Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்


அகத்தையும் புறத்தையும் பரிசுத்தப்படுத்தி பழுக்கக் காய்ச்சித் தட்டியெடுத்து உருவமைக்கப்பட்ட மாசற்ற பத்தரை மாற்றுப் பசும் பொன்னாய் முஸ்லிமை மாற்றியமைக்க வந்த புனித ரமழான் நேற்றுடன் புறப்பட்டுவிட்டது. கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலன்களை அடக்கி, இரவு, பகல் பாராது பல்வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, பாவமன்னிப்புக் கோரி, தான தர்மங்கள் செய்து, முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கையை ஒரு முஸ்லிம் ஒரு மாத கால ரமழானில் வாழ்ந்தான்.

புலன்களுக்குக் கட்டுப்பாடு, எண்ணத்துக்குக் கட்டுப்பாடு, சிந்தனைக்குக் கட்டுப்பாடு, பேச்சுக்குக் கட்டுப்பாடு, செயலுக்குக் கட்டுப்பாடு என எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு. இதுதான் உண்மையில் ரமழான். குறித்த நேரத்தில் உண்ண, அருந்த, குறித்த நேரத்தில் உண்ணலை, பருகலை நிறுத்த முழுமையான கட்டுப்பாடான வாழ்க்கை.

இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல், கீழ்ப்படிதல், அடிபணிதல் என பொருள்படும். முஸ்லிம் என்பவன் கட்டுப்படுபவன், கீழ்ப்படிபவன், அடிபணிபவன்.

அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, கட்டுப்பட்டு நடப்பவன் முஸ்லிம். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மேலும் அல்லாஹ் யார் யாருக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு பணித்திருக்கின்றானோ அவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனது இஸ்லாம் முழுமை பெறுகிறது.

வல்ல அல்லாஹ் தனக்கு கட்டுப்படும் படி மனிதனை ஏவியது போல் தனது தூதருக்கும் காரியம் உடையவர்களுக்கும் கட்டுப்படும் படி ஏவியுள்ளான். புனித அல்-குர்ஆன் பின்வருமாறு இயம்புகின்றது:

“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்! மேலும் தூதருக்கும் உங்களில் காரியம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்!” (04 : 59)

இபாதத்களில் (வணக்க வழிபாடுகளில்) தலையானது தொழுகை. அதில் பிரவேசித்ததும் ஒரு முஸ்லிம் அல்லாஹ் தஆலாவிடம் ஆரம்பமாக உறுதி வார்த்தை பகன்று செய்கின்ற பிரகடனம் அல்லாஹ்வுக்கு அவன் கீழ்ப்படிதலையே துல்லியமாக பளிச்சிடுகின்றது. அது இவ்வாறு அமைகிறது:

“வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் எனது முகத்தை ஒருமுகப்பட்டவனாக திருப்பிவிட்டேன். மேலும் நான் இணைவைப்பவர்களைச் சேர்ந்தவனல்லன். நிச்சயமாக எனது தொழுகையும் எனது வணக்கமும் எனது வாழ்வும் எனது மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு உரியனவாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். மேலும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன்.”

அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடத்தல், அவன் தடுத்தவற்றை அணுகாதிருத்தல், அவனின் கட்டளைகளை மதித்தல், அவன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதல், அவனின் வழிகாட்டலை மனப்பூர்வமாக ஏற்றுப் பின்பற்றல், மொத்தத்தில் அல்லாஹ் சொன்னபடி வாழல். இவ்வாறுதான் ஓர் உண்மை முஸ்லிம் வாழ்வான், வாழக் கடமைப்பட்டவன்.

ஓர் இறை விசுவாசி அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பது போலவே அவனது தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடப்பான். இது அவனின் ஈமானின், இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும். இது இன்றி அது இல்லை. அது இன்றி இது இல்லை.

அல்லாஹ் தஆலாவின் போதனைகளை, வழிகாட்டல்களை மனித குலத்துக்கு அப்படியே அப்பழுக்கற்ற முறையில் எத்திவைத்ததோடு, அவற்றுக்கு சொல்லாலும் செயலாலும் அங்கீகாரத்தாலும் பொது விரிவுரையாகத் திகழ்ந்தார்கள் உத்தம தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். அன்னாரின் ஒட்டுமொத்த வாழ்க்கை அவனி வாழ் மக்கள் அனைவரும் அழகிய முன்மாதிரியாக நம்பி, ஏற்று பின்பற்றியொழுக வேண்டிய சம்பூரண வாழ்க்கைத் திட்டமாகும்.

