Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Appreciations

உஸ்தாத் மம்ஷாத்
வழமை போல் நேற்றும் அவர் ஞாபகம் சிறகடித்தது


கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதி வருடமும் மூன்றாம் மாதம் மூன்றாம் திகதி வரும்போதெல்லாம் தவறாமல் அவர் ஞாபகம் எனக்கு வந்துவிடும். நேற்றும் (2019.03.03) அதே நிலைதான். ஆம், அவர் வேறு யாருமல்லர். எனக்கு அறிவு போதித்த என் மரியாதைக்குரிய உஸ்தாத் மம்ஷாத் ஹழ்ரத் அவர்கள்தான். அன்னார் 2016.03.03 அன்று போய்ச்சேர்ந்ததால் அவரின் நினைவு மார்ச் மூன்றாம் நாள் தவறாமல் வந்துவிடும்.

உஸ்தாத் ஹபீப் லெப்பை முஹம்மத் மம்ஷாத் (ரஹ்மானி) அவர்களை என் கண்களால் கண்ட முதல் நாள் 1984.09.13. அக்குறணை அல்-ஜாமிஅத் அல்-ரஹ்மானிய்யாவில் நான் மாணவனாக சேர்ந்த நாள் அது. ஆசிரியர் - மாணவர் உறவுதான் எனக்கும் அவருக்குமிடையிலான உறவின் ஆரம்பம்.

கட்டுமஸ்தான தேகம். நீளமான தாடி. எடுப்பான தோற்றம். மிடுக்கான நடை. தளர்வான உடை. சுறுசுறுப்பான இயக்கம். இவற்றின் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் உஸ்தாத் மம்ஷாத் அவர்கள்.

1992.02.20 அன்று எனது கற்கைநெறியை நிறைவுசெய்துகொண்டு அல்-ஜாமிஅத் அல்-ரஹ்மானிய்யாவிலிருந்து வெளிச்செல்லும்வரை உஸ்தாத் மம்ஷாத் அவர்களிடம் அறிவமுதம் அருந்தினேன். தரம் ஒன்றில் தீனிய்யாத் பாடம் அவரிடம் படித்தேன். பின்னர் அக்கீதஹ், தசவ்வுப் பாடங்கள் பெரிய வகுப்புகளில் கற்றேன். மேதை இப்ராஹீம் இப்ன் முஹம்மத் அல்-பாஜூரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் 'துஹ்பத் அல்-முரீத்' மற்றும் இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் 'இஹ்யாஃ உலூம் அல்-தீன்' ஆகிய பெரும் நூல்களை ஹழ்ரத் அவர்களிடமே ஓதினேன்.

ரஹ்மானிய்யஹ் காலத்தில் உஸ்தாத் மம்ஷாத் அவர்களிடமிருந்து அறிவை மட்டும் பெறவில்லை. கூடவே நல் அமல் பயிற்சியையும் பெற்றேன். தஹஜ்ஜுதுக்காக மாணவர்களை அன்னார் மிகுந்த சிரமப்பட்டு எழுப்பிவிட்டதால் தஹஜ்ஜுத் தொழுகையைப் பேணும் பயிற்சியும் அவரிடமிருந்து கிடைத்தது.

இது தவிர இன்னும் பல என் ஞாபகத்தில் பளிச்பளிச்சென வந்து போகிறது. உஸ்தாத் அவர்களின் திருமண வலீமாவில் விருந்துண்டு மகிழ்ந்தேன். அவர் முதன்முறையாக ஹஜ் கடமை முடித்து நாடு திரும்பிய பின் அவரது இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்தேன். அவ்வேளை அஷ்-ஷைக் அபூ பக்ர் ஜாபிர் அல்-ஜஸாஇரி அவர்களின் பேனா சிந்திய 'ஸபீல் அல்-நஜாத்' எனும் சிறுநூலை எனக்கு ஹழ்ரத் அவர்கள் அன்பளிப்புச் செய்தார்.

