Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : நாளாந்த வாழ்வில் நமக்கான ஒழுங்குகள்


தொகுப்பு : அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்விலிருந்து ஹி.பி. 1433 - கி.பி. 2012ஆம் ஆண்டு அஷ்-ஷைக் பட்டம் பெற்று வெளியேறும் 17 பேர்

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்,
நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் மதிப்புரை


வல்லவன் அல்லாஹ் தஆலாவை மனமார, வாயார புகழ்கின்றேன். அவனின் இறுதித் தூதர் எங்கள் இதய நாயகர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்தம் தூய குடும்பத்தவர்கள், அருமைத் தோழர்கள் மீதும் சலாத்தும் ஸலாமும் சொல்கிறேன்.

முஸ்லிம்களின் வாழ்வியலை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஏற்றமிகு மார்க்கம் நெறிப்படுத்துகின்றது. வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியும் இஸ்லாத்தின் வழிகாட்டலின்றி சும்மா விடப்படவில்லை. ஒரு முஸ்லிம் அவனது அன்றாட வாழ்வில் உண்ண, பருக, தூங்க, மல சலம் கழிக்க, குளிக்க என அவன் சாதாரணமாக செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் இஸ்லாத்தின் போதனைகள் அவன் முன் வந்து நிற்கின்றன, அவனை நெறிப்படுத்துகின்றன, ஆளுகின்றன.

இயல்பான மனிதத் தேவைகளையும் இறை வழிகாட்டலில் நிறைவேற்றிக்கொள்ள வழிசெய்கின்ற ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. மனிதன் திவ்விய வழிகாட்டலின் வெளிச்சத்தில் இருக்கும் காலமெல்லாம் அணைந்து போகாத தெய்வீக ஒளியில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அவன் பாதையில் இரவும் பகல் போன்று வெளிச்சமே. அல்லாஹ் தஆலாவின் வழிகாட்டல் அவனுக்கு சதா ஒவ்வொரு கணப் பொழுதிலும் ஒளி பாய்ச்சியவண்ணமிருக்கும்.

அப்படியாயின் அன்றாட வாழ்க்கையில் நமக்கான இறை நெறி என்ன? அதனை எங்கு, எப்படி பெறலாம்? இது தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய எம்மில் பலரது கேள்வி. இந்த வினாவுக்கான பதிலாக வெளிவந்துள்ளது இந்நூல்.

அக்குறணை அல்-ஜாமிஅஹ் அல்-ரஹ்மானிய்யஹ்விலிருந்து ஹி.பி. 1433 - கி.பி. 2012ஆம் ஆண்டு அஷ்-ஷைக் பட்டம் பெற்று வெளியேறும் 17 பேர் கொண்ட மாணவர் தொகுதியினர் மேற்படி கேள்விக்கு விடையாக இந்த நூலை யாத்துள்ளனர். இதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட கால பெரும் தேவையொன்று பூர்த்திசெய்து வைக்கப்படுகின்றது. ‘அல்-ஹம்து லில்லாஹ்’.

மஸ்ஜித், சபை, பயணம், உணவு, உறக்கம், கழிவறை ஆகியவற்றின் இஸ்லாமிய நடைமுறை ஒழுங்குகளை ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எவரும் புரிந்துகொள்கின்ற எளிய தமிழ் நடையில் எடுத்தாளுகின்ற ஒரு நூலாக இது அமைந்துள்ளது. பலம் படைத்த 17 இளந்தாரி ஆலிம்கள் படாத பாடு பட்டு செய்த ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடும் பிரதிபலனும் இந்தச் சேகரமாகும்.

தொலைவிலுள்ள காடுகளுக்கு பறந்து பயணம் செய்து அங்குள்ள மலர்களில் அமர்ந்து சொட்டு சொட்டாக தேன் சேகரித்து பின்னர் சென்ற வழியே திரும்பி வந்து திரட்டிய தேனை கூடுகளில் வைத்து இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக தேன் சேகரித்து தேன் நிரம்பிய கூடொன்றை உண்டாக்குகின்ற தேனீக்கள் போன்று இஸ்லாமிய அறிவுப் பூங்காவில் விரவிக்கிடக்கும் நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி ஒரு சேகரமாக இந்த நூலை முன்வைத்துள்ளனர் இளமைத் துடிப்பும் உயிர்ப்புமுள்ள இந்த அன்புக்கினிய ஆலிம்கள்.

