Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Forewords

நூல் : உங்கள் இதயங்களுடன் நியாஸ் மவ்லவி பேசுகிறார்


ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத் தலைவர்,

அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் அணிந்துரை


ஈடிணையிலா இறையோன் அல்லாஹ் தஆலாவை போற்றி துதிக்கின்றேன். அகிலம் கண்ட அப்பழுக்கற்ற தலைவர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்தம் அரும் குடும்பத்தவர்கள், இனிய தோழர்கள், அன்னாரது வழி செல்வோர், அதற்காக உழைப்போர், அழைப்போர் அனைவர் மீதும் சலாத்தும் ஸலாமும் சொல்கின்றேன்.

மறைந்த பின்னரும் நினைக்கப்படுகின்ற, மக்கள் மனங்களில் மங்காமல் வாழ்கின்ற பல நல்ல மனிதர்கள் இறந்தும் இறவாமல் வாழ்கின்றனர். வையகத்தில் வாழ்ந்த காலத்தில் வல்ல அல்லாஹ் வாரி வழங்கி இருந்த வரங்களை, வளங்களை, வசதிகளை, வாய்ப்புகளைக் கொண்டு மார்க்க நலனுக்கு, மனித மேம்பாட்டுக்கு, தேச உயர்வுக்கு, உலக உய்வுக்கு உழைத்த உத்தமர்கள் அவர்கள். தமது நலன்களைக்காட்டிலும் அடுத்தவர் நலன்களை முதன்மைப்படுத்தியவர்கள். அகவய நோக்கு அற்று புறவய நோக்குடன் வாழ்ந்து மனிதர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்தவர்கள். தற்சாய்வைத் தகர்த்தெறிந்து, பகைக்காய்வைப் புறத்தொதுக்கி பூவுலகு பூ மணக்க அரும்பாடுபட்ட அற்புதமான மனிதர்கள். மொத்தத்தில் பிறர் பூரிப்பில் தமது பூரிப்பை நிஜமாகக் கண்ட நல்லிதயங்கள்.

மேற்சொன்ன கனவான்கள் பட்டியலில் மர்ஹும் மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்களும் இடம்பெறுகிறார். குன்றா எழில் கொஞ்சி விளையாடும் இலங்கைத் தீவு ஈன்று இன்புற்ற குறிப்பிடத்தக்க பிரபலமான மனிதர்களுள் அவரும் ஒருவர். சுருதியமைய பேசும் திராணி, தமிழ், சிங்கள மொழியாற்றல், படிப்பினைகள் தரும் நகைச்சுவைகளை முன்வைக்கும் அசாதாரண திறமை, என்றும் தேவைப்படும் சமயோசிதம், எப்போதும் இருக்க வேண்டிய நெஞ்சுரம், உபகாரம் செய்யத் தூண்டும் ஈரம், அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் மனிதநேயம் முதலாய உன்னத குணாதிசயங்களால் முஸ்லிம்களின் மனங்களிலும் சமயம் கடந்து முஸ்லிமல்லாதார் இதயங்களிலும் இடம்பிடித்த சீலர் மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்கள்.

பரந்துபட்ட சமய, சமூக, கல்வித் தொண்டுகள் மூலம் சமூக தலத்தில் தடம் பதித்து மூலைமுடுக்கெங்கும் தனது பெயர் உச்சரிக்கப்படுமளவுக்கு உயர்ந்தவர் நியாஸ் முஹம்மத் ஹழ்ரத். இதற்கு அவர் கொடுத்த விலை ரொம்ப அதிகம். தனக்கென அல்லாது மற்றவர்களுக்காக வாழ்ந்த தன் பயணத்தில் யாவற்றையும் தாங்கிக்கொண்டார். கேட்ட இழிச் சொற்கள், வாங்கிய பழிச் சொற்கள், ஏற்பட்ட ரணங்கள், உணர்ந்த வலிகள் கொஞ்சநஞ்சமல்ல. இவை அத்தனையும் ஹழ்ரத் அவர்களை புடம்போட்டன. துன்பங்களை இன்பங்களாக, அவமானங்களை சன்மானங்களாக, சவால்களை சந்தர்ப்பங்களாக, தடைக்கற்களை படிக்கற்களாக ஏற்றுக்கொண்டார்.

