Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் செய்தி


புத்தளத்தின் பாரம்பரிய உப்பளத்துக்கு அண்மையில் கடலோரக் காற்றின் இதத்தோடு இரண்டறக் கலந்து அறிவுப் பணியில் அகவை பதினைந்தை எய்திய நிலையில் பட்டமளிப்பு, கட்டிடத் திறப்பு, அடிக்கல் நாட்டு வைபவங்களை ஒருசேர சந்திக்கும் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் வெளியிட்டுவைக்கின்ற நினைவு மலர் பக்கங்களில் எந்தன் குறிப்புகளை பதிவு செய்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

புத்தளத்தின் பழமையான நாகூர் மஸ்ஜிதில் மிக்க எளிமையான அமைப்பில் ஆரம்ப நாட்களைக் கண்ட குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் இன்று தனக்கென சொந்தமான நிலத்தையும் கட்டிடங்களையும் கொண்டு நிலைபெற்றிருப்பது மிகுந்த சந்தோஷத்துக்குரியதாகும். நிர்வாகிகள், அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட சிரத்தையுடன் கூடிய முயற்சி அல்லாஹ் தஆலாவின் அரவணைப்பை இக்கல்லூரிக்கு இழுத்து வந்துள்ளது எனலாம்.

23 ஆலிம்களையும் 50 ஹாஃபில்களையும் இதுகாறும் உற்பத்திசெய்து உலகுக்கு உவந்தளித்துள்ள உத்தமமான சேவையை இந்தக் கலாசாலை புரிந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்வை நோக்கி பயணித்து வருகின்றமை உண்மையில் நெஞ்ச நிறைவைத் தருகிறது.

கைவிடப்பட்டுள்ள அல்லது அருகிப்போயுள்ள ஒரு அறிவுத் துறையை கற்க, கற்பிக்க வழிசெய்தல், ஓர் அறிவுத் துறையை அதன் அடிப்படைகள், உப பிரிவுகள், உள்ளீடுகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கி செய்முறைப் பயிற்சியுடன் ஆழமாகப் போதித்தல் அறிவை உயிர்ப்பித்தலாகும். ஷரீஆ அறிவுத் துறைகளை இவ்வழி நின்று உயிர்ப்பிக்கும் உயர்ந்த இலட்சியத்தோடு குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் ஜனித்திருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். அறிவுகளை உயிர்ப்பிக்கும் கல்லூரி எனும் அர்த்தம் தருகின்ற ‘குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம்’ எனும் சொற்றொடர் கொண்டு இந்தக் கல்லூரி நாமம் இடப்பட்டிருப்பது இதனை சுட்டி நிற்கிறது.

ஆழம், அகலம் இன்றி வெறும் மேலெழுந்தவாரியாக அறிவுத் துறைகளை போதிக்கும் முயற்சிகள் பொதுவான ஒன்றாக சமகாலத்தில் ஆகிப்போய்விட்டது. மேலோட்டமாக ஏடுகளின் சில பக்கங்களை மாத்திரம் புரட்டி நுனிப்புல்மேய்ந்துவிட்டு கரைத்துக்குடித்துவிட்டோம், துறைபோய்விட்டோம் என எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் மார்தட்டிக்கொண்டும் இருக்கின்ற கண்றாவி நிலை இன்றெல்லாம் சகஜம். இப்பின்னடைவு அறிவுலகில் ஏற்படுத்தியுள்ள விபரீதங்கள் அனந்தம். அறிவில் புலமையை உண்டுபண்ணும்வண்ணம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாயின் அறிவுகளை உயிர்ப்பிக்கும் கல்லூரி என்ற அர்த்தமுள்ள பெயர் தாங்கிய இந்தக் கலாநிலையம் செய்கின்ற ஒரு மகத்தான அடிப்படையான பணியாக இருக்கும்.

ஈற்றில் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூமையும் அதன் தாபகர்கள், நிர்வாகிகள், அதிபர், ஆசிரியர்கள், பட்டதாரிகள், மாணவர்கள், பரோபகாரிகள், அபிமானிகள், ஊழியர்கள் எல்லோரையும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இவ்வறிவுப்பீடம், அதனோடு சம்பந்தப்பட்டவர்கள், அதன் அமைவிடம், சுற்றுப்புறம், சுற்றுச்சூழல், சுற்றி வாழும் மக்கள் சகலரும் இறையருள் பெற்று இனிது வாழ பிரார்த்திக்கின்றேன். நீண்ட நெடிய காலம் இக்கலாசாலை நீடித்து நின்றுழைத்து அறிவுத் துறைகளை உயிர்ப்பித்திட அல்லாஹ் தஆலா அனுக்கிரகம் புரிவானாக!

229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1434.05.25
2013.04.07
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page