இந்த நூலுக்குள் உலா வரும்போது சில இடங்களில் புதைந்து கிடந்த புதையல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு வருகின்றது. சில இடங்களில் மறைந்து போனவை வெளிக்கொணரப்பட்டுள்ளது போன்ற உணர்வு வருகின்றது. சில இடங்களில் மங்கிப் போனவை பளபளப்பாக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு வருகின்றது. சில இடங்களில் மரணித்துப் போனவை மீள உயிர்கொடுக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு வருகின்றது. மொத்தத்தில் இங்குமங்குமாக கிடந்த முத்துக்கள் ஒன்றுதிரட்டப்பட்டு கோர்க்கப்பட்டுள்ள முத்தாரம் போன்ற உணர்வு வருகின்றது.

சின்ன சின்ன விடயங்களும்கூட தனித் தனித் தலைப்புக்களில், உப தலைப்புக்களில் கையாளப்படுகின்றன இந்த நூலில். இது தேடலின்போது வேலையை இலகுவாக்குகின்ற, நேரத்தை மிச்சப்படுத்துகின்ற செயலாகும்.

உண்மையில் இந்த திரட்டின் பெறுமதியே வேறு. காசு, பணம் கொண்டு விலை மதிக்க முடியாத, தங்கம், வெள்ளி கொண்டு பெறுமதி பார்க்க முடியாத ஒரு படைப்பு. சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தவனும் அவசியம் வாங்கிப் படித்து பயன் பெற்றிட வேண்டிய ஒரு தரமான ஆக்கம்.

நூலை ஆக்கியோர் என்னை சந்தித்து இந்த ஆக்கப் படைப்பை நீங்கள் முழுமையாகப் படித்து திருத்தங்கள் செய்து தர வேண்டும், கூடவே மதிப்புரை ஒன்றும் தந்திட வேண்டும், அத்துடன் ஒரு நல்ல நாமத்தையும் இதற்கு இட வேண்டுமென ஒரு குறுகிய காலத்தையும் அவகாசமாகத் தந்து கேட்டு நின்றனர். மிக அரிதான கோரிக்கைகள். இந்த இளைஞர்களின் பணிவை பறைசாற்றுகின்ற கோரிக்கைகள். செய்ய வழியின்றி சரி என சம்மதித்தேன்.

இந்த சேகரத்தை துவக்கம் முதல் முடிவு வரை கருத்தூன்றிப் படித்து விட்டு என்னுடைய ஆலோசனைகள் பலவற்றை ஆக்கியோர்களிடம் முன்வைத்தேன். ‘நாளாந்த வாழ்வில் நமக்கான ஒழுங்குகள்’ என ஒரு பெயரையும் யோசனையாகச் சொன்னேன். அதனையே நூலுக்குப் பெயராகத் தீர்மானித்துள்ள தகவல் பின்னர் கிடைத்தபோது புளகாங்கிதமடைந்தேன். பெற்றவர்கள் அவர்களென்றால் பெயரிட்டவன் அடியேன் என்ற வகையில் எனக்கும் பூரிப்புதானே.

1971 முதல் இயங்கி வரும் அல்-ஜாமிஹ் அல்-ரஹ்மானிய்யஹ்விலிருந்து வருடா வருடம் மாணவர்கள் ஆலிம்களாக வெளியேறுகின்றனர். எந்த ஒரு வகுப்பும் 1992இல் பட்டம் பெற்று வெளியேறிய என் வகுப்பு உட்பட இதுகாறும் பட்டம் பெற்று வெளியேறும்போது செய்திடாத அறிவார்ந்த எழுத்துப் பணியை சமூகத்தின் தேவையை முதன்மைப்படுத்தி இம்மாணவ தொகுதியினர் செய்து முடித்திருப்பதானது ஒரு வரலாற்றுப் பதிவாகும். பின்பற்றத்தக்க முன்மாதிரியான செயலும்கூட.

திரட்டையும் திரட்டியோரையும் என் அகத்தின் அடித்தளத்திலிருந்து நெஞ்சார வாழ்த்துகிறேன். ஆக்கத்துக்கும் ஆக்கியோருக்கும் முழுமையான இறை அங்கீகாரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.


எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1433.07.20
2012.06.11
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page