Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

ஷூரா இன்றியமையாதது


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்


ஷூரா - பத விளக்கம்

அறிந்துகொள்ளல், வெளியிலெடுத்தல் எனும் அர்த்தம் தாங்கிய ‘ஷவ்ர்’ எனும் அரபுச் சொல்லிலிருந்து பிறந்த பதமாக ‘ஷூரா’ என்ற பதம் மொழியியலாளர்களினால் காணப்படுகிறது. ஷவ்ர் எனும் மூலச் சொல் (மஸ்தர்), அதிலிருந்து பிறக்கின்ற பதங்கள் (முஷ்தக்காத்) பெரும்பாலும் வாகனத்தை ஓட்டிப் பார்த்து அதனை அறிந்துகொள்வதை குறிக்கவும், தேனை வெளியிலெடுத்தலைக் குறிக்கவும் விசேடமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரபு அகராதிகள் தெரிவிக்கின்றன.

வாகனத்தை ஓட்டிப் பார்த்து அதன் தன்மையை, நிலையை, ஓட்டத்தை அறிந்துகொள்வது போல ஞானம், அனுபவம், முதிர்ச்சியுள்ளவர்கள் குறித்த ஒரு விவகாரம் பற்றி தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்து அதன் தன்மையை, நிலையை அறிந்துகொள்வதை சுட்ட ‘ஷூரா’ எனும் சொல் தோன்றியிருக்கின்றது.

அப்படி இல்லையெனில் தேனீக்கள் பறந்து பயணம்செய்து மலர்களில் அமர்ந்து சொட்டு சொட்டாக தேன் சேகரித்து பின்னர் சென்ற வழியே திரும்பி வந்து திரட்டிய தேனை கூடுகளில் வைத்து இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்ட தேனை மனிதன் வெளியிலெடுப்பது போல அறிவு, அனுபவம், முதிர்ச்சியுள்ளவர்களை நாடி, தேடி, அவர்களுடன் அமர்ந்து, பேசி சேகரிக்கப்பட்ட கருத்துக்கள் பலவற்iறை ஓரிடத்தில் குவித்து பகுப்பாய்வுசெய்து அதிலிருந்து மிக நல்ல, சிறந்த ஒன்றை இறுதியாக வெளிக்கொணர்வதை சுட்ட ‘ஷூரா’ என்ற சொல் உருவாகியிருக்கின்றது.

பூந்தேனின் இறுதிக் கட்டம் சுத்தமான தேனென்றால் அறிவு, அனுபவம், முதிர்ச்சியுள்ளவர்களின் கருத்துக்களின் இறுதிக் கட்டம் சுத்தமான முடிவொன்றாகும்.

இது ஷூராவின் சொல் அர்த்தமும் விளக்கமுமாகும்.

குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக மிகச் சரியான, சீரிய, தீர்க்கமான இறுதி முடிவொன்றை எய்தும் பொருட்டு ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுசேர்ந்து அவரவர் தனது கருத்தை முன்வைப்பதுடன், அடுத்தவர் முன்வைக்கின்ற கருத்தை அறிந்துகொள்வதும் பின்னர் இவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை குழுமியிருக்கும் எல்லோருமாக சேர்ந்து பகுப்பாய்வுசெய்வதும் என ஷூராவுக்கு பரிபாஷையில் பொருள் சொல்லப்படுகின்றது.

ஷூராவின் பரிபாஷை அர்த்தத்தை அதன் வரைவிலக்கணமாகவும் அறிஞர்கள் கொள்கின்றனர்.

சுருக்கமாக கலந்தாலோசித்தல் என ஷூராவை தமிழில் பெயர்க்கலாம்.


அல்-குர்ஆனில் ஷூரா


புனித அல்-குர்ஆன் ஷூராவை வலியுறுத்திப் பேசியுள்ளது. பின்வருமாறு வல்ல அல்லாஹ் அருளுகின்றான்:

‘அல்லாஹ்விடமிருந்துள்ள கருணையைக் கொண்டே நீர் அவர்களுக்கு மென்மையாக இருந்தீர். கடுமையானவராக, இதயம் கடினமானவராக நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மிடமிருந்து பிரிந்து சென்றிருப்பர். ஆகவே அவர்களை மன்னித்து, அவர்களுக்காக மன்னிப்புக் கோரி, காரியத்தில் அவர்களுடன் ஆலோசனைசெய்வீராக! நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்விடம் பாரம்சாட்டுவீராக! திண்ணமாக அல்லாஹ் பாரம்சாட்டுவோரை நேசிக்கிறான்.’ (03 : 159)

