Articles
அல்-குர்ஆனிய திங்கள்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
ஓத ஓத தெவிட்டாத தித்திக்கும் தேன் சொட்டும் திவ்விய திருமறை அல்-குர்ஆனை
அருள் சுரக்கும் புனித ரமழானில் அல்லும் பகலும் பக்தி சிரத்தையுடன் இன்புற
பாராயணம்செய்து நெஞ்ச நிறைவுடன், ஆத்ம திருப்தியுடன் இன்று ஈத் அல்-ஃபித்ரை
அகம் குளிர, முகம் மலர இனிதே கொண்டாடுகின்றனர் உலகலாவிய முஸ்லிம்கள். ஆம்!
நிச்சயம் அது மனங்கொள்ளத்தக்க நிறைவுதான்.
குர்ஆனும் ரமழானும்
சத்திய சன்மார்க்கம் இஸ்லாத்தை முழுமைப்படுத்திட விழைந்த வல்லவன் அல்லாஹ்
தஆலா அவனின் இறுதித் தூதராக முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அனுப்பி
அவர்கள் மீது அவனின் கடைசி வேதம் அல்-குர்ஆனை இறக்கிவைத்தான். 'லவ்ஹ் மஹ்ஃபூல்'
எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருந்த புனித குர்ஆனை ரமழான் மாதம் 'லைலத் அல்-கத்ர்'
எனும் மகத்துவமுடைய இரவில் ஒரேயடியாக அடி வானிலுள்ள பைத் அல்-இஸ்ஸாவுக்கு அல்லாஹ்
இறக்கிவைத்தான். இத்தகவல் இரு வேறு இடங்களில் அல்-குர்ஆனில் துல்லியமாக தரப்பட்டுள்ளது.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழி,
பிரித்துக்காட்டக்கூடியதில் தெளிவுகளாகவும் அதில் அல்-குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டது.
(02 : 185)
நிச்சயமாக நாம் அதனை (குர்ஆனை) லைலத் அல்-கத்ரில் இறக்கிவைத்தோம். (97 :
01)
இந்தப் பின்னணியிலேயே ரமழான் மாதம் அல்-குர்ஆனின் மாதம் என கண்ணியமாக அழைக்கப்படுகின்றது.
உண்மையிலேயே குர்ஆனுக்கும் ரமழானுக்குமிடையில் இறுக்கமான, நெருங்கிய தொடர்பு
உண்டென்பதற்கு வேறு பல உண்மைகளும் உள.
பிரதி வருடமும் ரமழான் திங்களில் ஹழ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள்
நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து குர்ஆனை இருவரும்
ஒருவர் மற்றவருக்கு பரஸ்பரம் ஓதிக் காட்டிக்கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
பின்வரும் அறிவிப்பு இதற்கு சான்று பகர்கின்றது:
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் நல்லதைக்
கொண்டு மிகவும் கொடை கொடுப்பவர்களாகவிருந்தார்கள். அவர்கள் மிகவும் கொடை கொடுப்பவர்களாகவிருந்தது
ரமழான் மாதத்திலாகும். ரமழானின் ஒவ்வோர் இரவிலும் அது (ரமழான்) கழியும் வரை
குர்ஆனை அவர்கள் மீது ஓதிக் காட்டியவர்களாக நிச்சயமாக அவர்களை ஜிப்ரீல் சந்திப்பவர்களாக
இருந்தார்கள். ஜிப்ரீல் அவர்களை சந்தித்தால் அனுப்பப்பட்ட காற்றைவிட நல்லதைக்
கொண்டு மிகவும் கொடை கொடுப்பவர்களாக அவர்கள் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இருந்தார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : சஹீஹ்
இப்னி ஹிப்பான்)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் வாயிலாக சஹீஹ்
அல்-புகாரியில் இடம்பெற்றுள்ள ஓர் அறிவிப்பில் 'நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் அல்-குர்ஆனை அவர்கள் (ஜிப்ரீல்) மீது ஓதிக் காட்டுவார்கள்' என காணப்படுகின்றது.