இப்படி திறன்களும் அனுபவங்களும் ஒருசேர வாய்க்கப்பெற்றிருந்தார் மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்கள். மானுடரை விளித்து அப்பெருமகன் ஆற்றிய உரைகள் இவற்றைப் பின்புலமாகக் கொண்டே அமைந்திருந்தன. காலதேசவர்த்தமானத்திற்கேற்ப விடயங்களை வகைப்படுத்தி தேவைக்கேற்றவாறு மக்கள் மன்றத்தில் ஜுமுஅஹ் குத்பாக்களாகவும் மேடைப் பேச்சுக்களாகவும் வானொலி உரைகளாகவும் வேறு வகைகளிலும் செவிக்கும் சிந்தனைக்கும் விருந்து வைத்தார்.

நியாஸ் ஹழ்ரத் எடுத்துக்கொண்ட விடயத்தை பாமரர்கூட எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் விளக்கமாக எடுத்துரைப்பார். உவமித்தும் உதாரணங்கள் கூறியும் விளக்கப்படுத்துவதில் வல்லவர். மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் அன்னாரின் உரைகளில் ஹாஸ்யத்துக்கு குறைவிருக்காது. நறுக்கென சொல்ல வேண்டியதைக்கூட நாசூக்காக சொல்லி நயம்பட நவின்றிடுவார். எத்தனை மணித்தியாலங்கள் வேண்டுமென்றாலும் அவர் பேசலாம். கேட்போர் ரசித்து, ருசித்து மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பர். அவர் உரையை முடித்துக்கொள்ளும்போது ஏன் நிறைவுசெய்தார் இன்னும் கொஞ்சம் பேசலாமே, ஏற்பாட்டாளர்கள் நேரத்தை சற்று அதிகமாக கொடுத்திருக்கலாமே என கேட்போர் தமக்குள் பேசிக்கொள்வர்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று மனித குலத்தை நல்வழிப்படுத்தும் பொருட்டு சிம்மக் குரலோன் மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரைகள் ஏராளம். தனிமனித, குடும்ப, சமூக வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ள கல்வி, ஒழுக்க, சுகாதார, அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் இதர துறைகளில் அவர் நிகழ்த்திய உரைகள் உள்ளங்களை கொள்ளைகொண்டன. நன்மைகளைச் செய்ய ஆர்வமூட்டி தூண்டிய ஹழ்ரத்தின் அருமையான பேச்சுக்கள் தீமைகளைச் சுட்டிக்காட்டி தடுக்கும் படியாகவும் அமைந்திருந்தன. சமூகத்தில் வேரூன்றிப்போயிருந்த அனாச்சாரங்கள், மூடநம்பிக்கைகள், அநியாயங்கள், அட்டூழியங்கள், மார்க்கத்தின் பேரிலான பிழையான நம்பிக்கைகள், நடத்தைகளை அஞ்சா நெஞ்சுடன் வெளிச்சம்போட்டுக் காட்டி அவற்றிலிருந்து மனிதர்களைக் கழற்றி எடுக்கும் வகையில் அவர்தம் பேச்சுக்கள் அமைந்திருந்தன.

நியாஸ் மவ்லவி பேச வருகிறார் என்றாலே போதும். அந்த இடத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும். அத்தனை மவுசு அவருரைக்கு. கூட்டங்களில் பெரும்பாலும் அவர்தான் இறுதிப் பேச்சாளர், அவரின் உரையே விசேட உரை. அவர் பேச பெயர் கூறி அழைக்கப்பட்டதும் அவையில் ஊசி விழுந்தால் கேட்குமளவுக்கு அமைதி அரசோச்சும்.

1970 மற்றும் 1980களில் நம் நாட்டில் மஸ்ஜித் மிம்பர்களையும் மீலாத் மேடைகளையும் ஹதீஸ் மஜ்லிஸ்களையும் காத்திரமான உரைகள் கொண்டு அலங்கரித்தவர்கள் நால்வர். மஸ்ஊத் ஆலிம், மவ்லவி அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி), மவ்லவி அபுல் ஹஸன் காஹிரி, மவ்லவி நியாஸ் ஆகியோரே அந்நால்வர். நியாஸ் ஹழ்ரத் ஏனைய மூவரையும்விட வயதில் மிகக் குறைந்தவர். அடுத்த மூன்று ஆலிம்களுடன் மேடைகளில் ஒன்றாக சக பேச்சாளராக அமர்வதென்றால் இளமை முதல் அன்னாருக்கு அல்லாஹ் தஆலா நல்கியிருந்த நாவன்மையே அதற்கு காரணம் என்பது வெள்ளிடை மலை. தரமான உரை நிகழ்த்துவதில் மஸ்ஊத் ஆலிம், மவ்லவி அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி), மவ்லவி அபுல் ஹஸன் காஹிரி ஆகியோரை எவரும் நெருங்க முடியாதிருந்த ஒரு காலத்தில் அவர்களுக்கு சற்றே பக்கமாக நடந்து வந்தவர் நியாஸ் ஹழ்ரத்.

