Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Condolences

மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்


2009.12.26

ஜனாபா பவ்ஸுல் இனாயா.
61, ஸாஹிரா வீதி,
மாவனல்லை.


அஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

தங்களின் அன்புக் கணவர் மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்தேன். அவர் போன்ற பெருந்தகைகளின் சேவை சமூகத்துக்கு தேவையான நேரத்தில் அன்னார் எம்மை விட்டும் விடைபெற்றுக்கொண்டமை கவலையை இரட்டிப்படையச் செய்கின்றது.

நல்லறிவு புஷ்பமாக புஷ்பித்து, முன்மாதிரியான நல்ல பல தொண்டுகளை முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிவிட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிக்கொண்ட உங்கள் கணவர் என்றும் என் இதயத்தில், மக்கள் இதயங்களில் வாழ்பவர். மென்மை, அமைதி, அடக்கம், பணிவு, எளிமை போன்ற அதி உயர் பண்புகளுடன் மிளிர்ந்த அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

அரபு ஆசிரியராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, அரபு மொழி பிரதிப் பணிப்பாளராக அரச சேவையில் முத்திரை பதித்து ஈழத்தில் அரபு மொழி உயர்வுக்கு உழைத்தவர் அவர். வெலிகம பாரி அரபுக் கல்லூரி, தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் அதிபர் பதவியை அலங்கரித்த பெருமை அவருக்குண்டு. மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதாவின் நிருவாக சபை உறுப்பினராக தொண்டு புரிந்தவர். ஒரு காலை வரக்காபொல பிரதேசக் காதியாக சேவையாற்றிய பின் காதிச் சபை அங்கத்தவராக தேசிய மட்டத்தில் நியமிக்கப்பட்டதன் மூலம் காதிச் சேவையிலும் காற் பதித்தவர்.

வெலிகம பாரி அரபுக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து இஸ்லாமிய ஷரீஆவின் ஞானப் பெருக்குடன் அமைதியாய் வாழ்ந்த கணவான் மவ்லவி ஜஃபர் அவர்களின் சொல், செயல், நடவடிக்கை யாவுமே மென்மையானவை என்பது ஏனையோரை விட உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் அவரின் மேனி கூட மென்மையானது தான். அவருடன் முசாபஹா (கைலாகு) செய்யும் எவரும் அவரின் உள்ளங்கை மென்மையை உணரக்கூடியதாக இருந்தது. நடந்தால் பூமிக்குக்கூட பாரமில்லாதவர். ஒரு சாதுவான கல்விமானாகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை முஸ்லிம் சமூகம் சார்பாக வாழ்த்திப் பாராட்டும் பொருட்டு அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்துக்கு சிரமம் பாராது வருகை தந்திருந்த தங்கள் பாசத்திற்குரிய கணவரை வைபவ முடிவின் பின் கொல்லுப்பிட்டி மஸ்ஜிதில் வைத்து சந்தித்தேன். பாதரட்சை அணிவதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அன்னாருக்கு பணிந்து, குனிந்து, குந்தியிருந்து பாதரட்சை அணிவித்து விட்டேன். நற்குண சீலரான நரைத்த ஓர் ஆலிம் பெருந்தகைக்கு காலணி அணிவதில் உதவக் கிடைத்ததை உண்மையில் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். அதுவே அவரை நான் சந்திக்கும் இறுதி சந்தர்ப்பமாகவும் வல்ல அல்லாஹ் எழுதி விட்டான் போலும்.

இத்தகைய பெரியார் உங்களுக்கு வாழ்க்கைத் துணைவராகக் கிடைக்கப் பெற்றமை உண்மையில் தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான். ஒரு நல்ல வாழ்க்கைத் துணைவரை இழந்த துயரத்தில் நீங்களிருக்க, நானுமோ ஒரு சிறந்த ஆலிமை இழந்த துக்கத்தில் இருக்கின்றேன்.

பன்முகப்பட்ட சமய, சமூகத் தொண்டரான இம்மகானின் மறைவு உண்மையில் ஒரு பெரும் இழப்பு தான். சமூகம் அவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது. பரந்துபட்ட அவரது பணிகளுக்கு உங்களின் ஒத்திசைவும், ஒத்துழைப்பும் நிச்சயம் இருந்திருக்கவே வேண்டும். அதற்காக நீங்கள் சமூகத்தின் நன்றியறிதலுக்கு உரித்தானவர்கள்.

இத்தருனத்தில் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கனத்த உள்ளத்துடன், பனிக்கும் கண்களுடன் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன். ஆறுதல் சொல்வதற்கு, தேற்றுவதற்கு வார்த்தைகள் போதாது தான். இருப்பினும் ஏதோ ஒரு வழியில் ஆறுதல் சொல்லியாக வேண்டும் என்ற வகையில் இவ்வரிகளை எழுதுகிறேன்.

வல்லவன் அல்லாஹ் மறைந்த தங்கள் கணவரின் மறு உலக வாழ்வை சிறப்பாக்கி, மணமாக்கி வைப்பானாக! தங்களின் மிகவும் அன்புக்குரிய ஒருவரை பிரிந்த துயரில் ஆழ்ந்துள்ள உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பொறுமையையும் இக்க‘;டமான நிலையை முகங்கொள்வதற்குத் தேவையான மனோதிடத்தையும் அவன் நல்குவானாக!

வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
தலைவர், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page