Condolences
நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஏகப்பட்ட சமய, சமூகப் பணிகளை திரை மறைவிலிருந்து ஆற்றிக்
கொண்டிருந்த நீதியரசர் எம். ஜமீல் இறையடி சேர்ந்த செய்தி சமூகத் தளத்தில் பலரைப்
போன்று என்னையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியது. இவ்வாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை
தெரிவித்துள்ளார்.
அமைதி, அடக்கம், பணிவு, எளிமை, நேர்மை, நிதானம் போன்ற அதி உயர் நற்பண்புகள்
மிக அரிதாக காணப்படும் தற்காலத்தில் இப்பண்புகளின் உதாரண புருஷராக விளங்கியவர்
நீதியரசர் ஜமீல். நிறைகுடம் தளம்பாது என்பதற்கொப்ப ஆழமான ஞானப் பெருக்குடன்
அமைதியாய் வாழ்ந்த பெருமகன் அவர். சட்டத்துறை, நீதித்துறை ஆகியவற்றை துறைபோகக்
கற்றிருந்த அவர் இஸ்லாமிய சட்டத்துறையிலும் ஞானம் பெற்றிருந்தார்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் பல்வேறு சேவைகளை புரிந்திருந்த
போதிலும் அவற்றை அவர் திரை மறைவிலிருந்து ஆற்றியிருந்ததனால் அவை அவரின் பெயரில்
அறியப்படவில்லை. ஒளிவு மறைவின்றி சொல்வதாயின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
இலங்கை பைத்துல் மால், இல்மா சர்வதேச பாடசாலை, அமானா முதலீட்டு நிறுவனம் ஆகியவை
உள்ளிட்ட சமய, சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டு முன்னணி நிறுவனங்கள் இவரது
சேவையை நிறையவே பெற்றன. பந்தா, பகட்டின்றி எண்ணிறந்த பன்முகப்பட்ட பணிகளை சமூகத்துக்கு
நல்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நம்மை விட்டு அவர் விடைபெற்றுக் கொண்டிருப்பது
உண்மையில் எமது கவலையை பன்மடங்காக்குகின்றது.
மௌனம் அவரது அணிகலன். மிகக் குறைவாகவே அவர் பேசினார். பேசினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
வார்த்தைகளுடன் கருத்துச் செறிவுள்ள சில வசனங்கள். அவ்வளவு தான். ஏறத்தாள எல்லோரும்
இம்மகானை நேசித்தனர் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது. இந்நாட்டு
முஸ்லிம்கள் கம்மியாக கால் பதித்த அதி உயர் பதவியான நீதியரசர் பதவி மூலம் முஸ்லிம்
சமூகத்துக்கு மங்கா பெருமை தேடித் தந்தவர். பொறுப்பான பல பதவிகள் அவரைத் தேடி
வந்தன. அவை அவரை அலங்கரித்தன என்பதை விட அவர் மூலம் அவை அலங்காரம் பெற்றன என்பதே
உண்மை.
நீதியரசர் பதவியிலிருந்தவாறே சமூகத் தொண்டில் ஆர்வம் காட்டிய அவர் இளைப்பாறிய
பின் சமூகத் தொண்டிலேயே அதீத அக்கறையுடன் ஈடுபட்டுழைத்தார். இலங்கை பைத்துல்
மால் தலைவராக, இல்மா சர்வதேச பாடசாலை ஆளுநர் சபைத் தலைவராக, அமானா முதலீட்டு
நிறுவனத்தின் ஷரீஆ மேற்பார்வை சபை உறுப்பினராக இன்னும் பொது அமைப்புக்கள் பலவற்றில்
பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை தாங்கிய நிலையில் செம்மையாக பொறுமையுடன் அவை
அவற்றுக்குரிய கடமைகளை அவ்வப்போது நிறைவேற்றி முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய ஷரீஆ எழுத்தாக்கங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம்
காட்டினார். குறிப்பாக இஸ்லாமிய சட்டத்துறை அவரது விருப்பத்துக்குரிய பகுதியாக
இருந்தது. சந்தேகங்கள் எழும் போதெல்லாம் ஆலிம்களுடன் தொடர்பு கொண்டு தெளிவுகளைப்
பெற்றுக் கொள்வார்.
ஆரவாரமின்றி அமைதியாக, முகஸ்துதியின்றி இதய சுத்தியுடன், பெருமையின்றி பணிவுடன்,
ஆடம்பரமின்றி எளிமையுடன், அவசரமின்றி நிதானத்துடன் இயங்கிய இம்மகானின் மறைவு
இலகுவில் நிரப்ப முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. சமூகம் அவருக்கு
எல்லையின்றி கடமைப்பட்டுள்ளது. நீதியரசர் ஜமீல் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய
ஓர் அத்தியாயம் என்பது எனது பணிவான துணிபு.
பரிசுத்த ரஹ்மான் அவரது பாவங்களை மன்னித்து, அவரின் நற்கிரியைகளை அங்கீகரித்து
ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்கி கௌரவிப்பானாக! அன்னாரது குடும்பத்தவர்களுக்கு
பொறுமையையும் ஆறுதலையும் நல்குவானாக!
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்