Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பணிப்பாளர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பணிப்பாளர், அப்துல் மஜீத் அக்கடமி


இந்து சமுத்திரத்தின் நித்திலம் இலங்கைத் தீவில் பன்னெடுங் காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்துவந்துள்ளனர். ஏறத்தாழ பதினான்கு நூற்றாண்டு கால நீண்ட நெடிய வரலாறு இவ்வழகிய நாட்டில் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் உண்டு.

இலங்கையில் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டுதொட்டு இற்றைவரை இடையறாமல் தொடரும் சரித்திரத்தின் சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஷாபிஈ மத்ஹபைத் தழுவி வாழ்வியலின் செயல் சார்ந்த விவகாரங்களை இலங்கை முஸ்லிம்கள் அமைத்துக்கொண்டுள்ளனர். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களுக்கு பக்தாத் மாநகருடன் தொடர்பு இருந்தது. அவ்வேளை ஷாபிஈ மத்ஹப் பக்தாதில் பரவலாகப் பின்பற்றப்பட்டுவந்தது. 1800இன் ஆரம்பப் பகுதியில் இலங்கையின் தலைமை நீதிபதியாகவிருந்த ஸேர் அலெக்ஸென்டர் ஜோன்ஸ்டன் அவர்களின் கடிதமொன்றில் காணப்படும் குறிப்பொன்று பின்வருமாறு அமைகிறது:

“அவர்களின் (இலங்கை முஸ்லிம்களின்) விவாக மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் பக்தாத் கலீபாவுக்குக் கீழிருந்த அரேபியரிடையே இருந்த விவாக மற்றும் வாரிசுரிமைச் சட்டங்களின் சிறிய மாற்றமாகும். அவர்களின் மூதாதையர்களோ அரேபியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள்.”

1200 வருடங்கள் செயல், தீர்ப்பு, நீதி, கல்வி உள்ளிட்ட சகல விவகாரங்களிலும் ஷாபிஈ மத்ஹப் படியே முஸ்லிம்கள் இந்நாட்டில் செயல்பட்டுவந்துள்ளனர், செயல்பட்டுவருகின்றனர். ஷாபிஈ மத்ஹபைத் தழுவி இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக ஷாபிஈ மத்ஹபைப் படித்துக்கொடுப்பது தொன்றுதொட்டு அமலில் இருந்துவந்துள்ளது. இங்கே காணப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் ஷரீஅஹ் அரபுக் கல்லூரிகளும் ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலேயே கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகின்றன.

1700இன் ஆரம்பப் பகுதியில் இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து சில முஸ்லிம்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். தமது தாய் நாட்டிலே ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவர்களாகவிருந்த ஜாவா முஸ்லிம்களுக்கு ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றி வாழும் இலங்கை முஸ்லிம்களுடன் சகல விடயங்களிலும் வித்தியாசமின்றி வாழ்வது இலகுவாக அமைந்தது. ஜாவா முஸ்லிம்கள் இங்கே குர்ஆன் மத்ரஸாக்களை இயக்கினர். சிறுவர், சிறுமிகளுக்கான இந்த குர்ஆன் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதலுக்கு மேலதிமாக சன்மார்க்கத்தின் அடிப்படை விடயங்களும் போதிக்கப்பட்டன. இரு நாட்டவர்களும் பின்பற்றி ஒழுகும் மத்ஹப் ஒன்றாக இருந்ததால் இலங்கைச் சிறுவர்கள் ஜாவா முஸ்லிம்களின் குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி கற்பது சுலபமாகவிருந்தது.

ஸேர் அலெக்ஸென்டர் ஜோன்ஸ்டன் தனது கடிதத்தில் ‘அவர்கள் (இலங்கை முஸ்லிம்கள்) ஷாபிஈ பிரிவைச் சேர்ந்தவர்கள்’ என கூறுகிறார்:

இலங்கை முஸ்லிமின் மத்ஹப் எனும் நூலில் அதன் ஆசிரியர் அல்-ஆலிம் எம்.ஐ. அப்துஸ் ஸமத் மக்தூமி ஹழ்ரத் இலங்கையில் இஸ்லாத்தின் ஆரம்பம்முதல் தற்காலம்வரை அனைத்து விவகாரங்களிலும் ஷாபிஈ மத்ஹபே நடைமுறையில் இருந்துவந்துள்ளது என கூறுகிறார்.

இலங்கையில் அமலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டமும்கூட ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டது. வக்ப் சட்டம், முஸ்லிம் விருப்பாவனமில்லா பின்னுரிமைச் சட்டம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் என மூன்று பிரத்தியேக சட்டங்கள் முஸ்லிம்களுக்கென இந்நாட்டில் உள்ளன.

காலனித்துவத்துக்கு முந்திய காலத்து முஸ்லிம்கள் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றி ஒழுகிவந்ததை அவதானித்த ஒல்லாந்தர் அதற்குரிய முறையான அங்கீகாரத்தை வழங்கினர். 1765 முதல் 1785 வரை ஒல்லாந்த ஆளுநராகவிருந்த இமன் விலம் பெல்;க் என்பவரின் காலத்தில் விசேட முஸ்லிம் சட்டம் இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் முஸ்லிம்களின் விசேட சட்டங்களாக தொடரப்பட்டது. தொடர்ந்து வந்த சட்டங்கள் யாவும் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டே அமைந்தன. இத்தொடரில் 1951இல் முறையாக தொகுக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமும்கூட ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலேயே நடந்தேறியது.

