Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

ஆழிப் பேரலை
அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. திகதி 2004.12.26. காலை வேளை. நேரம் 09:00 மணி இருக்கும். நான் வீட்டிலிருக்கிறேன். திடீரென ஒருவர் என்னைக் காண என் வீட்டுக்கு வருகிறார். ஆம். நீண்ட நாட்களின் பின் அவர் என் வீடு வந்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலத்தில் என்னுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தவர். பின்னர் அவருடனான தொடர்பு விடுபட்டுப்போய்விட்டது.

உருவாகும் தொடர்புகள் அனைத்தும் தொடர்வதில்லை. சில தொடர்புகள் சில நாட்களுக்கு நீடிக்கும். சில தொடர்புகள் பல நாட்களுக்கு நீடிக்கும். சில தொடர்புகள் தொய்வின்றி தொடரும். எனது இயங்கு தளங்கள் பல. ஒவ்வோர் இயங்கு தளமும் பரந்து விரிந்தது. அவ்வப்போது பல வகையான தொடர்புகள் ஏற்படுவதுண்டு. உள்ளூரைச் சேர்ந்தவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என பலரும் விதவிதமாக என் தொடர்பில் வருவார்கள். தொடர்புக்கான காரணம் முடிவுற அத்தொடர்பும் முடிவுறும். ஆகவே ஏற்படுகிற எல்லா தொடர்புகளும் தொடர்ந்திருக்கும் என நான் நம்புவதில்லை. இப்படியான உறவுகள் இல்லாதுபோனால் அது பற்றி நான் அலட்டிக்கொள்வதுமில்லை.

வந்த சகோதரரை வரவேற்று, உபசரித்து, சுகம் விசாரித்துக்கொண்டதன் பின் அவர் தொடர்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்தற்கான காரணத்தைச் சொல்கிறார். கவலையும் உணர்ச்சியும் அவர் பேச்சில் தோய்ந்து காணப்பட்டன. தனது சகோதரரின் புதல்வியின் மண வாழ்வு சிதைந்துபோயுள்ளது. அப்பெண்ணின் கணவனே இல்லற வாழ்வைச் சீர்குலைக்கிறார். இதனைப் பள்ளிவாசல் நிர்வாகம் தட்டிக்கேட்க வேண்டும், உலமா சபை தட்டிக்கேட்க வேண்டும். இப்படி அவர் அடுக்கிக்கொண்டு போகிறார். இவ்வேளையில் எனது தொலைபேசி அலறுகிறது. பதில் சொல்கிறேன். கடல் ஊருக்குள் வந்து துவம்சம் செய்துள்ளது எனும் திடுக்கிடும் செய்தி கிடைக்கிறது. ஓர் அழைப்பு முடிய மறு அழைப்பு. அடுத்தடுத்து அழைப்புகள் வருகின்றன. பல ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.

இத்தருணத்தில் வந்துள்ள சகோதரரிடம் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆழிப் பேரலை, அது உண்டுபண்ணியுள்ள பேரழிவு பற்றிய தகவலைச் சொல்கிறேன். அவருக்கோ இந்தப் பேரழிவுத் தகவலைவிட அவரது சகோதரரின் மகளின் மண வாழ்வுப் பாதிப்பு அந்த சமயத்தில் பெரிதாக இருந்திருக்க வேண்டும். இப்படி பெண்களைச் சீரழிப்பவன்கள் இருந்தால் இதுவும் வரும், இதற்கப்பாலும் வரும் என்கிறார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. தமக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எண்ணுபவர்கள் இப்படி நடந்துகொள்வது ஒன்றும் ஆச்சரியமல்ல. அவருக்கு வழங்க வேண்டிய வழிகாட்டல்களை அப்போதே வழங்குகிறேன். அவரும் திருப்தியாக புறப்படுகிறார்.

இப்போது வானொலியைத் திறக்கிறேன். ஆழிப் பேரலை செய்திதான் சகல சேவைகளிலும். என்னைப் பொறுத்த மட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக நின்று யோசித்தாக வேண்டிய, செயல்பட வேண்டிய பொறுப்பிமிகு தருணம். தலைவர் முப்தி ரிஸ்வியோ நாட்டில் இல்லை. முதல் காரியமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தோடு தொடர்பை ஏற்படுத்துகிறேன். மார்க்க ரீதியான வழிகாட்டலை உடனடியாக தொலைபேசி வழியாக வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு நல்க வானொலி நிருவாகம் இணங்குகிறது. நான் வீட்டிலிருந்தவாறே வானொலி மூலம் அந்த வேலையைச் செய்கிறேன். இஸ்திஃபார், தவ்பஹ், துஆ, குனூத், பாதிக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளுக்கு தாராளமாக உதவுதல் போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறேன்.

ஆழிப் பேரலை, அது ஏற்படக் காரணம், அது ஏற்படுத்தியுள்ள பாரிய உயிர், உடைமைச் சேதங்கள், அழிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் குறித்த தகவல்களை அறிவதிலும், பாதிப்புக்குள்ளானோரைத் தேற்றுவதிலும், ஆழிப் பேரலை மற்றும் அதன் தாக்கங்களைப் பற்றி ஆத்மீக மற்றும் லௌகீக பரிமாணங்கள் கொண்டு சிந்திப்பதிலுமே அன்றைய நாள் முழுதும் பெரும்பாலும் கழிகிறது.

இதற்கிடையில் அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் இன்னும் சில நில அதிர்வுகள் நிகழலாம். அதன் காரணமாக மீண்டும் பாரிய ஆழிப் பேரலை ஏற்படலாம். ஆகையால் கடலோரப் பிரதேசங்களில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கத்தின் அறிவித்தல் ஊடகங்கள் வாயிலாக அன்றைய தினம் மாலைமுதல் வந்தவண்ணம் இருக்கிறது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மஸ்ஜித்களும் ஒலிபெருக்கி மூலம் இந்த ஆபத்து குறித்து மக்களுக்கு அறிவிக்கின்றன. மக்கள் தம்மிடமுள்ள காணி உறுதிகள், முக்கிய ஆவணங்கள், நகைநட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டே பாதுகாப்பான இடங்களில் போய் தங்கியிருக்குமாறு வேண்டிக்கொள்கின்றன. இதனால் மனித மனங்களில் பீதி அதிகரிக்கிறது.

மேற்படி அபாய அறிவித்தலை அடுத்து கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர். அன்றிரவு அச்சத்துடன் கழிகிறது.

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோற்றுவித்த பொல்லாத ஆழிப் பேரலை 2004.12.26 ஞாயிறு அன்று முழு உலகையும் ஓர் உலுக்கு உலுக்குகிறது. எல்லோர் வாயிலும் இதுதான் பேச்சு.

இது 2004.12.26 ஞாயிற்றுக்கிழமை. அடுத்தடுத்த தினங்களில் நடந்தவை குறித்து இன் ஷா அல்லாஹ் எனது அடுத்த பதிவுகளில் எதிர்பார்க்கலாம்.

ஆழிப் பேரலை நடந்து பதினைந்து ஆண்டு நிறைவு நாள் இன்று இந்தப் பழைய புண்களின் அழியாத வடுக்களை தடவிப் பார்க்கிறேன்.


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.04.28
2019.12.26


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page