சஹாபிகள், தாபிஈகள் என ஆரம்ப கால முஸ்லிம்கள் உட்பட வரலாறு நெடுகிலும் ரமழானில்
முஸ்லிம்கள் குர்ஆனும் கையுமாக இருந்து வந்துள்ளனர். இரவு, பகல் பாராது தெய்வீக
திருமறையை பாராயணம்செய்வதில் அவர்கள் திளைத்திடுவர். பொதுவாக ரமழானுக்குத்
தயாராகும் மாதமாகிய ஷஃபானிலேயே சஹாபிகள், தாபிஈகள் அல்-குர்ஆனோடு சங்கமித்துவிடுவர்
என்பதை பிரபல நபித் தோழர் ஹழ்ரத் அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் பின்வரும்
கூற்று துலக்கப்படுத்துகின்றது:
ஷஃபான் நுழைந்துவிட்டால் முஸ்லிம்கள் குர்ஆன் பிரதிகளை நோக்கி வருபவர்களாகவும்
ஸக்காத்தை வெளிப்படுத்துபவர்களாகவும் அதிகாரிகள் சிறைவாசிகளை அழைப்பவர்களாகவுமிருந்தனர்.
(நூல் : பத்ஹ் அல்-பாரி)
புகழ் பூத்த பேரறிஞர்கள், பெரு மேதைகள், மகான்கள், இறைநேசச் செல்வர்களின்
வாழ்க்கைச் சரிதங்களைப் படித்தால் அவர்களின் ரமழான் காலம் முழுக்க முழுக்க
இறை மறையோடு இரண்டறக் கலந்து போயிருந்ததைக் காணலாம். அவர்கள் பெரும் சிரத்தையோடு,
அதீத முனைப்போடு ஈடுபட்டுவருகின்ற பல்வேறு அறப் பணிகள், சன்மார்க்கத் தொண்டுகள்,
மார்க்கப் போதனைகள் யாவற்றையும் ரமழானை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்திவிட்டு
அருள் வேதத்தோடு அப்படியே பின்னிப்பிணைந்திடுவர்.
கண்ணியமிக்க இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ரமழான் வந்துவிட்டால் வேத
போதம் செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு, வகுப்புகள் நடத்துவதை நிறுத்திவைத்துவிட்டு,
மக்களுக்காக அமர்வதை விட்டுவிட்டு குர்ஆன் பாராயணத்தின்பால் திரும்பிடுவார்கள்.
மரியாதைக்குரிய இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அருள்மிகு ரமழானில் தினசரி
இரண்டு தடவைகள் குர்ஆனை ஓதி முடிப்பார்கள் எனும் பிரமிக்கத்தக்க தகவல் பிரபல்யமானது.
ரமழான் மாதமொன்றில் லவ்ஹ் மஹ்ஃபூலிலிருந்து பைத் அல்-இஸ்ஸாவுக்கு ஒரே தடவையில்
இறக்கிவைக்கப்பட்ட புனித குர்ஆன் ஏறத்தாழ 23 ஆண்டுகளில் தேவைக்கேற்ப கொஞ்சம்
கொஞ்சமாக முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது இறக்கி அருளப்பட்டது.
இவ்வாறு சிறுகச் சிறுக சன்னம் சன்னமாக இறங்கி பூரணம் பெற்று பின்னர் மனிதர்களின்
கரங்களிலே எழுத்துருவில் தவழ ஆரம்பித்து காலாதி காலமாக அல்லாஹ்வால் அது பாதுகாக்கப்பட்டுவருகின்றது.
குர்ஆன் என்றால்?
ஆம்! அருள் மறை அல்-குர்ஆன் அல்லாஹ்வின் இறுதி வேதம். அது அவனது பேச்சு. மனித
குலம் நல்லதையும் கெட்டதையும், சரியையும் பிழையையும், பயனுள்ளதையும் பயனற்றதையும்
சரிவர பிரித்தறிந்து செயற்படும் பொருட்டு அல்லாஹ் தஆலா அவனின் இறுதித் தூதர்
முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது இறக்கிவைத்த அவனின் அற்புதமான,
தெளிவான, உறுதியான வழிகாட்டல். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், நற்செய்திகள்,
எச்சரிக்கைகள், அவன் பற்றிய மேலும் அவனின் சிருஷ்டிகள் பற்றிய தகவல்கள், விளக்கங்கள்,
நடந்தவை, நடக்கவிருப்பவை, வாழ்வு, மரணம், இம்மை, மறுமை, சுவனம், நரகம், நற்கூலி,
தண்டனை என எண்ணிலடங்கா விடயங்கள் அதில் பொதிந்துள்ளன.
மனிதன் தன் வாழ்வியலை சிறப்பாக, செம்மையாக அமைத்து வாழ் வாங்கு வாழ்ந்திட,
ஈருலக சௌபாக்கியங்களையும் நிரப்பமாக அடையப் பெற்று இன்புற்று மகிழ்ந்திட இறைவன்
நல்கிய நெறிமுறை அல்-குர்ஆன். அமைதியான, மனோரம்மியமான, மணமான வாழ்வின் உத்தரவாதம்,
சர்ச்சைகள், சிக்கல்கள், பிரச்சினைகளுக்கான தீர்வு, இருளின் ஒளி என்பன நிச்சயம்
அதிலுள்ளன.
குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
ஆகவே மனித இனத்தின் ஒவ்வோர் அங்கத்தவனும் இத்திவ்விய மறையைப் பாராயணம்செய்ய,
படித்துணர, அதன் பிரகாரம் வாழ, அதன் போதனைகளை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்ல,
பரப்ப பணிக்கப்பட்டுள்ளான். அதனை மனனமிடுவது விதந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றை
அல்-குர்ஆனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளாகப் பார்க்க முடியும். இதில்
தவறுபவன் இம்மையிலும் மறுமையிலும் இறை தண்டனைக்கு ஆளாகுவான்.
அருள் வேதத்தை அணுக வேண்டிய முறையில் தவறியோர், அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளில்
கோட்டைவிட்டோர் யதார்த்தத்தில் அதனை புறக்கணித்துவிட்டனர். இது ரஸூல் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களின் அறுதியான முடிவாகும். தனது சமூகத்தினரில் சிலர் இவ்வாறு
செய்வது பற்றி ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்று இறைவனிடம் முறையிட்டார்கள்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க முறைப்பாட்டை எல்லோரினதும் நன்மை கருதி அல்லாஹ்
தஆலா குர்ஆனில் நித்தியமாக பதிவு செய்துவைத்துள்ளான்.
என் இரட்சகா! நிச்சயமாக என் சமூகத்தினர் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்டதாக
எடுத்துக்கொண்டனர் என தூதர் கூறினார். (25 : 30)
அல்-குர்ஆனைப் புறத்தொதுக்குதல் குறித்த நபிகளாரின் முறைப்பாடு பாரதூரமானது.
அதனை ஓதாது புறக்கணிப்பது, படித்துணராது புறக்கணிப்பது, மனனமிடாது புறக்கணிப்பது,
அதன் வழிகாட்டல்கள் பிரகாரம் வாழாது புறக்கணிப்பது, அதன் போதனைகளை அடுத்தவருக்கு
எடுத்துரைக்காது புறக்கணிப்பது என பல வகை புறக்கணிப்புகள் இதில் பொதுவாக அடங்கும்.
குர்ஆன் பாராயணம்
ஒரு முஸ்லிம் அனுதினமும் அல்-குர்ஆனை ஓதியாக வேண்டும். இதற்கென நேரம் ஒதுக்கிக்கொள்வது
அவனது பெரும் பொறுப்பு. குர்ஆன் தன் மீது நேரடியாக இறக்கப்பட்ட முத்தான நபி
முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்கூட அல்-குர்ஆனை ஓதிவர வேண்டுமென
அல்லாஹ் கட்டளை பிறப்பித்திருந்தான். அக்கட்டளை இறை மறையில் இவ்வாறு அமைந்துள்ளது:
மேலும் நான் குர்ஆனை ஓதுமாறும் (ஏவப்பட்டுள்ளேன்.) (28 : 92)
நபியவர்கள் நேரமெடுத்து தொழுகையிலும் வேறு நேரங்களிலும் குர்ஆன் பாராயணத்திலீடுபடுவார்கள்.
சுப்ஹ் வேளையில் அவர்கள் அதனை ஓதுவதை அழகுற கவிதையில் வர்ணிக்கிறார்கள் கவிக்கோ
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழியல்லாஹு அன்ஹ்):
விடியற்காலை தோன்றிவிட்ட வேளை எம்மிலே அல்லாஹ்வின் தூதர் அவனின் வேதத்தை
ஓதுகின்றார்கள். (நூல் : சஹீஹ் அல்-புகாரி)
குர்ஆன் பாராயணம் பழங்கால முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒட்டிப்போயிருந்தது.
இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) இவ்வாறு கூறுகிறார்கள்:
சஹாபிகள், தாபிஈகளின் (ரழியல்லாஹு அன்ஹும்) சோலி குர்ஆன் ஓதுதல், மஸ்ஜித்களை
பராமரித்தல் (இபாதத்), அல்லாஹ் தஆலாவை திக்ர் செய்தல், நன்மையை ஏவுதல், தீமையை
விட்டும் தடுத்தல் ஆகிய ஐந்து விடயங்களில் இருந்தது. (இஹ்யாஃ உலூம் அல்-தீன்)
அத்தோடு அருள் மறையை அதனை ஓத வேண்டிய தஜ்வீத் முறைப்படி திருத்தமாக, ஒழுங்காக
ஓத வேண்டும். இதனை அல்லாஹ் கட்டாயமாக எதிர்பார்க்கின்றான். 'மேலும் அல்-குர்ஆனை
ஒழுங்காகவே ஓதுவீராக!' (73 : 04) என்பது அல்லாஹ்வின் ஆணித்தரமான பணிப்புரையாகும்.