தன் தோழர்களுடன் ஆலோசனைசெய்யுமாறு ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அல்லாஹ் தஆலா இந்த வசனத்தில் பணிக்கின்றான். நபியவர்களோ மனிதர்களிலெல்லாம் அதி கூடிய புத்திக் கூர்மை, மதி நுட்பம், விவேகம், தீட்சண்யம், சாதுரியம், அறிவு, நுண்ணறிவு, விளக்கம், புலமையுள்ளவர்களாக இருந்ததோடு வஹ்யின் வெளிச்சத்தில், நேரடி இறைத் தொடர்போடு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கே இந்தக் கட்டளை என்றால் ஏனையோருக்கு சொல்லவும் வேண்டுமா?

ரஸூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடுத்தவர்களின் ஆலோசனையில் தங்கியிருக்க அறவே தேவையில்லை. இதுவே சர்வ உண்மை. ஆலோசித்தலின் சிறப்பை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவும் தன்னைப் பின்பற்றி கலந்து பேசும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் தனது தோழர்களிடம் கலந்தாலோசிப்பதால் அவர்கள் சாந்தமடைவதுடன் அவர்களின் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்பதற்காகவுமே இறைத் தூதருக்கு இப்படி ஏவப்பட்டது என இமாம்களின் கருத்து உள்ளது.

‘அவர்களது (சஹாபிகளது) கருத்தின்பால் அவர்களுக்கு தேவையென்று அல்லாஹ் தன் நபியை ஆலோசனைசெய்யுமாறு பணிக்கவில்லை. ஆலோசிப்பதிலுள்ள சிறப்பை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அவர்களின் பின் அவர்களது சமூகத்தினர் அவர்களைப் பின்பற்றவும்தான் அல்லாஹ் விரும்பினான்’ என இமாம்களான அல்-ஹஸன் அல்-பஸ்ரி, அல்-ழஹ்ஹாக் (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் செப்பினர். (தஃப்ஸீர் அல்-குர்துபி)

‘அவன் (அல்லாஹ்) அவர்களை (நபியவர்களை) அதனை (கலந்தாலோசித்தலை)க் கொண்டு ஏவியதெல்லாம் அவர்களை (சஹாபிகளை) சாந்தப்படுத்துவதற்காகவும் அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துவதற்காகவும்தான்’ என இமாம்களான கதாதா, அல்-ரபீஃ இப்ன் அனஸ், முஹம்மத் இப்ன் இஸ்ஹாக் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் நவின்றுள்ளதாக அல்-ஜஸ்ஸாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இயம்புகிறார்கள். (அஹ்காம் அல்-குர்ஆன்)

மேற்படி ஆயத்தில் அவர்கள் என சுட்டப்படுவது உஹுத் போரில் புறமுதுகிட்ட சஹாபிகள் என்று அல்-குர்ஆன் வியாக்கியானிகள் கூறுகின்றனர். யுத்த களத்தில் புறமுதுகுகாட்டுவது குற்றமாகும். வேண்டுமென்றல்லாது தவறுதலாக நடைபெற்ற ஒரு குற்றத்திற்காக தனது தோழர்களில் அப்படிச் செய்தவர்களை மன்னிக்குமாறும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருமாறும் அவர்களுடன் ஆலோசிக்குமாறும் அல்லாஹ் தஆலா தன் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஏவுவதானது உண்மையில் ஆச்சரியமளிக்கின்றது. அதாவது தவறிழைத்தவர்களுடனும் ஆலோசனைசெய்யுமாறு இறை கட்டளை அமைகின்றது. அப்படியாயின் ஏனையவர்களுடன் எத்துணை எத்துணை அவசியம்.

மற்றுமொரு இறை வசனம் இவ்வாறு அமைந்துள்ளது:

“மேலும் அவர்கள் எத்தகையோரென்றால் தம் ரப்புக்கு விடையளித்து, தொழுகையையும் நிலை நிறுத்தியவர்கள். இவர்களின் காரியமோ தங்களுக்குள் கலந்தாலோசித்தலாக இருக்கும். நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து அவர்கள் செலவுசெய்கின்றனர்.” (42 : 38)

ரப்புக்கு விடையளித்தல், தொழுகையை நிலைநிறுத்துதல், சதக்கா செய்தல் ஆகிய உன்னத பண்புகளுடன் இணைத்து ஷூராவை வல்லவன் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் பிரஸ்தாபித்துள்ளான். இதன் மூலம் கலந்தாலோசித்தலின் அவசியம் பலிச்சிடுகின்றது.