ஒரு முஸ்லிமானவன் தனி மனித வாழ்விலோ, கூட்டு வாழ்விலோ இறுதி நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அணு அத்தனையும் அப்படியே பின்பற்ற வேண்டியதன் கட்டாயம், அவர்களுக்கு கீழ்ப்படிந்து தன் வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டியதன் கட்டாயம் அல்லாஹ்வால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்-குர்ஆனின் ஓரிடத்தில் அல்லாஹ் இப்படிச் சொன்னான்:

“தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்! மேலும் அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்!” (59 : 07)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவேன், அவனின் தூதருக்கு கட்டுப்பட மாட்டேன் என எந்த ஒரு முஃமினும் கூறவோ, வாதம்புரியவோ முடியாது, கூடாது. அவ்வாறு கூறினால் அல்லது வாதிட்டால் அவன் தெளிவாகவே இஸ்லாத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டான்.

ஒரு விவகாரம் குறித்து அல்லாஹ்வும் தூதரும் இதுதான், இப்படித்தான் என ஒரு முடிவை, தீர்ப்பை தந்த பின் அவ்விடயம் தொடர்பில் வேறொரு தெரிவு ஒரு விசுவாசிக்கு இருக்க முடியாது, வேறொரு தெரிவை அவன் நாடவோ, தேடவோ கூடாது. இது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுதலைச் சார்ந்ததாகும். அருள் மறையில் அல்லாஹ் நவில்கின்றான்:

“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால் அவர்களுடைய காரியத்தில் ஒரு விசுவாசியான ஆணுக்கோ, ஒரு விசுவாசியான பெண்ணுக்கோ விருப்பம் எடுத்துக்கொள்வதற்கில்லை.” (33 : 36)

அல்லாஹ் தஆலாவின் தீர்ப்புக்களை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது போல அவனின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தீர்ப்புக்களையும் ஒரு முஃமின் உளப்பூர்வமாக ஏற்றாக வேண்டும். இது ரஸூலுக்கு கீழ்ப்படிதலாகும். அல்லாஹ் தன் திரு மறையில் அவனின் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கி கூறுகிறான்:

“உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி பின்னர் நீர் செய்த தீர்ப்பு பற்றி தங்கள் மனங்களில் அதிருப்தி பெறாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.” (04 : 65)

இறைத் தூதரின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு மூன்றாம் நபரொருவரின் தீர்ப்பை நாடுவது எவ்வளவு பாரதூரமானது என்பதை பின்வரும் சம்பவம் உணர்த்துகின்றது:

ஒரு நாள் தமக்கிடையில் பிணங்கிக்கொண்ட இரு நபர்கள் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தீர்ப்புக் கோரி வந்தனர். நபியவர்கள் அவ்விருவருக்குமிடையில் தீர்ப்புச்செய்தார்கள். தனக்குச் சாதகமாக தீர்ப்பு அமையாதவர் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களிடம் போவோம் என்றார். இருவரும் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களிடம் சென்றனர். நடந்தவற்றை எல்லாம் இருவரிடமும் விலாவாரியாக விசாரித்த உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) 'நான் உங்களிடம் வந்து உங்கள் இருவருக்குமிடையில் தீர்ப்புச்செய்யும் வரை நீங்கள் இருவரும் இவ்விடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்!' என அவ்விருவருக்கும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். சென்றவர்கள் வாளுடன்தான் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் தீர்ப்பளித்த பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்களிடம் செல்வோம் என வேண்டி மற்றவரையும் அழைத்துக்கொண்டு தன்னிடம் வந்த அம்மனிதரை அவ்விடத்திலேயே வெட்டிக் கொன்றுவிட்டார்கள். இந்த நிகழ்வு தஃப்ஸீர் இப்ன் கஸீரில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வுடைய தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாதவருக்கு தனது தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை செயல் வடிவில் பதித்துவைத்தார்கள் உமர் (ரழியல்லாஹு அன்ஹ்) அவர்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் சம்பூரணமாக வழிப்பட்டு வாழும் ஒரு முஃமினின் உண்மையான நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும்.

தனக்கும் தன் ரஸூலுக்கும் கட்டுப்படுமாறு நம்மைப் பணித்த வல்ல அல்லாஹ் நம்மில் காரியமுடையவர்களுக்கும் கட்டுப்படும்படி ஏவினான். வீட்டின் காரியம் தந்தையிடம் அல்லது கணவனிடம். கடையின் காரியம் முதலாளியிடம். தொழிலகத்தின் காரியம் முகாமையாளரிடம். அலுவலகத்தின் காரியம் மேலதிகாரியிடம். வகுப்பறையின் காரியம் ஆசிரியரிடம். பாடசாலையின் காரியம் அதிபரிடம். மஸ்ஜிதின் காரியம் நிர்வாகிகளிடம். சங்கத்தின் காரியம் தலைவரிடம். இப்படித்தான் காரியமுடையவர்கள் என்பதற்கு விளக்கம் அமைகின்றது.

இந்த வகையில் மனைவி கணவனுக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கும் தொழிலாளி முதலாளிக்கும் கீழதிகாரி மேலதிகாரிக்கும் மாணவர்கள் ஆசிரியருக்கும் ஆசிரியர்கள் அதிபருக்கும் ஜமாஅத்தார் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் சங்க அங்கத்தவர்கள் தலைவருக்கும் கட்டுப்பட்டாக வேண்டும்.

