Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்


1980களில் கடிதத் தொடர்புகள்
தொடர் – 02


1980களில் நான் அரபுப் பாஷையில் கடிதத் தொடர்பு கொண்டிருந்த எனது சிநேகிதர்கள் வட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒருவர் தோப்பூரைச் சேர்ந்த அஷ்-ஷைக் ஜவாஹிர் (நலீமி). மடல் எழுதும் காலத்தில் அவர் ஜாமிஅஹ் நலீமிய்யாவில் பயின்றுகொண்டிருந்தார். கடிதத் தொடர்பாடல் இருந்த காலத்தில் எமக்கிடையே நேரடி சந்திப்புகளும் இருந்தன.

நண்பர் ஜவாஹிர் 1988இல் நலீமிய்யாவில் கற்கைநெறியை நிறைவுசெய்துகொண்டதன் பின்னர் எமக்கிடையிலான உறவு இல்லாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் தோப்பூரைச் சேர்ந்த எவரையாவது சந்திக்க நேரிட்டால் நண்பர் ஜவாஹிர் அவர்களைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

இப்படி இருக்கும் சமயத்தில் நான் கற்ற ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவுக்கு ஒரு நாள் போயிருந்தேன். அவ்வமயம் ஒரு மாணவர் தனது பெயர் அஹ்ஸன், தனது ஊர் தோப்பூர் என தன்னை என்னிடம் அறிமுகம்செய்துகொண்டார். ஊர் தோப்பூர் என்று விட்டாரே. விடுவேனா? ஜவாஹிர் நலீமியைத் தெரியுமா என்றேன். அது என் வாப்பாதான் என்றார். அத்தருணத்தில் என் உள்ளத்தில் பெருக்கெடுத்த உவகையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தந்தை பற்றி தனயனிடம் விரிவாக கேட்டறிந்துகொண்டேன். இந்த நிகழ்ச்சியின் பின்னர் அன்பு மகன் அஹ்ஸனை ரஹ்மானிய்யாவில் காணும்தோறும் தகப்பனார் குறித்து விரிவாக விசாரித்தறிந்துகொள்ளும் வாய்ப்பிருந்தது. மூன்றாம் நபரிடம் என்னதான் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் நேரடியான சந்திப்பு, அளவளாவல் போல வருமா?

தோழர் ஜவாஹிரைச் சந்திக்க வேண்டுமெனும் அவா அடிமனதில் கிடந்தது. அவ்வப்போது மேலே எழுந்து வரும். போய் பார்ப்போம் என அவசர அவசரமாக முடிவுசெய்து புறப்படுவதற்கு அவரது ஊருக்கும் எனது ஊருக்கும் இடையிலான தூரம் அவ்வளவு குறுகியதுமல்ல. நான் இருப்பது புத்தளத்தில். அவர் இருப்பது தோப்பூரில். இதனை நினைக்கிறபோது சரி பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என தீர்மானித்துக்கொள்வேன். இப்படியே பல வருடங்கள் உருண்டோடிவிட்டன.

அல்லாஹ் அருளால் சென்ற வருடம் நண்பர் ஜவாஹிரை அவரின் இல்லம் ஏகி பார்த்துவருகிற சந்தர்ப்பம் கிட்டியது. அல்-ஹம்து லில்லாஹ். 2018.07.01 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தி சாயும் வேளை அந்த நீண்ட நாள் கனவு நனவானது. மிக நெருக்கமான தொடர்பு அறுந்துபோயிருந்த வெகு நாள் கவலை நீங்கிவிட்டது. இப்போது தொடர்பைப் புதுப்பித்துக்கொண்ட ஆனந்தம் நெஞ்சில் சடுகுடு விளையாடுகிறது.

இங்கே நீங்கள் பார்ப்பது நண்பர் ஜவாஹிர் அவர்கள் 1988.02.02 அன்று எனக்கு அனுப்பிய கடிதமும் கடந்த ஆண்டு அவரின் வீட்டில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படமுமாகும்.

அஷ்-ஷைக் ஜவாஹிர் தற்பொழுது தோப்பூர் அல்-ஹம்ரா மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக கடமை புரிகிறார்.

அஷ்-ஷைக் அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.01.29
2019.09.30


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page