குழந்தைக்கு பாலூட்டுவதை இரண்டு ஆண்டுகள் நிறைவடையுமுன் நிறுத்திக்கொள்ள விரும்பும் பட்சத்தில் பெற்றோர் கலந்து பேசி முடிவுக்கு வர வேண்டுமென வழிகாட்டுகிறது திவ்விய திரு மறை அல்-குர்ஆன்.

‘அவ்விருவரும் (தாய், தகப்பன்) பரஸ்பரம் பொருந்தி, கலந்தாலோசித்து பால் குடிப்பதை நிறுத்த அவ்விருவரும் விரும்பினால் அவ்விருவர் மீதும் பாவமில்லை.’ (02 : 233)

நபி ஸுலைமான் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பில்கீஸ் தனது முக்கியஸ்தர்களை அழைத்து கலந்தாலோசித்ததை அருள் மறை அல்-குர்ஆன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளது:

‘பிரதானிகளே! என்னுடைய விடயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்! நீங்கள் என்னிடம் சமுகமளிக்கும் வரை நான் ஒரு விடயத்தை முடிவுசெய்பவளாக இருக்கவில்லை என அவள் (பில்கீஸ்) கூறினாள்.’ (27 : 32)

இந்த திரு வசனத்துக்கு விரிவுரை எழுதும் பேரறிஞர் அல்-குர்துபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘ஆலோசனைசெய்தல் பண்டைய விவகாரத்தைச் சேர்ந்ததாகும். குறிப்பாக போர் விடயமாக’ என்கிறார்கள். (தஃப்ஸீர் அல்-குர்துபி)

சூரியனை வணங்கிக்கொண்டிருந்த ஓர் அரசி எந்த ஒரு விடயத்திலும் தனது பிரதானிகளுடன் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் என்பது உண்மையில் கவனிக்க வேண்டிய, அதிலிருந்து படிப்பினை பெற வேண்டியதொன்றாகும்.

இவ்வாறு தெய்வீக மறை கலந்தாலோசித்தல் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்து பேசிக்கொண்டிருக்கின்றது. அருள் வேதத்தின் 42ஆம் அத்தியாயம் ‘அல்-ஷூரா’ எனும் நாமம் தாங்கி அமைந்திருப்பது உண்மையில் இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டுகிறது.


அல்-ஸுன்னாவில் ஷூரா

திவ்விய திருமறையின் வலியுறுத்தலுக்கு இசைவாக, வழிகாட்டலுக்கு அமைவாக அருமை ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆலோசிக்கும் உன்னத பண்பை ஊன்றி கடைப்பிடித்தார்கள். ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களின் பின்வரும் கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது:

“அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைவிட தன் தோழர்களிடம் அதிகம் ஆலோசனைசெய்பவராகவிருந்த ஒருவரை நான் அடியோடு காணவில்லை.” (முஸ்னத் அஹ்மத்)

சொந்த விவகாரம், பொது விவகாரம், குடும்ப விவகாரம், சமூக விவகாரம், கல்வி விவகாரம், அரசியல் விவகாரம், போர் விவகாரம் என அன்றாட வாழ்வில் பலதும் பத்தும் இரண்டறக் கலந்திருந்த மாசுமறுவற்ற மாநபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவற்றின்போது தேவைக்கேற்ப உரியவர்களிடம் உரிய முறையில் ஆலோசிப்பவர்களாக, கலந்தாலோசிப்பவர்களாக இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.

கற்புக்கரசி ஹழ்ரத் ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கண்ணியமிகு நபித் தோழர் ஹழ்ரத் சஃப்வான் இப்ன் அல்-முஅத்தல் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களுடன் இணைத்து பேசப்பட்ட வதந்தி சமூகத் தளத்தில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் பெரும் பாதிப்பை உண்டுபண்ணியிருந்த வேளை சில தோழர்களுடன் நபியவர்கள் ஆலோசனைசெய்தார்கள். இந்த நிகழ்வு பற்றி அன்னை ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் விலாவாரியாக தகவல் தரும் நீண்ட அறிவிப்பின் ஒரு கட்டத்தில் கீழ்வருமாறு காணப்படுகின்றது:

“அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தான் வஹ்ய் தாமதமாகக் கண்டபோது அலி இப்ன் அபீ தாலிபையும் மற்றும் உஸாமத் இப்ன் ஸைதையும் அவ்விருவரிடமும் வினவ, தனது மனைவியைப் பிரிவது குறித்து அவ்விருவரிடமும் ஆலோசிக்க அழைத்தார்கள்.” (சஹீஹ் அல்-புகாரி)

ஐவேளைத் தொழுகைகளுக்கு நேரத்தை அறிவித்து அழைப்பதற்கு என்ன வழி உண்டென தன் அன்புக்கினிய தோழர்களிடம் ஹழ்ரத் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கலந்தாலோசித்தார்கள்.

