Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012.07.01


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ஆசிச் செய்தி


அல்-குல்லிய்யத் அல்-நூரிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான இத்திஹாத் அல்-நூரிய்யீன் வெளியிடுகின்ற அல்-கலம் காலாண்டு சஞ்சிகையின் கன்னி இதழில் என் இதயக் கமலத்திலிருந்து நான்கு வார்த்தைகள் எழுதுவதையிட்டு இன்புறுகிறேன்.

சியம்பலாகஸ்கொட்டுவ என் இதயத்துக்கு நெருக்கமான ஓர் ஊர். அது போலவே அம்மண்ணுக்கு அணிசேர்க்கும் அறிவுப்பீடம் அல்-குல்லிய்யத் அல்-நூரிய்யாவும் என் அகத்துக்கு நெருக்கமானது. இக்கல்லூரியில் கற்றுத் தேரி பட்டம் பெற்று வெளியேறிய நூரிகளின் அமைப்பான இத்திஹாத் அல்-நூரிய்யீன் என் நெஞ்சத்தில் நிறைந்த ஒன்று.

உற்சாகமாக இளமைத் துடிப்புடன் முன்னேற்றகர பணிகளைப் புரிவதில் வேட்கையுடன் ஈடுபாடு காட்டி வரும் இத்திஹாத் அல்-நூரிய்யீன் முத்திங்கள் வெளியீடொன்றில் முனைப்புடன் முயல்வது உண்மையில் உளப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டியதாகும்.

தகவல் வழங்குதல், அறிவூட்டுதல், அறிமுகம்செய்து வைத்தல், கருத்துக்களை உருவாக்குதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், திறனாய்வு செய்தல் உள்ளிட்ட பல நன்னோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஊடகங்கள் உதவி வருகின்றன.

அச்சு ஊடகம், மின் ஊடகம் என இரு பெரும் வகைகளைக் கொண்டு பொது ஊடகங்களாகவும், சிறப்பு ஊடகங்களாகவும், திறந்த ஊடகங்களாகவும், மட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களாகவும் பல வித நாமங்கள் தாங்கி எண்ணிறந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், வலைத்தளங்கள் விரவிக்கிடக்கின்றன.

ஊடகத்தின் உண்மையான நோக்கங்களை மனதிற்கொண்டு தற்சாய்வு, பகைக்காய்வின்றி மனித குலத்தின் நன்மையை மாத்திரம் ஏக குறியாகக் கொண்டு தனிநபர், குடும்ப, சமூக, அறிவு, ஒழுக்க, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக கண்ணும்கருத்துமாய் வரிந்துகட்டிக்கொண்டு காரியமாற்றுகின்ற ஊடகங்கள் வெகு சொற்பமாகும். ஆக்கத்துக்கு பங்களிப்புச் செய்ய வேண்டிய ஊடகங்கள் அழிவுக்கு பங்களிப்புச் செய்துவருகின்றமை பெரும் கவலையைத் தருகின்றது.

இன்னுமொரு வகையில் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் ஊடகங்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இஸ்லாத்தின் ஒரு சில பகுதிகளை மாத்திரம் தம் ஊடகங்களின் கருப்பொருளாக, கருத்தாடல் பொருளாக எடுத்துக்கொண்டு அவைதான் ஒட்டுமொத்த இஸ்லாம் என காட்டிவருகின்றமை பெரும் வேதனையைத் தருகிறது. வெறும் தம் இயக்கங்களின் ஊதுகுழல்களாக மாத்திரம் இயங்கும் ஊடகங்களும் இதிலடங்கும். இந்தப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஊடகங்களில் புறவயநோக்கைவிட அகவயநோக்கே மேலோங்கி நிற்க அவதானிக்கலாம்.

ஊடக அறிவு, அனுபவம், பரிச்சயம், பயிற்சி எதுவுமின்றி ஏதோ செய்ய வேண்டுமென்பதற்காக அல்லது குறுகிய நோக்கங்கள், அற்ப ஆசைகள், சொற்ப இலாபங்களை அடைந்துகொள்ள வேண்டுமென்பதற்காக தற்காலத்தில் பலர் ஊடகங்களை வெளிக்கொணர்கின்றனர்.

சமகால ஊடகங்களில் பயனுள்ளவை எவை, பயனற்றவை எவை என ஒரு சராசரி மனிதனால் பிரித்தறிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஊடக உலகு குழம்பிப்போயுள்ளது, மக்களையும் குழப்பிவைத்துள்ளது. மொத்தத்தில் ஊடகங்களின் நன்மைகளைக்காட்டிலும் தீமைகள் மிகைத்து நிற்கின்றன எனக் கூறினால் அது மிகைப்பட்ட கூற்றாக இராது.

இந்நிலையில் ஊடகங்களின் யதார்த்தபூர்வ நோக்கங்களை மையப்படுத்தி அல்லாஹ்வுக்காக என்ற கலப்பற்ற தூய எண்ணத்துடன், பரந்து விரிந்த மனப்பான்மையுடன் எடுக்கப்படுகின்ற முயற்சிகள் சிலாகிக்கப்பட வேண்டியவை, தட்டிக்கொடுக்கப்பட வேண்டியவை, கைகொடுக்கப்பட வேண்டியவை. அதிலும் ஷரீஆ அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இத்தகைய தொண்டை செய்கிறார்கள் என்றால் அது இன்னும் உறுதிவாய்ந்ததாக இருக்கும் அல்லவா? எனவே மேன்மேலும் அரவணைத்து ஆதரவளிக்கப்பட வேண்டியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இத்திஹாத் அல்-நூரிய்யீன் துணிந்து களமிறங்கியுள்ள ஊடக முயற்சியையும் அவர்களின் மும்மாத வெளியீட்டையும் அடியேன் பார்க்கிறேன்.

இத்திஹாத் அல்-நூரிய்யீனில் பல வகையான திறமைசாலிகள் உள்ளனர். அவர்களின் ஆற்றல்கள் இந்த ஊடக முன்னெடுப்பில் ஈடுபடுத்தப்படுமானால் விதம் விதமான அனுகூலங்களை உலக மாந்தர் நிச்சயம் கொய்துகொள்வர்.

மனித வளம், பண வளம் இரண்டும் உரமாக இடப்பட்டு அர்ப்பண சிந்தையுடன் கூடிய கடும் உழைப்பை அடி ஆதாரமாகக் கொண்டு அல்-கலம் வெளிவருகின்றது என்பது எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியுமான சர்வ உண்மை. இப்பகீரத முனைவு தொய்வின்றி தொடர்வதானால் சமூகத்து அங்கங்களின் மனப்பூர்மான, தாராளமான பக்கபலம் என்றும் இன்றியமையாதது. எத்தனையோ தரமான ஊடகங்கள் சர்வதேச மட்டத்தில் பேரும் புகழும் தட்டிக்கொண்ட ஊடகங்கள் உட்பட இடைநடுவில் சமூகத் தளத்திலிருந்து காணாமற் போனதற்கான, சொல்லாமல் பேசாமல் ஒளிந்துகொண்டமைக்கான பிரதான காரணம் சமூகம் அவற்றை ஆதரித்து பலப்படுத்தாமையாகும். இதன் நட்டம் சமூகத்துக்கேயன்றி வேறு யாருக்கு?

அல்-கலமை நெஞ்சார பாராட்டுகிறேன், வாயார வாழ்த்துகிறேன். அதன் நீடித்த நெடிய கிரமமான தொடர் வரவுக்கும் அதன் வெற்றிக்கும் இறை அங்கீகாரத்துக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1433.04.12
2012.03.06

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page