Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : கம்பஹா மாவட்டம் தந்த உலமாப் பெருந்தகைகள்


ஆசிரியர் : அஷ்-ஷைக் எம்.எச்.எம்.லாபிர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
இந்நூலுக்கு மனமுவந்தளித்த பாராட்டுரை


மனித குலத்தை சிருஷ்டித்த அல்லாஹ் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகாட்டலையும் நல்கினான். எப்படியும் வாழலாம் என்றிராது இப்படித்தான் வாழ வேண்டும் என விதித்து, அதன் பொருட்டு வழிகாட்ட மனிதர்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்ட நபிமார்களை களமிறக்கினான். மனிதனைப் புனிதப்படுத்தும் பாரிய பொறுப்பை பொறுமையுடன் தோள்சுமக்க முன்வந்த நபிமார்கள் உலக ஆதாயங்களை எதிர்பாராது அதனை அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றினார்கள்.

நபிமார்கள் வரிசையில் இறுதியாகத் தோன்றிய முஹம்மத் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் மறைவுடன் நபித்துவத்துக்கு முத்திரையிடப்பட்டாலும், அவர்களின் வாரிசுகளான ஆலிம்கள் நபிமார்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் பொறுப்பைத் தொட்டுத் தொடர வேண்டியவர்களானார்கள். ரசூல் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வபாத்தைத் தொடர்ந்து இற்றை வரை வரலாறு கண்ட மனுக்குல சீர்திருத்தவாதிகளான ஆலிம்களின் பட்டியல் நீண்டு விரிகிறது. கால தேச வர்த்தமானங்களைக் கருத்திற் கொண்டு இவ்வுத்தமர்கள் ஆற்றிய அதி உன்னத சேவை பல்வேறு பரிமானங்களை உடையதாயிருப்பினும், இறை வழிகாட்டலில் அடியொட்டி மனிதகுலத்தை விமோசனத்தின் பால் இட்டுச் செல்லும் நோக்கையே கொண்டிருந்தது. இருபதாம் நுhற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்தும் மார்க்க அறிஞர்களின் இம்மகத்தான சேவை தரணியெங்கும் தொடர்வது கண்கூடு. உண்மையில் ஆலிம்களென்று ஒரு சாரார் இல்லாதிருந்திருந்தால் என்றோ உலகம் மிருக வாழ்க்கையை நோக்கி தடம் புரண்டிருக்கும்.

ஆலிம்களின் விலைமதிக்க முடியாத இப்பணி இவ்வழகிய தீவிலும் பாரிய அளவில் காணப்படுகிறது. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் மார்க்க அறிஞர்களின் தொகை நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருகிறது. அதிலும் கடந்த அரை நுhற்றாண்டில் நாடளாவிய ரீதியில் இவர்களின் தொண்டு குறிப்பிடத்தக்க அளவு சமூகத் தளத்தில் தடம்பதித்துள்ளது.

இலங்கை வாழ் ஆலிம்களின் சீர்திருத்தப்பணி மென் மலர்கள் தூவப்பட்ட பாதையில் மேற்கொள்ளப்பட்ட பயணம் அன்று. கற்களும், முற்களும் நிறைந்த கரடு முரடான பாதையில் சொல்லொனா துன்பங்களுடனும், ஆற்றொனா துயரங்களுடனும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. ஆட்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் உட்பட அனைத்து மட்டங்களிலிருந்தும் எழுந்த எதிர்ப்புகள், சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்ததாகும். வெளிப்படையாகச் சொல்வதாயின் இப்பெருந்தகைகளிற் பலரின் குடும்ப வட்டத்திலிருந்து எழுந்த எதிர்ப்புகளுக்கும் கூட இவர்கள் முகங்கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலானோரின் தனிப்பட்;ட நலன்கள் கூட அவர்கள் மரணிக்கும் வரை முன்னேற்றகரமானவையாக இருந்தனவெனச் சொல்வதற்கில்லை. திறமையும், தகுதியும் தாராளமாக இருந்தும், வேறு துறைகள் மூலம் நிறைய சம்பாதிக்க வழியிருந்தும், குறைந்த வேதனத்துக்கு நிறைவாகப் பணி செய்த இம்மகான்களை மனித சமூகம் எளிதில் மறந்துவிட முடியாது. எதிர்காலச் சந்ததியினர் கூட நன்றிப் பெருக்குடன் இவர்களை நினைவு கூருவது சமூகக் கடப்பாடாகும்.

இந்த வகையில் ஆரவாரமின்றி அமைதியாக, பெருமையின்றி இதய சுத்தியுடன் இஸ்லாத்துக்குப் பேரூழியஞ் செய்த ஆலிம்கள் கம்பஹா மாவட்டத்திலும் காணப்பட்டனர், காணப்படுகின்றனர். என்றும் எம் நெஞ்சங்களில் நிழலாடுகின்ற இப்பெரியார்களை வரலாற்றில் நீக்கமற நிலைத்திருக்கச் செய்யும் ஒரு கைங்கரியமே “கம்பஹா மாவட்டம் தந்த உலமாப் பெருந்தகைகள்” எனும் இந்நூலாகும். கம்பஹா மாவட்டம் ஈன்றெடுத்த முத்தான முதிய ஆலிம்களின் வாழ்க்கையைச் சரித்திரப்படுத்துவதன் மூலம் அவர்களின் பணிகளை இந்நூலாசிரியர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.லாபிர் கௌரவப்படுத்துகிறார். பொன்னுக்குப் பிரதி புஷ்பம் என்ற அடிப்படையிலேயே இவ்வாக்கத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இக்கணவான்களாற்றிய அளப்பரிய தொண்டுகளுக்குப் பிரதியுபகாரமாக இவ்வுலகையே கொடுத்தாலும் அது நிகராகாது. அவற்றுக்குத் தகுமான கூலியை அல்லாஹ்வால் மாத்திரமே மறுமையில் நல்க முடியும்.

அஷ்-ஷைக் எம்.எச்.எம்.லாபிர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - கம்பஹா மாவட்டக் கிளையின் செயலாளராவார். எம் இதயங்களுக்கு நெருக்கமானவர். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அவர் செய்துள்ள இச்சிறப்பான முயற்சி மெச்சத்தக்கதும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களின் வரலாறுகளைத் தொகுப்பதற்கான முன்னுதாரணமுமாகும். காலத்தின் தேவையை அறிந்து இக்கைங்கரியத்தைச் செய்து முடித்துள்ள கர்ம வீரரான நூலாசிரியருக்கு எனது பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும்.


229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
மன்னார் வீதி,
புத்தளம்.

2004.05.02
 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page