மம்ஷாத் ஹழ்ரத் அவர்கள் ரஹ்மானிய்யாவில் உஸ்தாத் பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொண்டபோது அன்னாருக்காக அங்கு ஒழுங்குசெய்யப்பட்ட பிரியாவிடை பெரு வைபவத்தில் படிப்பதற்காக இச்சிறியவன் எழுதிய கவிதையும் காதில் ரம்மியமாக ரீங்கரிக்கிறது.

அவரை மீட்டிப் பார்க்க எனக்கு இன்னும் பல உள. அன்னாரது கற்பித்தல், அறவுரைகள், அறிவுரைகள், மிம்பர் உரைகள், கூட்டங்களில் தலைமைதாங்குதல், சன்மார்க்க உறுதி, சத்தியத்தில் விட்டுக்கொடாமை, அடிப்படையான விடயங்களில் ஆடாமை, உப விடயங்களில் தளராமை, சத்தியத்தைச் சொல்வதில் துணிவு, வாழ்க்கையில் பேணுதல், பிரச்சினைகளில் திடமான நிலைப்பாடு என பலதையும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

'புகைபிடித்தலற்ற உலகை நோக்கி ...' மற்றும் 'சிந்தனை ஊற்று' எனும் எனது இரு நூல்களையும் அவற்றின் வெளியீட்டு விழாக்களில் வைத்து ஹழ்ரத் அவர்களே பெருமனதோடு அறிமுகம் செய்துவைத்தார்.

நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் கூட்டங்களில் அன்னாரோடு இரண்டறக் கலந்திருந்தமை, கலந்துரையாடியமை, அவரின் நல்லாலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், ஆர்வமூட்டல்கள், தைரியமூட்டல்கள், ஹாஸ்யங்கள் அப்பப்பா ஒன்றிரண்டல்ல. எதைத் தொட்டுச் சொல்வது, எதை விட்டுச் செல்வது?

மர்ஹூம் மம்ஷாத் ஹழ்ரத் அவர்களை ஓர் ஆலிமாக, உஸ்தாதாக, அதிபராக, வியாபாரியாக, மஸ்ஜித் நம்பிக்கைப் பொறுப்பாளராக, ஹஜ் வழிகாட்டியாக, தாஈயாக சமூகம் கண்டுகொண்டது. அவர் தொட்ட விடயங்களை, சுமந்த பொறுப்புகளை கச்சிதமாகச் செய்து முடிப்பதில் கவனம் எடுத்தார். அவற்றை தூய எண்ணத்துடன் நிறைவேற்றினார். முயற்சிகளின் பலன்களையும் கண்டார்.

உண்மை, நேர்மை, எளிமை, பொறுமை, சகிப்பு, தைரியம் என்பன உஸ்தாத் மம்ஷாத் அவர்களை அலங்கரித்த அணிகலன்கள். இறையச்சம், இதய சுத்தி, தூய எண்ணம், பேணுதல் அவரை உயரவைத்த பண்புகள்.

ஹழ்ரத் அவர்களது ஜனாஸாவில் பங்கெடுத்த பெருவாரி மக்கள் அவரின் இவ்வுலக சம்பாத்தியமும் மறு உலக சம்பாத்தியத்தின் எடுத்துக்காட்டும் என கூறலாம். ஆலிம்கள், ஹாபில்கள், தாஈகள், மஸ்ஜித்களின் நிருவாகிகள், இமாம்கள், மத்ரஸாக்களின் நிருவாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள் பலர் அலைமோதும் உணர்வுகளோடு சங்கமித்த ஓர் இறுதிக் கிரியை அது.

உஸ்தாத் மம்ஷாத் அக்குறணை அல்-ஜாமிஅத் அல்-ரஹ்மானிய்யஹ் தனது கன்னிப் பிரசவத்தில் ஈன்றெடுத்த மூன்று பட்டதாரிகளில் ஒருவர். அவரின் சான்றிதழ் இலக்கம் 02. ரஹ்மானிய்யாவையும் அது நிலைகொண்டுள்ள அக்குறணையையும் அந்தக் குறிஞ்சி மண்ணின் மைந்தர்களையும் சுவாசித்து, நேசித்து மகிழ்ந்தார்.

