Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Appreciations

அவர் வபாத்தாகி ஒரு தசாப்தம்
வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை
நீதியரசர் எம். ஜமீல்


அது ரமழானின் பத்தாம் தினம். நோன்பு திறந்ததைத் தொடர்ந்து தொலைபேசிகள் மணியோசை எழுப்பவாரம்பித்தன. ஆம், அவை அதிர்ச்சித் தகவல் சுமந்த அழைப்புக்கள். சோகமோ சோகம். ஏகப்பட்ட சமய, சமூகப் பணிகளை திரை மறைவிலிருந்து ஆற்றிக் கொண்டிருந்த ஓர் ஆளுமையின் மரணம். 2008.09.11 அன்று நீதியரசர் எம். ஜமீல் இறையடி சேர்ந்த செய்தி கிடைத்த எல்லா இதயங்களும் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள கஷ்டப்பட்டன.

மரணத்துக்கு முன் சில மாதங்களாக சற்று சுகக் குறைவுடன் காணப்பட்டார். அவரைத் தாக்கிய சிக்குன்குன்யா காய்ச்சலிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை போலும்.

அமைதி, அடக்கம், பணிவு, எளிமை, நேர்மை, நிதானம் போன்ற அதி உயர் நற்பண்புகள் மிக அரிதாக காணப்படும் தற்காலத்தில் இப்பண்புகளின் உதாரண புருஷராக விளங்கியவர் நீதியரசர் ஜமீல். நிறைகுடம் தளம்பாது என்பதற்கொப்ப ஆழமான ஞானப் பெருக்குடன் அமைதியாய் வாழ்ந்த பெருமகன் அவர். சட்டத்துறை, நீதித்துறை ஆகியவற்றை துறைபோகக் கற்றிருந்த அவர் இஸ்லாமிய சட்டத்துறையிலும் ஞானம் பெற்றிருந்தார்.

முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பொருளாதார துறைகளில் பல்வேறு சேவைகளை புரிந்திருந்தபோதிலும் அவற்றை அவர் திரை மறைவிலிருந்து ஆற்றியிருந்ததனால் அவை அவரின் பெயரில் அறியப்படவில்லை. ஒளிவு மறைவின்றி சொல்வதாயின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை பைத்துல்மால், இல்மா சர்வதேச பாடசாலை, அமானா முதலீட்டு நிறுவனம் ஆகியவை உள்ளிட்ட சமய, சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டு முன்னணி நிறுவனங்கள் இவரது சேவையை நிறையவே பெற்றன. பந்தா, பகட்டின்றி எண்ணிறந்த பன்முகப்பட்ட பணிகளை சமூகத்துக்கு நல்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நம்மிடமிருந்து அவர் விடைபெற்றுக்கொண்டார்.

மௌனம் அவரது அணிகலன். மிகக் குறைவாகவே அவர் பேசினார். பேசினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் கருத்துச் செறிவுள்ள சில வசனங்கள். அவ்வளவுதான். ஏறத்தாழ எல்லோரும் இம்மகானை நேசித்தனர் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது.

இந்நாட்டு முஸ்லிம்கள் கம்மியாக கால் பதித்த அதி உயர் பதவியான நீதியரசர் பதவி மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு மங்கா பெருமை தேடித் தந்தவர். பொறுப்பான பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. அரசியலமைப்புச் சபையின் அங்கத்தவராக மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கையின் தூதராக பணிபுரியும் பெருமை பெற்றவர் நீதியரசர் ஜமீல். பதவிகள் அவரை அலங்கரித்தன என்பதைவிட அவர் மூலம் அவை அலங்காரம் பெற்றன என்பதே உண்மை.

நீதியரசர் பதவியிலிருந்தவாறே சமூகத் தொண்டில் ஆர்வம் காட்டிய அவர் இளைப்பாறிய பின் சமூக சேவையிலேயே அதீத அக்கறையுடன் ஈடுபட்டுழைத்தார். இலங்கை பைத்துல்மால் தலைவராக, இல்மா சர்வதேச பாடசாலை ஆளுநர் சபைத் தலைவராக, அமானா முதலீட்டு நிறுவனத்தின் ஷரீஆ மேற்பார்வை சபை உறுப்பினராக இன்னும் பொது அமைப்புக்கள் பலவற்றில் பல்வேறு பொறுப்புவாய்ந்த பதவிகளை தாங்கிய நிலையில் செம்மையாக பொறுமையுடன் அவை அவற்றுக்குரிய கடமைகளை அவ்வப்போது நிறைவேற்றி முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

நீதியரசர் ஜமீல் தனது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய ஷரீஆ எழுத்தாக்கங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். குறிப்பாக இஸ்லாமிய சட்டத்துறை அவரது விருப்பத்துக்குரிய பகுதியாக இருந்தது. சந்தேகங்கள் எழும்போதெல்லாம் ஆலிம்களுடன் தொடர்புகொண்டு தெளிவுகளைப் பெற்றுக்கொள்வார்.

அவரைவிட இளையவனாக இருந்தும் என்னை ‘Sir’ என்றுதான் விழிப்பார். நானுமோ அவரை ‘Your Lordship’ என விழிப்பேன்.

என் நினைவுக்கு எட்டியவரை இதுகாறும் இரண்டு தேநீர் கோப்பைகள் என் கையால் உடைந்துள்ளன. ஒன்று என் வீட்டுக்கு வந்திருந்த எனது விருந்தாளி ஒருவருக்கு என் அன்புத் தாயார் தயாரித்தளித்த டீயை சமையலறையிலிருந்து நான் சுமந்துவரும்போது தவறி விழுந்து உடைந்தது. மற்றது நீதியரசர் ஜமீலின் இல்லத்தில் அவரின் அன்பு மனைவி தயாரித்துக் கொடுத்த டீயை அவர் சுமந்துவந்து நான் அருந்திக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்து உடைந்தது. குறித்த விருந்தாளியோ அல்லது நீதியரசர் ஜமீலோ என் நினைவில் வரும்தோறெல்லாம் தேநீர் கோப்பை உடைத்த காட்சிகளும் என் மனத் திரையில் தவறாது வந்துவிடும்.

நீதியரசர் ஜமீலுடன் பழகினால் ஓர் இறையச்சமிக்க பண்புள்ள பண்பட்ட அறிஞரை அவருள் காணலாம். இந்தக் கோலத்திலேயே நீதியரசர் ஜமீல் வரலாறு நெடுகிலும் நினைவுகூரப்படுவார்.

ஆரவாரமின்றி அமைதியாக, பாராட்டை எதிர்பாராது இதய சுத்தியுடன், பெருமையின்றி பணிவுடன், ஆடம்பரமின்றி எளிமையுடன், அவசரமின்றி நிதானத்துடன் இயங்கிய இம்மகான் முஸ்லிம் சமூகத்தின் இழந்துபோன ஒரு சொத்து எனலாம். அவர் மறைந்து பத்தாண்டுகள் கழிந்தும் அவரின் பிரிவால் ஏற்பட்ட வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. சமூகம் அவருக்கு எல்லையின்றி கடமைப்பட்டுள்ளது. நீதியரசர் ஜமீல் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஓர் அத்தியாயம் என்பது எனது பணிவான துணிபு.

பரிசுத்த ரஹ்மான் அவரது பாவங்களை மன்னித்து, அவரின் நற்கிரியைகளை அங்கீகரித்து, ஜன்னத் அல்-பிர்தவ்ஸை வழங்கி கௌரவிப்பானாக!

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.12.30
2018.09.11

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page