Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

கிண்ணியா அல்-குல்லிய்யத் அல்-ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் வாழ்த்துச் செய்தி


“திண்ணமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள்”.

இது இறைத் தூதர் எம் இதய நாயகர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் நல்வாக்கு. இதில் இழையோடிக் கிடக்கும் சித்தாந்தத்தை கிண்ணியா அல்-குல்லிய்யத் அல்-ஸஃதிய்யஹ் தனது 13ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்துகின்ற இப்பொன்னான வேளையிலே அன்பிதயங்களுடன் பகிர்ந்துகொள்ள அவாவி நிற்கிறேன்.

இவ்வுலகின் உய்விற்காய் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களின் பட்டியல் நீண்டு வளர்ந்து நாயகம் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் முற்றுப்பெற்றபோது அன்னார் தொடங்கிய பணி அத்துடன் நிறைவுறாது இறுதி நாள் வரையும் அதைத் தொட்டுத் தொடரும் பொறுப்பு ஆலிம்களின் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கிறதென்றால் அந்த ஆலிம்களை உருவாக்கும் பாரிய பொறுப்பை இந்நாட்டிலுள்ள ஸஃதிய்யாக்கள் சுமந்து நிற்கின்றன.

கல்விக்கூடங்கள் என்பவை அறிவைத் தருமிடங்களெனில் அறிவென்பது என்ன? வெறுமனே அறியப்படுபவை அனைத்தும் அறிவாகுமா? கல்வி என்பது ஆர்ப்பரிக்கும் ஒரு சாகரம். அச்சாகரத்துக்குள் மீனினங்களின் சாம்ராஜ்யம் விரிந்து கிடக்க அச்சாகரத்துள் நாவாயோட்டிச் சென்று பலதரப்பட்ட மீன்களையும் பிடித்து வந்து கரையிலுள்ள மாந்தரோடு உண்டு களித்து இன்புறுதலும் உண்டு. அவ்வாழிக்குள் அமிழ்ந்து சுழியோடிச் சென்று முத்துக்கள், பவழங்களென கடல்படு திரவியங்களை அள்ளி வந்து செல்வத்தைக் குவிப்பதும் உண்டு. இதில் இரண்டாவதுதான் கல்விக் கடலில் இம்மானிட இனம் பெறும் அளப்பரிய நன்மையெனில் அதைத் தருவதாகத்தான் இந்த ஸஃதிய்யாக்கள் கடமையாக இருப்பதைக் காண்கிறோம்.

ஸஃதிய்யஹ் எனும் பொற்கொல்லர் பட்டறையிலே பழுக்கக் காய்ச்சித் தட்டியெடுத்து உருவமைக்கப்பட்ட மாசற்ற பத்தரை மாற்றுப் பசும் பொன்களான ஆலிம்கள் 68 பேர் இதுவரை உருவாக்கப்பட்டு இப்பாருக்கு அறப்பணியாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் உள்ளங்களில் உவகை பெருக்கெடுக்கின்றது.

ஒன்றோடொன்று பிணைந்து நிற்கும் சங்கிலித் தொடர் இது. இங்கு உருவான அச்சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கண்ணியும் ஒன்றை விட்டொன்று அகன்றுவிடாது நீடு நிலைத்து இறுதி நாள் வரையில் இந்த இஸ்லாமியச் சங்கிலியை இறுக இணைத்துக்கொண்டிருக்கும் என்பது உறுதி.

பல ஆண்டுகளாய்ச் சுழன்றுகொண்டிருக்கும் ஸஃதிய்யாவின் சகடக்கால் உலகுள்ளளவும் சுழன்று சுழன்று பல்லாயிரம் பல்லாயிரம் ஆலிம்களை உருவாக்கித் தர வேண்டுமென வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கக் கையேந்தி நிற்கிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

2004.09.20

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page