Condolences
தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
ஈகைக் கடல் நளீம் ஹாஜியார் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று
அவன் பக்கம் திரும்பிக் கொண்ட செய்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை ஆராத்
துயரில் ஆழ்த்தியுள்ளது. தனவந்தர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அண்மைக் காலத்தில்
திகழ்ந்த அவரின் பிரிவுச் செய்தி கேட்டு கவலைப்படாதோர் யாருமிருக்க முடியாது.
இவ்வாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்
அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர் குறிப்பிடுகின்றார்.
அல்-ஹாஜ் நளீம் அவர்கள் அல்லாஹ் தனக்களித்த செல்வத்தை அவனின் திருப்தியை நாடி
அவனது சன்மார்க்கத்துக்காக செலவளித்து அதில் அலாதியான இன்பம் கண்டவர். மஸ்ஜித்
என்றாலும், மத்ரசா என்றாலும், தனி நபர் தேவைகள், சமூகத் தேவைகள் என்றாலும்
அவரின் பேருதவி அங்கெல்லாம் இருந்ததை மக்கள் நன்கறிவர். ஒரு வறிய குடும்பத்தில்
பிறந்து வறுமையின் கோரப் பிடியினால் ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக்
கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காய் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி செல்வந்தராய்
ஆன பின்னும் தனது முன்னைய நிலையை மறக்காது, வறுமையின் கொடுமையை சதாவும் தன்
மனக்கண் முன் நிறுத்தியிறுந்ததனால் ஏழை, எளியோரின் சுக துக்கங்களில் தன் செல்வத்தையும்,
உணர்வையும் பகிர்ந்துகொண்டவர்.
தனது சமூக சேவையை திட்டமிட்டு செயற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய மறுமலர்ச்சி
இயக்கத்தை தோற்றுவித்து இயக்கினார். கறை சேர முடியாமல் கண்ணீறும், கம்பளையுமாயிருந்த
நூற்றுக்கணக்கான முஸ்லிம் யுவதிகளுக்கு கைகொடுத்துதவினார். இப்பொழுது போன்று
தனிப்பட்ட, நிறுவன ரீதியிலான உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள் இல்லாத ஒரு காலத்தில்
மஸ்ஜித்களின் கட்டட பணிகளுக்கு வாரி வழங்கிய ஈகைச் செம்மல் அல்-ஹாஜ் நளீம்
அவர்கள் ஒரு வரலாற்று நாயகன் என்பது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாகும்.
தூர நோக்குடன் கூடிய அவரது சமூக, சமய பணிகளுக்கு எடுத்துக்காட்டாக ஜாமிஆ நளீமிய்யாவும்,
இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியும் நிமிர்ந்து நின்று காட்சி தருகின்றன. “நளீம்
ஹாஜியார்” எனும் பெயர் ஒவ்வொரு வீட்டிலும் மொழியப்படும் பெயராக ஆகும் அளவிற்கு
சகல தரப்பினரதும் நன்மதிப்பைப் பெற்றெடுத்த நிலையில் அனைவரை விட்டும் அவர்
விடைபெற்றுக்கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில் அவரது சிறப்பான மறுவாழ்வுக்கு பிரார்த்திக்கும்
ஆயிரமாயிரம் இதயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்துகொள்கின்றது.
அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்