Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
என்றும் அழியா நினைவில் என்னரும் தந்தை




பத்தாம் மாதம் இருப்பத்திரெண்டாம் நாள் என் அருமை தகப்பனார் மறைந்த நாள். அது இஸ்லாமிய ஆண்டின் பத்து இருபத்திரெண்டானாலும் சரி, கிரிஸ்தவ ஆண்டின் பத்து இருபத்திரெண்டானாலும் சரி. என் தகப்பனார் இறையடி எய்திய தினம் இரண்டு கலண்டர்களும் பத்தாம் மாதம் இருபத்திரெண்டாம் திகதியையே காட்டின. 1429.10.22 – 2008.10.22. இதுவே அன்னார் மறைந்த தினம். இஸ்லாமிய கலண்டர் படி இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

1936.11.27 அன்று ஜனித்த என் அன்புத் தந்தை வபாத்தானபோது அன்னாருக்கு வயது எழுபத்திரெண்டு.

கடைசிவரை திடகாத்திரமாக வாழ்ந்தார்கள் என் தகப்பனார். ஹனிபா எனும் நாமம் தாங்கி ஏழு தசாப்தம் வாழ்ந்து ஏற்றம், இறக்கம், மேடு, பள்ளம், ஏழ்மை, செழிப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம், இலாபம், நட்டம் யாவற்றையும் அனுபவித்துவிட்டு பர்ஸக் வாழ்வை அடைந்த இப்பெருமகனை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சில் ஏக்கம்தான்.

வாட்டசாட்டமான உடம்பு, நிமிர்ந்த நெஞ்சு, உயர்ந்த நெற்றி, கம்பீரமான நடை, தெளிவான பேச்சு வாய்க்கப்பெற்றிருந்த என் அருமை தகப்பனார் எப்போதும் வெண்ணிற ஆடைகளையே விரும்பி அணிந்து மகிழ்ந்தார்கள். வெள்ளை தவிர்ந்த வேறொரு நிற உடையை என் தகப்பனார் தெரிவுசெய்ததே கிடையாது.

உண்மை, நேர்மை, வாய்மை, நம்பிக்கை, நாணயம், வாக்குறுதி நிறைவேற்றல், பிறருக்கு உதவுதல், நல்ல காரியங்களுக்கு சிபாரிசு செய்தல், அநியாயத்தைத் தட்டிக்கேட்டல், அடாவடித்தனத்தை எதிர்த்தல், சத்தியத்துக்கு கட்டுப்படல், சத்தியத்தை நிலைநிறுத்துவதில் தடைகளை உடைத்தெறிதல், உண்மையாகச் செயல்படும்போது எழுந்துவரும் விமர்சனங்களை எட்டி உதைத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை மதித்தல், நேரத்துக்கு செயல்படல் முதலாய பண்புகள் என் பாசமிகு தந்தையிடம் குடிகொண்டிருந்தன. சமூக சேவை அவர்களின் உதிரத்தில் கலந்துபோயிருந்தது. துணிவின் பிறப்பிடமாக விளங்கிய அவர்கள் எந்தக் கட்டத்திலும் ஏக இறைவனைத் தவிர எவரையும் கிஞ்சித்தும் அஞ்சாத நெஞ்சுரம் வாய்ந்தவர். பணிந்துபோவார்களே தவிர தலைகுணிந்துபோக மாட்டார்கள். கடைசிவரை கௌரவமாக வாழ்ந்தார்கள். எம்மையும் கௌரவமாக வாழப் பழக்கினார்கள்.

வவுனியா கிருஷிகப் பாடசாலையில் (தற்போது வவுனியா விவசாயக் கல்லூரி) மேற்படிப்பை முடித்துவிட்டு அரச தொழில் ஒன்றைப் பெற முயற்சித்தும் கிடைக்காததால் வியாபாரத்தை ஜீவனோபாயமாகக் கொண்டார்கள். இன்னும் சற்று முயன்றிருந்தால் அரச உத்தியோகமொன்றைப் பெற்றிருக்கலாம். இதில் அரசியல்வாதிகளின் பின்னே போக வேண்டி வருகின்றதென்பதால் தன் சுய கௌரவத்தை இழக்க தயாரில்லாத நிலையில் நேரடி விண்ணப்பத்தின் அடிப்படையில் கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் தொலைந்துபோகட்டும் என இருந்த கவரிமான்.

பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாக மஸ்ஜிதில் நிறைவேற்றுவதில் கண்ணும்கருத்துமாக இருந்த என் தகப்பனார் தஹஜ்ஜுத் உட்பட எல்லா ஸ{ன்னத்தான தொழுகைகளையும் தவறாது தொழும் பழக்கமுள்ளவராக இருந்தார்கள். திக்ர்கள், துஆக்களை தவறவிட மாட்டார்கள். மரணத்துக்கு முன் நினைவும், பேச்சும் குன்றிப்போயிருந்த பதின்மூன்று நாட்களில் திக்ர்கள், துஆக்களை அன்னார் வாய் நிரம்ப உச்சரிக்க நாம் அவதானித்தோம்.

