Condolences
பெண் கல்விக்காக தன்னை அர்ப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
அஷ்-ஷைக் எச். அப்துல் நாசர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கிண்ணியா கிளைத்
தலைவர் இஸ்மாயீல் மௌலானாவின் மரணம் எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்
எச். அப்துல் நாஸர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லறிவு புஷ்பமாக புஷ்பித்து, பிறருக்கும் முன்மாதிரியான நல்ல பல பணிகளை
முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிவிட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிக்கொண்ட இஸ்மாயீல்
மௌலானா என்றும் எம் இதயங்களில் வாழ்பவர். தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகள் அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கிண்ணியா கிளையின் தலைவராகப் பணியாற்றியவர். ஜம்இய்யாவின்
மத்திய சபை உறுப்பினரான அவரின் முன்னேற்றகரமான ஆலோசனைகள் எப்போதும் அதன் வளர்ச்சிக்கு
பெரிதும் உதவின. சுமய்யா பெண்கள் அரபுக் கல்லூரியை கிண்ணியாவில் நிறுவி, இறுதி
வரை அதன் அதிபராகவிருந்து பெண் கல்விக்கு உரம் ஊட்டியவர். கிண்ணியாவில் அமையப்பெற்றுள்ள
ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பாடவிதானத்துக்குப் பொறுப்பாயிருந்தவர். கபூரி
பட்டதாரியான இவர் பயிற்றப்பட்ட அரபு ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.
அண்மைய கிண்ணியா அசம்பாவிதங்களின் போது ஜம்இய்யாவின் கிண்ணியா கிளை மேற்கொண்ட
அபார அமைதி முயற்சிகளுக்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும்
எண்ணி நாம் அகமகிழ்ந்து கொண்டிருந்த வேளையில் தான் அவரது மரணச் செய்தி எம்
கண்களைப் பனிக்கச் செய்தது.
அவரின் சமய, சமூகப் பணிகளை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்கின்ற அதே சந்தர்ப்பம்
அவரின் மறு உலக வாழ்வு சிறக்கப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவுத்
துயரில் ஆழ்ந்துள்ள அவரின் மனைவி, பிள்ளைகளுக்கும், ஏனைய உற்றார் உறவினர்களுக்கும்
ஜம்இய்யாவின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2003.12.11
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்