Appreciations
மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் ஒரு குறுக்குவெட்டுப் பார்வை
2017.08.29 செவ்வாய்க்கிழமை இறையடி எய்திய அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களை ஜனாஸாவாக பார்த்துவிட்டு வரும் வழியில் என் சிந்தையில் முகிழ்ந்தவற்றை எழுத்தில் பதிவுசெய்ய விழைகிறது என் மனது.
ஆசிரியராக, கலைஞராக, ஊடகவியலாளராக, பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளராக, அரசியல்வாதியாக, சமூக செயல்பாட்டாளராக பன்முக பரிமாணம் கொண்டவர் அல்-ஹாஜ் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வர் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஜனாதிபதி ஆலோசகராக தேசிய முக்கியத்துவமிக்க பொறுப்பான பதவிகளையும் வகித்தவர். இத்தனைக்கும் மத்தியில் அன்னார் ஒரு பரந்த வாசிப்பாளர்.
வானொலியில் நாடகம் நடித்ததுமுதல் பேச்சு என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் அல்-ஹாஜ் அஸ்வர். சமூக, சமய மற்றும் கல்விப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி அரும் தொண்டாற்றிய முஸ்லிம் பெரியார்களைப் பற்றி இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கருத்துக் களம் நிகழ்ச்சியில் தொடர் உரை நிகழ்த்தியவர்.
கல்வி, கலை, இலக்கியம் அவருள் இரத்தத்தோடு கலந்திருந்தவை. அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஸ்தாபக அங்கத்தவரான அல்-ஹாஜ் அஸ்வர் அவர்கள் அதில் தொடர்ந்து அங்கம் வகித்து இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியில் பங்களிப்பு செலுத்தினார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டுக்கு அரை நூற்றாண்டு காலம் அவர் வழங்கிய சிறந்த, கனதியான சேவைக்காக இந்த அமைப்பு தனது பொன் விழாவின்போது அன்னாருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது.
1989 முதல் 1994 வரை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக பணிபுரிந்தவர் மர்ஹூம் அஸ்வர் அவர்கள். அதற்கு முன் வெறும் திணைக்கள அந்தஸ்துடன் இயங்கிவந்த முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அவர்களின் ஆட்சியில் தனி அமைச்சாக மாற்றப்பட்டு அஸ்வர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அஸ்வர் அவர்கள் அப்போதுதான் பாராளுமன்ற உறுப்பினராக முதல் தடவையாக தேசிய பட்டியல் மூலம் பதவியேற்றிருந்தார். கன்னி பாராளுமன்ற பிரவேசத்தைத் தொடர்ந்தே அமைச்சராகவும் அமர்த்தப்பட்டவர். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அமைச்சும் புதிதாக உருவாக்கப்பட்டது. இது ஓர் அசாதாரண நிகழ்வாகும். ஒரு புதிய பாராளுமன்ற உறுப்பினராக, ஒரு புதிய அமைச்சராக இருந்துகொண்டு ஒரு புதிய அமைச்சை அவர் தோளில் சுமந்ததே ஒரு சாதனையாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சை பல்வேறு வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சமூகத்திற்கும் தேசத்திற்கும் பயன்மிக்கதாக, வினைத்திறன், விளைத்திறன்மிக்கதாக இயக்கிவைத்தவர் அஸ்வர். அமைச்சர் அஸ்வர் உயிர்ப்புள்ளவர், துடிப்புமிக்கவர், சுறுசுறுப்பானவர். அதுபோல சுமந்துகொண்டுள்ள அமைச்சையும் உயிர்ப்புள்ள, துடிப்புமிக்க, சுறுசுறுப்பான அமைச்சாக தொழில்படச்செய்து சதா விறுவிறுப்பு நிறைந்த வேலைத் தளமாக அதனை மிளிரச்செய்தார்.
2001 முதல் 2004 வரை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இயங்கிய அல்-ஹாஜ் அஸ்வர் அவர்கள் நாடாளுமன்றத்தின் விவகாரங்களை திறமையாகக் கையாண்டார்.
மர்ஹூம் அஸ்வர் பல நல்ல குணாதிசயங்கள் கொண்டிலங்கியவர். மனிதனுக்கு சேவை செய்து கிடப்பதே இறுதி மூச்சுவரை அவர் வேலையாக இருந்தது. தனது அரசியல் வாழ்வில் அவர் எந்தக் கட்சியில் இருந்த போதிலும் அவரின் சேவை மனப்பான்மைக்கும் சேவைக்கும் குறைவு ஏதும் ஏற்படவில்லை.
