Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன்
அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது


நேற்றைய முன் தினம் (2020.04.10 வெள்ளிக்கிழமை) இரவு 11:00 மணி. தூங்குவதற்குத் தயாராகி வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு கடைசி விளக்கை அணைக்கப் போகும்போது திடீரென ஒரு நினைவு. மவ்லவி அபுல் ஹசன் அவர்களின் மகன் மவ்லவி ஆஷிக் அவர்கள் தனது தந்தையின் சுகயீனம் பற்றி சில மாதங்களுக்கு முன் எனக்கு அறிவித்திருந்தார். நான் அவரை இன் ஷா அல்லாஹ் சுகம் விசாரிக்க வருவேன் எனக் கூறியிருந்தேன். இதுவே அந்த நினைவு. உடனடியாக எனது கையடக்கத் தொலைபேசியை எடுத்து மவ்லவி ஆஷிக் அவர்கள் அனுப்பியிருந்த செய்தியையும் நான் அவருக்கு அனுப்பியிருந்த பதில் செய்தியையும் பார்த்தேன். இறுதியாக அணைக்க வேண்டிய விளக்கை அணைக்காமல் நின்றவண்ணமே தொடர்ந்து யோசனை. மவ்லவி அபுல் ஹசன் அவர்களின் தற்போதைய நிலை என்னவோ. சுகயீனம் பற்றிய செய்தி கிடைத்தும் பல நாட்கள் சென்றுவிட்டன. தற்போதைய தொடர் ஊரடங்குச் சட்ட நிலையில் பார்க்கப் போவதும் சாத்தியமில்லை. சரி எதற்கும் நாளை இன் ஷா அல்லாஹ் மவ்லவி அபுல் ஹசன் அவர்களோடும் அவரின் மகன் மவ்லவி ஆஷிக் அவர்களோடும் தொலைபேசி அழைப்பேற்படுத்தி குசலம் விசாரிப்போம் என மனதில் சொல்லிக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன்.

அடுத்த நாள் (நேற்று) காலை நாட்டு நடப்புகள் என்ன, உலக நடப்புகள் என்னவென செய்திகளைப் பார்க்க அமர்ந்தேன். முதன்முதல் செய்தியாகப் பார்க்கக் கிடைத்தது 'மர்க்கஸ் அபுல் ஹஸன் மவ்லவி காலமானார்' என்பதுதான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒன்றுக்கு இரண்டு தடவைகள் படித்தேன். ஒரு கணம் பிரமித்துப்போனேன்.

கடந்த சில மாதங்களாக கடுமையாக சுகவீனமுற்றிருந்த என் அன்புத் தாயாரைக் கவனிப்பதில் இருந்ததாலும் பின்னர் அன்னாரின் மறைவின் காரணமாகவும் அபுல் ஹசன் ஹழ்ரத் மட்டுமல்ல இன்னும் பார்க்க வேண்டிய பல முக்கியமானவர்களைக்கூட என்னால் போய்ப் பார்க்க முடியாதிருந்தது. நிலைமைகள் சீராகி வருவது போல தெரிந்தது. இந்த பெரியார்களைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு அமைவது போல் இருந்தது. அதற்குள் கொரனா நுண்ணங்கியின் கோரமான தாக்குதலினால் தொடர் ஊரடங்கு. என்ன செய்ய? எதுவும் எம் கையில் இல்லை.

நேற்று காலை வேளை மவ்லவி ஆஷிக் அவர்களோடு தொடர்புகொண்டு என் அனுதாபத்தைத் தெரிவித்துவிட்டு நேற்றைய முன் தினம் இரவு நான் படுக்கைக்குச் செல்லும் முன் நடந்ததைச் சொன்னேன். அந்த 11:00 மணியளவில்தான் வாப்பா வபாத்தானார் என்றார் அவர். வாப்பாவை வந்து பார்த்துக்கொள்ள முடியாமல்போனதற்கான காரணத்தையும் அவரிடம் சொல்லிக்கொண்டேன்.

அஷ்-ஷைக் அபுல் ஹஸன் அவர்களுக்கும் எனக்குமிடையே கல்வி ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ எந்தத் தொடர்பும் கிடையாது. 1980களின் பின் அரைப் பகுதியில் அவரை அறிந்துகொண்டேன். 1987ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் யார், அவரின் தகைமைகள் யாவை, அவர் பணி புரியும் தலம் எது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். இதற்கு ஒரு பின்னணி இருந்தது. நான் அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யாவில் கற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் மவ்லவி அபுல் ஹஸன் அவர்கள் கொழும்பு தப்லீஃ மர்கஸின் பொறுப்புதாரிகளோடு ரஹ்மானிய்யாவுக்கு வருவார். விடுமுறைகள் அண்மிக்கும்போது இப்படி வருவது வழக்கம். விடுமுறை காலத்தில் தப்லீஃ பணியில் செல்வதற்கு மாணவர்களைத் தயார் செய்வதே அவர்களது வருகையின் நோக்கம். இந்த முக்கியஸ்தர்களுள் ஒருவராக மவ்லவி அபுல் ஹஸன் அவர்களும் வருவார், மாணவர்களுக்கு உரையாற்றுவார். இதுவே அன்னார் குறித்து அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது.

