Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தின விழா - ஹி.பி. 1431 - கி.பி 2010


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ஆசிச் செய்தி


குறிஞ்சி நிலத்தில் குளுகுளுவென ரம்மியமாய் வீசும் தென்றல் மேனிகளில் ஜில்லென ஸ்பரிசிக்கும் அக்குறணையில் பங்கொல்லாமட கிராமத்தில் பொதுநல மேம்பாட்டுக்காய் ஜனித்து ஓடி, ஆடி உழைத்துவருகின்ற அல்-ஹிலால் பொதுநல அமைப்பு ஒழுங்குசெய்துள்ள இஸ்லாமிய தின விழாவினை முன்னிட்டு வெளிவருகின்ற சிறப்பு மலரில் நான்கு வரிகள் எழுதுவதில் உண்மையில் எனக்கு அலாதி ஆனந்தம்.

பங்கொல்லாமட மாணவர்களின் கல்வி அபிவிருத்தியையும் மற்றும் பாடசாலை, கிராம அபிவிருத்தியையும் முதன்மைப்படுத்தி பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கல், ஆலிம்கள், ஹாஃபில்கள், துறைஞர்கள், சமூக சேவையாளர்கள், மஸ்ஜித்களின் நிருவாக சபைத் தலைவர்கள் போன்றோரைக் கௌரவித்தல், பொது நூலகத் திறப்பு என பல்வேறு நிகழ்வுகள் ஒருசேர அரங்கேற்றப்பட உள்ள பன்முகப் பரிமாணம் கொண்ட இஸ்லாமிய தின விழாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்பாட்டாளர்கள், துணைநிற்பவர்கள் அனைவரும் நிச்சயம் எல்லோரதும் சிலாகித்தலுக்கும், துஆவுக்கும் உரித்தானவர்கள்.

ஒரு கிராமத்தின் எழுச்சி இறையச்சம், அறிவு, இறை நெறி தழுவிய வாழ்வியல், விழுமிய பண்பாடு என்பனவற்றில் முழுமையாக தங்கியுள்ளது. கிராம மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உள்கட்டமைப்பு துணையன்றி வேறில்லை. உள்கட்டமைப்பு நிரப்பமாக அமைந்திருந்து இறையச்சம், அறிவு, இறை நெறி தழுவிய வாழ்வியல், விழுமிய பண்பாடு ஆகியவற்றில் கிராமம் நலிவுற்றிருந்தால் அக்கிராமத்தை முன்னேறிய கிராமமாகக் கருதுவது அறிவுடைமையாகாது.

பங்கொல்லாமட கிராமம் 1984 முதல் எனக்கு பரிச்சயமானது. அரபு மொழி, ஷரீஆ கல்விக்காய் 1984இல் அக்குரணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்வில் மாணவனாக சேர்ந்தது முதல் 1992இல் பட்டம் பெற்று வெளியேறும் வரையிலான காலத்திலும் பின்னர் 1993 முதல் 2001 வரை குருகொடை தார் அல்-உலூம் அல்-மீஸானிய்யஹ்வில் அரபு மொழி, ஷரீஆத் துறைத் தலைவராக கடமையாற்றிய காலத்திலும் பங்கொல்லாமடைக்கு வெவ்வேறு தேவைகளின் பொருட்டு போய் வருவேன். இக்கிராமத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்வில் எனது கல்லூரி தோழர்களாக இருந்தனர். இந்த செய்தியை எழுதும் வேளை அக்காலை பசிய நினைவுகள் என் மனக் கண் முன் வந்து போகின்றன. உண்மையில் நினைக்க இனிதாக இருக்கிறது. இது ஒரு பக்கம்.

அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்வில் எனது கல்லூரி நண்பர்களாக இருந்த பங்கொல்லாமடைச் சகோதரர்கள் கற்றுத் தேரி ஆலிம்களாக வெளியாகி தற்போது சமய, சமூகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் அரபு மத்ரஸாக்களின் அதிபர்களாக, பிரதி அதிபர்களாக, போதனாசிரியர்களாக, சமய, சமூக அமைப்புக்களில் முக்கிய பதவிதாங்குநர்களாக தொண்டாற்றிவருகின்றனர். இது பங்கொல்லாமடைக்கு பெருமையை, மதிப்பை பெற்றுத் தருகின்றது. இதனை எண்ணிப் பார்க்கையில் என் இதயக் கமலத்தில் உவகை பொங்கிப் பிரவகிக்கின்றது. இது மறு பக்கம். மொத்தத்தில் இவை அனைத்தும் எனக்கு நெஞ்ச நிறைவைத் தருகிறது.

பழைய பசுமையான, சுகமான நினைவலைகள் நெஞ்சத்தில் அலைமோதுகின்ற சுந்தரமான இத்தருணத்தில் பங்கொல்லாமட கிராமத்தைக் கட்டியெழுப்ப துடிதுடிப்புடன் உற்சாகமாக வேட்கையுடன் எழுந்து நிற்கும் அல்-ஹிலால் பொதுநல அமைப்புக்கு எனது நல்வாழ்த்துக்கள், நல்லாசிகள், நற்பிரார்த்தனைகள். இறுதி நாள் வரை இவ்வமைப்பு தொய்வின்றி தொடர்ந்து இயங்க வேண்டும்! அதன் பழங்களை மனித குலம் கொய்து கொய்து இன்புற பயன் பெற வேண்டும்! அதன் நிருவாகிகள், அங்கத்தவர்கள் சதா உயிர்ப்புள்ளவர்களாக, துடிப்புமிக்கவர்களாக தொழிற்பட வல்ல இறைவன் அவர்களுக்கு சகல வளங்களையும் வாரி வழங்க வேண்டும்! ஈருலக சௌபாக்கியங்களையும் இந்த நன்னெஞ்சங்களுக்கு அவன் நிரப்பமாகக் கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும்! ஒரு முன்மாதிரியான முஸ்லிம் கிராமமாக பங்கொல்லாமட உயர்ந்து ஒய்யாரமாக மிளிர்ந்து ஒளி பரப்ப வேண்டும்!

229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1431.11.09
2010.10.18

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page