புனித குர்ஆன் அரபு மொழியில் அதி உயர் இலக்கண, இலக்கிய நடையில் அமைந்துள்ளமை
கேள்வி, விவாதத்துக்கு அப்பாற்பட்ட காலம் காலமாக எல்லோரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்ட
விடயமாகும். அதற்கு நிகர் அதுவே. எனவே அதனை ஓதுகின்றபோது அது கூறுகின்ற விடயதானம்,
சொல்லவருகின்ற கருத்து கிஞ்சித்தும் சிதைவடையாது வெகு கவனமாக ஓத வேண்டும்.
அட்சரங்களை உச்சரிப்பதில் மிகுந்த அவதானம் தேவை. ஒவ்வோர் எழுத்தையும் அது வெளியாக
வேண்டிய இடத்திலிருந்து அதற்கே உரித்தான பண்புடன் வெளிப்படுத்தி உச்சரிக்க
வேண்டும். ஓர் அட்சரத்தின் உச்சரிப்பு மாறி அமையும்போது பெரும்பாலான வேளைகளில்
அர்த்தமும் மாறி அமையும். நிறுத்த வேண்டிய இடங்கள், நிறுத்தக்கூடாத இடங்கள்,
ஆரம்பிக்கும் முறை, நிறுத்திய பின் ஆரம்பிக்கும் முறை என்பவற்றில் கூடிய கவனம்
தேவை. இதில் தவறுகள் நடைபெறும் சமயம் அங்கும் அர்த்தம் குலைய வாய்ப்புகள் அதிகம்
உள்ளன.
இஃதன்றி நீட்ட வேண்டியவற்றை நீட்டியும் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் பிரிக்க
வேண்டியவற்றை பிரித்தும் குலுக்கி ஓத வேண்டியவற்றை குலுக்கியும் வெளிப்படுத்தி
ஓத வேண்டியவற்றை வெளிப்படுத்தியும் மறைத்து ஓத வேண்டியவற்றை மறைத்தும் மாற்றி
ஓத வேண்டியவற்றை மாற்றியும் வல்லினமாக ஓத வேண்டியவற்றை வல்லினமாகவும் மெல்லினமாக
ஓத வேண்டியவற்றை மெல்லினமாகவும் ஓதுவது கட்டாயம்.
எனவேதான் சிறுவர், பெரியவர், வாலிபர், வயோதிபர், ஆண், பெண் எனும் வித்தியாசங்களின்றி
சகலரும் குர்ஆன் ஓதும் முறையான தஜ்வீதைப் பயின்று அதற்கேற்ப அதனைப் பாராயணம்செய்ய
வேண்டியுள்ளது.
பால்யப் பருவத்தில் கற்க ஆரம்பிக்கும்போதே முறைப்படி தஜ்வீதுடன் குர்ஆனைக்
கற்றிட நம் சிறார்களுக்கு வழிசெய்தோமென்றால் வாழ்நாள் பூராவும் குர்ஆனை திருத்தமாக
ஓதுகின்றவர்களாக அவர்கள் இருப்பர். இந்த வகையிலேயே இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்)
போன்ற பெரும் அறிவுலக மேதைகள் பலர் சிறு பராயத்தில் அல்-குர்ஆனிய போதனையை பெரிதும்
வற்புறுத்தியுள்ளனர்.
பண்டைய காலத்து முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் பிள்ளைகளுக்கு குர்ஆனைப் படிப்பிப்பதில்
அவர்கள் முழு முனைப்புடன் ஈடுபட்டனர். இதனை தனது நூலான முகத்திமாவில் விலாவாரியாக
விபரித்து விருந்து வைக்கிறார் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரறிஞர்
இப்னு கல்தூன் அவர்கள்:
பிள்ளைகளுக்கு குர்ஆனைப் போதிப்பது மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களில்
ஓர் அடையாளச் சின்னம். குர்ஆனின் வசனங்கள், ஹதீஸ்களின் உட்பகுதிகள் சிலவற்றிலிருந்து
ஈமான் மேலும் அதன் கொள்கைகள் உறுதிபெறுவது அதில் இதயங்களுக்கு முந்திக்கொண்டு
வருவதால் மார்க்கத்தை உடையவர்கள் அதனைப் பற்றிக்கொண்டு அவர்களின் அனைத்து பட்டணங்களிலும்
அதன்படி நடந்தனர். அதற்குப் பின் உருவாகின்ற திறமைகள் எதன் மீது கட்டி எழும்புமோ
அத்தகைய கற்பித்தலின் அடிப்படையாக அல்-குர்ஆன் ஆகிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்க!