“முஸ்லிம்கள் மதீனாவுக்கு வந்தபொழுது அவர்கள் ஒன்றுசேர்ந்து தொழுகையை நேரம் மதிப்பவர்களாகவிருந்தனர். அதற்கு அழைக்கப்படுவது இருக்கவில்லை. அது தொடர்பில் ஒரு நாள் அவர்கள் பேசிக்கொண்டனர். ‘கிறிஸ்தவர்களின் மணி போன்ற ஒரு மணியை எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்றனர் அவர்களில் சிலர். ‘இல்லை. யூதர்களின் கொம்பு போன்ற ஓர் எக்காளத்தை (எடுத்துக்கொள்ளுங்கள்!)’ என்றனர் அவர்களில் சிலர். ‘தொழுகைக்கு அழைப்பு விடுக்கக்கூடிய ஒரு மனிதரை நீங்கள் அனுப்ப மாட்டீர்களா?’ என்றார்கள் உமர். ‘பிலாலே! நீர் எழுந்து, தொழுகைக்கு அழைப்பு விடுப்பீராக!’ என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : சஹீஹ் அல்-புகாரி)

யுத்தங்களின்போது தன் தோழர்களிடம் விரிவாக கலந்தாலோசித்தார்கள் அன்பு ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். அன்னாரின் யுத்தங்கள் பற்றிய விபரங்களைத் தந்துதவும் கிரந்தங்களில் இந்த விடயம் பரவலாக பதியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு சில.

பத்ர் போரின்பொழுது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்த ஆலோசனையை இமாம் இப்ன் கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு பதிந்துள்ளார்கள்:

“குறைஷிகள் மேலும் அவர்களின் வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் வருகின்றமை பற்றி அவர்களுக்கு (அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)க்கு) தகவல் வந்தது. ஆகவே அவர்கள் மக்களிடம் ஆலோசித்தார்கள். மேலும் அவர்களுக்கு குறைஷிகளைப் பற்றி அறிவித்தார்கள்.” (அல்-பிதாயஹ் வல்-நிஹாயஹ் - பாகம் : 03)

உஹுத் யுத்த சமயத்தில் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கலந்தாலோசித்ததை இமாம் அல்-தபரி (ரஹிமஹுல்லாஹ்) கீழ்வருமாறு தருகிறார்கள்:

“‘திண்ணமாக நாம் ஒரு பாதுகாப்பான கேடயத்தில் இருக்கின்றோம். அதனைக் (பாதுகாப்பான கேடயத்தைக்)கொண்டு அவர்கள் மதீனாவை நாடுகிறார்கள். ஆகவே கூட்டத்தை (குறைஷிகளை) நம்மிடம் வரவிடுங்கள்! நாம் அவர்களுடன் யுத்தம் புரிவோம்’ என அல்லாஹ்வின் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தோழர்களிடம் சொன்னார்கள். ‘அல்லாஹ்வின் நபியே! மதீனாவின் பாதைகளில் நாம் கொல்லப்படுவதை நிச்சயமாக நாம் வெறுக்கிறோம். ஜாஹிலிய்யாவில் சமரின்போது நாம் பாதுகாப்பாக இருப்பவர்களாகவிருந்தோம். ஆதலால் அதில் நாம் பாதுகாப்பாகவிருப்பதற்கு இஸ்லாத்தில் மிக உரிமையுள்ளவர்கள். எனவே கூட்டத்தை நோக்கி எம்முடன் நீங்கள் வெளிவாருங்கள்!’ என்று அன்சாரிகளைச் சேர்ந்த அன்னாரின் தோழர்களில் சில மனிதர்கள் செப்பினர்.” (தஃப்ஸீர் அல்-தபரி - பாகம் : 04)

அகழ் சமர் சமயத்தில் அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கலந்தாலோசித்ததை இமாம் அல்-குர்துபி (ரஹிமஹுல்லாஹ்) கீழ்வருமாறு பதிந்துள்ளார்கள்:

“அவர்கள் (எதிரிகள்) ஒன்றுசேர்ந்து, வெளியாகி இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேள்விப்பட்டபோது தனது தோழர்களிடம் ஆலோசித்தார்கள். அகழி தோண்டுமாறு அன்னாருக்கு ஸல்மான் ஆலோசனை சொன்னார்கள். அவர்களின் கருத்தை அன்னார் பொருந்திக்கொண்டார்கள்.” (தஃப்ஸீர் அல்-குர்துபி - பாகம் : 14)

இவ்வாறு ஏராளமான நிகழ்வுகள் தாராளமாக வரலாற்றுப் பக்கங்களை அலங்கரித்து நிற்கின்றன.