பேச்சாற்றல்மிகு மவ்லவி நியாஸ் அவர்களது பேச்சு அவருக்கே உரித்தான அலாதியான பாணி கொண்டது. சொல் உச்சரிப்பு, வசன அமைப்பு, மொழி நடை, குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி எல்லாமே தனி ரகம். அடித்துச் சொல்ல வேண்டியபோது சண்டமாறுதப் பேச்சாளர். இரங்கிச் சொல்ல வேண்டியபோது தென்றல் பேச்சாளர். அவையைக் கட்டிவைத்து பேசுவது அவருக்கு கைவந்த கலை. அன்னாரது பேச்சு நடை எவரினதும் நடையைத் தழுவி அமைந்திருந்ததாக நான் அறியேன். மாற்றமாக சிலர் அவரின் பாணியில் உரை நிகழ்த்த முயற்சித்ததை நான் அறிவேன். ஆனால் இதுகாறும் அவர் நடையை எவரும் முழு அளவில் என்ன பாதி அளவில்கூட நகல் எடுத்துக்கொள்ளவில்லை. சிங்கம் கர்ஜனை செய்தால்தானே கர்ஜனை.

மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்களின் ஆற்றொழுக்கான தமிழுரைகளில் முஸ்லிம் சமூகம் கட்டுண்டிருந்தது போல் அன்னாரின் ஆற்றொழுக்கான சிங்கள உரைகளில் சிங்கள சமூகம் கட்டுண்டிருந்தமை மற்றுமொரு மறக்க, மறுக்க, மறைக்க முடியாத உண்மையாகும். ஹழ்ரத் அவர்கள் சிங்கள மொழியில் செய்த பேச்சுக்கள் மூலம் இஸ்லாத்தின் விழுமியங்களை பௌத்தர்கள் மற்றும் கிரிஸ்தவர்கள் புரிந்துகொள்ள வழி பிறந்தது, இனங்களுக்கிடையிலான விரிசல் குறைந்தது. பல சிங்கள சகோதரர்கள் அவர் போதனை கேட்டு திருந்தியுமுள்ளனர். பொதுவாக சிங்கள மக்கள் ‘நியாஸ் மவ்லவிதுமா’ என பக்திபூர்வமாக அன்னாரை மதித்தனர்.

1970 மேலும் 1980களில் தப்லீக் ஜமாஅத்தின் பீரங்கிப் பேச்சாளர் மர்ஹும் நியாஸ் ஹழ்ரத் அவர்கள். செல்லுமிடமெல்லாம் வாயில்கள் இன்று திறந்திருப்பது போல் அக்காலத்தில் தப்லீக் ஜமாஅத் பணிகளுக்கு வாயில்கள் திறந்திருக்கவில்லை. பல மஸ்ஜித்களில்கூட கதவடைப்பு. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்த ஜமாஅத்தின் கொள்கை, நோக்கம், போக்கு முதலிய விடயங்களையும் இந்தப் பணியின் தேவையையும் தனது தைரியமான பேச்சுக்கள் மூலம் பட்டவர்த்தனமாக விளங்கவைத்த பெருமை மவ்லவி நியாஸ் அவர்களுக்குண்டு. இதனை வரலாறு இலகுவில் மறந்திடாது. சகோதரர் எம்.எஸ்.எம். முஸ்ஸம்மில் அவர்கள் யாத்த ‘இலங்கை தப்லீக் ஜமாஅத் தந்த பெரிய அமீர் சாஹிப்’ எனும் நூலில் இந்த உண்மை விரவிக் கிடக்கக் காணலாம்.

