Condolences
கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
- பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
கராச்சி ஜாமிஆ அல்-உலூமில் இஸ்லாமிய்யாவின் பகுதித்
தலைவர் கலாநிதி முப்தி நிஸாமுத்தீன் அவர்கள் கடந்த ஞாயிறன்று தமது வீட்டிலிருந்து
கலாசாலை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் கோரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பான
அதிர்ச்சிச் செய்தி அனைத்திடங்களிலுமுள்ள இஸ்லாமிய நெஞ்சங்களிலே கூரம்பாய்ப்
பாய்கிறது.
முகங் கண்டறியப்படாத பசுத் தோல் போர்த்திய ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தில் நுழைந்தபோது
கலாநிதி முப்தி நிஸாமுத்தீன் அவற்றிற்கு இரையானார். ஆப்கான் யுத்தத்தின் போது
கெடுபிடிக்காரர்களுக்கு எதிரான புனிதப் போருக்கு அவரால் விடுக்கப்பட்ட அழைப்பு
இக்கோரக் கொலைக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என்றே அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா கருத விளைகிறது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச்.அப்துல்
நாஸர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
இப்படு பாதகச் செயலைப் புரிந்தவர்கள் பாக்கிஸ்தான் மண்ணைச் சேர்ந்தோராயும்
இருக்கலாம் அல்லது தூர இடங்களிலிருந்து பயணித்தும் இருக்கலாம். ஆனால் அவர்கள்
கோரச் செயல் 4 வயது முதல் பட்டப் பின் படிப்புக் கற்கை நெறி வரை பாக்கிஸ்தானிலே
இஸ்லாமிய கலாஞானங்களை வழங்கிக் கொண்டிருந்த பெருமைக்குரிய கலா நிலையத்தின்
கல்விமான் ஒருவரை இந்த மண்ணுலக முகட்டிலிருந்து துடைத்தழித்து விட்டது.
இக்கொரூர செயல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைவெளி இலகுவில் ஈடு செய்ய முடியாத
அளவுக்கு விசாலமானது. அஹ்மத் யாசீன், கலாநிதி நிஸாமுத்தீன் போன்ற மா மனிதர்கள்
பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, தமது அவலட்சண முகங்களை வெளியே காட்டாத
தீய சக்திகளால் ஒன்றன் பின் ஒன்றாக உறிஞ்சப் படுவதை உலகுக்கு சீரணித்துக் கொள்ள
முடியாமற் போகலாம். ஆனால் அவை என்னென்ன செய்து கொண்டிருக்கின்றனவோ அவற்றுக்கான
விலையை கொடுக்க வேண்டிய காலம் நிச்சயம் வந்து சேரும்.
பொறுமையைக் கடைபிடித்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவோமாக! கலாநிதி நிஸாமுத்தீன்
அவர்களை எல்லாம் வல்ல இறைவன் சொர்க்கத்தின் பால் பொருந்திக் கொள்வானாக!
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2004.06.01
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்