அன்புக்குரிய நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆலோசித்தலுக்கும் கலந்தாலோசித்தலுக்கும் நடைமுறையில் முன்மாதிரியாக திகழ்ந்துகொண்டே அது தொடர்பில் ஆர்வமூட்டி வலியுறுத்தினார்கள்.

“இஸ்திகாரஹ் செய்தவர் தோல்வியடைந்ததில்லை. மேலும் ஆலோசித்தவர் கைசேதப்பட்டதில்;லை. மேலும் செலவுசெய்வதில் நடு நிலை பேணியவர் ஏழையானதில்லை.” (அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)

“உங்கள் தலைவர்கள் உங்களில் சிறந்தவர்களாகவும், உங்கள் செல்வந்தர்கள் உங்களில் கொடையாளிகளாகவும், உங்கள் விவகாரங்கள் உங்களுக்கிடையில் கலந்தாலோசித்தலாகவும் இருந்தால் பூமியின் மேல் பகுதி அதன் உள் பகுதியைவிட உங்களுக்கு சிறந்தது. உங்கள் தலைவர்கள் உங்களில் தீயவர்களாகவும், உங்கள் செல்வந்தர்கள் உங்களில் கருமிகளாகவும், உங்கள் விவகாரங்கள் உங்களின் பெண்களுக்கும் இருந்தால் பூமியின் உள் பகுதி அதன் மேல் பகுதியைவிட உங்களுக்கு சிறந்தது.” (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அல்-திர்மிதி)


சான்றோரிடம் ஷூரா

அல்-குர்ஆன், அல்-ஸுன்னாவின் போதனைகளுக்கேற்ப ஷூராவை பெரிதும் மதித்து அதனைத் தவறாது கடைப்பிடித்துவந்தனர் நமது சான்றோர்.

இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

“நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் இமாம்கள் அறிஞர்களில் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆகுமாக்கப்பட்ட விடயங்களில் அவற்றில் மிக இலகுவானதை எடுத்துக்கொள்வதற்காக ஆலோசனை கேட்பவர்களாகவிருந்தனர்.” (சஹீஹ் அல்-புகாரி)

இமாம் அஷ்ஹப் (ரஹிமஹுல்லாஹ்) பகன்றார்கள்:

“நிச்சயமாக அவர் (உஸ்மான்) அமர்ந்தால் சஹாபிகளில் நால்வரை சமுகமளிக்கச்செய்து பின்னர் அவர்களுடன் ஆலோசிப்பார்கள். தான் அபிப்பிராயப்பட்டதை அவர்கள் அபிப்பிராயப்பட்டால் அன்னார் அதனை நிறைவேற்றுவார்கள்.” (ஹாஷியத் அல்-துஸூகீ)

ஆலோசனைசெய்தல், கலந்தாலோசனைசெய்தல், அவற்றின் சிறப்பு, நன்மைகள், பயன்கள், அவசியம் பற்றி நன்னெறி தவறா நமது முன்னோர்கள் பேசத் தவறவில்லை. சான்றோர்களின் இத்தகைய பொன்மொழிகளிலிருந்து சில:

நல்வழி நடந்த கலீஃபா உமர் இப்ன் அப்த் அல்-அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) செப்பினார்கள்:

“நிச்சயமாக ஆலோசனையும் விவாதமும் அருளின் வாயில்கள், பரக்கத்தின் திறப்புகள். அவ்விரண்டுடன் கருத்து வழிதவறுவதில்லை. மேலும் அவ்விரண்டுடன் உறுதி இழக்கப்படுவதில்லை.” (அதப் அல்-துன்யா வல்-தீன்)

இமாம் இப்ன் அதிய்யஹ் (ரஹிமஹுல்லாஹ்) நவின்றார்கள்:

“ஷூரா ஷரீஅத்தின் விதிகள் மேலும் சட்டங்களில் உறுதியானவைகளில் நின்றுமுள்ளது. எவர் அறிவு, மார்க்கமுள்ளவர்களிடம் ஆலோசிப்பதில்லையோ அவரை நீக்குவது கட்டாயம். இது எதில் கருத்து வேறுபாடு இல்லையோ அத்தகைய ஒன்றாகும்.” (தஃப்ஸீர் அல்-குர்துபி - பாகம் : 04)

இமாம் அல்-ஹஸன் (ரஹிமஹுல்லாஹ்) சொன்னார்கள்:

“அல்லாஹ் மீது ஆணையாக! ஒரு கூட்டம் தமக்கிடையில் கலந்தாலோசிக்கவில்லை அவர்களுக்கு தோன்றக்கூடியதில் மிகச் சிறந்ததுக்கு அவன் அவர்களுக்கு வழிகாட்டியே அன்றி.” (தஃப்ஸீர் அல்-குர்துபி - பாகம் : 04)

இமாம் இப்ன் அல்-அரபி (ரஹிமஹுல்லாஹ்) பகன்றார்கள்:

“கலந்தாலோசித்தல் கூட்டத்துக்கு அன்னியோன்னியமாகும், புத்திகளை பரிசோதிக்கக்கூடியதாகும், சரிக்கு காரணமாகும். ஒரு கூட்டம் அறவே கலந்தாலோசிக்கவில்லை அவர்கள் வழிகாட்டப்பட்டே அன்றி.” (தஃப்ஸீர் அல்-குர்துபி - பாகம் : 16)

இமாம் அபூ பக்ர் அல்-அர்ரஜானி (ரஹிமஹுல்லாஹ்) இவ்வாறு கவி பாடினார்கள்:

“ஆலோசனை வழங்குநர்களைச் சேர்ந்தவராக நீர் இருந்தாலும்,
உமக்கு ஒரு நாள் சோதனை ஏற்பட்டால் அடுத்தவரிடம் ஆலோசிப்பீராக!
விழி தொலைவிலுள்ளோரையும், அண்மையிலுள்ளோரையும் நேரடியாகப் பார்க்கின்றது.
கண்ணாடி கொண்டே அன்றி அது தன்னைப் பார்ப்பதில்லை.” (பைழ் அல்-கதீர் - பாகம் : 05)

இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) நவின்றார்கள்:

“பல விதங்களை சுமந்ததாக விடயம் ஆட்சியாளருக்கு வந்துவிட்டால் அல்லது sகுழப்பமானது வந்துவிட்டால் அவர் ஆலோசனை செய்வது அவருக்குக் கட்டாயம்.” (ஸுனன் அல்-பைஹகீ அல்-குப்ரா)

இமாம் ஷஃபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

“மனிதர்கள் மூவர்; முழு மனிதர், அரை மனிதர், ஒன்றுமல்லாதவர். முழு மனிதரானவர் அவருக்கு கருத்துமுள்ளது. ஆலோசனையும் செய்கிறாரே அவராவார். அரை மனிதரானவர் அவருக்கு கருத்து இல்லை. ஆலோசனை செய்கிறாரே அவராவார். ஒன்றுமல்லாதவர் அவருக்கு கருத்தும் இல்லை. ஆலோசனை செய்கிறாருமில்லையே அவராவார்.” (ஸுனன் அல்-பைஹகீ அல்-குப்ரா)

ஸைஃப் இப்ன் தீ யஸன் சொன்னார்:

“எவர் தன் கருத்தைக்கொண்டு பெருமைப்படுவாரோ அவர் ஆலோசிக்க மாட்டார். மேலும் யார் தன் அபிப்பிராயத்தில் பிடிவாதமாக இருப்பாரோ அவர் சரியை விட்டும் தூரமானவராக ஆகிடுவார்.” (அதப் அல்-துன்யா வல்-தீன்)

ஒரு ஞானி இவ்வாறு செப்பினார்:

“உமது அபிப்பிராயத்தின் அரைவாசி உம் சகோதரனுடனுள்ளது. ஆகவே அபிப்பிராயம் உமக்கு பரிபூரணமடைய அவனோடு ஆலோசிப்பீராக!” (அதப் அல்-துன்யா வல்-தீன்)

ஓர் அணியிலக்கண அறிஞர் இப்படி நவின்றார்:

“தனது கருத்துடன் புத்திசாலிகளின் கருத்துக்களை சேர்த்துக்கொள்வதும், தன் புத்தியுடன் ஞானிகளின் புத்திகளை இணைத்துக்கொள்வதும் புத்திசாலியின் கடமையில் நின்றுமுள்ளதாகும். தனிக் கருத்து சில வேளை சறுக்கியது. தனி வேலை சிலவேளை வழிதவறியது.” (அதப் அல்-துன்யா வல்-தீன்)