குர்ஆனை ஓதுவதற்கு அபரிமிதமான கூலிகளை அல்லாஹ் வாரி வாரி வழங்குகிறான், ஓதுபவரைக்
கண்ணியப்படுத்துகிறான். குர்ஆனை திறம்பட ஓதிட முடியாத நிலையிலும் திக்கித்
திக்கி பாராயணம்செய்பவரும்கூட கூலி பெறுகின்றார் என்றால் அல்-குர்ஆனை என்னென்பது?
குர்ஆனில் திறமையானவர் கண்ணியமான, வழிப்பட்டு நடக்கக்கூடிய தூதர்களுடன் இருப்பார்.
குர்ஆன் அவர் மீது கஷ்டமாக இருக்கும் நிலையில் அதில் திக்கியவராக ஓதுகின்றாரே
அவருக்கு இரண்டு கூலிகள் உள்ளன. (அறிவிப்பவர் : ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா),
நூல் : சஹீஹ் முஸ்லிம்)
குர்ஆனை விளங்குதல்
இறை வேதத்தை கருத்துணர்ந்து ஓதுவது முக்கியமான அம்சமாகும். ஓதுகின்ற வசனங்களின்
கருத்துக்களைப் புரிவதன் மூலம் குர்ஆனின் போதனைகளை விளங்க முடியும். எனவேதான்
இதனையும் அல்லாஹ் விரும்புகின்றான், வேண்டுகின்றான்.
'அவர்கள் அல்-குர்ஆனை சிந்தித்து பார்ப்பதில்லையா?' (04 : 82) என அல்லாஹ்
கேட்பது இந்தப் பின்னணியில்தான்.
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்: 'ஆஇஷாவே! என் இரட்சகனுக்காக நான்
இவ்விரவில் வணங்க என்னை விடுவீராக!' என ஓர் இரவு ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
கூறினார்கள். 'அல்லாஹ் மீது ஆணையாக! உங்களின் நெருக்கத்தை நிச்சயம் நான் விரும்புகிறேன்.
மேலும் உங்களை மகிழ்வூட்டியதையும் நான் விரும்புகிறேன்' என்றேன். அவர்கள் எழுந்து
துப்புரவாகி பின்னர் தொழ நின்றுவிட்டார்கள். அவர்களின் கண்ணைச் சுற்றியுள்ள
பகுதி நனையும் வரை அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் அழுதார்கள். அவர்களின்
தாடி நனையும் வரை அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் அழுதார்கள். பூமி நனையும்
வரை அழுது கொண்டே இருந்தார்கள். தொழுகைக்கு அறிவித்து பிலால் வந்தார்கள். அவர்கள்
அவர்களை அழுது கொண்டிருக்கக் கண்டபோது 'அல்லாஹ்வின் தூதரே! முந்தியதையும் பிந்தியதையும்
திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு மன்னித்திருக்கும்போது நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'
எனக் கேட்டார்கள். 'அதிகம் நன்றி செலுத்தும் ஓர் அடியானாக நான் இருக்க மாட்டேனா?
நிச்சயமாக இவ்விரவு என் மீது ஒரு வசனம் இறங்கியது. அதில் சிந்தனைசெய்யாது அதனை
ஓதியவருக்கு கேடுதான்' என்றார்கள். அது 'வானங்கள், பூமியைப் படைத்திருப்பதிலும்
மேலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் திண்ணமாக அறிவுடையோருக்கு அத்தாட்சிகள்
உள்ளன' எனும் வசனமாகும் என்றார்கள். (நூல் : சஹீஹ் இப்னி ஹிப்பான்)
இனிய மொழி அரபை இலக்கண இலக்கியத்துடன் கசடற கற்றுத் தேர்ந்து அல்லாஹ்வின்
வேத நூலை விளங்கிக்கொள்ள முடியாதோர் குறைந்த பட்சம் அன்றாடம் தொழுகைகளில் ஓதுகின்ற,
ஓதக் கேட்கின்ற ஸூராக்களின் மொத்த கருத்துக்களை தெரிந்துகொள்ள முயலலாம், முயல
வேண்டும். இன்ன அத்தியாயம் பொதுவாக இன்ன விடயத்தை எடுத்தாளுகின்றது என்ற அளவிலாவது
புரிந்துகொள்ள இயலுமல்லவா!
