Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 - கி.பி. 2009


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


இந்து சமுத்திரத்தின் நித்திலம் இலங்கைத் தீவின் வட புலத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகள் நிறைந்த நீலக் கடலின் உருமலுடன் வாழ்க்கைப் படகோட்டும் மக்கள் நீண்ட நெடுங் காலமாக வசித்து வரும் பூர்வீகப் பிரதேசங்களுள் ஒன்றுதான் முல்லைத்தீவு. ஈழத்து முஸ்லிம்களின் சன்மார்க்க வழிகாட்டல் கேந்திரமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு இப்பிரதேச மண்ணில் ஒரு மாவட்டக் கிளை 1984 முதல் இரண்டரை தசாப்தங்களாக இயங்கி ஒரு முக்கிய கால கட்டத்தை அடைந்துள்ள இத்தருவாயில் இதுகாறும் அது கடந்து வந்த வரலாற்றை எழுத்தாக்கி, அதன் சமகால நிலை பற்றிக் குறிப்பிட்டு, வருங்கால திட்டங்கள் குறித்து பேசுகின்ற ஆவணமொன்றாக வெளியிடப்படும் நினைவு மலரில் அடியேனும் எழுதுகோல் பிடிக்க வேண்டப்பட்டமை உள்ளத்தில் உவகையை ஏற்படுத்துகின்றது.

சுமார் மூன்று தசாப்தங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட, பல்லாயிரக் கணக்கானோரை ஊனமுறச்செய்த, பல கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்தொழித்த, பல நூறு பேரை மன நோயாளர்களாக்கிய, பல்லாயிரம் பேரை புலம் பெயரச்செய்த, எண்ணிறந்த விதவைகளையும், அநாதைகளையும் தோற்றுவித்த, அசாதாரண மூளை வளங்கள், துறை விற்பன்னர்கள் பலரை பலிகொண்ட, பௌதீக வளங்கள் பலவற்றை சிதைத்த, பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குள் தள்ளிய, கவர்ச்சிகுமிகு இவ்வழகிய தீவையே குட்டிச்சுவராக்கிய, நாட்டின் முன்னேற்றத்தை பல வருடங்கள் பின்னோக்கி நகர்த்திய பயங்கரவாத யுத்தம் முல்லைத்தீவையும் உருக்குலையச்செய்துள்ளமை ஓர் இருண்ட வரலாறு. போர்க் கெடுபிடிகளுக்கிடையில் 1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு புத்தளம் பிரதேசத்திலும், ஏனைய இடங்களிலும் வாழ நேரிட்ட கதை நம் நாட்டு முஸ்லிம்கள் வரலாற்றில் நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு பெரும் சோகக் கதை.

பலவந்த புலப் பெயர்வுக்கு முன்னர் சொந்த நிலத்தில் சுறுசுறுப்பாக இயக்கம் கண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளை பலவந்த வெளியேற்றத்தின் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இங்குமங்குமாய் சிதறி வாழும் முல்லை முஸ்லிம்களை அரவணைத்து அற வழிகாட்டல் நல்கிவருவது உண்மையில் எல்லோரினதும் மெச்சுதலையும், சிலாகித்தலையும் வேண்டி நிற்கின்றது.

சிரமங்கள் ஆயிரம். சிக்கல்கள் ஆயிரம். பிரச்சினைகளுக்கு குறைவில்லை. அவலங்களுக்கு அளவில்லை. நிம்மதி தொலைந்து போனது. அமைதி அற்றுப் போனது. இவை அத்தனையும் அகதி வாழ்வில் அன்றாட நிகழ்வுகளாகிப் போய்விட்டன. என்று முடியும் சமர், என்று பிறக்கும் சமாதானம், என்று மீளுவோம் நம் பிறந்தகம் என ஏங்கி ஏங்கித் தவிக்கும் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளை நிச்சயமாக ஓர் உயிர்ப்புள்ள, துடிப்புமிக்க அமைப்புதான். இக்கிளையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற பன்முகப்பட்ட பல்வேறு சேவைகள் மூலம் இடம் பெயர்ந்து வாழும் முல்லை முஸ்லிம்கள் பெரிதும் பயனடைந்துவருகின்றனர்.

யுத்த நெருப்பு அணைந்துள்ள இத்தருணத்தில் புலம் பெயர்ந்துள்ள சகோதரர்களுக்கு புது வாழ்வு மலரப் போகும் காலம் அண்மித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் முன்னெப்பொழுதைக்காட்டிலும் பன்மடங்கு பாரமான பொறுப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. மிக மிகப் பொறுப்பான ஒரு கால கட்டத்தை தற்போது அது அடைந்துள்ளது என நான் கருதுகிறேன்.

எனவே விவேகத்துடன், தூர நோக்குடன், இதய சுத்தியுடன், கடந்த கால அனுபவங்களை முன்னிறுத்தி, சாணக்கியமாக காரியமாற்ற வேண்டும்.

முல்லை மாவட்டக் கிளையின் முத்தான பணிகளின் பின்னணியில் நின்றுழைக்கும் பதவிதாங்குநர்களை மகிழ்ச்சிகரமான இக்கட்டத்தில் மனந் திறந்து, வாய் திறந்து பாராட்டாதிருக்க முடியாது. அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்ராஹீம் அவர்களின் தலைமையில் தமது தனிப்பட்ட, தொழில், உத்தியோகம் சார் வேலைப் பளுவுக்கிடையில் நேரமொதுக்கி, பிரயாசை எடுத்து, சமூக பிரக்ஞை மேலிட்ட நிலையில் துடிதுடிப்புடன் இயங்கிவருகின்றனர். அருளாளன் அல்லாஹ் அவர்கள் அனைவரதும் அத்தனை முயற்சிகளையும் அங்கீகரித்து அருள் பாலிப்பானாக!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைப் பணிகளை சுமப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. நேரம், உடற் பலம், மனோ வலிமை, துணிவு, பணம் என பல இதற்குத் தேவை. கரடுமுரடான பாதைகளில், முற்கள் நிறைந்த வழிகளில், சேறும் சகதியுமான, குண்டும்குழியுமான வீதிகளில் பயணிக்க நேரிடும். கொடிய மிருகங்கள், விஷ ஜந்துகள் ஆங்காங்கே பிரயாணத்தின்போது குறுக்கிடலாம். சில பல வேளைகளில் புயல் வீசும். இவற்றையெல்லாம் ஒருங்கு சேர ஏற்றுக்கொண்டு, சீரணித்துக்கொண்டு முன் செல்லும் ஓர் இலட்சியப் பயணம்தான் அது.

இப்பகீரத முயற்சி ஒரு தனிநபர் பொறுப்பன்று. மாற்றமாக ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சகல ஆலிம்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டு தமது பிரதேச மக்களின் சமய, சமூக நலன்களுக்காக ஆவலுடன் உழைக்க முன்வருமாறு அன்பு ததும்ப வேண்டுகிறேன்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளை ஒய்யாரமாக இறுதி நாள் வரை நீடித்து, நிலைத்து தொண்டாற்ற உளமார பிரார்த்திக்கிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.


1430.06.18
2009.06.13
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page