ரஹ்மானிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் துணைத் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் மர்ஹூம் மம்ஷாத் ஹழ்ரத் அவர்கள். இறையடி எய்தும் தறுவாயிலும் அதே பதவியைத் தாங்கிய நிலையிலேயே இருந்தார். பல சமயங்களில் அவரே கூட்டங்களுக்கு தலைமைவகித்தார். எல்லா ரஹ்மானிகளுக்கும் ஒரு தந்தை போல விளங்கினார். சகல ரஹ்மானிகளும் அவரை ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் வைத்தே மதித்தனர். நத்வாவின் வளர்ச்சிக்கு, உயர்ச்சிக்கு அன்னார் வழங்கிய பங்களிப்பு மகத்தானது. இவ்வமைப்பின் நன்றியும் துஆவும் ஹழ்ரத் அவர்களுக்கு என்றென்றும் இருக்க வேண்டும்.

தன் மைந்தனை ரஹ்மானியாக ஆக்கிய முதல் ரஹ்மானி எனும் சாதனையை நிலைநிறுத்திய பெருமை மம்ஷாத் ஹழ்ரத் அவர்களுக்குண்டு. இது இவ்விடத்தில் மட்டுமல்ல ரஹ்மானிய்யாவின் வரலாற்றிலும்கூட அடிக்கோடிட வேண்டிய ஒரு பதிவாகும்.

ஹழ்ரத் அவர்களின் சேவைகளை நினைவுகூரும் பொருட்டு நத்வா ஓர் ஒன்றுகூடலை அவரின் ஊரான வெலம்பொடவில் 2016.08.17 அன்று அவ்வூரின் பெரிய பள்ளிவாயலில் நடாத்தியது. பலர் கலந்துகொண்ட இந்த ஞாபகார்த்த கூட்டத்தில் ஹழ்ரத் அவர்களின் வாழ்வும் பணியும் ஆலிம் பெருந்தகைகளால் விலாவாரியாக எடுத்துரைக்கப்பட்டன. இவ்வைபவத்தில் 'மம்ஷாத் ஹழ்ரத் வாழ்வும் பணியும்' எனும் மகுடத்தில் அடியேன் ஆற்றிய உரை இச்சந்தர்ப்பத்தில் என் மனத் திரையில் மின்னி மின்னி மறைகிறது. 52 ஆண்டு கொண்ட குறுகிய ஆயுள் படைத்த உஸ்தாத் மம்ஷாத் அவர்கள் பலவகையான பயன்மிக்க, காத்திரமான சமய, சமூக, கல்வித் தொண்டுகளை ஆற்றிச் சென்றிருப்பது அந்த நினைவு விழாவில் வைத்து நிரூபணமானது. இத்தனை பாரிய சேவைகளை அன்னார் புரிந்த காலத்தின் பெரும் பகுதி அவர் கடுமையான வியாதிக்கும் உபாதைக்குமுட்பட்டிருந்த பகுதியாகும் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

ஹழ்ரத் அவர்களின் வபாத்துக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன் 2016.01.17 அன்று என் மனைவி, பிள்ளைகள் சகிதம் அவரில்லம் ஏகி குசலம் விசாரித்தேன். படுத்தபடுக்கையாக இருந்தார். நான் குடும்பத்தோடு அவரைப் பார்க்கச் சென்றிருந்தது அவருக்கு மிகுந்த ஆனந்தத்தையளித்ததை புரிந்துகொண்டேன். எம்மை நன்கு உபசரிக்கும் படி அவரது பிள்ளைகளிடம் வேண்டிக்கொண்டது எனக்கு விளங்கியது. விடைபெறும் வேளை உஸ்தாத் அவர்களின் கரங்களைப் பற்றி முத்தமிட்டுக்கொண்டேன். உள்ளங்கை ஸ்பரிசம் உள்ளத்தில் இறங்கியது. கூடவே கண்ணீரும் இறங்கியது. கண்கள் பனித்ததை உஸ்தாத் அவர்கள் காணதவாறு ஒருவாறு மறைத்துக்கொண்டு என் புதல்வர்களை அன்னாருடன் முசாபஹஹ் செய்யவைத்தேன். ஆறுதலும் ஆசுவாசமும் தேவைப்படும் ஒருவரிடம் கவலையை உண்டுபண்ணிவிடாதிருக்கவே என் கண்ணீரைக் காட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதுவே இருவருக்குமிடையிலான இறுதி சந்திப்பு.