என்னதான் அரபு பாஷையைக் கரைத்துக்குடித்து அதில் துறைபோயிருந்த போதிலும் வெறும்
மொழிப் பரிச்சயத்தை, பாண்டித்தியத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு அல்-குர்ஆனை
அப்படி எளிதில் விளங்கிக்கொள்ள, வியாக்கியானம் பண்ண முடியாது. வேறு பல துறைகளின்
ஞானம், புலமை இங்கே கட்டாயம் தேவை. கிராஅத், அக்கீதஹ், தஃப்ஸீர், உலூம் அல்-குர்ஆன்,
ஹதீஸ், உலூம் அல்-ஹதீஸ், பிக்ஹ், உசூல் அல்-பிக்ஹ், ஸீரஹ், தாரீக் முதலாய பெரும்
இமாலய அறிவுத் துறைகளில் ஆழிய நிபுணத்துவம் இன்றியமையாதது.
சமகாலத்தில் கொஞ்சநஞ்சம் அரபு கற்றுவிட்டு, சிற்சில துறைகளில் நுனிப்புல்மேய்ந்துவிட்டு
ஏதோ சம்பந்தப்பட்ட சகல துறைகளிலும் கரைகண்டவர்கள் போன்று தோலான்துருத்தியெல்லாம்
குர்ஆனை விரிவுரை பண்ண, விளக்க வகுப்புகள் நடத்த அசட்டுத் துணிவு கொண்டுள்ளனர்.
தமது புத்திக்கு, சிந்தனைக்கு பட்டவாறெல்லாம் கண்ட கண்ட மாதிரி அல்-குர்ஆனை
வியாக்கியானம்செய்துவருகின்றனர். இது படு பயங்கரமானது, பெரும் ஆபத்தானது, அல்லாஹ்வின்
கடும் தண்டனைக்குரியது. பின்வரும் ஹதீஸ்கள் இவ்விடத்தில் நோக்கற்பாலவை:
எவர் அறிவின்றி குர்ஆனில் பேசுவாரோ அவர் தனது இருக்கையை நரகிலிருந்து ஏற்படுத்திக்கொள்ளவும்!
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸுனன்
அல்-திர்மிதி)
எவர் குர்ஆனில் தனது கருத்தைக் கொண்டு பேசுவாரோ அவர் தனது இருக்கையை நரகிலிருந்து
ஏற்படுத்திக்கொள்ளவும்! (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இரண்டற கலந்து ஒன்றித்திருந்த,
குர்ஆனின் வசனங்கள் இறங்கிய சூழலில் நேரடியாக வாழ்ந்த, குர்ஆனிய வசனங்களின்
வியாக்கியானங்களை நபியவர்களிடமிருந்து நேருக்கு நேர் ஐயந்திரிபற தெரிந்துவைத்திருந்த
அருமை சஹாபிகள் அருள் மறைக்கு விளக்கம் சொல்ல தயங்கினார்கள், பின்வாங்கினார்கள்,
அஞ்சினார்கள்.
'மேலும் கனியையும் புல்லையும்' (80 : 31) என்ற வசனம் பற்றி ஹழ்ரத் அபூ பக்ர்
(ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது 'அல்லாஹ்வின் வேதத்தில் நான்
அறியாததைச் சொன்னால் எந்த வானம் எனக்கு நிழல் கொடுக்குமோ, எந்த பூமி என்னை
சுமக்குமோ' எனக் கூறினார்கள். (நூல் : தாரீக் அல்-குலஃபாஃ)
நினைத்தோர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த மாதிரி விளக்கப்படுத்த மனிதப் படைப்பன்று
புனித குர்ஆன். அது தெய்வீக நூல். அதன் விரிவுரைக்கு அதன் சொந்தக்காரனான அல்லாஹ்
தஆலாவே ஏகபோக உரிமையாளன். அவன் அதனை எவர் மீது நேரடியாக இறக்கிவைத்தானோ அந்தத்
தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அவன் அதிகாரமளித்து,
அந்த கனமான பொறுப்பை அவர்கள் மீதே சுமத்தினான். 'மனிதர்களுக்கு அவர்களுக்கு
இறக்கிவைக்கப்பட்டதை நீர் விளக்கப்படுத்தும் பொருட்டு நாம் உமக்கு வேதத்தை
இறக்கிவைத்தோம்' (16 : 44) என அல்லாஹ் கூறினான். எனவே நாயகம் (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்களின் விளக்கத்தை முகாந்திரமாகக் கொண்டே எக்காலத்திலும் அல்-குர்ஆனிய
விரிவுரைகள் அமைய வேண்டும்.