அதன் பின் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களை அவர் புத்தளத்துக்கு தப்லீஃ பணியில் வந்த சமயங்களில் ஓரிரு தடவைகள் சந்தித்துள்ளேன்.

2001 – 2002 காலப் பகுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பு மீளாய்வுக் குழுவில் ஓர் அங்கத்தவராக மவ்லவி அபுல் ஹஸன் இருந்தார். யாப்பு மீளாய்வுக் குழுவின் செயலாளராக நான் இயங்கினேன். இக்காலப் பகுதியில் அவரைக் கூட்டங்களில் காண, கதைக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003இல் நான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளராக தெரிவானேன். இந்தத் தெரிவுக்குப் பின் நியமிக்கப்பட்ட பத்வாக் குழுவில் ஓர் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார் அபுல் ஹஸன் ஹழ்ரத் அவர்கள். இப்பொழுது பத்வாக் குழுவின் கூட்டங்களில் அன்னாருடனான தொடர்பு தொடர்ந்தது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கான எனது வீரியமான பங்களிப்பை 2007 நடுப் பகுதிமுதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கவாரம்பித்தேன். அதன் பின் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களைக் காணும் வாய்ப்பும் அருகிப்போனது. ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் ஏதேனும் வைபவங்களில் சந்திப்பதோடு எமது உறவு மட்டுப்படுத்தப்பட்டது.

மவ்லவி அபுல் ஹஸன் அவர்களை நான் பார்த்த மட்டில் ஒரு நேர்மையான மனிதர், சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் பார்த்தவர், தனது அறிவின் பிரகாரம் சரியென தன் மனதுக்குப் பட்டதை ஓர்மத்துடன் உரத்துச் சொல்பவர், கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைப்பவர், கல்வி, ஒழுக்க விடயங்களில் மிகக் கண்டிப்பானவர், கடமையில் கவனமானவர், ஒருமுகச் சிந்தனை வாய்ந்தவர், ஒழுங்கீனங்களை சகித்துக்கொள்ளாதவர், அறிவையும், அறிஞர்களையும் மதிப்பவர், அடுத்தவர் திறமைகளை அடையாளப்படுத்துபவர், எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவர். இவை நான் அவருடன் அமர்ந்த பல கூட்டங்களின்போதும் நம்மிருவருக்குமிடையிலான சம்பாஷணைகளின்போதும் நான் அவதானித்தவை. மிகைப்படுத்தல்கள் எதுவும் இல்லை.

மாணவர்களுக்கு அரபு மற்றும் ஷரீஆவின் துறைகளை கற்பிப்பதையும், தப்லீஃ முறை மூலம் பொது மக்களுக்கு சன்மார்க்கத்தின் போதனைகளை எத்திவைப்பதையும் வாழ்வின் முக்கிய பணிகளாக ஏற்று ஒருமுகப்பட்ட உள்ளத்துடன் பக்தி சிரத்தையோடு செய்துவந்தார் மவ்லவி அபுல் ஹஸன். அளவுக்கதிகமான, தன்னால் சுமக்க முடியாத, நேரமொதுக்க முடியாத சுமைகளை அவர் அள்ளிப் போட்டுக்கொள்ளாதவர். இலங்கையின் பல மத்ரஸாக்கள் அன்னாரை தமது ஆலோசகராக வைத்துக்கொண்டு அவருடைய நல்லாலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தன.

எம்மிருவருக்குமிடையில் மிக அன்னியோன்யமான உறவு இருந்ததில்லை. அதற்கான வாய்ப்புக்கள் அமைந்திருக்கவில்லை. ஒருவர் மற்றவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துப் பழகினோம் என்று சொல்லிக்கொள்ளலாம். நான் அவரைப் பற்றி பிறரிடம் உயர்வாகப் பேசியுள்ளேன். அவரும் அது போலவே அடியேனைப் பற்றி அடுத்தவரிடம் உயர்வாகப் பேசியுள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்களிடம் அபுல் ஹஸன் ஹழ்ரத் அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் என்னை, என் தொண்டுகளை, என் சின்ன சின்ன ஆற்றல்களை சிலாகித்துப் பேசியதை முப்தி ரிஸ்வி அவர்களே என்னிடம் வாய்விட்டுச் சொன்ன சந்தர்ப்பங்கள் பல. மவ்லவி அபுல் ஹஸன் அவர்கள் இச்சிறியவன் மீது கொண்டிருந்த மதிப்பை அன்னாரின் அருமைப் புதல்வன் மவ்லவி ஆஷிக் அவர்களும்கூட நன்கு நோட்டமிட்டிருக்கிறார். இந்த விடயத்தை அண்மையில் அவர் எனக்கு அனுப்பிவைத்த ஒலிப் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்.

