Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

அக்குறணையே!
அக்குறணை உறவுகளே!
ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவே!
உங்களுக்கு பல கோடி நன்றிகள்


குறிஞ்சி நிலத்தில் குளுகுளுவென ரம்மியமாய் வீசும் தென்றல் மேனிகளில் ஜில்லென ஸ்பரிசிக்கும் வரலாற்று தொன்மைமிக்க முஸ்லிம் பிரதேசம் அக்குறணை. எழில் கொஞ்சும் இலங்கைத் தீவின் மலை நாடு தன்னகத்தே அடக்கமாய் அணைத்துக்கொண்டுள்ள மத்திய மாகாணத்தில் கண்கவர் காட்சிகள் நிறைந்துள்ள கண்டி மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டி மாநகரிலிருந்து ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தொலைவில் கண்டி – மாத்தளை பிரதான சாலையில் நடுநாயகமாய் நிலைகொண்டுள்ளது அக்குறணை.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலைப் பாங்கான அக்குறணை இன்றெல்லாம் இலங்கையில் மட்டுமல்ல கடல் தாண்டி உலக நாடுகளில் உலாவருகின்றது அதன் நாமம், உலாவருகின்றனர் அதன் மக்கள். 'திரை கடலோடியும் திரவியம் தேடு' எனும் முதுமொழிக்கு உயிர் கொடுக்கும் வல்லவர்கள் அக்குறணைவாசிகள். வர்த்தக, வாணிப முயற்சிகளில் பட்டிதொட்டி எங்கும் முனைப்போடு ஈடுபடுகின்ற, வளங்களைக் கண்டறிந்து முதலீடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு இறங்குகின்ற அக்குறணை மக்களின் பெயர்கள் அடிபடாத மூலைமுடுக்கு கிடையாது.

நிகரற்ற கருணையாளன் அல்லாஹ் தஆலா அக்குறணை முஸ்லிம்களின் பொருளீட்டல் முனைவுகளுக்கு அள்ள அள்ள வற்றாத தன் கடாட்சத்திலிருந்து அள்ளி அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கின்றான் என்பது நிதர்சனமான உண்மை. அம்மக்கள் தொடுவதில் அல்லாஹ்வின் அருள்மாரி பொழிவதைக் காணலாம். பல ஆண்டுகளாக பல பேர் செய்தும் நட்டத்தையே சந்தித்துவந்த ஒரு வியாபாரத் தலத்தை அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் கையிலெடுப்பார், அதனை இலாபம் கொடுக்கும் தலமாக மாற்றியமைப்பார். ஒரு பக்கம் கருணையாளனின் துணை இதற்கிருக்க அம்மேன்மக்களின் வர்த்தக, வாணிப சூட்சுமம், முகாமைத்துவம், விடாமுயற்சி, இலாபமோ நஷ்டமோ எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலை போன்ற அம்சங்கள் மறு பக்கம் இருக்கின்றன.

பொருளீட்டலில் அவர்கள் தொட்டதை துலங்கச்செய்யும் வல்ல அல்லாஹ்வின் அளப்பரிய கிருபைக்கு நன்றியறிதலின் ஒரு பகுதியாக அவன் பாதையில் மனம் சலிக்காது, முகம் சுளிக்காது வாரி வாரி வழங்கிவருகின்றனர் அக்குறணைவாசிகள். இதனாலோ என்னவோ அக்குறணை என்றால், அக்குறணை மக்கள் என்றால் பொதுவாக மனித உள்ளங்களில் ஒரு பிடிப்பு.

ஷரீஆ துறைகளையும் அரபு மொழியையும் செம்மையாகப் போதித்து கசடறக் கற்ற ஆலிம்களை வெளிக்கொணரவும் புனித வான்மறை அல்-குர்ஆனை அகங்களில் சுமந்த ஹாபில்களை வெளிக்கொணரவுமென மத்திய மலை நாட்டில் பரந்து விரிந்த மட்டத்தில் ஒரு பாரிய இயக்கம் தேவையென கருதிய அக்குறணையிலுள்ள சில நல்லிதயங்களின் நன்முயற்சியின் நற்பயனே நாம் ஏற்றிப் போற்றும் அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்.