குர்ஆன் மனனம்
இறை மறையை முழுமையாக மனனமிடுவது மற்றுமொரு சிறப்பான அம்சமாகும். முழு அளவில்
மனனமிட்டுக்கொள்ள முடியாவிடில் இயலுமான அளவு குறிப்பாக சிறு அத்தியாயங்கள்,
முக்கிய அத்தியாயங்களையாவது கட்டாயம் மனனமிட வேண்டியுள்ளது. அல்-குர்ஆனின்
சில பகுதிகளையாவது இதயக் கமலத்தில் சுமக்காது ஒரு முஃமின் இருக்க முடியாது.
கீழ்க்காணும் நபி மொழி ஈண்டு நோக்கத்தக்கது:
தனது இதயத்தில் அல்-குர்ஆனிலிருந்து எதுவும் இல்லாதவர் நிச்சயமாக குடியிராத
மனையைப் போன்றவர். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
குர்ஆன் மனனமிட்டோர் மிகவும் கண்ணியத்துக்குரியவர்கள். அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) செப்பினார்கள்: எனது சமூகத்தில் சிறப்பானவர்கள்
குர்ஆனை மனனமிட்டவர்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல் : அல்-முஃஜம் அல்-கபீர்). மேலும் நவின்றார்கள்: முஸ்லிமான
நரையுடையவரையும் அல்-குர்ஆனில் அளவுகடந்து போகாத மேலும் அதனைப் புறக்கணிக்காத
அதனை மனனமிட்டவரையும் நீதியான அரசனையும் கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதைச்
சார்ந்ததாகும். (அறிவிப்பவர் : அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்
: ஸுனன் அபீ தாவூத்)
இதனைச் சொன்னது மட்டுமல்லாது அதற்கு செயல் வடிவம் கொடுத்தார்கள் ரஸூல் (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள். உஹுத் போரில் ஷஹீதான முஸ்லிம்களை ஒரு குழியில் இருவர்
என்றவாறாக நல்லடக்கம் செய்யும்போது அவ்விருவரில் அதிகம் குர்ஆனை மனனமிட்டிருந்தவரை
முதன்மைப்படுத்தினார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கையில் அருள் வேதத்தை மனனமிடுவதற்கும் அதனை மனனமிட்டவர்களுக்கும்
அலாதியான சிறப்பு, கண்ணியம், மரியாதை, அந்தஸ்து உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
குர்ஆனிய வாழ்க்கை
குர்ஆன் வெறுமனே எழுத்தில், அச்சில், பேச்சில் மாத்திரம் இருப்பது போதாது.
மாறாக செயல்களில் அது பளிச்சிட வேண்டும். ஒரு விசுவாசி அதன் போதனைகள்படி நடக்க
வேண்டும். அது ஏவியவற்றை எடுத்தும் விலக்கியவற்றை தவிர்ந்தும் வாழ வேண்டும்.
அது அனுமதித்ததை அனுபவிக்கும் அதே வேளை அது தடுத்ததை முற்றுமுழுதாக ஒதுக்கியும்
வாழ வேண்டும். அது கூறும் பண்பாடுகளை நடைமுறையில் அணிகலன்களாக அணிந்துகொள்ள
வேண்டும். மொத்தத்தில் அல்-குர்ஆனின் பிரதிபிம்பமாக ஒவ்வொரு விசுவாசியும் திகழ
வேண்டும்.
