Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

அகவை 48


இன்றுடன் அடியேனுக்கு வயது நாற்பத்தெட்டு. அல்-ஹம்து லில்லாஹ். நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக வெறுமனே காலம் கழித்துள்ளேன். அவ்வளவுதான்.

1969ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 02:20 மணியளவில் புத்தளம் தள வைத்தியசாலையில் நான் ஜனித்ததாக என் பாசத்துக்குரிய பெற்றோர் சொல்லக் கேட்டுள்ளேன். அந்தக் காலத்தில் மருத்துவச்சியின் துணையுடன் வீடுகளிலேயே பிரசவம் நடைபெறும். பிரசவிப்பவதில் ஏதும் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் பிரசவம்பார்ப்பர். நானோ கருப்பையில் எடை கூடவிருந்ததால் என் தாயார் ஆஸ்பத்திரியில்தான் குழந்தை பெற வேண்டுமென மருத்துவ ஆலோசனை. ஆகவேதான் நான் வைத்தியசாலையில் பிறந்ததாக என் அன்புத் தாயார் சொல்வார்கள்.

என்னரும் அன்னை என்னை வெளித்தள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டில் மற்றுமொரு பெண்மணியும் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதையையும் என் அன்புத் தாயார் சொன்னதுண்டு. அது வேறு யாருமல்ல. எமது பூர்வீக மனை நிலைகொண்டிருந்த எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் மரிக்காரின் (சிங்கர் மரிக்கார்) பாரியார். இவ்வம்மையாருக்கு அது தலைப் பிரசவம். என் தாயாருக்கு இரண்டாம் பிரசவம். முதல் பிள்ளை ஆண். மரித்துப் பிறந்தது. உயிர் வாழ்ந்திருந்தால் காக்கா அல்லது நானா என பாசத்துடன் அழைக்க எனக்கு ஒருவர் இருந்திருப்பார்.

நான் பிறப்பதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் அப்துல் ஹமீத் மரிக்கார் தம்பதிக்கு குழந்தை கிடைத்துள்ளது. அது அவர்களின் மூத்த புதல்வி. இரு தாய்மாரும் பிள்ளைப் பேற்றுக்காக பிரசவ வார்ட் உள்ளே இருக்க என் அருமைத் தகப்பனாரும் அப்துல் ஹமீத் மரிக்கார் அவர்களும் ஆஸ்பத்திரி வளவிலே இரவு முழுதும் விழித்திருந்து அளவளாவி பொழுதுபோக்கிய கதையை என் தந்தையார் சொன்னதுண்டு. இன்று என் தந்தையாரும் எம்முடன் இல்லை. அப்துல் ஹமீத் மரிக்காரும் எம்முடன் இல்லை. இருவரும் மண்ணறை வாழ்வை அனுபவிக்கின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா இருவரின் கப்ர்களையும் சுவனப் பூங்காக்களாக ஆக்கிவைப்பானாக! இருவரின் மனைவியருக்கும் நீண்ட ஆயுளையும் நிறைவான சுகத்தையும் அளிப்பானாக!

இன்று என்னை வாழ்த்திய, எனக்காகப் பிரார்த்தித்த எல்லா நல்லிதயங்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த, உளங்கனிந்த நன்றிகள். ஜஸாக்கும் அல்லாஹ் கைரா!

அடியேன் யாத்த அரபுக் கவிதைகள் சிலவற்றைத் திரட்டி ஒரு நூலாக வெளியிடும் பொருட்டு அதற்கான அச்சு வேலைகளை துவக்க தேவையான ஆயத்தங்களை இன்றைய தினத்தில் செய்துகொண்டது ஆத்ம திருப்தி தருகிறது. நூல் இன்று அல்லது நாளை இன் ஷா அல்லாஹ் வெளிவர வாய்ப்புண்டு. இக்கவிதை நூலின் தலைப்புப் பக்கம் மற்றும் பொருளடக்கம் தவிர்ந்த அனைத்தும் கவிதைகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘அல்-ஸுஹூர் அல்-பாஸிமஹ்’ என இந்த நூலுக்கு நாமமிட்டுள்ளேன். புன்னகைக்கும் புஷ்பங்கள் என ‘அல்-ஸுஹூர் அல்-பாஸிமஹ்’வை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

இந்தப் படைப்பை என்னை வாப்பா என அன்பு ததும்ப அழைத்து மகிழும் என் அன்புக்கினிய பிள்ளைகள் அவ்வாப், அப்பாத், அத்தாப் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்துள்ளமை பேரானந்தமளிக்கிறது. சிறு வயதினரான என் பிள்ளைகள் அரபு மொழி தெரியாதவர்கள். அழகிய அரபுப் பாஷையை இலக்கண இலக்கியத்தோடு கற்றுத் தேரிய பின் அவர்கள் இக்கவிதைத் தொகுப்பை நேசித்து வாசிப்பர், ரசித்து, ருசித்து படித்து சுவைப்பர், அதன் உள்ளடக்கத்தை விளங்கி, உணர்வர் இன் ஷா அல்லாஹ்.

கருணை நிறைந்த நாயன் தன் அளவற்ற கருணை மழையை என் மீது பொழிந்துகொண்டே இருப்பானாக! நோய் நொடியற்ற வாழ்வை எனக்கு வழங்கி என்னை வாழ்வாங்கு வாழவைப்பானாக! ஈமான், நல் அமல்கள் நிறையப் பெற்ற நீண்ட ஆயுளை எனக்கு கொடுத்தருள்வானாக! இறுதிவரை கற்றல், கற்பித்தல், ஆய்வு, எழுத்து, விரிவுரை, பேச்சு, சமூக சேவை வேலைகளை சிறப்பாகத் தொடர பாக்கியம் நல்குவானாக! ஆமீன்!!!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

2017.07.18
1438.10.23


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page