“ஒருவருக்கு சிரம்பணியும்படி ஒருவரை நான் ஏவுவதாக இருந்தால் பெண்ணை அவளின் கணவனுக்கு சிரம்பணியுமாறு நான் ஏவியிருப்பேன்.” (அறிவிப்பவர் : புரைதஹ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

இந்த நாயக வாக்கியம் மனைவி கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதன் கட்டாயம் பற்றி பேசுகின்றது. பின்வரும் இறைவசனம் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது:

“நீர் அவ்விருவருக்கும் (தாய்க்கும் தந்தைக்கும்) இரக்கத்தினால் பணிவெனும் இறக்கையை தாழ்த்துவீராக!” (17 : 24)

மாணவர் ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்கு கழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் அறிவு பெறச் சென்ற நபி மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் அல்லாஹ் தஆலா முன்மாதிரியை வைத்துள்ளான். சுவாரஸ்யமான இந்நிகழ்வை புனித இறை மறை தனக்கே உரிய நிகரற்ற நடையில் பதிவு செய்துவைத்துள்ளது. நபி மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் கழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை நோக்கி தனது முழு அளவிலான கட்டுப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள்:

“அல்லாஹ் நாடினால் பொறுமையாளனாகவும் நான் உமக்கு கட்டளைக்கு மாறுசெய்யாதவனாகவும் என்னை நீர் காண்பீர் என அவர் (மூஸா) (அலைஹிஸ் ஸலாம்) கூறினார்.” (18 : 69)

விருப்பமோ, விருப்பமில்லையோ ஒவ்வொருவரும் தனது காரியம் எவர் கைவசமுள்ளதோ அவருக்கு அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாத விடயங்களில் கட்டுப்பட்டாக வேண்டும். காரியமுடையவர் தன்னைவிட தகுதியால், திறமையால், தகைமையால் குறைந்தவராக இருந்தாலும் சரியே. பின்வரும் ஹதீஸ் இதனை சுட்டிக்காட்ட போதுமானது:

“கேட்டு, வழிப்பட்டு நடவுங்கள்! ஓர் அபீஸீனிய அடிமை உங்கள் மீது நியமிக்கப்பட்ட போதிலும் சரியே.” (அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)

கீழ்ப்படிதல் ஒவ்வொரு தனி மனிதனிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் அத்தியாவசியமான பண்பாகும். சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தவனும் கட்டுப்பட்டு நடக்கும் உன்னத பண்பாடுமிக்கவனாக இருக்கும் காலமெல்லாம் சமூகம் கட்டுப்பாடுள்ளதாக மிளிரும். இல்லையெனில் கட்டுப்பாடற்ற, சட்டத்தையும் ஒழுங்கையும் அனுசரிக்காத, தான்தோன்றித்தனமான சமூக அமைப்பே எழுந்து நிற்கும், காட்டு சட்டம் அரசோச்சும்.

இன்று எவரும் எவருக்கும் கட்டுப்படத் தயாரில்லை. நான் யாருக்கும் கீழ்ப்படிய மாட்டேன், எல்லோரும் எனக்கு கீழ்ப்படிய வேண்டும், என் விரல் அசைவுக்கு எல்லோரும் இயங்க வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இது தற்காலத்தில் நமக்கெல்லாம் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோதனையும் பயங்கர சமூகப் பிணியும் எனச் சொன்னால் அது மிகையாகாது. தலைமைத்துவ பேராசை நிறையப் பேரை இந்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இதன் கிரயத்தை உணர்ந்தோ, உணராமலோ நாம் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.

தலைமைத்துவப் பயிற்சி என்ற சொற்றொடர் ஒரு வேளை நம்மை இப்பேராபத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்குமோ? நான் தலைவனாக வேண்டும், கட்டளை இடுபவனாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுகிறாரோ? கீழ்ப்படிதல் பயிற்சி, கட்டுப்பாட்டுப் பயிற்சி போன்ற சொற்றொடர்கள் பிரயோகிக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் பயிற்சி நெறிகள், பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டால் என்ன?

அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் காரியமுடையவர்களுக்கும் வழிப்பட்டு நடக்கின்ற உண்மையான முஸ்லிமை உருவாக்க வந்த ரமழான் விடைபெற்றுவிட்டது. பெரும் குதூகலத்துடன் பெருநாளைக் கொண்டாடுகிறோம். உடைகளை மாற்றிக் கொண்டுள்ளோம். புத்தாடைகள் அணிந்துள்ளோம். எண்ணங்களை, சிந்தனைகளை, பார்வையை, நடத்தையை, பண்பாட்டை, போக்கை, அமைப்பை, திட்டங்களை மாற்றிக்கொண்டோமா? புதுப்பித்துக்கொண்டோமா? முயலுவோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் உதவுவான்.

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


2009.09.17


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page