புவிப் பந்து மேல் 80 ஆண்டுகள் மூச்சு விட்ட மர்ஹூம் அஸ்வர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலம் அவரின் பொற்காலமும்தான், அந்த அமைச்சின் பொற்காலமும்தான். நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அந்த அமைச்சூடாக சேவைகள் வெகு சிக்காராக நடந்தன.
அருள் நபி முஹம்மத் (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஜனன தினத்தை தேசிய மீலாதுன் நபி தினமாக பிரகடனப்படுத்த வழிசெய்த பெருமை அவரையே சாரும். ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தையொட்டி பல வகையான போட்டி நிகழ்ச்சிகள் தேசிய மட்டத்தில் நடாத்தி குறித்தவொரு முஸ்லிம் ஊரைத் தெரிவு செய்து அந்த ஊரில் பல அபிவிருத்திப் பணிகள் செய்து நாட்டின் ஜனாதிபதியையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் விழாவை மீலாதுன் நபி தினமன்று நடத்த அவரே வழிகாட்டினார். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மாவனல்லை, புத்தளம், களுத்துறை, அநுராதபுரம், மாத்தளை என முக்கிய ஊர்களில் தேசிய மீலாதுன் நபி விழாக்களை எடுப்பாக, மிடுக்காக நடத்தி சாதனை படைத்தார்.
இந்த தேசிய மீலாத் விழாக்கள் ஊடாக அஸ்வர் செய்த மற்றுமொரு முக்கியமான, உன்னதமான பணி தேசிய மீலாதுன் நபி விழா நடைபெறும் ஊரின் முஸ்லிம் வரலாற்றை நூலுருப்படுத்தியதும், அந்த மீலாதுன் நபி தின நிகழ்ச்சிகளை முன்னிட்டு காத்திரமான நினைவு மலரொன்றை வெளியிட்டதுமாகும். இதன் மூலம் இலங்கையின் சில முக்கிய முஸ்லிம் நகர்களின் முஸ்லிம்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டது. இது அல்-ஹாஜ் அஸ்வரின் தூரதிருஷ்டியைக் காட்டுகிறது.
இயல்பாகவே கலைஞராகவும் கல்வியையும் கலையையும் ஒருசேர நேசிப்பவராகவும் திகழ்ந்த மர்ஹூம் அஸ்வர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மூலம் கல்விமான்களையும் கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் இமாம்களையும் முஅத்தின்களையும் பக்கீர் சாஹிப்களையும் கௌரவித்து மகிழ்ந்தார். ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற கருப்பொருளில் வருடந்தோறும் இப்பெருமக்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவித்த பெருமைக்குரிய மனிதன் அவர். இதன் மூலம் கலை, கல்வி, இலக்கியம் என ஈடுபாடு கொண்டிருந்த எத்தனையோ பேர் மக்கள் மன்றத்தில் பிரபலமானார்கள், ஊக்குவிக்கப்பட்டார்கள்.
மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள் அவரின் அமைச்சின் கீழ் நன்மைகள் அடைந்தன. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் வக்ப் சட்டத்துக்கு தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கென ஒரு தனியான குழுவை அவரது அமைச்சின் கீழ் நியமித்து பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்டார் அல்-ஹாஜ் அஸ்வர் அவர்கள்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஸ்வர் ஒரு பாரிய அமைச்சையும் பொறுப்போடு சுமந்துகொண்டு இயங்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச அவர்கள் அன்னாரிடம் மற்றுமொரு பெரும் பொறுப்பை ஒப்படைத்தார். நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து அநாதையாய் இருந்த புத்தளம் தேர்தல் தொகுதியை கவனிப்பது அந்த பொறுப்பாகும். அதையும் சிறப்பாக செய்து முடித்தார் அஸ்வர். அவர் பொறுப்பாக புத்தளத்தைக் கவனித்த காலப் பகுதியில் அவரின் சேவை மழையில் புத்தளமும் புத்தளம் மக்களும் நனைந்தனர். கல்வி, கலாசாரம், கலை, இலக்கியம், சுகாதாரம் என பல துறைகளிலும் புத்தளத்துக்கு அவரின் சேவைகள் கிடைத்தன. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பாதைகள் அபிவிருத்தி அடைந்தன. மின்சாரம், கட்டிடம் பல இடங்களுக்கு கிடைக்கப்பெற்றன. அடிக்கடி புத்தளம் வந்து அபிவிருத்தி விடயங்களில் அதீத கவனம் செலுத்தினார். புத்தளம் தேர்தல் தொகுதியில் அஸ்வர் புரிந்த அபிவிருத்திப் பணிகளுக்கு மகுடம் சூட்டி நிற்கிறது புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபம்.