பன்முகப் பரிமாணம் கொண்ட மவ்லவி நியாஸ் அவர்களின் பேச்சுக்களின் ஒரு பகுதியாக அன்னார் சுமார் ஐந்து வருடங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் பிரதி வியாழக்கிழமைகளில் தொடராக நிகழ்த்திய ‘ஐயமும் தெளிவும்’ உரை இடம்பெறுகிறது. 2005இல் ஆரம்பித்து 2010இல் வபாத்தாகும் வரை இத்தொடர் நிகழ்ச்சியை அவர் செய்துவந்தார். பல்வேறு மகுடங்களில் அத்தியாவசியமான விடயங்களை மையப்படுத்திய ஐயமும் தெளிவும் உரைகள் முஸ்லிம் சமூகத்தில் பாதிப்பு செலுத்தின. பல நேயர்கள் வியாழன்தோறும் தவறாமல் அவற்றைச் செவிமடுத்து பயனுற்றனர்.

இந்த அரை தசாப்த ஐயமும் தெளிவும் தொடர் பேச்சுக்களை திரட்டி, அவற்றை எழுத்தாக்கி மனித நெஞ்சங்களுக்கு நிரந்தரமாக ஆக்கிவைக்கும் மிக மிக பயனுள்ள கைங்கரியம் ஒன்றை கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் செய்து சாதித்துள்ளது. 22 உரைகள் தொகுக்கப்பட்டு ‘உங்கள் இதயங்களுடன் நியாஸ் மவ்லவி பேசுகிறார்’ என்ற நாமம் தாங்கி நூலாக வெளிவருகிறது. பிரமாதம். இதன் மூலம் நியாஸ் ஹழ்ரத் அவர்களின் கருத்துக்கள், சிந்தனைகள், போதனைகள் தலைமுறை தலைமுறையாக நீடு நீடித்து பயன் கொடுக்க வழிகோலப்பட்டுள்ளது. அல்-ஹம்து லில்லாஹ்.

இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரியின் தாயும் தந்தையும் மர்ஹும் நியாஸ் ஹழ்ரத் அவர்கள்தான். அதன் உருவாக்கம், இயக்கம் இரண்டினதும் சிற்பி அவரே. அன்னாரின் இயங்கு தளங்களாக இருந்தவற்றில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒன்று இஹ்ஸானிய்யஹ். இக்கல்லூரி உருவாக்கிய இளம் ஆலிம்கள் அவர்களின் அறிவுத் தந்தை மவ்லவி நியாஸ் அவர்களை பாசத்துடன் நினைத்து அவரின் ஐயமும் தெளிவும் உரைகளை எழுத்தில் பதித்து அன்னாருக்கு பிரதியுபகாரம் செய்துள்ளதாக நான் கருதுகிறேன். இந்த இளந்தாரி ஆலிம் சகோதரர்களின் பயன்மிக்க இவ்வேலையையும் அவர்களின் நன்றியறிதலையும் மெச்சுகிறேன், பாராட்டுகிறேன்.

நியாஸ் ஹழ்ரத்தின் மூச்சும் பேச்சுமாக இருந்தவற்றில் ஒன்று அவர் ஸ்தாபித்து வளர்த்துவிட்ட இஹ்ஸானிய்யஹ். அவர் அதனை நேசித்தது போலவே அதன் மாணவர்களையும் பட்டதாரிகளையும் நேசித்தார். அவரோடு நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் இதனை அடியேன் நன்கு அறிவேன். நியாஸ் மவ்லவியின் வானொலி உரைகள் நூலுரு பெறும் இவ்வேளை அவர் புவிப் பந்தின் மேலிருந்திருந்தால் தனது மாணவர்களின் உன்னத பணி கண்டு புளகாங்கிதம் அடைந்திருப்பார். என்னென்னவோ வார்த்தைகள் கொண்டு எப்படி எப்படியெல்லாமோ அவர்களை சிலாகித்திருப்பார்.