ஓர் இலக்கியவாணர் இவ்வாறு கூறினார்:

“எவர் தன் அபிப்பிராயத்தைக் கொண்டு போதுமாக்கிக்கொள்வாரோ அவர் வழிதவறுவார். எவர் தன் புத்தியைக் கொண்டு போதுமாக்கிக்கொள்வாரோ அவர் சறுக்குவார்.” (அதப் அல்-துன்யா வல்-தீன்)

ஷூரா தரும் நன்மைகள்

ஆலோசனை, கலந்தாலோசனை மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்பல. அவற்றில் ஒருசில பின்வருமாறு:

01. எல்லோரதும் அல்லது பலரதும் கருத்துக்கள் வெளிக்கொணரப்படல்.
02. ஒருவரின் கருத்தை மற்றவர் அறிந்துகொள்ளலும் புரிந்துகொள்ளலும்.
03. ஒருவரது கருத்தின் நியாயத்தை மற்றவர் அறிந்துகொள்ளலும் புரிந்துகொள்ளலும்.
04. தனது அபிப்பிராயத்தைக்காட்டிலும் சிறந்த அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளல்.
05. பல கருத்துக்களுக்கிடையிலிருந்து சிறந்த, சீரிய அழகான, பலமான முடிவை, முடிவுகளை எடுத்தல்.
06. தனது அறிவின், விவேகத்தின், புலமையின், அனுபவத்தின் தரத்தையும் தனது முதிர்ச்சியின் அளவையும் எடைபோட்டுக்கொள்ளல்.
07. அடக்கம் உண்டாதல்.
08. பிறரை மதித்தல்.
09. அடுத்தவரின் அறிவு, அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு தான் பயன் பெறுதல்.
10. அவசரம் அற்றுப் போதல்.
11. நிதானத்தைக் கைக்கொள்ளல்.
12. இதயங்கள் சாந்தமடைதல்.
13. உள்ளங்களுக்கிடையில் அன்புப் பிணைப்பு ஏற்படல்.
14. ஐக்கியம் உண்டாதல்.
15. கவலை, கைசேதமில்லாதிருத்தல்.
16. தீர்க்கமான முடிவொன்றை எய்தல்.
17. கூட்டுப் பொறுப்புணர்வு.
18. பதில் சொல்லுந் தன்மை.

முடிவுரை

நம் செயல்கள், முயற்சிகள் பயனுள்ளவையாய், நன்மை பயப்பனவாய், இலாபகரமானவையாய் அமைந்தால் நாம் மகிழ்வுறுகிறோம். அவை பயனற்றவையாய், தீமை பயப்பனவாய், நட்டமீட்டித்தருவனவாய் அமைந்தால் கவலைப்படுகிறோம். இது மனித இயல்பு.

எமது செயல்கள், முயற்சிகளினூடான எமது எதிர்பார்ப்புகள் மாறியமையும்போது நம்மை நாமே நொந்துகொள்வதுமுண்டு. ஆழமறியாமல் காலை விட்டுவிட்டேனே, காரியத்தில் இறங்கு முன் நாலு பேரிடம் கேட்டுப் பார்த்திருக்கலாமே என்று நமக்குள் நாமே புலம்பிக்கொள்வதுமுண்டு. இது காலங் கடந்த ஞானம்.

விவேகம், ஞானம், அறிவு, விளக்கம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசமானவை. எவரும் இவற்றில் முழுமை பெற்றவரல்லர். ஆகவே ஒருவர் தனது சொந்த அறிவில் மாத்திரம் தங்கி செயற்படலாகாது. பிறரின் அறிவை, அனுபவத்தை தான் உள்வாங்க வேண்டும். தான் செய்ய நாடுகின்ற ஒன்றைக் குறித்து அத்துறையில் ஞானமுள்ள, அனுபவமுள்ள ஒருவரிடம் ஆலோசிக்கும்போது தனது கருத்தைவிட சிறந்த, அழகான, பலமான கருத்தொன்று அவருக்கு கிடைக்கின்றது. அதன் மூலம் தான் நாடுகின்ற காரியத்தை செய்வதா அல்லது விடுவதா, செய்வதாயின் எப்படி அதி சிறப்பாக அதனைச் செய்வது என்பன போன்றவற்றை தெளிந்து விளங்கி முடிவு செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு அடுத்தவரிடம் ஆலோசிப்பதை இஸ்லாம் வலியுறுத்துவதை மேலே உள்ளங்கை நெல்லிக்கணி போல் கண்டோம்.

தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, நிர்வாகம், பொருளீட்டல் என எல்லா விவகாரங்களிலும் ஆலோசிக்க வேண்டும்.

அனுபவசாலிகளை அணுகி தன் விடயத்தை அவர்களிடம் எடுத்துக் கூறி ஆலோசனை பெற்று செயலில் இறங்கினால் துக்கப்பட நேரிடாது. காரிய சித்தி ஏற்படும். கைமேல் பலன் கிட்டும்.

என்னதான் உலக அரங்கில் மதியுரை வழங்கும் முற்றிப் பழுத்தவராயினும் தனக்கென்று வரும்போது பிறரை நாடித் தேடி ஆலோசனை பெற்றுத்தான் ஆக வேண்டும். தனி மனித பலகீனம் எல்லோருக்கும் உண்டு. இதில் எவரும் விதிவிலக்கில்லை.

ஒருவர் தான் துணிச்சலுடன் தொட எண்ணுகின்ற காரியம் பற்றி அதன் இலாப நட்டங்கள், அநுகூலங்கள் பிரதிகூலங்கள் என்பனவற்றை மையப்படுத்தி அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது அறிவுபூர்வமானது. அவ்வாறு செய்வதால் தான் ஒரு போதும் சிறுமைப்பட்டுப் போவதில்லை. தனக்கு ஏதும் குறைந்து போவதற்குமில்லை. சதா வஹ்யின் நிழலில் வாழ்ந்த நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே பிறரிடம் ஆலோசனை பெற்றார்களே. அவர்களைவிடவா நாம்!

கூட்டுப் பணிகள், முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் ஒவ்வொருவரும் தன் மனம் போன போக்கில் சுய இஷ்டப் பிரகாரம் தொழிற்படாது அனைவரும் கூட்டாக இணைந்து கலந்தாலோசித்து இயங்க வேண்டும். இதனால் இதயங்கள் ஐக்கியப்பட்டிருக்கும், கூட்டுப் பொறுப்பு பேணப்படும்.

இவற்றை கவனத்தில் கொண்டு ஆலோசித்தலையும் கலந்தாலோசித்தலையும் எமது வாழ்வில் முழுமையாக முழு அளவில் கடைப்பிடித்தொழுகுவோம்! இறை திருப்தி பெற்று ஈருலகிலும் இன்புறுவோம்!


உசாத்துணை நூல்கள்:-

01. அல்-குர்ஆன் அல்-கரீம்
02. இமாம் அபூ அப்த் அல்லாஹ் முஹம்மத் இப்ன் அஹ்மத் அல்-குர்துபி, அல்-ஜாமிஃ லிஅஹ்காம் அல்-குர்ஆன்
03. இமாம் அஹ்மத் இப்ன் அலி அல்-ராஸி அல்-ஜஸ்ஸாஸ், அஹ்காம் அல்-குர்ஆன்
04. இமாம் அஹ்மத் இப்ன் ஹன்பல், முஸ்னத் அஹ்மத்
05. இமாம் முஹம்மத் இப்ன் இஸ்மாஈல் அல்-புகாரி, சஹீஹ் அல்-புகாரி
06. இமாம் இஸ்மாஈல் இப்ன் உமர் இப்ன் கஸீர், அல்-பிதாயஹ் வல்-நிஹாயஹ்
07. இமாம் முஹம்மத் இப்ன் ஜரீர் அல்-தபரி, ஜாமிஃ அல்-பயான்
08. இமாம் ஸுலைமான் இப்ன் அஹ்மத் அல்-தபரானி, அல்-முஃஜம் அல்-அவ்ஸத்
09. இமாம் முஹம்மத் இப்ன் ஈஸா அல்-திர்மிதி, ஸுனன் அல்-திர்மிதி
10. இமாம் முஹம்மத் இப்ன் அஹ்மத் இப்ன் அரஃபஹ் அல்-துஸூகி, ஹாஷியத் அல்-துஸூகி
11. இமாம் அலி இப்ன் முஹம்மத் அல்-மாவர்தி, அதப் அல்-துன்யா வல்-தீன்
12. இமாம் அப்த் அல்-ரஊஃப் அல்-முனாவி, பைழ் அல்-கதீர்
13. இமாம் அஹ்மத் இப்ன் அல்-ஹுஸைன் அல்-பைஹகி, ஸுனன் அல்-பைஹகி அல்-குப்ரா

1435.11.12
2014.09.08


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page