மவ்லவி அபுல் ஹஸன் அவர்கள் தனது புதல்வன் மவ்லவி ஆஷிக் அவர்கள் எழுதிய 'தரீக் அல்-இத்திலாஃ அலா மஆஸிர் அல்-சஹாபஹ்' எனும் நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அது ஒரு மாலை நேர நிகழ்வு. அதே தினம் அதே நேரம் வேறொரு முக்கிய நிகழ்வு எனக்கு. அதில் எனக்கு விசேட உரையும் இருந்தது. நூல் வெளியீட்டுக்கான அழைப்பு கிடைப்பதற்கு முன் மற்ற கூட்டத்தின் அழைப்பு கிடைத்திருந்த படியாலும் அந்தக் கூட்டத்தில் எனது உரை நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டிருந்ததாலும் நூல் வெளியீட்டுக்கு வர முடியாதுள்ளதை மவ்லவி அபுல் ஹஸன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாகச் சொல்லி மன்னிப்பு வேண்டிக்கொண்டேன். குறித்த தினம் மற்றைய கூட்டத்தில் வைத்து அல்லாஹ் தஆலா என் மனதில் ஒரு யோசனையைப் போட்டான். எனது உரை முடிந்தவுடன் ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டுப் பார்ப்போம். அவர்கள் அனுமதித்தால் நூல் வெளியீட்டுக்குப் போய் கலந்துகொள்வோம். எனது உரையை நிகழ்த்தினேன். ஏற்பாட்டாளர்களிடம் எனது விடயத்தைச் சொன்னேன். அவர்களும் அதற்கு அனுமதித்தார்கள். உடனடியாக புறப்பட்டு நூல் வெளியீடு நடைபெறும் இடமான கொழும்பு க்ரேன்ட்பாஸ் ரஹ்மானிய்யஹ் மஸ்ஜிதுக்கு போய்ச் சேர்ந்தேன். என்னைக் கண்டதும் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களுக்கு பூரிப்பேற்பட்டது. உங்களுக்காக மற்ற கூட்டத்திலிருந்து இடையில் அனுமதி பெற்று வந்துள்ளேன் என நான் அவரிடம் கூறியபோது அவரின் ஆனந்தம் இரட்டிப்பானது. நிகழ்ச்சி நிரலில் இல்லாமலேயே எனக்கு விசேட உரை நிகழ்த்த உடனடி ஏற்பாடு செய்தார், முதல் பிரதி பெறவும் ஏற்பாடு செய்தார். அவர் என் மீது வைத்திருக்கின்ற மதிப்பை வெளிப்படுத்திய ஒரு தருணமாக அது இருந்தமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020.02.03 அன்று என் அன்புத் தாயார் காலமானபோது மவ்லவி அபுல் ஹஸன் அவர்களின் மகன் மவ்லவி அக்ரம் அவர்கள் ஜனாஸாவுக்கு வந்திருந்தார். வாப்பா சுகயீனம் காரணமாக ஜனாஸாவில் கலந்துகொள்ள வர முடியாதுள்ளதாகச் சொன்னதோடு, தன்னை ஜனாஸாவுக்கு போகும்படி தந்தையார் வலியுறுத்திச் சொன்னதாக என்னிடம் சொன்னார். இப்படியெல்லாம் பெரிய மனசு படைத்த பெருமகனின் ஜனாஸாவில் கலந்துகொள்ள எனக்கு முடியாமல் போயிற்றே என எண்ணி எண்ணி என் கண்களின் ஓரங்கள் ஈரமாகவிருக்கின்றன.

அஷ்-ஷைக் அபுல் ஹஸன் ஹழ்ரத் பற்றிய என் மனப் பதிவுகளை எழுத்தில் பதிவுசெய்யும் இத்தறுவாயில் இன்னுமொரு விடயத்தை எழுதியாக வேண்டும். அதாவது அவர் எனது எழுத்துக்களை நேசித்து, சுவாசித்து வாசிப்பவராகவிருந்தார். சந்தித்துக்கொள்கிற வேளைகளில் அண்மையில் அவர் வாசித்த எனது கட்டுரைகள், கவிதைகள், நூல்களைப் பற்றி என்னிடம் பிரஸ்தாபிப்பார். மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதும்படியும் எனக்கு கூறுவார். இப்படியெல்லாம் ஊக்குவிக்கின்ற பெரியவர்கள் கம்மியான காலமிது. இருக்கிற அபுல் ஹஸன் ஹழ்ரத் போன்ற ஓரிரு தட்டிக்கொடுப்பவர்களும் நம்மிடையே இருந்து நிரந்தரமாகப் பிரிந்து செல்வது சொல்லொனா சோகத்தைத் தருகிறது.