அஸ்வர் அவர்களிடம் எந்தவொரு பொறுப்பையும் நம்பி ஒப்படைக்கலாம். எவ்வளவு பாரமான பொறுப்பையும் திறம்பட செய்து சாதித்துக் காட்டும் வல்லவர்.
அஸ்வர் அவர்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் சரளம். மூன்று பாஷைகளிலும் தயக்கமின்றி சரளமாக எழுதுவார், பேசுவார், உரையாற்றுவார், மொழிபெயர்ப்பார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச இன்னும் முக்கியஸ்தர்களின் சிங்கள உரைகளை மேடையெங்கும் தமிழுக்கு மொழிபெயர்க்கும் அவரின் ஆற்றலை எவரும் வாய் திறந்து பாராட்டாமல் இருந்ததில்லை. பாராளுமன்றத்தில் விவாதிப்பதில்கூட மும்மொழிகளிலும் சண்டமாருதமாக விளங்கினார். அல்-ஹாஜ் அஸ்வரின் மும்மொழிப் பரிச்சயத்தை நாடாளுமன்றத்தின் உரைகளில் மற்றும் சூடான வாதப் பிரதிவாதங்களில் நன்கு அவதானிக்கலாம். அஸ்வர் அமர்ந்த பாரளுமன்றம் கலகலப்புடன் களைகட்டியது. ‘பருப்பு இல்லாத ஹொட்டெலா? முத்தையா இல்லாத மெச்சா? அஸ்வர் இல்லாத பார்லிமென்டா?’ என மக்கள் பேசிக்கொண்ட ஒரு காலமிருந்தது.
அல்-ஹாஜ் அஸ்வர் அவர்கள் தனக்கு சரியென, நியாயமென பட்டதை துணிந்து பேசுவதில் வல்லவர். விமர்சனங்களுக்கு அஞ்சாதவர். போராட்ட குணம் படைத்தவர். தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் தலைமைத்துவத்துக்கு விசுவாசமானவர்.
அடுத்தவரை தட்டிக்கொடுப்பது, அடுத்தவரின் திறமைகளை வளர்த்து விடுவதற்கு வழிசெய்வது அஸ்வர் அவர்களிடம் ஊறிப்போயிருந்த ஒரு நல்ல குணமாகும். இதுவே கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் போன்றோரை தேசிய மட்டத்தில் அரச கௌரவிப்பு செய்வதற்கு அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.
1996 ஆம் ஆண்டு ‘இலங்கை அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டம் ஓர் ஆய்வு’ என்னும் மகுடம் தாங்கிய நான் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையை கையெழுத்துப் பிரதியில் இருக்கக் கண்ட அஸ்வர் தான் அதனை தட்டச்சுசெய்து தருவதாக எடுத்துக்கொண்டார். கணிப்பொறி இல்லாத காலம் அது. தட்டச்சு இயந்திரமே அதிகூடிய நவீனமானதாக இருந்தது. அதுவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலரிடத்தில் மட்டுமே இருக்கும். முன்பின் தெரியாத என்னை என் ஆய்வுப் பணியில், எழுத்துப் பணியில் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவர் அதனைப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்காக அவர் எனது அலுவலகத்துக்கு வாருங்கள் அல்லது என் செயலாளரை அல்லது இலிகிதரை அல்லது தட்டச்சரைப் போய்ச் சந்தித்துக் கொடுங்கள் என என்னிடம் வேண்டிக்கொள்ளவில்லை.
ஒரு சில நாட்களில் அந்தக் கட்டுரையை அழகாக தட்டச்சுசெய்து மூலப் பிரதியுடன் எனக்கு கிடைக்கச்செய்திருந்தார். அரசியலில் உச்சம் தொட்ட ஒருவரை விடுத்து ஓர் அடிமட்ட அரசியல்வாதியிடம்கூட இந்த மனோபாவத்தை எதிர்பார்க்க முடியாது. அதிலும் நான் கேட்காமல் அவரே வலிந்து நான் இதனை செய்து தருகிறேன் என அவர் பொறுப்பேற்றது பிறரை முதுகு தட்டிக்கொடுக்கும் அவரின் உதாரகுணத்தை பளிச்சிடுகின்றது. அஸ்வர் தட்டச்சுசெய்துதவிய பிரதியையே பின்னர் 1998ஆம் ஆண்டில் தினகரன் நாளிதழுக்கு அனுப்பிவைத்தேன். அந்த வருடம் தொடர் கட்டுரையாக இரண்டு மாதங்கள் அது பிரசுரமானது.
முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளைத் திரட்டி நூலாக வெளியிடுவதில் அஸ்வர் ஆர்வம் காட்டினார். வெளி விவகார அமைச்சராகவிருந்த மர்ஹூம் ஏ.ஸி.எஸ். ஹமீதின் உரைகளை ‘The Valley of Gems’ எனும் பெயரிலும், சபாநாயகராகவிருந்த மர்ஹூம் எச்.எஸ். இஸ்மாயீலின் உரைகளை ‘The Golden Plain’ எனும் பெயரிலும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவிருந்த மர்ஹூம் டாக்டர் எம்.ஸி.எம். கலீலின் உரைகளை ‘Political Winds of Change’ எனும் பெயரிலும் அல்-ஹாஜ் அஸ்வர் நூலாக்கினார்.
பாலஸ்தீன விவகாரத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் அஸ்வர். நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பாலஸ்தீன பூமிக்காக, பாலஸ்தீன மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் அஸ்வர். இறுதிப் படுக்கைக்கு அவரைத் தள்ளிய பிணிக்கு சிகிச்சை பெறும் பொருட்டு கொழும்பு டெல்மன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலும்கூட 2017.08.22 அன்று தன் நிலை மறந்து, தன் சுகம் துறந்து பாலஸ்தீன் சம்பந்தமான கூட்டமொன்றுக்காக வெளியில் சென்று அதில் கலந்துவி;ட்டு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார் அல்-ஹாஜ் அஸ்வர். இதுவே அவர் இறுதியாக பங்குபற்றிய நிகழ்ச்சி.
அஸ்வரைப் பற்றி அநேகர் அறிந்திராத மற்றுமொரு சமாச்சாரமுமுண்டு. ஆம், அவர் தனது ஊராகிய மஹரகமவில் நிலைகொண்டுள்ள கபூரிய்யஹ் அரபுக் கல்லூரியில் கொஞ்ச காலம் கல்வி பயின்றவர். பாரதத்தைச் சேர்ந்த மர்ஹூம் உமர் ஹழ்ரத் அவர்கள் இக்கல்லூரியில் ஆசானாக பணியாற்றிய காலத்தில் அஸ்வர் மாணவனாக இருந்துள்ளார். உமர் ஹழ்ரத் எழுதிய ‘நாற்பயனன்னூல்’ எனும் நூலை தான் பொறுப்பாகவிருந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு மூலம் 1994இல் மீள்பிரசுரம் செய்த அஸ்வர் அவரின் பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்:
“எனது நன்றிக் கடனுக்கு என்றென்றுமுரிய அருமை உஸ்தாதாகிய ஹளரத் அவர்கள் ஒரு போற்றத்தக்க “முஜாஹித்” என்றே சொல்வேன்.”
பொத்திய மூக்கையும் துளைத்துக்கொண்டு செல்லும் முடைநாற்றம் வீசுகின்ற சமகால அரசியலில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியலில் உத்தமர் எவரையும் காண்பதற்கில்லை. சேற்றுக்குள் செந்தாமரை எனக்கூட ஒருவரை சுட்டிக்காட்ட முடியவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக இவ்வழகிய தீவில் இப்படித்தான் முஸ்லிம் அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. இதற்குள் மர்ஹூம் அஸ்வர் அவர்களும் சிக்குண்டிருந்தார் என்பது வெள்ளிடை மலை. இந்த உண்மையோடுதான் அன்னாரின் மேற்படி பிரகாசமான பக்கங்களையும் நாம் புரட்டிப் பார்க்கிறோம். அரசியல் என்றால் ஊழல், ஊழல் என்றால் அரசியல் என அரசியலும் ஊழலும் இரட்டையர்களாகிப் போய்விட்ட நிகழ்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், கசமுசாக்களுடன் அடிபடாத ஒரு நாமம் அஸ்வர். இந்த உண்மையை அவரின் அரசியல் எதிரிகள், அவரைப் பிடிக்காதவர் உட்பட அனைவரும் இன்று பேசுகின்றனர், எழுதுகின்றனர்.
யார் என்ன சொன்னாலும் இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் முஸ்லிம்களின் வரலாற்றிலும் புத்தளத்தின் வரலாற்றிலும் மர்ஹூம் அஸ்வர் மறக்க முடியாத ஒரு மனிதர். நன்றி செலுத்தப்பட வேண்டியவர். அப்படியே என் வாழ்விலும்.
மர்ஹூம் அஸ்வர் அவர்களின் பிரிவுத் துயரால் வாடிக்கொண்டிருக்கும் அவரின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் கவலையில் பங்குகொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அஸ்வர் அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்வானாக! அவரின் நற்கிரியைகளையும் சேவைகளையும் அங்கீகரித்துக்கொள்வானாக! அன்னாரின் பாவங்களை மன்னித்தருள்வானாக! ஜன்னத் அல்-பிர்தவ்ஸை அன்னாருக்கு வழங்குவானாக!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
2017.08.30