிட்டதைத் தொடர்ந்து இந்த மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு வைபவம்.

புதுப் பள்ளி பற்றி சுருக்கமாக எழுத வேண்டுமென மனசு சொன்னது. என் காரியாலயத்தோடு தொடர்புகொண்டு புதுப் பள்ளியின் பழைய கட்டடத்தைப் படம் எடுத்து தருமாறு வேண்டினேன். இன்று மாலை கடும் மழை பெய்துகொண்டிருந்த வேளை வெளிச்சமும் போதாத நிலையில் சில படங்களை அவசரத்துக்கு எடுத்துக்கொடுத்தார்கள். அந்தப் படங்களை இங்கே பார்க்கலாம்.

புதுப் பள்ளி அரபு இலக்கிய நூலொன்றிலும் இடம் பிடித்துள்ளது. 1978ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மக்காவிலுள்ள ராபிதத் அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் அக்காலை உதவி செயலாளர் நாயகம் அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி அவர்கள் தனது இந்த விஜயத்தைத் தொடர்ந்து எழுதிய பயண இலக்கிய நூலில் புதுப் பள்ளி பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் 'ரிஹ்லதுன் இலா ஸயலான்'. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

''சுற்றுலா ஐத்ரூஸ் பள்ளிவாயல் என்றழைக்கப்படும் பள்ளிவாசலையும் உள்ளடக்கியது. ஒரு வயது முதிர்ந்த பெரியாரை அதில் நாம் கண்டோம். ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளென ஒரு தொகுதி சிறுவர்கள் அவரிடத்தில் இருக்கின்றனர். கண்ணியமான அல்-குர்ஆனை மனனம் செய்வது சம்பந்தமான பாடங்களை அவர் அவர்களுக்கு போதிக்கிறார். அவர்கள் அவரிடம் ஒன்றுசேர்ந்து நிலத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களில் சிலரிடம் பலகைகள் உள்ளன. நெருப்பில் வைத்து சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களிலிருந்து எடுக்கப்படும் கறுப்பு மை பெரியாருக்குப் பக்கத்தில் உள்ளது. சிறுவர்கள் அதிலிருந்து தமது பலகைகளில் எழுதிக்கொள்கின்றனர். பெரியாரின் பெயர் (அப்துஸ் ஸமத் இப்ன் தாக்கிர் இப்ன் சபீர்). இந்த மஸ்ஜிதின் நிர்மாண சரித்திரம் 80 ஆண்டுகளுக்கு முன்னதாகும் என பெரியார் சொன்னார். அது அதன் நிர்மாணத்தின் ஆரம்பமா அல்லது அதன் புனர்நிர்மாண வரலாறா என நான் அவரிடம் வினவினேன். அது அதன் நிர்மாணத்தின் ஆரம்ப வரலாறு என அவர் பதிலளித்தார். பள்ளிவாசலோ பலகையால் கூரை போடப்பட்டு, நேர்த்தியின்றி பாய்கள் விரிக்கப்ட்டுள்ளது. பெரியாரிடத்திலும் அவரின் மாணவர்களிடத்திலும் வறுமையின் அடையாளங்களும் வெளித் தோற்றத்தைப் பற்றி பொருட்படுத்தாமையும் தென்படுகின்றன.''

அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி ஓர் ஆலிமும் இலக்கியவானும் ஆவார். பல பயண இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். 1999 டிசம்பர் மாதத்தில் ராபிதத் அல்-ஆலம் அல்-இஸ்லாமியில் அன்னாரின் காரியலாயத்தில் வைத்து அவரை சந்தித்தது இன்றும் பசிய நினைவுகள்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.07.26
2018.04.14


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page