இங்கே நான் குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத பல சிறந்த குணாதிசயங்களைப் பெற்றிலங்கியவர் மவ்லவி அபுல் ஹஸன் அவர்கள். அதிலும் விசேடமாக நிகழ்காலத்தில் விரல்விட்டு எண்ண முடியுமான ஒரு சில பெரியவர்களிடமே காண முடியுமான சில உயர்ந்த குணநலன்கள் அவரிடம் குடிகொண்டிருந்தன. அத்தகைய ஒரு மரகதமாக அஷ்-ஷைக் அபுல் ஹஸன் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அபுல் ஹஸன் ஹழ்ரத் அவர்களின் இறப்பு ஒரு பெரும் இழப்பு. இதனை எல்லோராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. தன் ஆண் மக்கள் மூவரையும் நல்ல ஆலிம்களாக உருவாக்கிவிட்டு, பல ஆலிம்களை உற்பத்திசெய்து நாட்டின் பட்டிதொட்டியெங்கும் உலாவவிட்டு, பல பேரை நடைமுறை முஸ்லிம்களாக ஆக்கிவிட்டு மரணத்தின் பின்னரும் தனக்கு தொடர்ந்து நன்மை வரும்படியான ஏற்பாடுகளுடன் இறைவனிடம் போய்ச்சேர்ந்துள்ளார்.

இலங்கையின் தப்லீஃ ஜமாஅத்துக்கு காலத்துக்குக் காலம் கிடைத்த ஆலிம்களுள் எம்மை விட்டும் விடைபெற்றுக்கொண்ட மர்ஹூம் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களும் ஒரு குறிப்பிடத்தக்கவர். இதனை மாற்றுக் கருத்தின்றி பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்வர். தப்லீஃ சேவைக்காக இலங்கையின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வந்தவர். அது போல தப்லீஃ ஜமாஅத் மர்கஸின் கீழியங்கும் மத்ரஸத் அல்-ரஷாதின் உயிர்நாடியாக அதன் முதல் நாள் தொட்டு இருந்தவர். இக்கல்லூரியின் எலும்பாக, சதையாக, இரத்தமாக இருந்தவர். அன்னாரின் பிரஸ்தாபமின்றி மத்ரஸத் அல்-ரஷாதின் வரலாறு எழுதப்பட முடியாது எனும் அளவுக்கு தடம் பதித்துள்ளார்.

ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மரணம் வந்த வயதில் தனக்கு மரணம் வர வேண்டுமென அபுல் ஹஸன் ஹழ்ரத் அவர்களின் ஆசை இருந்ததாக அவரின் மகன் அஷ்-ஷைக் ஆஷிக் என்னிடம் சொன்னார். அல்லாஹ் தஆலா அன்னாரின் ஆசை போல அவரின் 63 வயதிலே அவரை அவன் பக்கம் அழைத்துக்கொண்டான்.

ஏலவே நான் சொன்னது போல் ஓர் ஆத்மார்த்தமான உறவு எனக்கும் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களுக்குமிடையில் இல்லாதபோதும் ஆத்மார்த்தமாக நெருங்கிப் பழகிய ஒருவர் பிரிந்துபோன கவலையே எனக்கு. நேற்றுக் காலை அவரின் வபாத் செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின் என் வீட்டினர் எல்லோருமாக அன்னாருக்கு துஆ செய்தோம்.

அருளாளன் அல்லாஹ் மவ்லவி அபுல் ஹஸன் அவர்களின் பிழைகளைப் பொறுத்து அவர்களை உயர்ந்த நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்வானாக! உன்னதமான ஆலிம்களுக்கு அவன் வழங்குகின்ற அந்தஸ்துகளை அன்னாருக்கு வழங்கி கௌரவிப்பானாக! அவரது மண்ணறையை ஜோதி பொருந்திய பொன்னறையாக ஆக்கிவைப்பானாக! ஜன்னத் அல்-பிர்தவ்ஸை அவரின் இறுதித் தலமாக ஆக்கிவைப்பானாக! அவரின் இறப்பால் துயுருறும் அவரின் உற்றத்தார் சுற்றத்தார் யாவருக்கும் பொறுமையை நல்குவானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.08.18
2020.04.12


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page