1971 முதல் இந்நாள்வரை குறிஞ்சி மண்ணில் குன்றிலிட்ட தீபமாய் சுடர்விட்டு பிரகாசித்தியங்கும் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் பல நூறு ஹாபில்கள், ஆலிம்களை குவலயத்துக்கு கொடுத்துதவியுள்ளது. பொய்யா வானம், தொய்யா மழையாக வருடந்தோறும் ஹாபில்கள், ஆலிம்களை அவனிக்கு அளித்துவருகிறது. அருளாளன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கடாட்சம் ரஹ்மானிய்யாவை எப்போதும் அரவணைத்துக்கொண்டுள்ளது. அவன் அனுக்கிரகம் இல்லையேல் அதன் சிறப்பான தொடர் பணி தொடர்ந்திராது. அல்-ஹம்து லில்லாஹ்.

ரஹ்மானிய்யாவின் தோற்றம், ஏற்றம் யாவற்றுக்கும் அல்லாஹ் தஆலாவின் கிருபைக்கு அடுத்தபடியாக அக்குறணை பெருமக்களின் பேருதவி மறக்க முடியாதது. தமது ஊர் கல்வி நிறுவனத்தை தாமே நடத்த வேண்டுமென்கிற வேணவா மற்றும் வைராக்கியம் நிமித்தம் தமது கஜானாக்களை ரஹ்மானிய்யாவுக்காக அல்லும்பகலும் திறந்துவைத்துள்ளனர். கொடுத்துக் கொடுத்து சிவந்துபோன அவர்களின் கரங்கள் ரஹ்மானிய்யாவுக்காக ஒருபோதும் சுருங்கிக்கொள்வதில்லை.

ரஹ்மானிய்யாவில் அறிவமுதம் அருந்தும் மாணவர்களை தம் சொந்தப் பிள்ளைகள் போல் கருதுவதும், அவர்கள் பட்டம் பெற்று வெளியேறியதன் பின்னரும் அவர்களை தம்மைச் சேர்ந்தவர்களாக பார்ப்பதும், கொண்டாடுவதும் ஈரநெஞ்சம் கொண்ட அக்குறணைச் சகோதரர்களின் போற்றத்தக்க பெருந்தன்மையாகும்.

1984 முதல் 1992 வரை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் அடியேன் கற்றுள்ளேன். நினைக்க இனிக்கின்ற, வாயில் நீர் ஊறுகின்ற ஒரு சுகந்தமான காலமது. தவம் இருந்தாலும் இனிமேல் அப்படியொரு காலம் கிடைக்குமா? சிறந்த கல்விச் சூழல், தரமான முதல்வர், நல்மனம் கொண்ட ஆசான்கள், கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்கள், அன்பான ஊழியர்கள். இந்த வசதிகளை இன்புற அனுபவித்து அறிவுத் தேன் பருக ஏற்பாடுகளை செய்துகொடுத்த பேருள்ளம் படைத்த அக்குறணை சகோதர சகோதரிகளை மறக்க முடியுமா? மறக்க மனம்வருமா? அக்குறணையை என்றும் என் சொந்த ஊர் போலவே என் இதயக் கமலத்தில் அரியாசனம் அமைத்து அமர்த்தியுள்ளேன்.

அக்குறணைக்கும், அதன் மைந்தர்களுக்கும், அதன் கல்வி நந்தவனம் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவுக்கும் நான் நிறைய நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதயம் முழுவதும் நிறைந்து, நிரம்பியுள்ள என் கலப்பற்ற நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.

அகத்தில் குடியிருக்கும் அக்குறணையே! என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உனக்கு. அக்குறணை தொப்புள்கொடி உறவுகளே! என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு. அன்பு ரஹ்மானிய்யாவே! உள்ளம் நிறைந்த நன்றிகள் உனக்கு. ஜஸாக்கும் அல்லாஹ் கைரா!

அக்குறணையே! அக்குறணை இரக்கங்களே! ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவே! கிடைக்க வேண்டிய அத்தனை நலன்களும் உங்களுக்கு கிட்ட வேண்டும். வரக் கூடாத அத்தனை தீங்குகளிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது உங்களில் ஒருவனின் உங்களுக்கான துஆ.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.02.23
2019.10.23


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page