குர்ஆன் இன்று வனப்புடன் தரமாக அச்சிடப்பட்ட பிரதிகளில் இருப்பது போன்றல்லாது
ஓலைகள், பட்டைகள், தோல்கள், கற்கள் போன்றவற்றில் எழுதப்பட்டிருந்த நபி (சல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களின் காலப் பகுதியில் அது இறை விசுவாசிகளின் வாழ்வியலில்
அழகாக, அற்புதமாக மிடுக்குடன் பளிச்சிட்டது. சஹாபிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,
பெரியவர்கள், இளைஞர்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் என அனைவரின் வாழ்க்கையிலும்
குர்ஆன் நடைமுறையில் மேலோங்கி இருந்தது. குர்ஆனைப் படிப்பார்கள். படித்த மாத்திரத்தில்
அதற்கு செயலுரு கொடுப்பார்கள். தாபிஈயான அபூ அப்த் அல்-ரஹ்மான் (ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இது பற்றி பிரஸ்தாபிக்கின்றார்கள்:
அவர்கள் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து பத்து ஆயத்களை
கற்று, அறிவு, செயலில் நின்றும் இவற்றில் உள்ளதை அவர்கள் அறியும் வரை அடுத்த
பத்தில் ஆரம்பிக்காதவர்களாக இருந்தனர் என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்
தோழர்களில் எமக்கு கற்றுத்தந்து கொண்டிருந்தவர்கள் எமக்கு அறிவித்தனர். எனவே
அறிவையும் செயலையும் நாம் கற்றோம் என்றனர் அவர்கள். (நூல் : முஸ்னத் அஹ்மத்)
குர்ஆனின் போதனைகளை பரப்பல்
குர்ஆன் அது அனைவரும் படித்து, வழிகாட்டல் பெற வேண்டிய உலகப் பொது மறை. எல்லா
மாந்தருக்கும் அதன் போதனைகள் சென்றடைய வேண்டும். ஆகவே குர்ஆனில் கற்றுத் தெளிந்தவற்றை
தன்னளவில் மட்டும் சுருக்கி வைத்துக்கொள்ளாது பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டிய
மகோன்னத பொறுப்பு ஒன்று உள்ளது. தனக்குத் தெரிந்த குர்ஆனிய விடயங்களை அடுத்தவருடன்
பகிர்ந்துகொள்வதன் மூலம் இவ்விலக்கை எய்தலாம். பரிசுத்த வேதத்தின் ஞானத்தைப்
பெற்றிருப்பதனால் மாத்திரம் ஒருவர் நிரப்பமான சிறப்பை அடைகிறார் என்பதற்கில்லை.
மாறாக தான் ரசித்து, ருசித்து படித்து சுவைத்திட்டவற்றை ஏனைய மனிதர்களுக்கு
எத்திவைக்கும்போதுதான் அவர் பரிபூரணமான சிறப்பை அடைகின்றார். இவ்வுண்மையை பின்வரும்
நாயக வாக்கு உறுதிப்படுத்துகிறது:
உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று, அதனைக் கற்றுக்கொடுத்தவராவார். (அறிவிப்பவர்
: உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
குர்ஆனிய மேன்மை
குர்ஆனிய அறிவு, ஞானம், விளக்கம், புலமை, ஆய்வு, அனுபவம் என்பன ஏனைய கலை,
துறைசார் அறிவு, ஞானம், விளக்கம், புலமை, ஆய்வு, அனுபவம் போன்றல்ல. அது முழுக்க
முழுக்க வித்தியாசமானது, அறவே ஒன்றோடொன்று ஒப்புநோக்கி பார்க்க முடியாதது.
அல்-குர்ஆன் சார்ந்த துறைகளில் உயர்ந்து நிற்பவரை பிற துறைகளில் உயர்ந்து நிற்பவருடன்
சரி நிகர் சமானமாக வைத்து சமப்படுத்தவோ அல்லது ஒப்புநோக்கவோ முடியாது. அப்படிச்
செய்வது அறிவுடைமையாகாது, கூடாதும்கூட. குர்ஆனிய துறைஞர்கள் அலாதியானவர்கள்.
எனவேதான் வயதிற் சிறியவர்களாயினும் சரியே இஸ்லாம் அவர்களை கனப்படுத்துகிறது,
கனப்படுத்துமாறு பணிக்கிறது.
குர்ஆனிய ஞானப் பெருக்குடன் இலங்கிய சஹாபிய சிறுவர்கள், மாதர்களை நபியவர்களும்
அவர்தம் தோழர்களும் மிக மிக கௌரவமாக நடத்தியதை வரலாற்றிலே காணலாம். சிறுவரான
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) பழம்பெரும் மூத்த நபித் தோழர்கள்
அமரும் அவைகளில் வைத்து கலீஃபா உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் தலைமையில்
சங்கை பண்ணப்பட்டார்கள். உம்மு வரகா (ரழியல்லாஹு அன்ஹா) என்ற சஹாபியப் பெண்மணியை
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்று தரிசிப்பார்கள்.
எனவே குர்ஆனை எந்த வகையிலும் புறக்கணிக்க, புறத்தொதுக்க, ஓரம்கட்ட, ஒதுக்கிவைக்க
எம்மால் முடியாது, கூடாது. அது நமது அன்றாட நிஜ வாழ்வில் உடலும் உயிரும் போல்
ஒருசேர நடைமுறையில் கலந்திருக்க வேண்டிய ஒன்று.
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019