ஒருவரின் பேச்சை ஒலிப்பதிவிலிருந்து செவிமடுத்து, அவர் எழுதிவைத்திருந்த குறிப்புக்களை உதவிக்கழைத்துக்கொண்டு அதனை எழுத்தில் பதிவுசெய்வது லேசுமாசான காரியமன்று. மிக்க கடினமான, பாரமான வேலை அது. மிகுந்த சிரமத்துடன் செய்ய வேண்டியது. இலகுவில் அலுப்புத்தட்டிவிடும். எல்லோராலும் சாத்தியப்படாதது. இப்பாரிய பொறுப்பான வேலையை செய்தவரை தனியாகப் பாராட்டி வாழ்த்துகிறேன். உங்கள் இதயங்களுடன் நியாஸ் மவ்லவி பேசுகிறார் நூலை வெளியிடும் இஹ்ஸானிய்யஹ் பழைய மாணவர் சங்கத்தையும் குறிப்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அதன் நிருவாகக் குழுவையும் மனப்பூர்மாக வாழ்த்தி மகிழ்கிறேன், இதயபூர்வமாக பாராட்டி ஆனந்தமடைகிறேன். தொகுக்கப்பட்டுள்ள உரைகளின் சொந்தக்காரர் மர்ஹும் நியாஸ் ஹழ்ரத் அவர்களின் மண்ணறை வாழ்வுக்கு, மறுமை வாழ்வுக்கு மணம் சேர்க்க இப்படைப்பும் உதவட்டுமாக என உளப்பூர்வமாகப் பிரார்த்தித்து நெஞ்ச நிறைவடைகிறேன்.

ஐயமும் தெளிவும் தொடர் பேச்சுக்கள் திரட்டுக்கு அணிந்துரை எழுதும் இத்தருணத்தில் அதனோடு தொடர்புபட்ட மறக்க முடியாத ஒரு நிகழ்வை பசிய நினைவுகளுடன் இங்கு பதிய, பகிர விழைகின்றேன். 2010.07.02 வெள்ளி மாலை சனி இரவு 09:00 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வருகிறது. செல்லிடத் தொலைபேசியை கையிலெடுத்துப் பார்க்கிறேன். அது நியாஸ் ஹழ்ரத் அவர்களின் இலக்கத்தைக் காட்டுகிறது. ஸலாம் சொல்லி பேசவாரம்பித்ததும் இன்று (2010.07.02) தினகரன் பத்திரிகையில் ‘மார்க்கத் தீர்ப்பு’ எனும் தலைப்பில் நீங்கள் எழுதியுள்ள கட்டுரை என்று தொடங்கினார். அக்கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பாராட்டினார். காலத்துக்குத் தேவையான கட்டுரை என்று கூறினார். உங்களின் இந்தக் கட்டுரை பற்றி சில முக்கிய ஆலிம்களிடம் இன்று சிலாகித்துப் பேசினேன் என்றார். அத்தோடு இன் ~h அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை ஐயமும் தெளிவும் நிகழ்ச்சியில் இன்றைய உங்களின் கட்டுரையே எனது உரை என்றார். நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் போனேன். இதுவே ஹழ்ரத்துக்கும் எனக்கும் இடையிலான இறுதித் தொடர்பும் அளவளாவலுமாக இருக்கப்போகிறது என்று யாருக்குத் தெரியும்? இது நடைபெற்று அடுத்த நாள் சனிக்கிழமை மு.ப. 11:00 மணியளவில் ஹழ்ரத் அவர்களின் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்துள்ளதை சற்று நேரம் கழிந்து பார்த்துவிட்டு அன்னாருடன் தொடர்புகொள்ள முயற்சித்தேன். மறு முனையிலிருந்து பதில் கிடைக்கவில்லை. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஹழ்ரத் காலமாகிவிட்டார் என்ற செய்தி பேரிடியாக, பெரும் புயலாக வந்தது. இனி ஐயமும் தெளிவும் கேட்க முடியுமா?

இந்நூலில் திரட்டப்பட்டுள்ள உரைகள் யாவும் முஸ்லிம்களின் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்டவை. பொதிந்துள்ள சகல அம்சங்களும் படித்துச் சுவைத்து நடைமுறை வாழ்வில் கொண்டுவர வேண்டியவை. ஆகவே எல்லா சகோதர சகோதரிகளும் வாங்கி வாசித்து ஒழுகக் கடவது.

தொகுப்பையும் தொகுத்தவரையும் வெளியீட்டாளர்களையும் துணைநின்றவர்களையும் படிப்பவர்களையும் கூடவே மர்ஹும் மவ்லவி நியாஸ் முஹம்மத் அவர்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆசீர்வதித்து அருள்வானாக!


எச். அப்துல் நாஸர்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.

1437.02.06
2015.11.19





 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page