Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Condolences

அஷ்-ஷைக் அஹ்மத் யாசீன்;
சர்வதேச பயங்கரவாதத்துக்குப் பலியான மற்றுமொரு தலைவர்


- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்

ஹமாஸ் அமைப்பின் பெரும் மரியாதைக்குரிய தலைவரும், தாபகருமாகிய அஷ்-ஷைக் அஹ்மத் யாசீன் சர்வதேச பயங்கரவாதத்துக்குப் பலியான அதிர்ச்சியூட்டும் தகவல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை ஆராத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேலின் இக்குரூர செயல் உலகின் தேசங்களுக்கிடையிலான சமாதான எதிர்பார்ப்புக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் முடிவையும் பல சந்தர்ப்பங்களில் மீறிய நிலையில், காசா பள்ளத்தாக்கில் யூதக் குடியேற்றங்களை விஸ்தரித்துச் செல்லவும், அரேபிய ஆள்புலத்தை அடிக்கடி ஆக்கிரமிக்கவும் இச்சிறிய இஸ்ரேலுக்கு தைரியமும், துணிவும் எங்கிருந்து பிறக்கின்றது என்பது புரியாத புதிராகவுள்ளது. உலக ஒழுங்கை மீளமைப்புச் செய்ய வேண்டுமென்ற நோக்குடன் தனிப்பெரும் வல்லரசின் பின் பலமுள்ள நாடுகள் பல அணிதிரள முடியுமாயின், பிடிவாதமாகவுள்ள இந்நாட்டை அதன் அயல் அரபு நாட்டுடன் விட்டுக்கொடுப்புக்கு கொண்டுவர ஏன் இந்நாடுகளுக்கு முடியாதுள்ளது?

ஆச்சரியத்திற்குரிய விடயம் யாதெனில் ஹமாஸின் தாபகர் மிகப் பெரும் பயங்கரவாதத் தலைவர் எனவும், குரூரமாகக் கொலை செய்யப்பட்டதன் மூலம் அவருக்குக் கிடைத்த தண்டனை பொருத்தமானதே எனவும் இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலை புஷ் நிர்வாகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொங்கலிசா ரைஸ் நியாயப்படுத்தி கொக்கரித்து கொஞ்ச நேரத்தில் இச்சம்பவத்தினால் அமெரிக்கா கலவரமடைந்துள்ளதாக வௌ;ளை மாளிகையைச் சேர்ந்த மற்றும் சிலரின் அறிக்கைகள் தெரிவித்தன. அமெரிக்காவின் இவ் இரட்டை நிலைப்பாடு உலகலாவிய முஸ்லிம்களின் மனங்களில் நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுப்பற்றுமிக்க மிகவும் மதிக்கத்தக்க சுதந்திரப் போராட்ட வீரரை பயங்கரவாத அமைப்பின் தலைவராக உலகின் முன் சித்தரித்துக் காட்ட இஸ்ரேல் கடும் பிரயத்தனம் செய்வது உண்மையில் நகைப்புக்கிடமானது. பாலஸ்தீனர்களின் தாய்நாட்டையும், புனித அல்-அக்சா பள்ளிவாயலையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்காகவே மர்ஹூம் யாசீன் ஹமாஸ் அமைப்பை தோற்றுவித்து, வழிநடாத்தினார்.

மறைந்த தலைவர் யாசீனுக்காகவும், அவருடன் இணைந்து மரணத்தை தலுவிய ஏனைய வீரத்தியாகிகளுக்காகவும் கண்கள் கலங்கிய நிலையில் கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்ற இலட்சோப இலட்ச மக்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இணைந்துகொள்கின்றது. அல்லாஹ் அவர்களின் நற்காரியங்களை அங்கீகரித்து, அவர்களின் பிழைகளைப் பொறுப்பதோடு, அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு பொறுமையையும், இக்கஷ்டமான நிலையை எதிர்கொள்வதற்கு மனோதைரியத்தையும் நல்குவானாக!

அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2004.03.23


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page