Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Appreciations

அன்வர் ஹாஜியார் சில நினைவுகள்


புத்தளம் நூர் மஹல்லாவைச் சேர்ந்தவரும் தப்லீஃ ஜமாஅத்தின் புத்தளம் பகுதி பொறுப்பாளர்களுள் ஒருவருமான அன்வர் ஹாஜியார் இன்று வபாத்தானார். ஜனாஸஹ் செய்தி கேள்விப்பட்டபோது கவலையுற்றேன். என் பதின்ம வயது காலப் பகுதியை நோக்கி என் நினைவுகள் மீண்டன.

இற்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யாவில் பயின்றுகொண்டிருந்த காலமது. அன்வர் ஹாஜியாரின் ஒரு புதல்வர் சகோதரர் ஷிபா எமது ஜாமிஆவில் தஹ்பீல் அல்-குர்ஆன் பிரிவில் மாணவனாக இருந்தார். இக்காலை அன்வர் ஹாஜியாரின் பழக்கம் ஏற்பட்டது. தனது மகனைப் பார்ப்பதற்கு அவர் ஜாமிஅஹ் வரும் சமயத்தில் எனது தகப்பனார் அவரிடம் கடிதமோ, பணமோ, பொருளோ கொடுத்தனுப்பினால் அதனைக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைப்பார். அதுபோல என் தந்தை என்னைப் பார்க்க வரும் வேளை அன்வர் ஹாஜியார் ஏதேனும் தன் மகனுக்கு என் தந்தையிடம் கொடுத்தனுப்புவார். இப்படியொரு பரஸ்பர உதவி இருந்தது.

மிக நீண்ட காலமாக தப்லீக் பணியில் ஈடுபட்ட ஒரு கார்கூன் அன்வர் ஹாஜியார். நூர் மஸ்ஜிதின் நிருவாகத்திலும் இருந்து அந்த மஸ்ஜிதுக்காக சேவையாற்றி இருக்கிறார்.

எங்கே கண்டாலும் நின்று குசலம் விசாரிப்பார். இறுதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜனாஸஹ் வீட்டில் அன்னாரைக் கண்டு கதைத்துவிட்டு வந்தேன். அதுதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்ததும் அளவளாவியதும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோயுற்றிருந்தார் என்ற செய்தி இன்று அவரின் வபாத்தின் பிறகுதான் தெரியவந்தது. பெரும் வேதனையாக இருந்தது.

அன்வர் ஹாஜியார் நேர்த்தியாக ஆடை அணியும் வழக்கமுள்ளவர். அவரின் தொப்பி அவரின் அடையாளம் எனலாம். நீட்டமான ஒற்றை மூட்டுத் தொப்பி இலங்கையில் பெரும்பாலும் ஓடி ஒழிந்துவிட்ட காலத்தில் இறுதிவரையும் அதனை விடாது அணிந்து சாதனை படைத்தவர் அவர். அவரின் ஜனாஸாவைப் பார்ப்பதற்கு இல்லம் போகப் புறப்பட முன் அவரின் தோற்றம் என் மனத் திரையில் ஓடியது. அதில் அவர் அணியும் தொப்பி அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. அவர் இல்லம் ஏகி அவரைப் பார்த்துவிட்டு அன்னாரின் மூத்த புத்திரன் சகோதரர் நலீமுடன் உரையாடிக்கொண்டிருக்கும் சமயம் இந்தத் தொப்பி பற்றி பிரஸ்தாபித்தேன். அதே தொப்பியைத்தான் இப்போதும் அணிவித்துள்ளோம். பாருங்களேன் என்றார். உற்று நோக்கினேன். அதே தொப்பிதான். மய்யித்தாக இருக்கும் நிலையிலும் அதே தொப்பியைத்தான் அணிந்து சாதனை படைத்துள்ளார்.

அன்வர் ஹாஜியாரை நினைக்கும் இத்தருணத்தில் என் பதின்ம வயது நாட்கள், ரஹ்மானிய்யஹ் காலம், சகோதரர் ஷிபா, என்னரும் தந்தையார், நூர் மஸ்ஜித் என பலதும் பத்தும் ஞாபகம் வருகின்றன. எல்லாவற்றையும் எழுத நேரம் அனுமதிப்பதாக இல்லை. இன் ஷா அல்லாஹ் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.

ஹிஜ்ரி 1438 எம்மை விட்டும் விடைபெற்றுக்கொள்ளும் இறுதித் தறுவாயில் இவ்வுலகை விட்டும் விடைபெற்றுக்கொண்டுள்ளார் அன்வர் ஹாஜியார். இனி வரும் காலங்களில் அன்வர் ஹாஜியாரின் தோற்றம், நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

அவரைப் புரிந்தோர் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்ட ஏக்கத்தில் இருக்கும் இந்த சமயத்தில் அவரின் பிள்ளைகள் மற்றும் உறவுகள், அன்பர்கள், நண்பர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

யா அல்லாஹ்! அன்வர் ஹாஜியாரையும் அவரின் நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வாயாக! அவரின் பாவங்களை மன்னித்து, மறைப்பாயாக! அவரின் கப்ரை சுவனப் பூங்காவாக ஆக்கிவைப்பாயாக! உயர்ந்த சுவனம் ஜன்னத் அல்-பிர்தவ்ஸில் அன்னாரை வாழ்வாங்கு வாழவைப்பாயாக! அவரின் இரத்தங்கள், இரக்கங்களுக்கு ஆறுதலளித்து, பொறுமையையும் கொடுத்தருள்வாயாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
2017.09.20
1438.12.28


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page