வசதியற்றவர்கள், நாதியற்றவர்களுக்கு உதவுதல், உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வித்தல், குமர் காரியங்களைச் செய்துவைத்தல், மஸ்ஜித்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு அதற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பன அன்னாரின் சமூக சேவைப் பக்கங்களை அலங்கரிக்கின்றன.

வாழ்வின் இறுதி இருபதாண்டுகள் தப்லீஃ பணியில் ஈடுபாடுகொண்டு பெரும்பாலான நேரத்தை அதற்கு ஒதுக்கி உழைத்தார்கள். அன்னாரின் முயற்சியினால் மஸ்ஜித்கள் உருவானது போல மஸ்ஜித்களில் தீன், தப்லீஃ சேவைகளும் உருவாகின. 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் குடியேற்றங்கள் தோற்றம் பெற்றபோது அக்குடியேற்ற பிரதேசங்கள் பலவற்றில் மஸ்ஜித்கள் அமைய முன்னின்று உழைத்ததோடு அந்த மஸ்ஜித்களில் தஃலீம், மஹல்லஹ் வேலை, மூன்று நாள், நாற்பது நாள், நாலு மாத ஜமாஅத்கள் போதல் பணிகள் உண்டாகவும் உழைத்த பெரும் மனிதர். தொடர்ந்து இந்த தப்லீஃ பணி இக்குடியேற்ற பெண்களிடம் வருவதற்கும் அயராது பாடுபட்டு பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற, பெண்கள் ஜமாஅத்கள் வெளியாக அச்சாணியாக விளங்கிய கர்ம வீரர். இன்னமும் இடம்பெயர்ந்த சகோதரர்கள் என்னைக் காணும்போது என் பாசமிகு தந்தையாரின் இப்பாரிய தன்னலமற்ற சேவையை சிலாகித்துச் சொல்வர்.

என் தந்தையிடம் உலகப் பற்றை நாம் அறவே பார்த்ததில்லை. இறை நேசர்கள் கைக்கொண்ட எளிமையையும் பணிவையும் வாழ்வின் இலட்சணங்களாகக் கொண்டு வாழ்ந்தார்கள். சேமித்து இன்புறவில்லை. கொடுத்து இன்புற்றார்கள். அனுபவித்து ஆனந்தமடையவில்லை. அனுபவிக்கச்செய்து ஆனந்தமடைந்தார்கள்.

எனது அன்புத் தந்தையிடம் நகைச்சுவை இயல்பாக இருந்தது. நண்பர்களுடன் வழமையாகவே தமாஷாகப் பேசுவார்கள். அன்னார் அமர்ந்திருக்கும் அவை களைகட்டும், கலகலப்பாக இருக்கும். அவர்களும் அடுத்தவர்களும் வயிறு குலுங்க சிரித்து மகிழ்வர். பழங்காலத்து கதைகளை ஹாஸ்யம் ததும்ப சொல்வதில் வல்லவர். கேட்பவர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பர்.

வாழ்வதற்குத் தேவையான பல விடயங்களை எனது தகப்பனாரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். கையெழுத்து முதற்கொண்டு எனக்கு முன்மாதிரி அன்னார்தான். அவர்களின் மணி மணியான கையெழுத்தைப் பார்த்துதான் நானும் அழகாக எழுத வேண்டுமென ஆசைகொண்டேன். பதினொன்றாம் வயதுமுதல் விடுதி வாழ்வை ஆரம்பித்த எனக்கு என் தந்தை வீட்டிலிருந்து தன் கைப்பட எழுதி அனுப்பிவைத்த கடிதங்கள் யாவும் நேர்த்தியான, வடிவான கையெழுத்துகொண்டவை. 1980களில் எழுதப்பட்ட இம்மடல்கள் அனைத்தும் இன்னமும் என்னிடம் பாதுகாப்பாக உள்ளன.

என் அன்புத் தந்தையாரிடம் காணப்பட்ட மற்றுமொரு முக்கிய குணாம்சம் ஆலிம்கள், ஹாபில்கள் மற்றும் மத்ரஸஹ் மாணவர்களை நேசித்தல். அன்னாரின் ஜனாஸாவில் கலங்துகொள்ள இரவு நேரத்தையும் பாராது, கடும் மழையையும் பொருட்படுத்தாது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். இவர்களில் அதிகமானோர் ஹாபில்களும் ஆலிம்களுமாவர்.

ஒரு நல்ல, கௌரவமான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, நல்லவராக, கௌரவமானவராக வாழ்ந்து, நல்ல, கௌரவமான வாழ்க்கையை எமக்கு காட்டிச் சென்ற என் அன்புக்கினிய தந்தையார் தனது மரணத்தின் பின்னரான வாழ்விலும் கௌரவமாக வாழ அருளாளன் அல்லாஹ் அருள் புரிவானாக! அன்னாரை அருள் கொண்டு அரவணைப்பானாக! அவர்களின் மண்ணறை வாழ்வை மணமாக்கி, சிறப்பாக்கி, ஒளிமயமாக்கிவைப்பானாக! அவர்களை மன்னித்து அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்தி அதி உயர் சுவர்க்கத்தில் வாழ்வாங்கு வாழவைப்பானாக!

அபூ அவ்வாப் அப்துல் நாஸர்
1439.10.22
2018.07.07


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page