நம் நாட்டில் நீதித் துறையில் விசேட ஏற்பாடாகக் கருதப்படும் காதி நீதிமன்றங்கள் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலேயே அமல்படுத்திவருகின்றன. இலங்கையில் ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவோர் சுமார் ஒரு வீதம் உள்ளனர். அவர்களின் வழக்குகள் வரும்போது ஹனபி மத்ஹபின் அடிப்படையில் தீர்த்துவைக்கப்படுகின்றது. பொதுவாக வழக்காளிகள் ஹனபிகள் என நீதிமன்றத்தில் தெளிவாக சொல்லப்படாதவிடத்து அவர்கள் ஷாபிஈகளாகவே கொள்ளப்படுகின்றனர்.

14 புதிய சட்ட அறிக்கைகள் 295 அபிபுதீன் எதிர் பெரியதம்பி வழக்கின் தீர்ப்பில் பின்வருமாறு காணப்படுகின்றது:

“ஷாபிஈ கோட்பாடு இலங்கையில் பிரயோகிக்கப்படுவதுபோல் முஹம்மதிய சட்டத்துக்கு பொதுவாக ஏற்புடைத்தானதாகும்.”

79 புதிய சட்ட அறிக்கைகள் 209 உம்முல் மர்ஸ_னா எதிர்; சமத் வழக்கின் தீர்ப்பில் பின்வருமாறு காணப்படுகின்றது:

“மாற்றத்துக்கு சான்று இல்லாதபோது வழக்காளிகள் ஷாபிஈ பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கொள்ளப்படும்.”

இலங்கையில் இருநூறுக்கும் மேற்பட்ட ஷரீஅஹ் அரபுக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. 1870 முதல் ஆரம்பமாகும் இலங்கை அரபுக் கல்லூரிகளின் வரலாறு ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலேயே துவங்குகின்றது. ஒரு சில மத்ரஸாக்கள் நீங்கலாக எல்லா மத்ரஸாக்களும் தமது பாடத்திட்டங்களில் ஷாபிஈ மத்ஹபின் பிக்ஹ் நூற்களை புகுத்தியுள்ளன.

அரபுக் கல்லூரிகளில் பிக்ஹ் பாடத்தில் இடம்பெற்றுள்ள நூல்களான ஸபீனத் அல்-நஜா, அத்தக்ரீப், உம்தத் அல்-ஸாலிக், பத்ஹ் அல்-முஈன், ஷர்ஹ் அல்-மஹல்லீ போன்ற நூல்கள் ஷாபிஈ மத்ஹப் நூல்களாகும்.

மத்ரஸாக்களின் பாடவிதானத்துக்கு வெளியிலான செயல்பாடுகளும் ஷாபிஈ மத்ஹபைத் தழுவி அமைந்துள்ளமை கண்கூடு.

1924இல் ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் இயங்க வேண்டுமென அத்திவாரமிடப்பட்டதாகும். காலி அல்-பஹ்ஜத் அல்-இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரியில் வைத்து ஷாபிஈ உலமா பெருந்தகைகள் இவ்வமைப்பை 1924இல் அமைத்தனர். இலங்கை முஸ்லிமின் மத்ஹப் எனும் நூலில் அல்-ஆலிம் எம்.ஐ. அப்துஸ் ஸமத் மக்தூமி ஹழ்ரத் பின்வறுமாறு கூறுகிறார்:

“காலி (இலங்கை) ‘பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாஹ்’ அரபிக் கல்லூரியில் ஹிஜ்ரீ 1344–ல் (கி.பி. 1924) ‘ஜம்இய்யதுல் உலமாஃ’ என்ற இயக்கத்தை ஷாபிஈய்யா உலமாக்கள் அமைத்தனர்.”

இலங்கைக்கு சமீபமாக உள்ள தென் இந்தியாவின் பிரதான மாநிலமான கேரளாவில் பல நூற்றாண்டுகளாக பரவலாக பின்பற்றப்படுவது ஷாபிஈ மத்ஹபாகும். இலங்கை முஸ்லிம்களுக்கும் கேரளா முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானதாகும். வர்த்தக நிமித்தம் அடிக்கடி இலங்கைக்கு வந்து போபவர்களாகவிருந்த கேரளா முஸ்லிம்களுக்கு இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் ஷாபிஈ மத்ஹபின்படி காரியமாற்றுவது கஷ்டமாக இருக்கவில்லை. காரணம் இலங்கையில் அவர்கள் செல்லுமிடமல்லாம் ஷாபிஈ மத்ஹப் அமலில் இருந்தமையாகும்.

1890களில் கண்டி நகர் பற்றி எகிப்தின் சுதந்திர போராட்ட வீரர் அராபி பாஷா இவ்வாறு கூறுகிறார்.

“இந்த நகரில் இருபதாயிரம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் பத்தாயிரம் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் இமாம் ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹ் அவர்களின் மத்ஹபில் உள்ளனர்.” (மஹ்மூத் அல்-கபீப், அஹ்மத் அராபி அல்-ஸஈம் அல்-முப்தரா அலைஹ்)

இலங்கையில் இஸ்லாமுக்கு என்ன வயதோ ஏறத்தாழ அதே வயது இலங்கையில் ஷாபிஈ மத்ஹபுக்குமாகும்.

இந்நாட்டில் நீடு வாழ்ந்த சரித்திர பெருமைமிகு ஷாபிஈ மத்ஹப் தொடர்ந்தும் இம்மண்ணில் உயிர்ப்புடன் வாழ வேண்டும். அதனை உறுதிசெய்வது சகல முஸ்லிம்களினதும் கடமையாகும்.

1438.04.11
2017.01.11


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page