ஹழ்ரத் அவர்களிடம் நான் கண்ட மற்றுமொரு பண்பை இவ்விடத்தில் பதிவுசெய்ய விழைகிறேன். நான் அவரின் ஒரு மாணவனாகயிருந்தும் சன்மார்க்க விடயங்கள் குறித்து நேரடி சந்திப்புகளின்போதும் தொலைபேசி வாயிலாகவும் என்னுடன் கலந்துபேசுவார். தனது ஊர் சார்ந்த சமய மற்றும் சமூக விவகாரங்கள் சம்பந்தமாகவும் ஆலோசனை கேட்பார். இது உஸ்தாத் அவர்களின் பணிவையும் பயன்படுத்த வேண்டியவர்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வதில் ஆசிரியர் - மாணவர் உறவை, பெரியவர் - சிறியவர் உறவை ஒதுக்கிவைப்பதையும் பளிச்சிடுகின்றது.

மம்ஷாத் ஹழ்ரத் அறிவுக்கும் நடத்தைக்கும் இடைவெளி காணாதவர். சொல்லுக்கும் செயலுக்குமிடையில் வேலி கட்டாதவர். வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்து முடித்த பாக்கியவான். ஒரு மனிதனின் வாழ்வு எவ்வாறு பயன் மிக்கதாக அமைய வேண்டுமென்பதற்கு அன்னார் சிறந்த முன்னுதாரணம்.

சமூக தளத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தை அமைத்துக்கொண்ட நிலையிலேயே மம்ஷாத் ஹழ்ரத் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அவனிடம் போய்ச் சேர்ந்தார். அவரின் இறப்பு சமூகத்துக்கு இழப்பு.

உஸ்தாத் மம்ஷாத் அவர்களை இளம் தலைமுறையும் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளும் நன்கு படிக்க வேண்டியுள்ளது. ஓர் ஆலிம் பல்துறைகளில் தடம் பதிப்பது எங்கனம் என்பதற்கு அன்னாரின் வாழ்க்கையில் முன்மாதிரி உண்டு. இதனை நன்குணர்ந்த சமகால ஆலிம் ஸெட்.ஏ. முஹம்மத் ஹனீபா அவர்கள் மர்ஹூம் மம்ஷாத் ஹழ்ரத் அவர்கள் பற்றி நூலொன்றை யாத்து மக்கள் மன்றத்தில் வாசிப்புக்கு விட்டுள்ளார். 'மார்க்க மேதை உஸ்தாதுனா முஹம்மத் மம்ஷாத் ஆலிம் (ரஹ்மானி)' என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்த நூல் எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டியது. படிப்பதோடு நிறுத்திவிடாது பாடங்கள் கற்று, படிப்பினைகள் பெற்று வாழ்க்கையை செம்மைப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நூலை 2019.01.13 அன்று நத்வஹ் வெளியிட்டுவைத்தது.

சமயத்துக்கும் சமூகத்துக்கும் கல்விக்கும் என வாழ்ந்துவிட்டு எம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட எனது அகமெங்கும் நிறைந்த ஆசான் மம்ஷாத் ஹழ்ரத் அவர்களை அல்லாஹ் தஆலா பொருந்திக்கொள்வானாக!


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.06.26
2019.03.04

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page